மாண்புமிகு தலைவனின் பண்புதனை வியக்கிறேன்

0

சக்தி சக்திதாசன்

அக்டோபர் 2-ம் தேதி அஹிம்சாமூர்த்தி மகாத்மா காந்தியின் பிறந்த தினம். மக்களின் நலனை முன்வைத்து கத்தியின்றி, இரத்தமின்றி அன்றைய ஏகாதிபத்திய வல்லரசான பிரித்தானியாவிற்கெதிராக மக்களை ஒன்று திரட்டி, தனது அன்னை நாட்டின் சுதந்திரத்திற்காக அஹிம்சை வழியில் போராடிய ஒரு உன்னதத் தலைவர் இப்புவியில் அவதரித்த புண்ணியநாள்.

இத்தகைய ஒரு தன்னலமற்ற ஒரு தலைவரின் வரலாற்றில் இருந்து நாம் கற்றுக் கொள்ள‌ வேண்டியவை அநேகம். ஒரு தலைவன் தனது மக்களின் நன்மையைக் கருத்திற் கொண்டு போராடும் போது, அம்மக்களின் நல்வாழ்க்கையே பிரதானமாகக் கொண்டு போராடும் வழிமுறைகளை,  நாகரீகத்தைக் கற்றுக் கொடுத்தது இத்தலைவரின் வாழ்க்கை.

சில தினங்களுக்கு முன்னால் நான் லண்டன் பி.பி.ஸி, தொலைக்காட்சியில்  நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது அதில் மகாத்மா காந்தியைப் பற்றி அவர்கள் குறிப்பிட்ட  ஒரு விடயம் என்னை மிகவும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியது.

இந்தியாவின் பருத்தியை இங்கிலாந்துக்கு கொண்டு வந்து அதை ஆடையாக்கி பின்னர் இந்தியாவிற்கே விற்று, கொள்ளை  இலாபம் ஈட்டி வந்த பிரித்தானிய அரசின் போக்கைக் கண்டித்தும், இந்தியாவின் சுதந்திரத்தை வலியுறுத்தியும் ஒத்துழையாமை நடவடிக்கைகளை முன்னெடுத்த மகாத்மா காந்தி அந்நடவடிக்கைகளில் ஒன்றாக இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் நெய்யப்பட்ட துணிகளைப் பகிஷ்க‌ரிக்கும்படி வேண்டுகோள் விடுத்தார்.

மகாத்மா காந்தியின் வேண்டுகோளினால் இங்கிலாந்தின் பருத்தி ஆடை வியாபாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. அந்நாட்களில் இங்கிலாந்தில் லங்காசையர் (Lancashire) என்னும் நகரில் அமைந்துள்ள டார்வின் (Darwen)  எனும் ஊரிலேயே இவ்வாடைகளைத் தயாரிக்கும் ஆடைத் தொழிற்சாலைகள் அமைந்திருந்தன. அவ்வூரில் இத்தொழிற்சாலைகள் பல மூடப்படும் நிலைக்கு வந்தன, சுமார் ஆயிரத்து இருநூறு பேர் வரையில் தமது வேலைகளை இழந்தனர்.

சுமார் எண்பது வருடங்களுக்கு முன்னால், இந்தியாவின் தன்னாட்சிக்கான பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ள‌ வருமாறு காந்தியடிகளை இங்கிலாந்து அரசாங்கம் அழைத்திருந்தது. அவ்வழைப்பை ஏற்று 1931ம் ஆண்டு செப்டெம்பர் மாதம், மகாத்மா காந்தி அவர்கள் இங்கிலாந்துக்கு வருகை தந்தார்.

அப்போது, அவரின் இங்கிலாந்து ஆடைகளைப் பகிஷ்கரிக்கும் வேண்டுகோளினால் பாதிக்கப்பட்ட டார்வின் ஊர்  தொழிற்சாலைகளின் நிர்வாகிகளில் மூவர், அவரின் நடவடிக்கை தம்மூரில் ஏற்படுத்திய தாக்கத்தைப் பார்வையிட வருமாறு அழைப்பு விடுத்திருந்தனர்.

தான் தனது அன்னை நாட்டில் எடுத்த நடவடிக்கை தனது மக்களின் விடுதலையை முன்வைத்தே அன்றி இங்கிலாந்து நாட்டு மக்களில் எவரையும் பாதிக்கும் நோக்கத்தில் அல்ல, என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்த அம்மாமனிதர் துணிந்து அம்மக்களை நேரே சந்தித்து தனது நடவடிக்கையின் நியாயத்தை எடுத்துச் சொல்லத் தயங்கவில்லை. அவ்வூருக்கு காந்தியடிகள் விஜயம் செய்த போது அவரை நேரடியாகக் கண்ட மூவர் அவரைப் பற்றி இப்படிச் சொல்கிறார்கள்,

இப்போது 91 வயதான சிகிரிட் கிறீன் (Sigirid Green) என்னும்  வயதான பெண்மணி  கூறுகையில்,

“எனக்கு அப்போது வயது 11, எமது ஊருக்கு வருகை தந்த காந்தியடிகளின் துணிச்சலைக் கண்டு நான் வியந்தேன். ஏனெனில் அவரது பகிஷ்கரிப்பு நடவடிக்கையால் அவ்வூரில் பலர் வேலையிழந்திருந்தார்கள் எனவே மிகவும் எதிர்ப்பான ஒரு சூழலை அவர் எதிர்கொள்ள‌ வேண்டிய நிலை இருந்தது.

மகாத்மா காந்தியடிகளின் சிறப்பைப் பற்றி எனக்கு எடுத்துரைத்த எனது தந்தை என்னையும் அழைத்துக் கொண்டு அவரைப் பார்க்கச் சென்றார். அவரைச் சுற்றி ஒரு 20 அல்லது 25 பேர் வரை சூழ்ந்து வர ஒரு சிறிய நாய்க்குட்டியுடன் மிகவும் எளிமையான உடையில் நடந்து வந்து கொண்டிருந்தார். எனக்கருகில் வந்ததும் என்னை ஒரு கணம் ஏறிட்டுப் பார்த்து விட்டு எனது தலையைக் கோதி விட்டு, எனது முகத்தைத் தடவி முறுவலித்து விட்டுச் சென்றார்” என்று கூறுகிறார்.

104 வயதான பெண்மணி எதெல் கனிங் ( Ethel Gunning ) கூறுகையில்,

“டார்வின் ஊர்ச் சந்தையின் முன்னால் குழுமியிருந்த மக்களின் மத்தியில் மிகவும் துணிச்சலுடன் தனது நடவடிக்கையைப்  பற்றி மேடையேறி விளக்கிக் கொண்டிருந்தார் மகாத்மா காந்தி. அது எமது ஊர் மக்களுக்கு அன்றைய சூழலில் ஒரு மிகவும் பரபரப்பான நிகழ்வாயிருந்தது. காந்தி அவர்களின் அப்போதைய நடவடிக்கை அவர்களின் வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பினும் எமது ஊர் மக்கள் அவருக்கு கெளரவமான வரவேற்பளித்தார்கள்” என்கிறார்.

மற்றொரு 91 வயதான பெண்மணி கிரேஸ் ஸ்கொட் ( Grace Scot ) கூறுகையில்,

“காந்தி அவர்கள் அங்கிருந்த ஒரு இல்லத்திற்குள் நுழைவதை நான் கண்ணுற்றேன்.  அவருடைய அவ்விஜயத்தின் முக்கியத்துவத்தை நான் அப்போது அறிந்திருக்கவில்லை. மிகவும் எளிமையாக உடையணிந்திருந்த அவர் ஒரு சாதாரண மனிதராகவே காட்சியளித்தார்” என்கிறார்.

சுயதர்மம் என்பதின் எடுத்துக் காட்டாகத் திகழ்ந்தவர் மகாத்மா அவர்கள். ஒரு தலைவனுக்கிருக்க வேண்டிய பண்பை, தலைமைத்துவத்தின் இலக்கணத்தை செம்மையாக உணர்த்தியவர் மகாத்மா அவர்கள். இன்றைய உலக அரசியலில் நாம் காணும் தலைவர்கள் பலர் தமது சொந்தக் கெளரவத்தையும், தன்னலத்தையும் காப்பாற்றிக் கொள்வதற்காக மக்களின் நலனைப் புறந்தள்ளும் பல நிலைமைகளைக் காணுகிறோம்.

ஒரு சமுதாயத்தின் வளர்ச்சிக்கு,மக்களின் முன்னேற்றமடையும் தன்மைக்கு தலைமைத்துவத்தை முன்னெடுப்போர்களின் தன்னலமற்ற சேவையே அவசியமாகிறது. தான் கொண்டுள்ள  கொள்கையை, அக்கொள்கையின் வெற்றிக்காக தான் எடுக்கும் நடவடிக்கையில் தான் கொண்டுள்ள‌ நம்பிக்கையை தெளிவாக விளக்கும் வகையில் அவர்களது மனம் வலுப்பெற்றதாக அமைய வேண்டும். தனது நிலைமையை விளக்குவதற்கு தனது எதிரணியுள்ளவர்களைத் தாக்கும் தன்மையைக் கைவிட்டு தனது பண்பான நடவடிக்கையின் மூலம் தன்னுடைய கொள்கையின் வலுவை விளக்கும் திற‌னும், துணிச்சலும் அவசியம்.

இத்தகைய பண்புகளை தன்னகத்தே கொண்டவராகவும், சுயவிமர்சனத்தின் மூலம் தன்னைத் தானே பரிசீலித்துக் கொள்ள‌த் தயங்காதவருமாகிய மகாத்மா காந்தி உலகெங்கிலுமுள்ள மக்களின் மனதில் நிலை கொண்டிருப்பதின் சூட்சுமம் இதுதான். அப்புனிதத் தலைவரின் பாதங்கள் பட்ட மண்ணில் நானும் நடந்திருக்கிறேன் என்னும் எண்ணம் ஒன்றே என் மனதைத் தூய்மையாக்கப் போதுமானது.

இந்த மாபெரும் தலைவர், பாரத மாதாவின் அன்புப் புதல்வரின் பிறந்தநாளில் அவரைப் பணிந்து வணங்கிக் கொள்வதில் பெருமையடைகிறேன்.

தகவல்கள் உதவி : பி. பி. ஸி  தொலைக்காட்சி, லங்காசையர் டெலிகிராப் இணையத்தளம்.
படங்கள் உதவி: லங்காசையர் டெலிகிராப் இணையத்தளம்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *