சக்தி சக்திதாசன்

அன்பினியவர்களே !

அன்பான வணக்கங்களுடன் அடுத்தொரு வாரத்தில், அடுத்தொரு மடலுடன் உங்களிடையே உலவ வருகிறேன். ஓடி,ஓடிக் களைக்கவில்லை உலகம், பாடிப் பாடிச் சலிக்கவில்லை குயில், பேசிப் பேசி ஓயவில்லை கிளி, வீசி, வீசி ஓயவில்லை காற்று, பொழிந்து, பொழிந்து வற்றவில்லை மழை, ஒளிர்ந்து, ஒளிர்ந்து அழியவில்லை ஆதவன், தேய்ந்து, தேய்ந்து தன்னை முழுவதுமாய் முடிக்கவில்லை நிலா. ஆம் இவையெல்லாம் எமக்கு இயற்கையன்னை தந்த பரிசு. இவைகளெல்லாம் தமக்களிக்கப்பட்ட கடமைகளை காலத்தோடு நிறைவேற்றிக் கொண்டேயிருக்கின்றன. யாருக்கு தம்முடைய தேவை இருக்கிறதோ? அன்றி யாருக்குத் தேவைப்படவில்லையோ? எனும் கவலையின்றி ஓய்வின்றி தமது கடமைகளை ஆற்றிக்கொண்டேயிருக்கின்றன. ஆனால் மனிதர்கள் மட்டும் . . . . உங்களின் முடிவுக்கே விட்டு விடுகிறேன்.

ப்ரெக்ஸிட் எனும் அந்தப்பெரிய குழி தோண்டப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. அதைச்சுற்றிய வாதங்களும், பிரதிவாதங்களும் ஓயாமல் நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன. இதுவரை அந்த ப்ரெக்ஸிட் எனும் சுழியினுள் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த எமது பிரதமர் தெரேஸா மே அவர்கள் அதற்போது அந்தச் சுழலுக்குள் இருந்து மெதுவாக தனது தலையை உயர்த்தியுள்ளார். அவரது தலை மட்டுமே தெரிகிறது உடல் இன்னமும் அந்தச் சுழிக்குள் தான் அகப்பட்டு இருக்கிறது. அப்படியே உள்ளே இழுபட்டு விடும் அபாயம் அவரை விட்டு இன்னமும் அகலவில்லை. இங்கிலாந்துப் பாராளுமன்றம் தனது கோடைகால விடுமுறையைக் கழித்துக் கொண்டிருப்பதால் அவர் இன்னமும் கடித்துக் குதறப்படாமல் இருக்கிறார். இந்த நிலையில் தான் அவரது கால் முதன்முறையாக ஆபிரிக்க கண்டத்தினுள் பதிந்திருக்கிறது. தென்னாபிரிக்காவில் தனது உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு நைஜீரியா நாட்டினுள் நுழைந்திருக்கிறார். அவரது இந்த விஜயம் பற்றி அவர் ப்ரெக்ஸிட் எனும் நிகழ்வு முடிந்த பின்னால் ஜக்கிய இராஜ்ஜியம் தனது எதிர்கால வியாபார விஸ்தரிப்புகளை மேற்கொள்ளுவதற்கு ஏதுவாக அமையும் எனும் வகையில் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

பிரதமர், அடுத்த வருடம் மார்ச் 29ம் திகதி ஐக்கிய இராஜ்ஜியம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து உத்தியோகபூர்வமாக முற்றாக வெளியேறிய பின்னால் அதிககாலம் தனது பதவியில் நீடித்திருக்க வாய்ப்பில்லை என்பது கணிசமான அரசியல் அவதானிகளின் கணிப்பாகும். அதற்கு ஏதுவாக சமீபத்தில் பிரதமரின் ப்ரெக்ஸிட் சம்பந்தமாக ஐரோப்பிய ஒன்றியத்துடன் செய்யப்போகும் உடன்பாட்டைப் பற்றிய அறிக்கையை எதிர்த்து தனது பதவியை இராஜினாமாச் செய்த முன்னால் வெளியுறவு அமைச்சர் பொரிஸ் ஜான்சன் தொடர்ந்து பிரதமருக்கு எதிரான பல பத்திரிக்கை அறிக்கைகளை வெளியிட்ட வண்ணமிருக்கிறார். வருகின்ற அக்டோபர் மாதம் நடைபெறவிருக்கும் பிரதமரின் அரசியல் கட்சியான கன்சர்வேடிவ் கட்சியின் வருடாந்தர மகாநாட்டின் போது பிரதமருக்கு எதிரான சவால் பொரிஸ் ஜான்சனிடமிருந்து வரலாம் என்பது பொதுவான கருத்தாக இருக்கிறது. ஆனால் நமது பிரதமரும் சளைத்தவரல்ல ! இந்த வெளிநாட்டுப் பயணத்தின் போது உடன் சென்ற ஊடகவியலாளருக்கு அளித்த பேட்டியில் எவ்வகையான எதிர்ப்பு எவரிடமிருந்து வரினும் அதனை நான் எதிர்கொண்டு வெற்றிகொள்வேன் என்றும் எமது இந்த அரசியல் பயணம் எனது நாட்டு மக்களின் வாழ்வைச் சுபீட்சமாக்கும் நோக்கம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டுள்ளது என்றும் கூறியுள்ளார். தென்னாபிரிக்காவில் அவரை வரவேற்ற ஒரு பாடாசலை மாணவர்களின் நடனத்தில் தானும் இணைந்து ஆடிவிட்டாரே ஒரு நடனம் பாருங்கள் ! பார்த்த பொரிஸ் ஜான்சன் கூடக் கலங்கியிருப்பாரோ ?

இதுவெல்லாம் இப்படியிருக்க எமது ட்ரம்ப் அண்ணா எப்படியிருக்கிறார் ? ஐக்கிய அமெரிக்காவின் ஒரு இராணுவக் கதாநாயகர் என்று வருணிக்கப்படும், அமெரிக்க குடியரசுக் கட்சியின் முன்னால் ஜனாதிபதி வேட்பாளர் ஜான் மக்கெயின் அவர்களின் மறைவின் போதும் சர்ச்சையைக் கிளப்ப எமது அண்ணா தவறவில்லை. அமெரிக்க வியட்நாம் யுத்தத்தின் போது போரில் ஈடுபட்டிருந்த ஜான் மக்கெயின் அவர்கள் இரு இராணுவக் கைதியாக பிடிபட்டு பல சித்திரவதைகளுக்குள்ளாக்கபட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட போது அமெரிக்கா முழுவதனாலுமே நாட்டுத் தியாகியாக மதிக்கப்பட்டவர். அவர் பின்பு அரசியலில் ஈடுபட்டு ஓபாமா அவர்களுக்கு எதிராகப் போட்டியிட்டு தோல்வியைத் தழுவியவர். எப்போதும் தமது கருத்துக்களை அது தனது கட்சியின் கொள்கைகளுக்கு எதிரானதாக இருந்தாலும் கூட துணிந்து உரைத்து வந்தவர் ஜான் மக்கெயின். அவர் எமது ட்ரம்ப் அண்ணாவின் பல செய்கைகளை மிகக் கடுமையாக விமர்சித்து வந்தவர். ஒரு சமயம் அவரைப் பற்றிக் குறிப்பிடுகையில் ட்ரம்ப் அண்ணா அவர்கள் எதிரிகளால் கைப்பற்றப்படாமல் போரிடும் வீரர்களே தியாகிகள் , கைப்பற்றப்பட்ட ஜான் மக்கெயின் அல்ல என்று ஒரு சர்ச்சையைக் கிளப்பியிருந்தார். கடந்தவாரம் ஜான் மக்கெயின் அவர்கள் புற்றுநோய் காரணமாக இயற்கையெய்தியது அனைவரும் அறிந்ததே. அப்போது அமெரிக்காவில் அனைத்து முக்கிய ஸ்தலங்களில்லும் அமெரிக்கக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப் பட்டிருந்தது. ஆனால் ட்ரம்ப் அண்ணாவின் வெள்ளை மாளிகையில் ஒரே ஒருநாள் மட்டுமே அரைக்கம்பத்தில் பறந்தது. கொதித்தெழுந்தனர் அமெரிக்கர்கள். ஊடகங்கள் அனல் கக்கின. பயந்து விட்டார் ட்ரம்ப் அண்ணா என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் ! இறக்கி விட்டார் கொடியை மீண்டும் அரைகம்பத்தில்.

போகப் போகத் தெரியும். . . . இந்தப் பூவின் வாசம் புரியும் . . . .

மீண்டும் அடுத்த மடலில்

அன்புடன்

சக்தி சக்திதாசன்

http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.sakthithasan

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *