சேக்கிழார் பாநயம்  -1

திருச்சி  புலவர் இராமமூர்த்தி

—————————————————–

 

  ”மலர் சிலம்படி ”

   ********************

 

 

                      சைவத்திருமுறைகள் பன்னிரண்டு. அவை மூவர் தேவாரமும் , திருவாசகமும்  ஒன்பதின்மர் பாடிய ஒன்பதாம் திருமுறையும், திருமந்திரமும் பன்னிருவர்  பாடிய பதினோராம் திருமுறையும் , சேக்கிழார் இயற்றிய திருத்தொண்டர் புராணம் என்ற பன்னிரண்டாம் திருமுறையும் ஆகும். இவை  சிவபெருமானைத் தோத்திரம் செய்யும் பாடல்களும் , சைவ சித்தாந்த சாத்திரங்களும்  விரவியவை யாகும். இவற்றைப் பொருளுணர்ந்து பயிலுவோர் திருவடிப்பேறடைதல் உறுதி. இவற்றுள் முதல் பதினோரு திருமுறைகள் தோத்திரங்களாய் அமைந்தவை. பன்னிரண்டாம் திருமுறையாகிய பெரிய புராணம் நாயன்மார்களின் அருள் வரலாற்றைக் கூறும் காவிய நூலாகக் கருதப் பெறுகின்றது. இந்தப் பன்னிரண்டாம் திருமுறையைப் பாடியருளிய சேக்கிழார் பெருந்தகை, சோழநாட்டாமைச்சராக விளங்கியவர். அவர் அமைச்சுப்பணிகளின் இடையே நாடெங்கும் சென்றார். செல்லும் ஊர்களில் பற்பல சிவத்தலங்களாக விளங்கியதை அவர் கண்டார். அத்தலங்களில் எழுந்தருளிய பெருமானின் சிறப்புக்களை உணர்ந்து பாடிய அடியார்களின் திருப்பாடல்களையும் அவர்களின் அருள் வரலாறுகளைக்  கேட்டறிந்தார்.

 

                    சிவனடியார்களின்  திருத்தொண்டுகளால் மனங்கவரப்பெற்ற சேக்கிழார் பெருந்தகை , அவற்றைத் தொகுத்து ஒரு நூலாக ஆக்கக்  கருதினார். அதற்குப் பேருதவி புரிந்த ஒரு நூல் திருத்தொண்டத்தொகை  என்ற நூலாகும். அதன் வழியில் திருத்தொண்டர் திருவந்தாதி என்ற நூலும் சேக்கிழாரின் தேடலுக்கு உதவியது. அடியார்களுடன்   இறைவனின் புரிந்த  திருவருள் விளையாடல்களை, தனியடியார் அறுபத்து மூவர் வரலாறுகளுடன், தொகையடியார்கள் பற்றிய அறிமுகத்துடன் அவர் எழுதினர்.

 

                 இறைவன்  பெருமை மற்றும் எளிமை குறித்து சேக்கிழார் சுவாமிகள் அறிமுகப்படுத்தும் கடவுள் வாழ்த்துப் பாடல் தனித்த சிறப்புடன் விளங்குகிறது. இறைவனாகிய சிவபரம்பொருளின் பெருமை தமிழிலக்கியங்களில் பலவாறு பேசப்படுகிறது.அப்பரம்பொருளின்  வடிவத்தை அறிந்து கொள்ளும் முயற்சியில், எங்கும் நிறைந்த அந்தப்  பரம்பொருள் பற்றி இப்போது நாம் சிந்திப்போமா? நாம் இருக்குமிடத்திலிருந்து வடக்கே தொடர்ந்து சென்று ,  இமயமலையைக் கடந்து பூமியின் நிலப்பகுதியைக் கடந்து வானில்  நெடுந்தூரம் வெட்டவெளியில் சென்றால் அது எங்கேயும்  முடியாமல் நீண்டுகொண்டே இருக்கும்; அவ்வாறே தெற்கில் சென்றால் நிலத்தின் எல்லை கடந்து வானம் எவ்வளவு தொலைவு நீண்டுள்ளது என்பதை அறிந்து கொள்ள முடியாது; அவ்வாறே கிழக்கிலும் மேற்கிலும் வெளியின் தொலைவு எவ்வளவென்று அறிந்து கொள்ள வியலாது.

இப்படியே பூமிக்குக் கீழும் வானத்தின் மேலும் பறந்து விளங்கும் வெளியின் அளவை அறிதல்  இயலாது. ஒருபுள்ளியிலிருந்து மற்றொரு புள்ளி வரை எழுதும் கோடு , நீளம் என்றும்,  அகலம் என்றும்,  அறிந்துள்ளோம்.  ஆனால் பிரபஞ்ச வெளியின் நீளத்தையும்,  அகலத்தையும்,  உயரத்தையும்,  ஆழத்தையும் அளவிடுவது எவருக்கும் எப்போதும்  இயலாததாகும்  இதனை,

    

                 ”யாரறி  வார்இதன்  அகலமும்       நிகளமும்

                   யாரறி  வார்இதன்   அருமையும்  பெருமையும்             

                   பேரறி   யாத   பெரும்பொருள்   நின்னுடை

                   வேரறி   யாமை   விளம்புகின்   றேனே!

                         

என்று பழம்பாடல் கூறுகின்றது. மேலும் , இந்தப் பெருவெளி தரும் காட்சிகள்  கோடிக்கணக்கானவை!  இதனைத் திருவாசகத்தின்  திருவண்டப்பகுதி,

 

                 அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்

                 அளப்பு அரும் தன்மை வளப் பெருங் காட்சி

                 ஒன்றனுக்கு ஒன்று நின்றெழில் பகரின்

                 நூற்று ஒரு கோடியின் மேல்பட விரிந்தன

 

என்று  விளக்குகின்றது.  அவ்வாறே அந்தப்பெருவெளி எந்தக்காலத்தில் தோன்றியது, என்ற தொன்மையையும்,  எந்தக்காலம்  வரை நிலைக்கும் என்ற எதிர்காலத்தையும்  நம் சிற்றறிவால்  அளந்து விடல் எளிதன்று.   ஆகவே நீளத்திலும்  அகலத்திலும்  அளக்கவியலாத இடத்தையும்  (spece),  தொன்மையையயும் , எதிர்காலத்தையும்   அளக்க வியலாத காலத்தையும்  (time)  கொண்டது அப்பெருவெளி. அப்பெருவெளியே ஈசனின் உடல் என்று நம் சமயங்கள் கூறும்.  இதனைக்

 

                       ” கருதரிய   கருத்ததனுட்   கருத்தாய் மேவிக்

                                காலமும்   தேசமும் வகுத்துக்   கருவியாதி

                         விரிவினையும்   கூட்டியுயிர்த்    திரளை   ஆட்டும்

                                 விழுப்பொருளே ”

 

என்பார் தாயுமானவர்.

 

                         ”முன்னைப் பழம்பொருட்கும்  முன்னைப்   பழம்பொருளே

                          பின்னைப்   புதுமைக்கும்   பேர்த்துமப்    பெற்றியனே ”

 

என்று திருவாசகம் பாடும்.  இத்தகை மிகப்பெரிய , கற்பனை கடந்த பரம்பொருளே சிவபிரான் என்பர் சைவர். இதனை எந்த உலகத்தாராலும்  அறிந்துகொள்ளுதல் இயலாது; ஆனால்  இறைவன் திருவருளால்   உணர்ந்து கொள்ளலாம். ஆகவே ”உலகெலாம்   உணர்ந்து” என்ற தொடரால் சேக்கிழார்  புலப்படுத்துகிறார். இவ்வாறு உணர்ந்துகொண்ட  பரம்பொருளைப்   பற்றிய  விளக்கத்தைக்   கூறுதல் எவருக்கும் இயலாது. ஆகவே,  இதனை ” ஓதற்கு  அரியவன் ” என்ற தொடரால் , விளக்குகிறார்.   இவ்வாறு உணர்தற்கும் ஓதற்கும்  அரிய பரம்பொருளை,  நாம் புரிந்துகொண்டு   வழிபாடு   செய்வது   எவ்வாறு?  என்ற  ஐயம்  உண்டாகும்.  அதனைத் தீர்க்கும் வகையில் புலவர்,   அடுத்த  அடியைப்  பாடுகிறார். அதில் அந்த இறைவனின் திருவுருவத்தை நமக்குச் சற்றே அடையாளம்  காட்டுகிறார். ” நிலவுலாவிய   நீர்மலி வேணியன் ” என்பதே அந்த அடி! அதாவது அந்த இறைவனின் நிலாப்பிறை அணிந்த  சடைமுடி,  அதில் நிரம்பி வழியும் கங்கை நீர்   இவற்றால்   திருமுடியின் திருக்காட்சி விளக்கப் பெறுகிறது.

      

                   ”ஓஹோ!  வானத்து நிலவின்  பிறையைத்  தலையின் ஜடாமுடியில் அணிந்தவரா அவர்?  அந்தச் சடையில் கங்கை நதியையும் அணிந்தவரா?”  என்று நாம் கேட்கும் போதே, ” அவ்வளவு பெரிய  வடிவமா அவர் வடிவம்?”  என்று கேட்கிறோம்.  அந்த கங்கை நதி, வடக்கே  இமயமலையில் அல்லவா  தோன்றுகிறது? என்றெண்ணி,   ” அவ்வளவு தொலைவு நாம் சென்றால் தானே அவரைக் காணுதல் இயலும்?” என்ற அடுத்த வினா நம்மிடம் உண்டாகும்.அங்கே இருந்துஇன்னும்தெற்கே இறங்கி வருவார்அவர் , என்பதை,  ”அலகில் சோதியன்” என்ற தொடரால் சேக்கிழார் புலப்படுத்துகிறார். ஆம்!  செம்பொற்சோதியாய் அவர் திருவண்ணாமலையில் காட்சியளிப்பதை  நம் நினைவுக்குக்  கொண்டு வருகிறார்.

 

                          ”இதோ,   இங்கேதான் அண்ணாமலையாராக அவர் திருக்காட்சி தருகிறாரா? ” என்று சற்றே ஆறுதல் பெறுகிறோம். ” ஆனால் மண்ணின் கீழேயும்  விண்ணுக்கு மேலேயும்  பெருநெருப்பு வடிவில் விளங்கும் அப்பரம் பொருளை, நாம் நெருங்கி வணங்குவது மிகவும் அரிதல்லவா?” என்று நாம் எண்ணித் திகைக்கும் போதே,  ”அம்பலத்து  ஆடுவான்”  என்ற தொடரால் ,  சிவன் இன்னும் அருகில் தில்லையம்பலத்தில் நடனமாடுகிறார்  என்று கூறுகிறார்.  நாம் சென்று   காண்பதற்கரிய நிலாப்பிறை , கங்கை நதி  இவற்றுடன்,    வடக்கே இமய  மலையில்  காட்சி தருபவர்,   திருவண்ணாமலையில் நெருங்க முடியாத நெருப்பாக  உயர்ந்தவர்,  அத்திருவுருவின்   திருவடியைத்   தில்லையில் நாம் சென்று காணும் படி நடனமாடுகின்றார் , என்ற  நம்பிக்கையை அளிக்கிறார்.  அத்திருவடியை,  நாமே   தில்லைக்குச் சென்று,   நம்  கண்களால்  காணலாம். அத்திருவடி மலர் போல் மலர்ந்து,  நாம் தூவும் மலர்களால் நறுமணம்  பெற்று விளக்குகிறது. அப்பெருமான் தம்  திருவடியில் சிலம்பு என்ற அணிகலனை அணிந்து கொண்டு ஆடுகிறார் இதனை , ”மலர் சிலம்படி”  என்ற தொடர் விளக்குகின்றது.

 

                              கற்பனைகடந்த பேருருவத்தை  அருவமாக நாம் எண்ணுகிறோம். அதனை அருவுருவாக உணர்ந்து ஒதுகிறோம் . அவ்வுருவை நிலாப்பிறை அணிந்து , கங்கை நதியைச் சடையில் தாங்கித்  தில்லையில் நடனமாடும் திருவடியுடன்காட்சியளிக்கும்  உருவமாகக் கண்டு வழிபடுகின்றோம்.   இப்பாடலில்  சிவபெருமானை அருவமாகவும்,  அருவுருவமாகவும், உருவமாகவும் , எண்ணி, உணர்ந்தறிந்து, கண்டு வழிபாடு செய்வதற்குரிய வகையில் இறைவன் புலப்படுவதைச்  சேக்கிழார் பெருந்தகை  இப்பாடலில்  விளக்குகிறார்!  பெருவெளியில்  விளங்கும் பரம்பொருள்,  காலதேசங்கடந்து இமயமலைக்கும், அண்ணாமலைக்கும், சிதம்பரத்துக்கும் இறங்கி வந்து, திருவருள் புரிவதைக்  கால முறைப்படியும், இடத்தின்  வகைப்படியும் விளக்கும் சேக்கிழார் பெருந்தகையின் செய்யுள் திறம் எண்ணியெண்ணி மகிழத்  தக்கதல்லவா ?   இனி முழுப்பாடலையும் படிப்போம்; பாராயணம் செய்வோம்.

 

                                          ”உலகெலா   முணர்ந்   தோதற்   கரியவன்

                                            நிலவு    லாவிய    நீர்மலி     வேணியன்

                                            அலகில்   சோதியன்   அம்பலத்   தாடுவான்

                                            மலர்சி   லம்படி   வாழ்த்திவ   ணங்குவாம்!”

 

இப்பாடலில்   பெருவெளியில் கற்பனைக்கெட்டாத  நிலையில் விளங்கும் இறைவன் நிலாப்பிறை தோன்றும் சந்திரமண்டல   வான்வழியே , கங்கை தோன்றும் இமயமலை நோக்கி இறங்கி, அண்ணாமலை ஒளியாகித் தில்லையில் திருநடம் புரியும் திருவடிபதித்து,   நாம் மலரிட்டுத் தோத்திரித்து வழிபாடு செய்தற்குரியவனாய்  எளிவந்த அருட் செயலை  விளக்குகிறது.

 

Share

About the Author

திருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி

has written 67 stories on this site.

கல்வித் தகுதி: புலவர்; எம்.ஏ., எம்.எட்; பணி : தமிழாசிரியர், இ.ஆர்.மேனிலைப் பள்ளி, திருச்சிராப்பள்ளி - 620 002 (36- ஆண்டுகள் - 2001 பணி நிறைவு) இலக்கியப் பணி: சமய, இலக்கியச் சொற்பொழிவாளர், கவிஞர், எழுத்தாளர் (40 ஆண்டுகள்), பட்டிமண்டபம், வழக்காடு மன்றம், தொடர் விரிவுரை, கவியரங்கம், கோல உரையாடல் சிறப்புப் பட்டங்கள் : இலக்கியச் சுடர்; இன்கவித் தென்றல்; இன்தமிழ்ச் சொல்லேந்தல்; நகைச்சுவை இமயம்; பாரதி இலக்கியச் செல்வர், இலக்கிய சேவாரத்தினம்   பெற்ற விருதுகள் : 1. ரோட்டரி சாதனையாளர் (கவிதை விருது) 1997-98 2. தமிழ்ச் செம்மல் (கல்கத்தா தமிழ் மன்றம்) 3. இலக்கியச் செல்வர் (கல்கத்தா பாரதி தமிழ்ச் சங்கம்) 4. சிறந்த நூலாசிரியர்(2005-06) உரத்த சிந்தனை 5. சைவ சித்தாந்தப் புலவர்- 2007 ஸ்ரீ காஞ்சி மடம் 6. பாரதி பணிச்செல்வர் 2007 அ.இ.தமிழ் எழுத்தாளர் சங்கம் 7. குலோத்துங்கன் கவிதை விருது -இலக்கியப்பீடம் 8. சாதனையாளர் -2009 (மனிதநேயப் பேரவை, உரத்த சிந்தனை) 9. பாரதி இலக்கியச் செல்வர் -2009 அ. இ. தமிழ் எழுத்தாளர் சங்கம். 10. தமிழ் இலக்கிய சேவாரத்னா - 2014 (காஞ்சி ஸ்ரீ சங்கர மடம் ) எழுதிய நூல்கள் : 1. ஐயப்பன் அந்தாதி 1995 (ஒலிப்பேழை- உன்னிகிருஷ்ணன்) 2. எழுத்தும் பேச்சும் (மணிவிழா) 3. மொழியும் பொருளும் (மணிவிழா) 4. திருக்காளத்தித் தலச்சிறப்பு.- 2004 5. திருக்குறள் தெளிவுரை 2008 (இலக்கியப் பீடம்) 6. அருந்தொண்டாற்றிய தமிழக அந்தணர் (ஆசிரியர் குழு) 7. பாரதியின் பேரறிவு 2011 8. தமிழ்க் கடல்மணி 2013(70-ஆம் அகவை) 9. ஐயப்பன் அந்தாதி விளக்கவுரை (அச்சில்) 10. மனங்கவரும் மலர்கள் (அச்சில்) 11. வாட்போக்கிக் கலம்பகம் விளக்கவுரை (அச்சில்) 12. திருக்குறளும் தெய்வத்தின் குரலும் சொற்பொழிவாற்றிய ஊர்கள் : தமிழகம் முழுவதும், திருவனந்தபுரம், ஆல்வாய், கொழிஞ்சாம்பாறை, பாலக்காடு, ஹைதராபாத், பெங்களூர், மும்பை, புதுதில்லி, கொல்கத்தா.. சொற்பொழிவாற்றிய நாடுகள்: இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், இங்கிலாந்து (இலண்டன்), அமெரிக்கா (பீனிக்ஸ்) மற்றும் மஸ்கட்.

Write a Comment [மறுமொழி இடவும்]

Security Question: (* Solve this math to continue) *


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.