அற இலக்கியங்கள் கட்டமைக்கும் பெண்ணும் பெண்சார் மதிப்பீடுகளும்

0

-முனைவர் கல்பனா சேக்கிழார்

பெண்ணை ஒடுக்குதல் என்பது நம் நாட்டில் மட்டும் நடந்த நிகழ்வு அன்று. உலகம் முழுதும் நடைபெற்ற நிகழ்வு. ஆதியில் பெண்வழி ஏற்றுக்கொள்ளப்பட்டதாக இருந்தது. குடும்பம் என்னும் அமைப்பு உருவாகாத காலத்தில் பெண்கள் தலைமையேற்று  அனைத்தையும்   நிர்வகிப்பவர்களாக இருந்தனர். காலப்போக்கில் உடைமைச் சமூகமும் அதன்வழி உருவான வாரிசுமையும் தோன்றியவுடன், பெண்களை அடிமைப்படுத்துதல் என்பது தொடங்கிவிட்டது. அத்துடன் மட்டுமல்லாமல் பெண்கள், வைசியர், சூத்திரர் பாவ யோனியில் பிறந்தவர்கள் (பக.கீதை:அத்.9, சுலோகம்.32) என அவர்களை இரண்டாம் தரமான சமூக மதிப்பீட்டையும் உருவாக்கியது. இதனை இது வலுக்கட்டாயமாக நிகழ்த்தப்பட்டதன்று, அதாவது வெற்றி பெற்றவர்களுக்கு முடிசூட்டும் வேலையைத் தோல்வி பெற்றவர்கள் தாராளச் சிந்தனையுடன் சூட்டி மகிழ்ந்தார்கள் என எங்கல்ஸ் குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகிவற்றின் தோற்றம் என்னும் நூலில் குறிப்பிடுவதுபோல் பெண்களுக்கான கருத்துகள் உருவாக்கப்பட்டு அவர்கள் ஏற்றுக்கொள்ளும் சூழலை எல்லாச் சமூகங்களுமே உருவாக்கியுள்ளன. அக்கருத்துக்களைப் பரப்பும் ஊடகங்களாக இலக்கியங்களைப் பயன்படுத்திக்கொண்டனர்.

இலக்கிய, இலக்கணங்களின் வழியாகவே தொல்சமூகம் குறித்தான புரிதலையும், சமூக மதிப்பீடுகளையும் நாம் தொகுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. நமக்குக் கிடைத்துள்ள பழைமைப் பனுவல்கள் தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள்.  இப்பிரதிகள் நாகரிகம் அடைந்த தமிழ்ச் சமூகத்தின் அடையாளமாகவே உள்ளன. இவை தமிழ் நிலப்பரப்பினுள் வந்துகலந்த வைதிகப் பண்பாட்டுக்கூறுகளையும் உள்வாங்கியுள்ளன. அதன் தொடர்ச்சியாக வரக்கூடிய பதினெண் கீழ்க்கணக்கு வைதிகக் கருத்தியலோடு, சமணக்  கருத்தியல்களையும் உள்வாங்கியப் பனுவலாக  உருப்பெற்றுள்ளன.

சங்க இலக்கியத்தில் பெண்ணிக்கிருந்த நெகிழ்வு அற இலக்கியங்களில் இறுக்கமாகவே இருக்கிறது. 40க்கும் மேற்பட்ட பெண்பாற் புலவர்கள் சங்க இலக்கியத்துள் பாடியுள்ளனர் . ஆனால் பதினென் கீழ்க்கணக்கில்  பெண்பாற் புலவர்கள் ஒருவரும் இலர். இதனைப் பார்க்கும் பொழுது, அறம் சார்ந்த சிந்தனைகள் பெண்ணுக்கு இல்லையா என்னும் கேள்வியெழுகிறது. மேலும் பதினெண் கீழ்கணக்குத் தொகுக்கப்பட்டதன் பின்னுள்ள  அரசியலும் அறிய இயலவில்லை.  இத்தொகுப்பினுள் உள்ள 11 அறநூல்களும் பண்பாட்டின் அடையாளமாக அதனைக் கட்டிகாப்பவளாகப் பெண்ணையே முன்னிருத்துகிறது.

பெண்களை வெறும் நுகர்பொருளாகவும், பாலியல் இயந்திரமாகவும் பயன்படுத்தியதோடு, அவர்களுடைய புழங்குவெளியையும் வரையறுத்து அதனைச் சட்டமாகவும் உருவாக்கினர். பெண்கள் அதிலிருந்து மீள்வதற்கான முயல்வுகளைக் காலந்தோறும் நிகழ்த்தியுள்ளனர். அவற்றை அடக்கியும் ஒடுக்கியும் வைப்பதற்கான வேலைகளை ஆண் மையச் சமூகம் மோற்கொண்டது. அவளுக்கான விதி இதுதான் என மூளைச் சலவையும் செய்யப்பட்டது. 15-ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு புதிய அறிவியல் கண்டுப்பிடிப்புகள், தொழில் வளர்ச்சி, உற்பத்திப் பெருக்கம் போன்றவை சமூகத்தில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியது. அச்சூழலில் பெண் தன்னுடைய இருப்புநோக்கிச் சிந்திக்கத் தொடங்கினாள். அதன் விளைவாகப் பெண்ணியச் சிந்தனைகள் மேற்குலகில் உருப்பெற்று, தராள வாதப்பெண்ணியம், சமதர்மப் பெண்ணியம் தீவிரவாதப்

பெண்ணியம், தலித்தியப் பெண்ணியம் எனப் பல்வேறு நிலைகளில் போராடத்தொடங்கினர். இந்தியாவிலும் இதன் தாக்கம் ஏற்படத்தொடங்கியது. தமிழகத்திலும் அது சார்ந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

எலைன் ஷோவால்டர்,

  • பெண்மை நிலை (Feminine Phase) – பண்பாடு சார்ந்தது
  • பெண்ணிய நிலை (Feminist Phase) – அரசியல் சார்ந்தது
  • பெண்நிலை (Female Phase) – உயிரியல்

என மூன்று நிலைகளில் இலக்கியங்கள் பெண்களைக் கட்டமைப்பதாகக் கூறுகிறார். இதனடிப்படையில் அற இலக்கியங்கள் பெண்ணுக்கான வெளியையும்  குடும்ப சமூக மதிப்பீடுகளையும் எவ்வாறு உருவாக்கியுள்ளன என்பதை அறிய இக்கட்டுரை முயல்கிறது.

சமூகத்தின் அனைத்துத் தளத்திலும் பெண்ணைச் சக உயிரியாகப் பாவிக்காமல்,  ஒரு சமூகத்தின் கட்டுமானப் பண்பாட்டுக் கூறுகள் யாவும் பெண் மீதே சுமத்தப்பெறுகின்றன. ஆண்வழிச் சமூகம் சுமத்தியுள்ள பண்பாட்டுக் கூறுகளைப் பேணுகின்றவர் ஒழுக்கமானவர் என்றும், அப்பண்பாட்டு நடத்தையிலிருந்து விலகிச் செல்பவர் ஒழுக்கம் கெட்டவர் என்றும், கற்புக்கோட்பாட்டின் வழி சமூக மதிப்பீடுகளை உருவாக்கி வைத்திருக்கிறது. இவ்வாறான ஆண்வழிச் சமூக அமைப்பின் ஒழுங்கிற்கும் நியதிகளுக்கும் உட்பட்டு, ஆணின் அதிகார எல்லைக்குள் ஓர் அடிமை போன்ற வாழ்வை மேற்கொண்டு ஆணுக்கு எல்லா வகையிலும் சேவகம் புரிவதையே பெண்ணுக்கான அறம் என்பதாகச் சமூகம் கற்பித்து வைத்திருக்கிறது (2010: 80).  வினையை ஆடவருக்கு உயிராகவும், பெண்களுக்கு அவ்வாடவரே உயிராகவும் ( குறுந்தொகை, 135) பெருமையும் வீரமும் ஆணுக்குரியதாகவும், அச்சம், மடம், நாணம் பெண்ணுக்குரியதாகவும் (தொல்காப்பியம், களவியல் 7,8) ஆண் அதிகாரம்/பெண் அடங்கிபோதல் என்ற பண்பாட்டு நிலையிலே இலக்கியங்கள் கட்டமைக்கின்றன.

பாண்பாட்டுத் தளத்தில் கட்டமைக்கப்பட்ட கருத்தியல் அடிப்படையிலான அறங்கள் அணுக்கும் பெண்ணுக்கும் வெவ்வேறானவையாக அமைந்தன.

ஆணுக்குப் பெருமை, வலிமை, அழகு, புகழ், அறிவு, கடமை, ஆள்வினை, உரிமை, செயலூக்கமான பாலியல், ஆட்சி அதிகாரம், செல்வம் ஆகியவை உயர் அறங்கள். பெண்ணுக்கு உடலின் மென்மை, அழகு, பணிவு, அடக்கம், அடங்கிய பாலியல், அச்சம், நாணம், மடம், கற்பு ஒழுக்கம், பொறுமை, சேவை, தியாகம் ஆகியவை உயர் அறங்கள்.

பெண் என்பவர்

பெண்ணை, இலட்சிய வாழ்க்கைத் துணைவி என்றோர் அசாதாரணமான சித்திரத்தை அறநூல்கள் வழங்குகின்றன. தாயுரிமை தூக்கி எறியப்பட்டது. பெண்ணினம் உலக வரலாற்று ரீதியில் பெற்ற தோல்வியாகும். ஆண் வீட்டிலும் ஆட்சியைக் கைப்பற்றினான்; பெண் இழிநிலைக்குத் தள்ளப்பட்டு அடிமைப்படுத்தப்பட்டாள். இவை முழுதும் ஏடறியா வரலாற்றுக் காலத்தைச் சேர்ந்த நிகழ்ச்சியாகளாகும். இவை மெய்யாகவே நிறைவேற்றப்பட்டன என்பதற்குப் பாஹொஃபென் திரட்டியுள்ள தாயுரிமை பற்றிய ஏராளமான எச்சங்களே சாட்சியாகும் என்பது ஏங்கல்ஸ் கூற்று.     

மென்மை

வை யெயிற்று ஐயள் மடந்தை (நற்றிணை,2) அனிச்சம் பூவை உவமையாக 1111,1120ஆம் குறட்பாக்களில் மோந்தாலே வாடிவிடும் மென்மைமிக்க பூவினும் மென்மையானவளாக பெண்ணைப் படைக்கிறார் வள்ளுவர். உடற் கூற்றியல் அடிப்படையில் ஆணைவிடப் பெண்ணே வலிமையானவராக இன்றைய அறிவியல் கூறுகிறது. 

அழகு

சங்க இலக்கியங்கள் அழகு என்பது பெண்ணுக்குரியதாகவே அவர்களின் புற அழகிற்கு முதன்மைக் கொடுத்து (பெண்களின் ஒவ்வொரு உறுப்பையும்) வருணிக்கின்றன. வள்ளுவரும் ஒளி பொருந்திய நுதல்(1088) மான் போன்ற அழகிய பார்வை (1089) அழகிய மயில் (1081) அமிழ்தின் இயன்ற தோள் (1106) முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம் வேல் உண்கண் வேய்த்தோள்(1113) மதியும் மடந்தை(1116) எனப் பெண்ணின் உடலுக்கு கொடுக்கும் முதன்மை பெண்ணின் அறிவுக்கு வழங்கவில்லை. 

உடைமை

பெண்ணின் இயல்புகளான குணங்கள் மறுக்கப்பட்டு உடைமைச் சமூகத்துக்கு ஏற்ற பெண்ணாக வள்ளுவம் கட்டமைக்கிறது. குறள் 1007  – இல் பொருள் இல்லாத வறியவருக்குப் பொருள் கொடுத்து உதவாதவனைக் கூறவந்தவர் மிக்க அழகு பொருந்திய பெண் தனிமையில் வாழ்ந்து முதுமையுற்றது போன்றது என்று எடுத்துக்காட்டுகிறார். ஒரு பெண் என்பவள் ஆணுக்குப் பயன்படுபவளாக இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்துகிறார். 

கற்பு என்பது

மனைவியாக அமைந்தவள் மாண்பினை உடையவளாகவும், கணவனின் வளத்திற்குத் தக்கவளாகவும் அமையவேண்டும். குடும்பத்திற்குத் தக்க சிறப்பில்லாத பெண் இல்லை என்றால் என்ன சிறப்பு இருந்தும் வீண். பெண்ணின் பெருமை கற்புடன் இருப்பது. கணவனைத் தொழுபவளுக்கு (வணங்குதலுக்கும் தொழுதலுக்கும் வேறுபாடு உண்டு, தாளை வணங்காத் தலை (9) , கொல்லான்…கைகூப்பி எல்லா உயிரும் தொழும் (260) வணங்குதல் – தலையின் செயல், தொழுதல் – கையின் செயல்) இயற்கையே கட்டுப்படும். தன்னையும் காத்து, கணவனையும் காத்து குடும்பப் புகழையும் காத்து ஓம்பவேண்டும். பெண் தன் கற்பினைத் தானே காக்க வேண்டும், சிறந்த மனைவியைப் பெறுவதே எல்லாவற்றையும் விடச் சிறப்பானது என வாழ்க்கைத்துணை நலம் கூறுகிறது.

கற்புடை மனைவி இருக்கும் வீடே வீடாகும்; செல்வம் முதலியவற்றை விட இல்லக் கிழத்தியின் நற்குணமே இல்வாழ்க்கைக்கு முதன்மையானது (நாலடியார், 383) கற்புடைய பெண்களுக்கு நாணம் முதலியவை பெண்மையியல்புகள் அணிகளாகும் (நாலடி, 385); கற்புடைய மனைவி தூயர் ( நாலடி, 387); கற்புடைய மகளிர்க்கு தங் கணவர் மாட்டு அன்பு எந்நிலையிலும் குறையாது (நாலடி, 389). வினைத் திறன் அறியாத ஆண் மகனைக் காட்டிலும் கற்பமைந்த பெண்டிர் நல்லவர் ( நான்மணிக் கடிகை) தாரம் என்பவள் கணவன் குறிப்பறிந்து நடக்க வேண்டும் (முதுமொழிக் காஞ்சி,5, திரிகடுகம்,96, சிறுபஞ்ச மூலம், 15).

உடைமை பொருள்

பிறனில் விழையாமையில் பெண்ணைப் பிறன் பொருளாகக் (141) கூறுகின்றார் வள்ளுவர். மேலும் பிறன் இயலாள் என்றும் பிறன் வரையாள் என்றும் உடைமைப் பொருளாகவே பெண்ணைப் பதிவு செய்கிறார்.

நிலைத்த மனம் இல்லார்

கூடா நட்பு குறித்துக் கூறும்பொழுது உண்மையில்லாதவரிடம் கொள்ளும் நட்பு பெண்ணின் மனம் போல வேறுபடும் என்று கூறுகிறார். வரைவின் மகளிரில் பொருட்பெண்டிர் என்றும் அன்பில்லாதவர்கள், பண்பற்றவர்கள், நெஞ்சத்தை நிறுத்தியாளும் திறன் அற்றவர்கள், மாய மகளிர் என வரையறுக்கிறார். 

காத்திருப்பவள்

கணவன் பிரிவை எண்ணிக் கலங்கி  அழகு கெட காத்திருப்பவளாக(1157,1234) படைக்கிறார். 

பெண் கொல்லும் படை

ஆண்மகனை எதிர்த்து நிற்கும் பெண் எமன், அதிகாலையில் சமையல் அறைக்குச் செல்லாதவள் ஒருவனுடைய நோய், சமைத்ததைக் கணவனுக்கு எடுத்துப் படைக்காதவள் பேய், இப்படிப்பட்ட குணங்களை உடையவள் கணவனைக் கொல்லும் படை (நாலடி, 363) மனையாள் இல்லாத வீடு வீடன்று (நாலடி, 361)  கற்புடைய மகளிருக்குக் கடமை விருந்தோம்பல், இல்லத்தைக் காத்தல், மக்களைப் பெறல் இம்மூன்றும் (திரிகடுகம், 64). 

முயன்று வினையாற்றாள்

ஊழ் கூட்டாதவிடத்தும், அரிய காரியங்களைச் செய்தலில் தளர்வின்றிருந்து முயலும் ஆண்மை தாளாண்மையாகும். ஊழ் கூட்டி முடிப்பது பெண்டிரின் செயல் (194). 

ஆண் செய்யக் கூடாதவை

கற்புடைய மகளிரை அடித்தல் மனிதனின் அறியாமை (திரிகடுகம், 3) விருப்பம் இல்லாத பெண்களிடம் ஆண்கள் இன்பம் துய்ப்பது அருந்துயர் கொடுக்கும் (திரிகடுகம், 5). பெண்வழிச் சேரலில் பத்துக் குறளிலும் மனைவின் சொற்படி நடக்கும் ஒருவன் வாழத் தகுதியில்லாதவனாக உருவாக்கியுள்ளார் வள்ளுவர். 

அறிவும் வேண்டும்

அழகோடு, வாழ்க்கையை நடத்தும் நல்லறிவும் உடையவள் இல்வாழ்க்கைக்குரிய துணைவி ( நான்மணிக்கடிகை,54) பெண்ணிடம் அழகு இல்லாவிட்டாலும் மாட்சிமையுடைய இயல்புகள் இருக்கும் (திரிகடுகம்,64)

ஆணும் பெண்ணும் எண்ணும் எழுத்தும் அறிந்திருக்கவேண்டும் என நாலடியாரும் ஏலாதியும் கூறுகின்றன.

குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல – நெஞ்சத்து
நல்லயாம் என்னும் நடுவு நிலைமையால்
கல்வி யழகே அழகு (நாலடியார், 14) 

இடைவனப்பும் தோள்வனப்பும் ஈடின் வனப்பும்
நடைவனப்பும் நாணின் வனப்பும் – புடைசால்
கழுத்தின் வனப்பும் வனப்பல்ல எண்ணோடு
எழுத்தின் வனப்பே வனப்பு (ஏலாதி – 74) 

பெண் – மதிப்பீடு

மதிப்பு என்பதற்கு அளவிடுகை, கௌரவிக்கை, உவமைச் சால மதிப்பொழிந்த வல்லமார் மாண்டார் (தேவாரம்,1014) கருத்து, மண்ணுலகாளும் மதிப்பை யொழித்தே (பிரமோத்.8, 99) (தமிழ் லெக்ஸிகன், பகுதி,5,பக்.3057) மதிப்பீடு என்பது ஒன்றை அல்லது ஒருவரைப் பற்றிக் கொண்டிருக்கும் கண்ணோட்டம் அல்லது கருத்து (க்ரியா அகராதி.பக்.1071)  எனவும் அகராதிகள் விளக்கம் அளிக்கின்றன.

ஆண்கள் படைத்துள்ள படைப்புகளில் பெண் குறித்தான மதிப்பீடுகள் பற்றிய ஆய்வை நிகழ்த்திய மேரி எல்மான் எழுதிய பெண்களைப் பற்றிய சிந்தனை என்ற நூலில் ஆண்கள் படைத்துள்ள படைப்புகளில் பெண்கள் என்போர் அடங்கிப் போகும் குணமுடையவர்களாக (passivity) உருவமற்றவர்களாக (formlessness) மன உளைச்சலுக்கு ஆட்பட்டவராக (instability) கட்டுப்பாட்டுக்கு உட்பட்டவர்களாக (confinement) கடமையுணர்வு உடையவர்களாக (piety) பொருள் பற்றுடையவர்களாக (materiality) ஆன்மீக நம்பிக்கை உடையவர்களாக (spirituality) பகுத்றிவுக்கு மாறானவர்களாக (irrationality) கவர்ச்சி மற்றும் சூன்யம் உடையவர்களாக (witch) அடங்காப் பிடாரிகளாக (shrew) குறை கூறுபவர்களாக (compliancy) என்ற முரண்பட்ட குணமுடையவர்களாகப் படைக்கப்பட்டுள்ளனர். சமூகம், பண்பாடு அரசியல் மற்றும் தனிப்பட்ட சூழல் என்று எல்லா நிலைகளிலும் ஆண் மேலாதிக்கம் வேரூன்றியிருப்பதால், அவர்கள் படைத்த இலக்கியங்களிலும் அதற்கு விதிவிலக்காக அமையவில்லை என்றார் எல்மன் ( 2010; பக்.81).

அற இலக்கியங்கள் கூறிய கற்பு, காவல், கணவன்வழிபாடு ஆகியவை கட்டுப்பாடுகளும் பெண்ணின் பாலியல் செயல்பாட்டை அவளது கணவனை மட்டும் சார்ந்திருக்க அவளை ஒழுங்குபடுத்துகின்றன. பாலியலில் நடைமுறைப்படுத்தப்பட்ட இச்சார்பு நிலை பெண்களை, சிறு வயது முதல் சாகும் வரை ஆணைச் சார்ந்து வாழும் இயல்புடையவர்களாக ஆக்கியது. பெண்ணின் பாலியல் அறம் காவலால் சாத்தியமாகவும், அவர்களே நிறையாக இருக்கவேண்டும் என்றும் அற இலக்கியங்கள் வற்புறுத்துகின்றன.

அற இலக்கியங்கள் முன்வைக்கும் பெண் குறித்தான மதிப்பீட்டைக் கீழ்க்கண்டவாறு வரையறுத்துக் கொள்ளலாம்.

  • இல்லறத்தை நல்லறமாகப் போற்றுபவர்
  • இல்லத்திற்கு இன்றியமையாதவர்கள்
  • கற்புடையோர் பெய்யென்றால் மழையும் பெய்யும்
  • விருந்தோம்பும் பண்புடையவர்கள்
  • கணவன் எவ்வழியோ அவ்வழி நடப்பவர்கள்
  • கணவனைத் தெய்வதிற்கு மேலாக உயிரைவிட மேலாகப் போற்றுபவர்
  • மென்மையுடையவர்கள்
  • பிரிவுத் துயரில் உழல்பவர்கள்
  • திருமணமே முதற்கடமை
  • உடைமைப் பொருள்
  • குடும்பத்தில், பொதுவெளியில் தம் கருத்தைக் கூற இயலாதவர்கள்
  • உறுதியான மனம் இல்லாதவர்கள்
  • கணவனை இழந்தால் வாழ்வே இல்லை என்று எண்ணுபவர்கள்
  • கணவனுக்குத் தேவையானதைச் செய்யாதவர்கள் கொல்லும் படை போன்றவர்கள்

அற இலக்கியங்கள் கட்டமைக்கும் பெண்கள் ஆண் மையச் சமூகத்தில் ஆணுக்கான அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்யபவர்களாகவும், தம் விருப்பங்களை மனதுள் வைத்து பூட்டியவர்களாகவும் இருக்கிறார்கள். குடும்ப அமைப்பில் அவர்களுக்கான இடம் குறித்து மிகவும் சுருக்கப்பட்டதாவே அமைந்திருக்கிறது. சமூகவெளியில் அவர்களுடைய செயல்பாடுகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் சிலவிடத்துப் பெண் அறிவு சார்ந்த சிந்தனையும் வெளிப்பட்டுள்ளது.  வால்கா முதல் கங்கை வரை நூலில் வங்க எழுத்தாளர் ராகுல சாங்கிருத்தியாயன் தாய்வழிச் சமூகம் இருந்துள்ளதை தக்க சான்றுடன் எடுத்துரைப்பார். அந்த வகையில், 

பெண்ணே அருகில் வா, நான் கூறுவதைக் கேள், பயனுள்ள விசயங்கள் மீது ஒருமுறை உனது ஆர்வத்தைத் திருப்பு. இயற்கை உனக்கு வழங்கிய இச்சமூகம் தட்டிப் பறித்த ஆதாயங்களைக் கருதிப்பார். நீ ஆணுடைய கூட்டாளியாகப் பிறந்து எப்படி அவனுடைய அடிமையானாய் என்பதை அறிவதற்கு அருகில் வா, செயற்கையான நிலைமைகளை எவ்வாறு இயற்கை என்று நினைத்து நீ அதனை விரும்பத் தொடங்கினாய் என்பதை அறிந்திட வா. நீண்ட கால அடிமைப் பழக்கம் உன்னைக் கீழ்மைப்படுத்தியதை அறிந்திட வா. சுதந்திரம், புகழ் ஆகியவற்றின் மேன்மைகள் கடினமானவை என்று ஒதுக்கிவிட்டுச் சொகுசான இழிவுகள் போதுமென்று எவ்வாறு தெரிவு செய்தாய் என்பதை அறிந்திட வா. நான் வரைகின்ற இந்தச் சித்திரம் உன்னை உன் கட்டுக்குள் வைக்கும் என்றால், இது பற்றி உணர்ச்சி கலவாமல் உன்னால் சிந்திக்க முடியும் என்றால் பயனற்ற உனது வேடிக்கை விளையாட்டுகளுக்குத் திரும்பிப் போய்விடு. இதற்கு மருந்து ஏதுமில்லை, இழிவுகள் பழகிவிட்டன (2010; பக்.23,24). 

என்னும் கூற்றுக்கிணங்கப் பெண்கள் மெல்ல மெல்லத் தமக்கான இயல்பைவிட்டு ஆண் மையச் சமூகம் உருவாக்கிய கருத்திற்குள் தம்மைப் பழக்கிக்கொண்டு அதனை வழக்கமாக்கிக் கொண்டனர்.  எலைன் ஷோவால்டர் கூறுவதுபோலப் பெண்ணைச் சக உயிரியாகப் பாவிக்காமல், பெண்மை என்னும் பண்பாட்டு அடிப்படையிலேயே அற இலக்கியங்களைப் பெண்ணுக்கான புற உருவத்தைக் கட்டமைத்து, அவர்களின் அகத்தைப் புறந்தள்ளியுள்ளது.

உசாத்துணை

  1. பக்தவசல பாரதி, சம்பத் இரா., (ப.ஆ) 1998. பெண்ணிய ஆய்வுகள், முதற்பதிப்பு, புதுச்சேரி: புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம்.
  2. பக்தவசல பாரதி, 2011, பண்பாட்டு மானிடவியல், முதல் பதிப்பு, திருச்சி: அடையாளம் பதிப்பகம்.
  3. மகாராசன், 2010. பெண்மொழி இயங்கியல், முதற்பதிப்பு, சென்னை: தோழமை வெளியீடு.
  4. முருகேசபாண்டியன் ந., 2014. அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில், முதல் பதிப்பு, சென்னை: நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்.
  5. ஜர்மெய்ன் கிரீர், ராஜ்கௌதமன் (தமிழில்) 2011. பாலற்ற பெண்பால் பெண்பால் நபும்சகம், கோவை: விடியல் பதிப்பகம்.

*****

கட்டுரையாளர் – உதவிப்பேராசிரியர்
தமிழியல்துறை
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
அண்ணாமலை நகர் – 608002
Mail – kalpanasekkizhar@gmail.com

     

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *