இலக்கியம்கவிதைகள்பத்திகள்

குறளின் கதிர்களாய்…(224)

செண்பக ஜெகதீசன்

 

பகையகத்துச் சாவா ரெளிய ரரிய      

ரவையகத் தஞ்சா தவர்.                                                

       -திருக்குறள் -723(அவை அஞ்சாமை)

 

புதுக் கவிதையில்…

 

பகைவர் அஞ்சும்வகையில்

களம் புகுந்து போரிட்டுச்

சாவதற்கும் அஞ்சாத

வீரராய்

உள்ளனர் பலர்..

 

கற்றோர்

அவையில் சென்று பேச

அஞ்சாதவர்

ஒரு சிலரே…!

 

குறும்பாவில்…

 

பலருளர் போர்க்களம் சென்று             

போரிட்டுச் சாக அஞ்சாதவர், சிலர்தானுளர்    

கற்றோரவையில் கலங்காது செல்ல…!

 

மரபுக் கவிதையில்…

 

பகைவர் நிறைந்த போர்க்களத்தில்

     பயமது நெஞ்சில் ஏதுமின்றி

பகைவர் வியக்கப் போரிட்டும்

     பலனாய்ச் சாகவும் அஞ்சிடாத

வகையில் வீரர் பலரிருந்தும்,

     வழுவிலாக் கல்வி கற்றோரவை 

புகவே அஞ்சிடார் சிலரேதான்

     புவியி லுண்டென அறிவீரே…!

 

லிமரைக்கூ..

 

அஞ்சிடா வீரர்களுண்டு பலர்,    

சாவுவரினும் போரிடுவர், கற்றோரவையில்                 

அஞ்சிடாமல் செல்பவரோ சிலர்…!

 

கிராமிய பாணியில்…

 

பயப்படாதே பயப்படாதே

சபயேறப் பயப்படாதே..

 

சண்டயில சாவுவந்தாலும்

பயப்படாம சண்டபோடும்

வீராதிவீரரெல்லாம் கொஞ்சமில்ல,

நெறயநெறய உண்டு..

 

ஆனா

படிச்சவங்க சபயில

பயப்படாம போறவங்க

அதிகமில்ல,

ரெம்பக் கொறவாத்தான் உண்டு..

 

அதால

பயப்படாதே பயப்படாதே

சபயேறப் பயப்படாதே…!

 

செண்பக ஜெகதீசன்…

 

 

Share

Comment here