கொங்கு வேளாளர்களின் சடங்குகளில் பெண்களுக்கான  உரிமைகள்

1

-த.ஜோதிமணி

முன்னுரை

பண்டைய காலத்தில் மனிதன் தன் வாழ்வில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் மகிழ்ச்சியாகக் கொண்டாடத் தொடங்கினான். அவற்றில் கண்ணேறு கழித்தல், புனிதமாக்குதல், பெரியவர்களிடம் ஆசி பெறுதல், உற்றார் உறவினர்களுக்கு மதிப்பளித்தல் போன்ற காரணகாரியத்துடன் கூடிய பல்வேறு செயல்களைச் செய்தான். அதுவே காலப்போக்கில் சடங்குகளாக மாறியது.

“பரம்பரை வழக்கமாகச் செய்துவரும் செயல்களே சடங்குகளாம். இவை நூல் முறையானும் சான்றோர் நெறியாலும் வழிவழி வருவன. இவற்றை அறிந்த முதியோர் ஏனையோற்கு வழிகாட்ட இவை பின்பற்றப்படுபவை.”1 என்று சங்கத்தமிழரின் வழிபாடும் சடங்குகளும் என்னும் நூலில் மு.சண்முகம் பிள்ளை குறிப்பிடுகிறார்.

சடங்குகள் நம் முன்னோர்களிடமிருந்து பரம்பரை பரம்பரையாக  தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருவது. அதில் ஒவொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட பங்கு உண்டு. சில சடங்குகளில் பெண்களின் பங்கும் இன்றியமையாததாக உள்ளது. சடங்குகளில் பெண்களுக்கு என்னென்ன உரிமைகள் கொடுக்கப்படுகிறது  என்பதை ஆராய்வதன் மூலம், அவர்களுக்கான   உரிமைகள் மறுக்கப்பட்டு, அடிமையாக நடத்திய காலத்தில் அவர்களின் நிலை எவ்வாறு இருந்தது என்பதை அறியமுடியும். எனவே சடங்குகளின் மூலம் கொங்கு வேளாளர் இனப்  பெண்களின் முந்தைய நிலையை வெளிப்படுத்துவது இக்கட்டுரையின் நோக்கம் ஆகும்.

சடங்குகளில் பெண்கள் பங்கேற்கும் உரிமை

கொங்கு வேளாளர்கள் தங்கள் வாழ்வில் பிறப்பு முதல் இறப்பு வரையில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளுக்கும் குறிப்பிட்ட சடங்குகளை வகுத்து வைத்துள்ளனர். பிறப்புச் சடங்கு, பூப்புச் சடங்கு, திருமணச் சடங்கு, வளைகாப்புச் சடங்கு, எழுதிங்கள் சீர், இறப்புச் சடங்கு போன்ற அனைத்துச் சடங்குகளும் கொங்கு வேளாளர்களால் இன்றுவரை பின்பற்றப்பட்டு வருகின்றன. அவைகளுள் சில தனித்தன்மை வாய்ந்ததாக உள்ளது. இச்சடங்குகள் அனைத்திலும் பெண்களும் பங்கு பெறுகின்றனர்.

இவர்களின் சடங்குகள் அனைத்திலும் ‘எழுதிங்கள் சீர்’ எனப்படும் மங்கலச் சடங்கினைச் செய்துகொண்ட பெண்களே முன்னுரிமை வகிக்கின்றனர். இப்பெண்கள் ‘எழுதிங்கள் காரி’ அல்லது ‘சீர்க்காரி’ என்று அழைக்கப்படுகின்றனர். திருமணம் செய்துகொண்டு குழந்தைகளுடன் இருக்கும் சுமங்கலிப் பெண்களே இச்சீரினை செய்துகொள்ளமுடியும். அதன் பின்னரே இப்பெண்கள் அனைத்துச் சடங்குகளிலும் முன்னின்று செய்யும் உரிமையைப் பெறுகின்றனர்.

பிறப்புச் சடங்குகளில் பெண் பெண்களுக்கான உரிமை

குழந்தை பிறந்ததும் முதல் சடங்காக ‘சேனை ஊட்டுதல்’ மேற்கொள்ளப்படுகிறது. சேய் + நெய் + ஊட்டுதல் =  சேனை ஊட்டுதல் என வழங்கப்படுகிறது. சர்க்கரைத் தண்ணீர், தேன், தாய்ப்பால் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றைக் குழந்தையின் நாக்கில் தடவுதல் சேனை ஊட்டுதல் அல்லது சேனை தொடுதல் எனப்படுகிறது. சில இடங்களில் இதனை ‘செவ்வெண்ணை வைத்தல்’ என்றும் கூறுவர். சேனை ஊட்டுபவரின் குணநலன்கள் குழந்தைக்கு வரும் என்ற நம்பிக்கை உள்ளதால், நற்குணங்கள் நிறைந்த சுமங்கலிப் பெண்களே இதற்குத் தகுதி உடையவர்களாகக் கருதப்படுகின்றனர்.

பூப்புச் சடங்குகளில் பெண் பெண்களுக்கான உரிமை

பூப்புச் சடங்குகளை, பூப்பெய்திய உடன்செய்யும் சடங்குகள், ஏழு அல்லது ஒன்பதாம் நாள் சடங்குகள் என இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். பூப்புச் சடங்கில் தாய்மாமன் முன்னுரிமை பெற்றாலும் அது பெண்ணுக்கான சடங்கு என்பதால் பெண்களின் பங்களிப்பு அதிகமாக உள்ளது. இச்சடங்கு முழுவதும் எழுதிங்கள் செய்துகொண்ட சுமங்கலிப் பெண்களே செய்கின்றனர். தாய் மாமன் மனைவி மட்டும் எழுதிங்கள் செய்துகொள்ளாமல் இருந்தாலும் பங்கேற்கலாம்.

பூப்பெய்திய உடன் செய்யும் சடங்கு 

பூப்பெய்திய பெண்ணை மூன்று அல்லது ஐந்து அத்தை முறையுடைய சீர்காரப் பெண்கள் மஞ்சள் கலந்த நீரினைக் கொண்டு நீராட்டுவர். பின்னர் தாய்மாமன் வீட்டினர் எடுத்து வந்த புத்தாடையை அணிவித்து, கையில் சிறிய இரும்புத் துண்டு, வேப்பிலை, மைகோதி போன்றவற்றைக் கொடுத்து தாய்மாமன் கட்டிய குடிசையில் விடுவர். அப்போது வாழைப்பழம், நெய், சர்க்கரை, பால் போன்றவற்றை தாய்மாமன் கொண்டுவந்த புதிய வட்டிலில் போட்டுப் பிசைந்து உண்ணக் கொடுப்பர். தேன், தினைமாவு அல்லது பொட்டுக்கடலையுடன் வெல்லம் சேர்த்த உருண்டை ஆகியவற்றை பூப்பெய்திய பெண்ணுக்கும் விருந்தினருக்கும் கொடுக்கின்றனர்.

ஏழு அல்லது ஒன்பதாம் நாள் சடங்கு

ஏழு அல்லது ஒன்பதாம் நாள், பூப்பெய்திய பெண்ணை புனித நீராட்டி வீட்டிற்கு அழைக்கும் சடங்கு நடைபெறும். நீராட்டுவதற்காக நிறைகுடம் நீரை அத்தை முறையுடைய சுமங்கலிப் பெண்கள் கொண்டுவருவர். பின்னர் பூப்பெய்திய பெண்ணைக் கிழக்குப் பார்த்தவாறு முக்காலியின் மீது அமரச்செய்து, எள் சலிக்கப் பயன்படும் இரும்புச் சல்லடையை தலைக்கு மேல் மூன்று பெண்கள் பிடிக்க ஒரு பெண் இரும்புப் படியில் நீரை எடுத்துக்  கொடுக்க மற்றொரு பெண் அதனை வாங்கி மூன்று முறை ஊற்றியபின்  மஞ்சள் மற்றும் சுண்ணாம்பு கலந்த செஞ்சோற்று உருண்டைகளை இடம் வலமாகச் சுற்றி மூன்று திசைகளில் போடுவர்.

‘சருவச்சட்டி’ எனப்படும் வாயகன்ற பாத்திரத்தில் மஞ்சள் கலந்த நீரையெடுத்து அதனை தலைக்குமேல் இடம் வலமாக மூன்று முறை சுற்றியபின் ஊற்றுவர். அப்போது வண்ணார் பந்தம் பிடிப்பார். நாவிதர் உடனிருந்து சடங்குகளில் பங்கேற்பார். இதனைச் ‘சோறு சுற்றிப்போட்டு தண்ணீர் ஊற்றுதல்’ என்று கூறுகின்றனர். மஞ்சளும், சுண்ணாம்பும் கிருமி நாசினி  என்பதால் நச்சுக் கிருமிகளை அகற்றும் பொருட்டும் கண்ணேறு  கழிக்கும் பொருட்டும் மங்கலப் பெண்களால் இச்சடங்கு செய்யப்படுகிறது.

தாய்மனைக் கூடை சுற்றுதல் 

தாய்மாமன் வீட்டிலிருந்து நிறைய சீர்கள் வந்தாலும் தன் வீட்டுச்சீர் ஒன்றாவது இருக்க வேண்டும் என்னும் அடிப்படையில் பூப்பெய்திய பெண்ணுக்குத்  தாய்மனைக் கூடை சுற்றப்படுகிறது. இதில் அரிசி, வாழைப்பழம், தேங்காய், அச்சு வெல்லம், வெற்றிலை பாக்கு, பூ போன்றவை இருக்கும். தாய் வீட்டுச் சீராக இருந்தாலும் அதனையும் அத்தை முறையுடைய எழுதிங்கள் செய்துகொண்ட பெண்களே சுற்றுகின்றனர். இக்கூடையை மூன்று அல்லது ஐந்து பெண்கள் சேர்ந்து பெண்ணின் தலைமீது இடம் வலமாகச் சுற்றி ஆசீர்வதிக்கின்றனர்.  பின்னர் வீட்டிற்கு அழைத்துவந்து வாழைப்பழம், நெய், சர்க்கரை, பால் போன்றவற்றை தாய்மாமன் கொண்டுவந்த வட்டிலில் போட்டுப் பிசைந்து உண்ணக் கொடுப்பர்.

இதே போன்று மங்கலப் பெண்கள் தாய்மாமன் வீட்டுச்சீர்களையும் பூப்பெய்திய பெண்ணைச் சுற்றியபின் பூ, பொட்டு வைத்து ஆசீர்வதிக்கின்றனர். இவ்வாறு பூப்புச் சடங்குகள் முழுவதிலும் பெண்களே முன்னுரிமை பெறுகின்றனர்.

திருமணச் சடங்குகளில் பெண்களுக்கான உரிமை

மனிதனின் வாழ்வில் முக்கிய இடத்தைப் பெறுவது திருமணம் ஆகும். திருமணத்தின்போது ஆண், பெண், இருவருக்கும் சடங்குகள் செய்யப்படுகின்றது. சில சடங்குகள் இருவருக்கும் பொதுவானதாகவும் சில மாறுபட்டதாகவும் இருக்கும்.

நிச்சயதார்த்தம்

நிச்சயதார்த்தம் அல்லது நிச்சய தாம்பூலம் என்று அழைக்கப்படும் இந்நிகழ்வில் எழுதிங்கள் செய்துகொண்ட மணமகனின் பங்காளி வீட்டுப் பெண்கள் முன்னிலை வகிக்கின்றனர். நிச்சயதார்த்த நிகழ்வின்போது   வண்ணார் தரையில் விரிக்கும் மாற்றுத் துணியின்மீது மணமகன் வீட்டில் இருந்து கொண்டுவந்த பட்டுப்புடவை, பழ வகைகள், மிட்டாய்கள், வெற்றிலைப் பாக்கு உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் அடங்கிய தாம்பூலத் தட்டுகள் ஏழு அல்லது ஒன்பது என்னும் ஒற்றைப் படை எண்ணிக்கையில் வைக்கப்படுகிறது. அதன் முன்னர் மணப்பெண்ணை கிழக்குப் பார்த்தவாறு அமரச்செய்து, பூசை செய்த பின்னர்க் கொண்டுவந்த பட்டுப்புடைவையை மணமகளை உடுத்தச்செய்வர். பின்னர் மணப்பெண்ணின் கன்னத்திலும் கைகளிலும் சந்தனம் பூசி, குங்குமம், பூ போன்ற மங்கலப் பொருட்களை வைத்து சீர்காரப் பெண்கள் ஆசீர்வதிப்பர். மணமகன் வீட்டில் இருந்து கொண்டுவந்த தாம்பூலத் தட்டுக்களை மணப்பெண்ணின் தலையை இடம் வலமாகச் சுற்றியபின் இப்பெண்ணை உறுதியாக திருமணம் செய்துகொள்கிறோம் என்பதற்கு அடையாளமாக ‘உறுதி நகை’ எனப்படும் பொன் நகையை மாப்பிள்ளையின் சகோதரி  அணிவிப்பார். பின்னர்த் தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை பாக்கு போன்றவற்றைப்  பெண்ணின் மடியில் கட்டி வயதில் மூத்த சுமங்கலிப் பெண்களிடம் கும்பிடு வாங்குவர். இச்சடங்குகள் அனைத்தும் எழுதிங்கள் செய்துகொண்ட பெண்களால் செய்யப்படுபவையாகும்.

சீர் அரிசி

திருமணச் சீருக்குத் தேவையான அரிசியை மணமகன் வீட்டு மங்கல மகளிர் தயார் செய்வர். பழங்காலத்தில் நெல்லை வேகவைத்து, உலர்த்தி, குற்றி அரிசியாக்குவதை ஒரு சடங்காகவே செய்தனர். இன்றளவும் இச்சடங்கு செய்தாலும் காலம் மாறிவருவதற்கேற்பத் தற்போது வீட்டில் பயன்படுத்தும் அரிசியே சீருக்காக சீர்காரப் பெண்களால் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

முகூர்த்தக்கால் நடுதல்

திருமணத்திற்கு இருநாட்களுக்கு முன்பு நடைபெறும் இந்நிகழ்வினை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கொங்குவேளாளர்கள்  கருதுகின்றனர். அருமைக்காரர் மற்றும் பிற ஆண்களால் கொண்டு வரப்பட்ட அரசு அல்லது வெப்பாலை போன்ற பால் உள்ள மரங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட சிறு கிளையை எழுதிங்கள்சீர் செய்துகொண்ட மங்கல மகளிர் மூன்று அல்லது ஐந்து பேர் பிடித்துக்கொள்ள அருமைக்காரர் அதில் நவதானியங்களை மஞ்சள் துணியில் முடிந்து மணப்பந்தலின் ஈசானிய(வட கிழக்கு) மூலையில் உள்ள பந்தல்காலில் கட்டுவார்.

சீர் தண்ணீர் கொண்டு வருதல் 

கொங்கு வேளாளர்களின் திருமணம் பெண் வீட்டில்தான் நடைபெறும். எனவே மணமகன் வீட்டில் இருந்து வந்த பெண்கள் திருமணச் சீருக்குத் தேவையான தண்ணீரைக் கொண்டுவருவது ஒரு சடங்காகவே செய்யப்படுகிறது. “மணமகன் வீட்டு எழுதிங்கள்சீர் செய்துகொண்ட மங்கல மகளிர் ஐந்து அல்லது ஏழு பேர் பெண் வீட்டின் அருகில் உள்ள நீர் நிலையில் இருந்து தண்ணீர் கொண்டுவந்து மேளதாளத்துடன் ஊர் எல்லையில் உள்ள பிள்ளையார் கோயிலில் வைத்துப் பூசைசெய்த பின்னரே மணப்பந்தலுக்குக் கொண்டுவருவர். இந்த நீரைக் கொண்டு மணமகன் வீட்டில் இருந்து கொண்டுவந்த சீர் அரிசியைச் சமைத்து மணமக்களுக்குக் கொடுப்பர். மீதம் உள்ள தண்ணீரைச் சீருக்குப் பயன்படுத்துவர்.”2

இன்று திருமணங்கள் மண்டபத்தில் நடைபெறுவதால் அதனைப் பெண் வீடாகக் கருதி, மண்டபத்திற்கு அருகில் சென்று சீர் தண்ணீர் கொண்டு வருகின்றனர். தற்போது சில இடங்களில் இச்சடங்கு இல்லாமல் போய்விட்டது.

நீராட்டுதல்

அனைத்து இன மக்களின் திருமணங்களிலும் மணமக்களுக்கு நீராட்டுதல் ஒரு சடங்காகவே மேற்கொள்ளப்படுகிறது. கொங்கு வேளாளர்களின் திருமணத்தின்போது நடைபெறும் இச்சடங்கினை ‘செஞ்சோறு அஞ்சடை கழித்தல்’ என்கின்றனர். இது மணமகன், மணமகள் இருவருக்கும் தனித்தனியாக செய்யப்படும் ஒத்த சடங்கு ஆகும். எழுதிங்கள் சீர் செய்துகொண்ட சீர்காரப் பெண்களே நீராட்டும் சடங்கினைச் செய்கின்றனர்.

நாட்டுக் கல்லிற்கு கங்கணத்துடன் வெற்றிலையும் சேர்த்துக் கட்டி அதன் முன்னர்  நெல் நிரப்பி தார்க்கருது செருகப்பட்ட நிறைநாழியை வைத்துப் பூசை செய்வர்.  பின்னர் மணமகனை கிழக்குப் பார்த்தவாறு முக்காலியின் மீது அமரச் செய்வர். அதன் பின்னர் நாவிதர் கொடுக்கும் சுண்ணாம்பும் மஞ்சளும் கலந்த செஞ்சோற்று அடைகளை மணமகனின் இரு கால்கள், கைகள், தலை போன்றவற்றின் மீது வைத்து பூசை செய்த பின்னர் அதனை இடம் வலமாகச் சுற்றி ஒவ்வொன்றையும் ஒவ்வொரு திசையில் போடுவர். பின்னர் தண்ணீர் ஊற்றிக் குளிப்பாட்டி வண்ணார் தரும் மாற்று உடையைக் கொடுப்பர். இந்நிகழ்வின்போது வண்ணார் பந்தம் பிடிப்பார். மணமகளுக்கும் இவ்வாறே செய்யப்படுகிறது. இவ்வாறு சீர்காரப் பெண்கள் மணமக்கள் இருவருக்கும் புனித நீராட்டும் உரிமையைப் பெறுகின்றனர்.   

இணைச்சீர்

இணைச்சீர் என்பது மணமகனுக்கு இணையான உரிமையை அவனின் சகோதரிக்கும் கொடுப்பதற்காகச் செய்யப்படும் சடங்கு ஆகும். அரசாணி, பேய்க்கரும்பு போன்றவை வைக்கப்பட்டு மணவறை போன்றே அலங்கரிக்கப்பட்ட இடத்தில் மணமகனை கிழக்குப் பார்த்து அமரச் செய்வர். அதன் வலது புறத்தில் பேழையில் மணமகனின் சகோதரியை நிறுத்தி அருமைக்காரர் பூசை செய்ய, அடுத்ததாக சீர்காரப் பெண்கள் பூசை செய்வர். மணமகளின் கூரைப்புடவையை கொசுவம் போல் மடித்து அதன் ஒருபுரத்தை சகோதரியின் கையிலும் மறுபுரத்தை மணமகனின் இக்கத்தில் கொடுத்து பூசை செய்வது இச்சடங்கின் சிறப்பு ஆகும். இச்சீரில் மணமகனின் சகோதரி மட்டுமின்றிப் பிற சீர்காரப் பெண்களின் பங்களிப்பும் இருக்கும். “மணமகன் – சகோதரி தொடர்பு திருமணத்தால் குறையாது; சீர் வரிசையில்  சமபங்கு அளிப்பேன் என்பதைக் குறிக்கவே இணைச்சீர் செய்யப்படுகிறது. பெண்ணுக்குச் சம உரிமை இல்லாத அந்தக் காலத்திலேயே கொங்கு வேளாளர்கள் பெண்களுக்குச் சம உரிமை கொடுத்தனர். ஆணிற்கு இணையாகப் பெண்ணிற்கும் உரிமையுண்டு என்பதை உணர்த்தும் சடங்கே – சட்ட விதியே இணைச்சீர் எனலாம்.”3   

தாய்க்கான உரிமை

கொங்கு வேளாளர் திருமணங்களில் மணமகனின் தாய்க்கும் முன்னுரிமை வழங்கப்படுகிறது. பெண்ணை மணம் முடிக்கச் செல்லும் மணமகன் தாயுடன் சேர்ந்து ஒரே தட்டில் பால் சோறு உண்பார். இனிமேல் மனைவியின் கையால் சாப்பிடப்போகும் மணமகனுக்கு இது தாயின் கையால் போடப்படும் கடைசி உணவாகக் கருதப்படுகிறது. மணப்பெண்ணை மணம் முடிப்பதற்காக மணமகன் தாயிடம் ஆசிபெற அவளும், பூங்கொடிக்கு மாலையிடப் போய் வா மகனே என வாழ்த்தி வழியனுப்பி வைப்பாள்.

“மாதாவுடனே மகனாரும் வந்திருந்து
போதவே பால்வார்த்துப் போசனமும் தான் அருந்தி”4
                                      

சட்டுவச் சாதம்

திருமணத்திற்கு முன் தாயின் கையால் பால் சோறு உண்ட மணமகனுக்குத் திருமணம் முடிந்ததும் மணமகள் போடும் முதல் சாதம் சட்டுவச் சாதம் ஆகும். தன் வாழ்வில் புதிதாக வந்த மணப்பெண்ணுக்கும் முன்னுரிமை அளிக்கும் பொருட்டு இச்சடங்கு செய்யப்படுகிறது.

வளைகாப்பு சடங்குகளில் பெண்களுக்கான உரிமை 

வளை + காப்பு = வளைகாப்பு`, கருவுற்ற பெண்களுக்கு ஏழு அல்லது ஒன்பதாவது மாதத்தில் கண்ணாடி வளையலும் வேம்பு காப்பும் அணிவிக்கும் சடங்கே வளைகாப்புச் சடங்கு ஆகும். இதில் வயதில் மூத்த சுமங்கலிப் பெண்கள் சந்தனம், குங்குமம், பூ போன்ற மங்கலப் பொருட்களைக் கொண்டு கருவுற்ற பெண்ணை ஆசீர்வதித்து கண்ணாடி வளையல்களை அணிவிப்பர். பின்னர் ஐந்து அல்லது ஏழு உணவு வகைகளை கருவுற்ற பெண்ணுக்கு உண்ணக் கொடுத்த பின்னர் உற்றார் உறவினர்களுக்கும் விருந்தளிக்கப்படுகிறது. இச்சடங்கு பெண்ணுக்கான சடங்கு என்பதால் பெண்களே அனைத்துச் சடங்குகளையும் செய்கின்றனர்.

எழுதிங்கள் சீரில் பெண்களுக்கான உரிமை

எழுதிங்கள் சீர் என்பது கொங்கு வேளாளர் இனப் பெண்களுக்கு அவர்களின் தாய் வீட்டுச் செலவில் நடைபெறும் சடங்கு ஆகும். திருமணம் செய்துகொடுத்த பெண் கணவன் மற்றும் குழந்தைகளுடன் வாழும்போது, அவள் குடும்பத்தில் முதல் சுபகாரியம் நடக்கும் முன்பு இச்சடங்கினைச் செய்வர்.

“கொங்கு வேளாளர் இனத்தில் மிக உயர்வான ஒழுக்கமாகப் போற்றப்படும், பெண்ணின் கற்பு நெறிக்கு சான்றாக விளங்கும் சாமி செய்தல் என்ற சீரினைப் போன்றே எழுதிங்கள் என்ற சீரும் சிறப்புத் தன்மை வாய்ந்ததாகத் திகழ்கின்றது. பெண்ணின் பிறந்த வீட்டாரால் செய்யப்படும் இச்சீரானது கொங்கு வேளாள பெண்களின் கற்பு நிலையை மெய்ப்பிக்கின்றது.”5  திருமணம் போன்றே நல்ல நாள் பார்த்தல், பந்தல் போடுதல், முகூர்த்தக்கால் நடுதல், அருமைக்காரர், வண்ணார், நாவிதர் போன்றோரை அழைத்தல், ஊர் அழைத்தல் போன்ற அனைத்தையும் உள்ளடக்கியது இச்சடங்கு ஆகும்.

எழுதிங்கள் சீரானது பெண்ணுக்கான சடங்காக இருந்தாலும் இதனை அருமைக்காரர், வண்ணார், நாவிதர் போன்றோர் முன்னிருந்து நடத்துவர். அவர்களுடன் முன்பே எழுதிங்கள் செய்துகொண்ட பெண்கள் இருவர், தற்போது எழுதிங்கள் செய்துகொள்ளும் பெண்ணின் கணவனுடைய சகோதரி ஒருவர் ஆகிய மூன்று பெண்களும் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.

நீராட்டுதல்

திருமணத்தின்போது மணப்பெண்ணை நீராட்டிப் புனிதமாக்குவது போன்றே எழுதிங்கள் சீரின் போதும் பெண்ணை நீராட்டுகின்றனர். இதனை ‘ஆக்கை போட்டுத் தண்ணீர் ஊற்றுதல்’ என்பர். “சீர் செய்துகொள்ளும் பெண்ணைக் கிழக்குப் பார்த்து முக்காலியின் மீது அமரச்செய்து மூன்று செம்பு தண்ணீர் ஊற்றி நெய்யுடன் சேர்த்து பிசைந்த சோற்றை நெற்றியில் மூன்று முறை தேய்த்து, தண்ணீரை இடம் வலமாக மூன்று முறை சுற்றிப் போடுவர். பின்னர்  மூன்று செம்பு தண்ணீர்  ஊற்றிச் சுண்ணாம்பும் மஞ்சளும் கலந்த செஞ்சோற்று உருண்டைகளை இடம் வலமாக மூன்று முறை சுற்றி மூன்று திசைகளில் போடுவர். அருமைக்காரர் மற்றும் முன்பே எழுதிங்கள் செய்துகொண்ட பெண்கள் இருவர் ஆகிய மூவரும் இச்சடங்கைச் செய்கின்றனர்.”6 செஞ்சோறு சுற்றிப்போட்டவுடன் புளியமரத்தின் இளங்குச்சியாகிய விளாரை இரண்டாகப் பிளந்து அதனை அருமைக்காரர், சீர்ப்பெண்கள் இருவர் ஆகிய மூவரும் எழுதிங்கள் செய்துகொள்ளும் பெண்ணின் தலையை இடம் வலமாக மூன்று முறை சுற்றியபின் ஒவ்வொன்றாகத் தலையில் இருந்து பாதம் வரை இறக்கி அதனை தாண்டச் செய்வர். பின்னர் மஞ்சள்பூசிக் குளிக்கச் செய்து சருவச் சட்டியில் பழம், சர்க்கரை, சாதம் போன்றவற்றை அருமைக்காரர், நாவிதர், சீர்காரப் பெண் ஆகிய மூவரும் பெண்ணின் தலையை சுற்றுவர். பின்னர் வண்ணார் கொடுக்கும் மாற்றுத் துணியை அணியச் செய்வர். அதன் பின்னர் பெண்ணைப் பேழையில் நிறுத்தி பூசை செய்தல், குழவி எடுத்தல், தினை மாவில் அச்சு வெல்லம் வைத்து ஒரே வகையான விறகினால் அடுப்பெரித்து வேகவைக்கப்பட்ட கோதை மாவினைக் கோடரியால்  பிளத்தல், நெற்றியில் சிகப்பிடல்,  போன்ற அனைத்து சடங்குகளிலும் எழுதிங்கள் செய்துகொண்ட சுமங்கலிப் பெண்களுக்குத் தனி உரிமை உண்டு.

இறப்புச் சடங்குகளில் பெண்களுக்கான உரிமை

கொங்கு வேளாளர்களின் அனைத்துச் சடங்குகளிலும் பெண்கள் முன்னிலை படுத்தப்படுவது போன்றே சில இறப்புச் சடங்குகளிலும் பெண்கள் பங்குபெறும் உரிமையைப் பெற்றுள்ளனர். இறந்தவருக்குப் பூசை செய்தல், எண்ணெய் அரப்பு தேய்த்துக் குளிப்பாட்டுதல், கூறை மீது சோறு போடுதல் போன்ற பொதுவான சடங்குகளை அங்குள்ள ஆண்களுடன் பெண்களும் செய்கின்றனர்.

கோடி அழைத்தல்

இறந்தவருக்கு இறுதியாகப் போடப்படும் புத்தாடையைக்  கோடி என்பர். இவ்வாறு கோடி கொண்டு வருபவர்களை ஊர் எல்லையில் நிறுத்தி ஒவ்வொரு கோடியாக மேளத்துடன் அழைத்து வருவர். அப்போது கோடி எடுத்து வருபவரை கிழக்குத் திசை பார்த்தவாறு நிறுத்தி மாலை போட்டு நெற்றியில் திருநீறு பூசி, சந்தனம் வைத்துப் பேழையில் கோடியை வைப்பர். அப்பேழையைக் கோடி கொண்டு வருபவரின் தலையில் வைத்து கையில் நிறை செம்பு நீர் கொடுத்து அழைத்துச் செல்வர். இவ்வாறு கோடி கொண்டு வந்தவர்கள் அனைவரையும் அழைத்துச் செல்வர். இச்சடங்கு ஆண்களுக்கான சடங்கு என்றாலும் எழுதிங்கள் செய்துகொண்ட பெண்களே செய்கின்றனர். 

கருமாதி

கருமாதி செய்யப்படும் நாளன்று கொள்ளி வைத்த மகனுக்குச் செஞ்சோறு சுற்றிப் போட்டுத் தண்ணீர் ஊற்றித் திருநீறு பூசுதல், இறந்தவரின் மனைவிக்கு தண்ணீர் சுற்றிப் போட்டு, குளிப்பாட்டி தாய் வீட்டார் எடுத்து வந்த புத்தாடையை உடுத்தி, கஞ்சிப் புடவை எனப்படும் வெண்மை நிற ஆடையை  தலையின் மீது முக்காடு போடுதல், போன்ற சடங்குகளை எழுதிங்கள் சீர் செய்துகொண்ட பெண்கள்  செய்கின்றனர். இதன் மூலம் மங்கலச் சடங்குகளில் மட்டுமின்றி அமங்கலச் சடங்குகளிலும் பெண்களின் பங்களிப்பு உள்ளதை அறியமுடிகிறது.

முடிவுரை

கொங்கு வேளாளர்கள் ஏராளமான சடங்குகளைச் செய்து வருகின்றனர். அவைகள் இன்று காலமாற்றத்திற்கு ஏற்ப மாறியும் சில மறைந்தும் போனாலும் முக்கியமான சடங்குகள் இன்றும் பின்பற்றப்பட்டு வருகின்றன. அச்சடங்குகள் அனைத்திலும் பெண்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். பெண்களுக்கான சடங்குகளில் பெண்கள் முன்நின்று செய்வது மட்டுமின்றி பிற பொதுவான சடங்குகளிலும் முன்நின்று செய்வதிலிருந்து  பண்டைக் காலத்தில் இருந்தே கொங்கு வேளாளர்கள், பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்து வந்தனர் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

திருமணத்தின்போது தாயிடம் ஆசி பெற்றுச் செல்வது, சகோதரியை தனக்கு இணையாக மதிக்கும் பொருட்டு இணைச் சீரினைச் செய்வது, மனைவிக்கும் உரிமை கொடுக்கும் பொருட்டு சட்டுவச் சாதம் உண்பது போன்றவற்றை ஒரு சடங்காகவே செய்துவருவது ஆண்மகன் தன் வீட்டுப் பெண்களை உயர்வாகக் கருதியதைக் காட்டுகிறது.

மங்கலச் சடங்குகள் மட்டுமின்றி அமங்கலச் சடங்குகளிலும் பெண்கள் பங்கு கொள்வதிலிருந்து கொங்கு வேளாளர்கள் தங்களின் வாழ்வில் பெண்களுக்கும் உரிய மதிப்பளித்துள்ளனர் என்பதை அறியலாம்.

அடிக்குறிப்புகள்

  1. 1. சங்கத்தமிழரின் வழிபாடும் சடங்குகளும், மு.சண்முகம் பிள்ளை (ப.232)
  2. 2. தகவலாளர்: பழனிவேலு, சங்ககிரி
  3. 3. கொங்கு வேளாளர் சீர்களும் இலக்கியங்களும், செ. இராசு, ப.24, 25
  4. மங்கல வாழ்த்து, வரிகள் 127, 128
  5. 5. கொங்கு வேளாளர் வரலாறு, நல்.நடராசன், ப.463
  6. தகவலாளர் பாப்பாத்தி, சிங்காரப்பேட்டை

துணை நின்ற நூல்கள்

  1. கொங்கு வேளாளர் சீர்களும் இலக்கியங்களும், செ. இராசு
  2. கொங்கு வேளாளர் வரலாறு, நல்.நடராசன்
  3. 3. கொங்கு நாட்டு மகளிர், செ. இராசு
  4. சங்கத்தமிழரின் வழிபாடும் சடங்குகளும், மு.சண்முகம் பிள்ளை
  5. கொங்கு நாட்டுப்புறச் சடங்குகளில் கண்ணேறு கழித்தல், தா. க. அனுராதா

*****

கட்டுரையாளர் – முனைவர்பட்ட ஆய்வாளர்
தமிழ்த்துறை
பெரியார் பல்கலைக்கழகம்
சேலம் – 636 011

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “கொங்கு வேளாளர்களின் சடங்குகளில் பெண்களுக்கான  உரிமைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *