மதுரையில் ஆட்டோக்காரர்கள் படுத்தும் பாடு

1

நாகேஸ்வரி அண்ணாமலை

 

இரண்டு வாரங்களுக்கு முன்னால் மதுரைக்குச் சென்றிருந்தேன்.  தமிழ்நாட்டில் எங்கிருந்து மதுரைக்குச் சென்றாலும் பேருந்திலோ ரயிலிலோதான் செல்வோம்.  அங்கும் எங்கு செல்ல வேண்டுமென்றாலும் ஆட்டோவில்தான் போவது வழக்கம்.  இதற்கு முன் எத்தனையோ முறை மதுரைக்குச் சென்றிருந்தாலும் அங்கு ஓடும் ஆட்டோக்களில் மீட்டர் இல்லை என்பதைக் கவனிக்கத் தவறிவிட்டிருக்கிறேன்.  மதுரையில் பேருந்திலிருந்து கோரிப்பாளையம் திறுத்தத்தில் இறங்கி சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் ஒரு ஓட்டலுக்குப் போகச் சொன்னோம்.  அறுபது ரூபாய் வேண்டும் என்றார் ஆட்டோ டிரைவர்.  “ஒரு கிலோ மீட்டர் தூரத்தைக் கடக்கவா அறுபது ரூபாய் என்று?” நான் கேட்டேன்.  “ஆமாம்” என்றார் டிரைவர்.  அதன் பிறகு மீட்டர் போடச் சொல்லலாமே என்ற யோசனை எனக்கு வந்தது.  பெரிய உத்தியைக் கண்டுபிடித்துவிட்டதாக நான் நினைத்துக்கொண்டிருந்தபோது “மதுரையில் ஆட்டோக்களுக்கு மீட்டரே கிடையாது என்பது உங்களுக்குத் தெரியாதா?” என்று ஆட்டோ டிரைவர் கேட்டபோதுதான் மீட்டர் இருக்கும் இடம் வெறுமையாகக் காட்சியளித்ததைக் கவனித்தேன்.  “ஏன் மதுரையில் ஆடோக்களுக்கு மீட்டர் வைப்பதில்லை என்று நான் அந்த டிரைவரிடம் கேட்டு முடிப்பதற்குள் இன்னொரு சவாரியை ஏற்றிக்கொண்டு டிரைவர் சென்றுவிட்டார்.  அடுத்து வந்த ஆட்டோ டிரைவரிடமும் மீட்டர் இல்லை.  இவர்களை மீட்டர் போட வைக்க முடியாது என்பதைப் புரிந்துகொண்ட நாங்கள் அவர் ஐம்பது ரூபாய் கேட்டதும் உடனேயே அவருடைய ஆட்டோவில் ஏறிப் பயணத்தைத் தொடர்ந்தோம்.  மறு நாள், அதற்கடுத்த நாள் என்று மதுரையில் இருந்த இரண்டு நாட்களிலும் எங்கு சென்றாலும் ஆட்டோ ஓட்டுநர்கள் இஷ்டப்படி வாடகை கேட்டார்கள்.

மைசூரிலும் ஆட்டோ ஓட்டுநர்கள் சிலர் எங்களை ஏமாற்றியிருக்கிறார்கள்.  ஒரு முறை வீட்டிலிருந்து ஒரு இடத்திற்குச் சென்றபோது ஆட்டோ டிரைவர் நாற்பது ரூபாய் கேட்டார்.  திரும்பிவந்தபோது அதே வழியாக வந்தும் அந்த ஆட்டோ டிரைவர் ஐம்பது ரூபாய் கேட்டார்.  இருவரும் மீட்டர் போட்டிருந்தார்கள்.  அப்படியும் இவ்வளவு வித்தியாசம்!  ஐம்பது ரூபாய் கேட்ட டிரைவரிடம், “இதே தூரத்திற்குச் சவாரிபோக இன்னொருவர் இன்று காலையில் நாற்பது ரூபாய்தானே கேட்டார்.  நீங்கள் மட்டும் ஏன் ஐம்பது ரூபாய் கேட்கிறீர்கள்?  உங்கள் ஆட்டோ நம்பரை குறித்துக்கொண்டு புகார் கொடுக்கப் போகிறேன்” என்றேன்.  அவருக்குப் பயம் வந்துவிட்டது.  நாற்பது ரூபாயே போதும் என்று கூறி வாங்கிச் சென்றுவிட்டார்.

இப்படிச் சரியான மீட்டர் வைத்துக்கொள்ளாத, ஏமாற்றும் குணம் கொண்ட ஆட்டோ டிரைவர்களோடு மல்லாட வேண்டிய சந்தர்ப்பங்கள் வாய்த்தாலும் மைசூர் ஆட்டோ டிரைவர்கள் எவ்வளவோ நியாயமானவர்கள்; அது மட்டுமல்ல மைசூர் ஆட்டோக்கள் எல்லாவற்றிலும் மீட்டர் பொருத்தியிருப்பார்கள்.  இல்லையென்றால் அது சட்டப்படி குற்றம்.  சில சமயங்களில் ஓடாத மீட்டர் வைத்திருப்போர் இருப்பார்கள்.  அவர்களும் போலீஸ்காரர்கள் நடமாட்டம் இல்லாத இடங்களில், ஒரு குறிப்பிட்ட ஏரியாவுக்குள் ஓட்டிக்கொண்டிருப்பார்கள்.  அப்படிப்பட்டவர்களின் ஆட்டோவில் ஏறி அமர்ந்த பிறகு அவர்கள் ஆட்டோவின் மீட்டர் வேலைசெய்யவில்லை என்பதை அறிந்து ஆட்டோவிலிருந்து இறங்கிவிடுகிறோம் என்று கூறினால் நியாயமான ஒரு தொகையாகக் கேட்பார்கள்.  சரி போகட்டும் என்று விட்டுவிட்டு நாங்களும் பயணத்தைத் தொடருவோம்.

ஒரு முறை மிக நியாயமான ஒரு ஆட்டோ டிரைவர் எங்களுக்குக் கிடைத்தார்.  ஆட்டோ டிரைவர்களில் இப்படிப்பட்டவர்கள்கூட இருக்கிறார்களா என்று அதிசயித்து அவருக்கு எப்போதையும்விட அதிக டிப்ஸ் கொடுத்தோம்.

கர்நாடகாவில் எல்லா ஊர்களிலும் ஆட்டோக்களில் மீட்டர் உண்டு.  இதற்கு விதிவிலக்கே இல்லை.  மைசூரில் மத்திய பேருந்து நிலையத்திலும் ரயில்வே ஸ்டேஷனிலும் pre-paid auto வசதி உண்டு.  கார்ப்பரேஷனைச் சேர்ந்த ஒருவர் இருபத்தி நான்கு மணி நேரமும் பயணிகள் செல்ல வேண்டிய இடத்திற்கு அவர்களுக்கு உதவுவதற்கு இருப்பார்.  பயணிகள் வரிசையில் நின்று தாங்கள் போக வேண்டிய இடத்தை கூறினால் அதற்குரிய சரியான கட்டணத்தை ஒரு கம்யூட்டர் ரசீதில் எழுதிக் கொடுப்பார்.  அதில் எங்களை ஏற்றிச் செல்லவிருக்கும் ஆட்டோவின் பதிவு எண்ணும் இருக்கும். அதை நம்மிடமே வைத்துக்கொள்ளுமாறு ஆலோசனையும் கூறப்பட்டிருக்கும்.  ரசீதில் கூறப்பட்டிருக்கும் தொகையை ஆட்டோ டிரைவரிடம் கொடுத்தால் போதும்.  ஆட்டோக்காரர்களும் வரிசையில் நிற்பார்கள்.  தங்கள் முறை வரும்போது அவர்களுக்குரிய பயணியை ஏற்றிக்கொண்டு செல்வார்கள். இப்படி முறைப்படுத்துபவர்கள் இல்லாத இடத்திலிருந்து ஆட்டோ எடுத்தால் இதே தூரத்திற்கு நூறு ரூபாய் கேட்பார்கள்.  ஆனால் பேருந்து நிலையத்திலிருந்தும் ரயில்வே ஸ்டேஷனிலிருந்தும் வரும் ஆட்டோ டிரைவர்களுக்கு இதே தூரத்திற்கு 75 ரூபாய்தான் கொடுக்க வேண்டும்.  எனக்குக்கூட எப்படியோ இருக்கும்,  பேருந்து நிலையத்திலும் ரயில்வே ஸ்டேஷனிலும் காத்து நிற்பவர்கள் ஏன் குறைவாகப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்று.  கர்நாடகாவில் குறைந்த கட்டணம் முப்பது ரூபாய்; தமிழ்நாட்டில் குறைந்த கட்டணம் ஐம்பது ரூபாய் என்கிறார்கள்.  மேலும் கர்நாடகாவில் ஒவ்வொரு ஆட்டோவிலும் டிரைவரின் புகைப்படம், அவரின் உரிம எண், அவருடைய முகவரி, அந்த ஆட்டோவுக்கே உரிய எண் ஆகியவை இருக்கும்.

மற்ற மாநிலங்களைப் பற்றி எனக்குத் தெரியாது.  பக்கத்துப் பக்கத்து மாநிலங்களான கர்நாடகாவிலும் தமிழ்நாட்டிலும் ஏன் இத்தனை வித்தியாசம்?  தமிழ்நாட்டில் ஆட்டோக்களில் ஏன் மீட்டர் இல்லை என்று பலரிடம் விசாரித்தும் யாருக்கும் சரியான பதில் தெரியவில்லை.  பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவரிடம் கேட்டபோது ஷேர் ஆட்டோவில் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு – எங்கிருந்து எங்கிருந்து வேண்டுமானாலும் – பத்து ரூபாய்க்குச் செல்லலாம் என்றார். நான் கேட்ட கேள்விக்கு ஒரு பேராசிரியர் கூறும் பதிலைப் பாருங்கள்.  நான்  கேட்ட கேள்விக்கு அவருக்குப் பதில் தெரியவில்லையா அல்லது உண்மையான பதில் அவ்வளவு நன்றாக இருக்காது என்று சொல்லவில்லையா?  ஒரு பேராசிரியருக்கு கேட்ட கேள்விக்கு நேரடியாகப் பதில் கூறத் தெரியவில்லை என்று நான் நினைக்கும் அளவுக்கு ஏன் அப்படி நடந்துகொண்டார்?

தமிழ்நாட்டைச் சேராத ஒருவர் சொன்னது: ஆட்டோக்கள் பல அரசியல்வாதிகளிடம் இருக்கின்றன; அவர்கள் வைத்ததுதான் சட்டம்.  அவர்கள் ஆட்டோக்களில் மீட்டர் வேண்டாம் என்று முடிவுசெய்துவிட்டார்கள் என்றும் ஆட்டோ டிரைவர்கள் முடிந்த அளவு பயணிகளிடம் வசூல் செய்துகொள்ளலாம் என்றும் அரசியல்வாதிகளுக்குரிய ‘பங்கை’க் கட்டிவிட்டால் போதும் என்றும் சொன்னார்.  தமிழ்நாடு ஊழலுக்குப் பெயர்போனது என்பது எல்லோருக்கும் தெரியும்.  இருந்தாலும் மத்தியதர மக்களும் ஏழைகளும் பயன்படுத்தும் ஆட்டோக்களுக்கு மீட்டர் வைத்து ஒரு நியாயமான கட்டணம் வசூலிக்கும் முறையைக் கொண்டுவரக் கூடாதா?  இதிலுமா அவர்கள் கையை வைக்க வேண்டும்?  தமிழ்நாட்டிற்கு விடிவே இல்லையா?

உண்மையான காரணம் என்ன அல்லது இதுதான் உண்மையான காரணமா என்று யாராவது எனக்கு விளக்கினால் நன்றாக இருக்கும்.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “மதுரையில் ஆட்டோக்காரர்கள் படுத்தும் பாடு

  1. மிக வேதனைக்குரிய விஷயம். அநியாயத்தை பார்த்து பழகி விட வேண்டிய சூழ்நிலையில் தள்ளப்பட்டு விட்டோம். ஒவ்வொரு செயலுக்கும் ஒரு போராட்டம் நடத்த வேண்டி உள்ளது.

    Mrs. Radha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *