-மேகலா இராமமூர்த்தி

ஒய்யாரமாய்ச் சாய்ந்து படுத்திருக்கும் இந்த அய்யாவைப் படமெடுத்து வந்திருக்கின்றார் திருமிகு. சாந்தி வீஜே. வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து இதனைத் தேர்ந்தெடுத்துப் படக்கவிதைப் போட்டிக்குத் தந்திருக்கின்றார் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் என் நன்றியை உரித்தாக்குகிறேன்.

இந்த மனிதரின் கிடந்த திருக்கோலத்தைக் காண்கையில் சங்க இலக்கிய நூலான ‘முல்லைப்பாட்டில்’ தலைவன் பாசறையில் ஒரு கையைப் பள்ளியில் ஊன்றி, மறு கையைத் தலைக்கு முட்டுக்கொடுத்துப் படுத்தபடி, சிந்தித்திருக்கும் நிகழ்வே என் சிந்தையில் எழுகின்றது.

”…ஒருகை பள்ளி ஒற்றி ஒருகை
முடியொடு கடகம் சேர்த்தி நெடிதுநினைந்து…” என்ற முல்லைப்பாட்டின் அடிகளுக்கு நல்ல ’மாடலாக’க் காட்சியளிக்கிறார் இவர்! 

இனி, கவிஞர்களின் முறை! தம் சிந்தனைக் குதிரையில் பயணித்துத் திரட்டும் கருத்து முத்துக்களை இங்கே கவிதைகளாய்க் கொட்டிச் செல்ல அவர்களை அன்போடு அழைக்கிறேன்!

*****

”பழுதாகி நொண்டியாய்ப் போன வண்டியைப்போல் பயனற்ற உடலோடு படுத்துக்கிடக்கின்றார் இந்த மனிதர்” என்று தன் கவிதையில் அவலச்சுவையை அள்ளித் தெளித்திருக்கின்றார் திரு. அ. இராஜகோபாலன்.

கழித்த பொருள்!

இழுக்க முடியாதபடிப்
பழுதான சக்கரங்களால்
நொண்டியாகிப்போன வண்டிக்குப் பாரமாய்,
ஓரஞ்சேர்ந்து,
இடம்பெயராதபடி,
பயனற்ற கை கால்களோடு
படுத்துக்கிடக்கிறது உடல்.

*****

”சொந்தமாக வண்டியோட்டி வாழும் வாழ்க்கையிலே, அயலவரை அண்டிப்பிழைக்கும் அவலமில்லை” என்று சுயதொழிலின் மேன்மையை நயமாய்ச் செப்புகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

அமைதியான…

வண்டி யோட்டி ஓய்வெடுக்கும்
வண்டிக் காரர் வாழ்க்கையிலே
அண்டிப் பிழைக்கும் அவலமில்லை
அலைந்து பெற்ற கடனுமில்லை,
பண்டிகை மற்றும் பிறநாளும்
பார்வைக் கவர்க்கே ஒன்றேதான்,
உண்டே உழைத்துபின் உறங்குவதால்
உளதே வாழ்வில் அமைதியொன்றே…!

*****

”சந்துமுனையில் காத்திருப்பார்; அழைத்தவுடன் சட்டென்று வந்திடுவார்” என்று வண்டிக்காரரின் நல்லியல்புகளைத் தன் சொல்மாலையில் அழகாய்த் தொகுத்தளித்திருக்கின்றார் பெருவை திரு. பார்த்தசாரதி.

வண்டிக்காரன்

எந்தி ரமாக உழைத்துவிட்டு
……….இயல்பாய்ச் சிரிக்கும் இம்மனிதர்.!
சந்தி ரய்யா நாயுடுவாம்
……….சகல கலா வல்லவராம்.!
சந்து முனையில் காத்திருப்பார்
……….சட்டென்று வருவார் அழைத்தவுடன்.!
எந்த வேலை என்றில்லை
……….எல்லாமும் செய்ய இசைவார்.!

பொருட்கள் ஏதும் கொண்டுசெலல்
……….பொறுமை யாய் வண்டியோட்டல்.!
விருப்ப முடனே செயல்படுதல்
……….வினை ஏதும் செய்யமாட்டார்.!
விரும்பி எதையும் கொடுத்தபோது
……….வேண்டா மென்று சொல்லமாட்டார்.!
பொருத்த மான வாடகையைப்
……….புரிந்து கொண்டு பணம்கேட்பார்.!

*****

சிந்தனைச் செறிவுள்ள கவிதைகளைப் படைத்தளித்திருக்கும் கவிஞர்களுக்கு என் வந்தனங்கள்!

இவ்வாரத்தின் சிறந்த கவிதையாய்த் தேர்வுபெற்றிருப்பது இனி…

சந்திரய்யா நாயுடு எந்திரய்யா சீக்கிரம்!

”காலங் காத்தால நல்ல போணியாகப் போகுது
காலநீட்டிப் படுக்காமக் கடமைக்கு நீ புறப்படு!
வண்டியில படுத்திருந்தா வருமானம் கெடைக்குமா?
உண்டுப்பிட்டு உறங்கிப்புட்டா உழைப்பு வந்து சேருமா?
சந்திரய்யா நாயுடு….

பாற்கடலில் பள்ளிகொண்ட பரந்தாமன் போலவே
வேர்க்கடலை யாவாரி விழுந்து கெடக்க முடியுமா?
நித்திரையே நினைவாக நீட்டிக் காலை வச்சுக்கிட்டு
புத்தரைப் போல் நாம் படுத்தா பொழைப்பு வந்து தேறுமா?
இத்தரையில் காசில்லாம எதுவுமில்லை நாயுடு
எத்தனையோ பொழைப்பிருக்கு எந்திரிச்சிப் போயிடு.
சந்திரய்யா நாயுடு….”
என்று வாழ்வில் உழைத்துப் பிழைக்கவேண்டியதன் அவசியத்தை நகைச்சுவையோடு, இரசிக்கும்படியாக, நவின்றிருக்கும் இக்கவிதையின் படைப்பாளி திரு. சித்திரவேலு கருணானந்தராஜாவை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “படக்கவிதைப் போட்டி 175-இன் முடிவுகள்

  1. எனது கவிதையைத் தெரிவு செய்து இவ்வாரத்தின் சிறந்த கவிஞரெனப் பாராட்டியமைக்காக வல்லமை குழுமத்திற்கும் நடுவர் மேகலா ராமமூர்த்திக்கும் நன்றிகளைத் தெரிவிக்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *