புறநானூற்றுப் பாடலில் தொழிற்சார் குடிகள் மானிடவியல் பார்வை  

-த. ஷெர்ளின் எமிலெட்

முன்னுரை 

சங்க காலத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக வெவ்வேறு இடத்தில் தங்கி வாழ்ந்து வந்தனர். இவர்களிடம் சாதிப் பிரிவினைகள், குலப்பாகுபாடு உள்ளிட்டவை காணப்படவில்லை. இவர்கள் தங்களுக்கான உணவு தேடுவதையே முக்கியப் பணியாகக் கொண்டிருந்தனர். நிலவுடைமைச் சமுதாயம் தோன்றிய பின்னர் ஏற்பட்ட உழைப்புக் கருவிகளின் வளர்ச்சியால் தொழில் பிரிவினைகள் தவிர்க்க முடியாதவை ஆயின. அந்த தொழில் பிரிவினைகளே காலப்போக்கில் தொழில்சார் குடிகளாகவும் சாதிகளாகவும் உருவாகக் காரணமாயின எனலாம். இவை மானுடவியல் நோக்கில் புறநானூற்றுப் பாடல்களில் எங்ஙனம் இடம்பெற்றுள்ளன என்பதை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

தொழிற்சார் குடிகள்

தொழில் அடிப்படையில் பிரிந்துசென்ற மக்கள் நாகரிகம் வளர வளரத் தத்தம் இனத்திற்கென்று வாழிடங்களையும் அகப்புற வாழ்வியல் கூறுகளையும் வரையறைச் செய்துகொண்டு தங்களை அடையாளப் படுத்திக்கொண்டனர். “சங்க காலத்தில் மக்களின் தொழில் அடிப்படையில் குலங்கள் அமைந்திருந்தன. அந்தணர், ஆயர், உழவர், எயினர், கம்மியர், குயவர், குறவர், கூத்தர், கொல்லர், தச்சர், துடியர், பரதவர், பறையர், பாணர், புலையர், பொருநர், வண்ணார், வள்ளுவர், வாணிகர், வேடர், வேளாளர் என்பவர் சங்ககாலக் குலமக்களுள் குறிப்பிடத்தக்கவர்கள்” (இராமகிருஷ்ணன், தமிழக வரலாறும் தமிழர் பண்பாடும், சர்வோதய இலக்கிய பண்ணை, 2012.) என்று ஆ. இராமகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார். சமூகப்படி மலர்ச்சியின் வழியாக நிலம், மக்கள்,தொழில் என்பதன் பேரில் விரிந்து சூழல் சார்ந்த தேவை சார்ந்த வெவ்வேறான தோற்ற முகத்தினைக் கொண்டதாகக் காணப்படுகிறது.

குயவர்

பண்டைய மக்களின் வாழ்வியலோடு இருந்தது மண்பாண்டமாகும். பிறப்பு முதல் இறப்பு வரை மக்கள் வாழ்வில் மண்பாண்டம் தேவைப்பட்டது. மண்பாண்டம் செய்வோர் குயவர் என்னும் பெயரில் அழைக்கப்பட்டனர். அன்றாடப் பயன்பாட்டிலான வட்டில், குழிசி, அடுகலம், பானை, குடம், தானியக் கலன்களாகக் குதிர், மஞ்சிகை, இறந்தவர்களை உள்ளிட்டுப் புதைக்கும் ஈமத்தாழி என மனித வாழ்வில் நீட்சியாகக் குயவனின் உற்பத்தி நீள்கிறது. மண்ணை உருவாக்கும் மனித வாழ்வியல் நோக்கிலான பரந்த பண்பாட்டு அறிவு நுட்பத்தினைப் பெற்றவர் குயவர். பசிய மண்ணைத் திகிரியிலிட்டு கலன்களை வனைவதிலும், வனைந்த கலன்களைச் சூழையிட்டுத் திடப்படுத்துவதிலும் கைதேர்ந்தவராகக் குயவர்கள் இருந்தனர் என்பதைப் புறப்பாடல் வழியாக அறிய முடிகிறது.

“கலம்செய் கோவே! கலம்செய் கோவே!
இருள்திணிந் தன்ன குரூஉத்திரள் பரூஉப்புகை
அகல்இரு விசும்பின் ஊன்றும் சூளை
நனந்தலை மூதூர்க் கலம்செய் கோவே!”  (புறம் : 228:1-4)

இவர்கள் பிணமிட்டுப் புதைக்கும் ஈமத்தாழிகள் செய்யப் பணிக்கப்பட்டிருக்கின்றனர் தாழிகளுக்கான அளவு, வடிவம் தேவையின் அறிவு என்பது குயவரைச் சார்ந்து அமைகிறது. பெரிய கலன்களைச் செய்யும் குயவர்கள் ஊர்களிலிருந்து பல்வேறு தேவைகளை நிவர்த்திச் செய்தனர் என்பதை அறிய முடிகிறது. இன்றும் குயவர்கள் மண்பாண்டத்தொழிலை மேற்கொண்டு வருகின்றனர் ஆனால் மண்பாண்டத் தொழில் நலிவடைந்த நிலையிலையே உள்ளது. அலுமினியம், சில்வர் போன்ற பாத்திரங்கள் நீடித்து உழைக்கும் என்ற காரணத்தால் தற்போது மண்பாண்டப் பொருள்கள் மக்கள் வாழ்வில் தேவை இழந்து வருவதைக் காணலாம். மக்கள் பயன்பாட்டில் தேவை உள்ளவரை மட்டுமே நிலைப்பெற்றிருக்கும் பொருட்கள் தேவையில்லாதபோது வழக்கிழந்து விடுகிறது என்பதையும் மானுடப் பண்பாட்டின் மூலம் நாம் உணரமுடிகிறது. தற்காலத்தில் விஞ்ஞான வளர்ச்சியினால் குயவர்களின் தொழில் நலிவடைவது ஒருபுறம் இருக்கக் கொடிய வியாதியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊர்புறங்களில் மண்பாண்டங்களினால் செய்த பாத்திரங்களிலேயே உணவு சமைத்துக் கொடுப்பதையும் காணமுடிகிறது. 

கொல்லர்

உலோகப் பொருட்களிலான கருவிகளைச் செய்பவர்கள் கொல்லர் என்று அழைக்கப்பட்டனர். பொன்னாலான அணிகலன்கள் மற்றும் உபயோகப் பொருட்களைச் செய்வோர் ‘பொற்கொல்லர்’ என்றும், இரும்புக் கருவிகளைச் செய்வோர் கருங்கைக் கொல்லர் என்றும் அழைக்கப்பட்டனர். உற்பத்தியைத் தரும் எண்ணத்தோடு தீயில் உழலும் “கருங்கைக் கொல்லரை” வன்மையானவராகப் பாடப்பட்ட பல பாடல்களின் வழி கொல்லர்களின் அனுபவம் சார்ந்த வாழ்வியலை உணரமுடிகிறது.

“வில்உழுது உண்மார் நாப்பண், ஒல்லென
இழிபிறப் பாளன் கருங்கை சிவப்ப”  (புறம் 170:4-5) தீயின் உக்கிரத்துடனான வன்தொழில்தனைக் கருங்கைக் கொல்லர் வாழ்வியல் தொழிலாக மேற்கொண்டனர். இன்று பொன்னை உருக்கி ஆபரணம் செய்வோர் தட்டார் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றனர். பொன்னை உருக்கி ஆபரணம் செய்யும் தொழில் பரவலாக காணப்படுகின்றது. இரும்பை உருக்கிக் கருவிகள் செய்பவர்களை கருமான் என்றழைக்கின்றனர். இயந்திரத்தின் உதவியுடன் கருவிகள் செய்வதின் மூலம் கருமான் தொழில் அழிந்து வருவதை தற்போது காணமுடிகிறது. 

தச்சர்

உழைப்பு, ஓய்வு எனும் வாழ்க்கை முறைமையினின்று விலகி ஓய்வற்ற நிலையில் மரத்தாலான சமுதாயத் தேவைகளை நிறைவேற்றும் நோக்கத்தோடு உழைக்கும் ஒரு சமூக அச்சாகத் தச்சரைக் கொள்ளலாம். “தச்சர்கள் மக்கட்கு வேண்டிய தட்டுமுட்டுச் சாமான்களையும், வண்டிகளையும், தேர்களையும் செய்து கொடுத்தனர். தேர் செய்வது அன்றைய தச்சர்களின் தலைமையான கடமையாயிருந்தது” என்று அ.தட்சிணாமூர்த்தி கூறுகின்றார். அரசின் படைகளுக்கு வேண்டிய பொருட்கள், உழவுக்கு வேண்டிய பொருட்களைச் செய்தனர். மாதம் ஒன்றில் தேர்கள் எட்டு செய்ய வல்ல தச்சன் ஒருவன் ஒருமாதம் முயன்று வலிமையாகச் செய்த ஒரு தேர்க்காலை போல என்று தச்சரின் பெருமையை பின்வரும் புறநானூற்றுப்பாடல் கூறுகிறது.

“…………வைகல்
எண்தேர் செய்யும் தச்சன்
திங்கள் வலித்த கால்அன் னோனே”  (புறம் : 87: 3- 5) இன்றும் தச்சர்கள் ஆசாரி என்ற பெயரில் அழைக்கப்படுகின்றனர். மக்களுக்கு வேண்டிய மரச்சாமான்களைச் செய்வதில் வல்லவர்களாகத் திகழ்கின்றனர். தச்சர்கள் தங்களது வேலையைக் குலத்தொழிலாகச் செய்து வருகின்றனர். தற்காலச் சமூகத்தில் பல்சாதிப் பிரிவினரும் தச்சு வேலை செய்கின்றனர்.

நெசவர்

பண்டைத் தமிழர்களின் முக்கியத் தொழில்கள் வேளாண்மையும், துணி நெய்தலுமாகும். கலிங்கம், அறுவை என்ற சொற்களால் சுட்டப்பெறும் ஆடை உற்பத்தியை மேற்கொள்பவர்கள் காருகர், நெசவர், துன்னர் என்றழைக்கப்பட்டனர். “ஆதிகாலத்தில் வாழ்ந்த மனிதன் இயற்கையில் கிடைத்த இலைகளையும், தழைகளையும் ஆடையாகப் பயன்படுத்தியுள்ளான். காலம் மாற மாற மக்களின் நுண்மையான அறிவினால் பருத்தியிலிருந்து பஞ்சை எடுத்து நூற்று ஆடையாக நெய்யும் முறையைக் கற்றுக் கொண்டான். ஆடைதான் மனிதனின் அடையாளமாகவும், பண்பாட்டு நாகரிகச் சின்னமாகவும் விளங்குகின்றது. நெசவுத் தொழில் வீட்டுத் தொழில்களில் முக்கியமானது. பண்டையத் தொழில்களுள் விவசாயத்துக்கு அடுத்து மக்கள் நாகரிகம் அடையத் தொடங்கியதும் கையாண்ட முதற் கைத்தொழில்” என்று கலைக்களஞ்சியம் கூறுகின்றது. அயராது இரவிலும், பகலிலும், நூல் நூற்கும் பணியில் நெசவர் குடிப்பெண்கள் இருந்தனர். இவர்களைப் புலவர்கள் “பருத்திப் பெண்டீர்” என்றழைத்தனர் என்பதை

“பருத்திப் பெண்டின் சிறுதீ விளக்கத்து” (புறம்: 326-5)

“பருத்திப் பெண்டின் பனுவல் அன்ன” (புறம்;: 125 -1) எனும் புறநானூற்றுப் பாடலடிகள் வாயிலாக அறியலாம். ‘மரவுரி’ ஆடை தொடங்கி அரவுரியன்ன ஆடை என்ற மரபு வளர்ச்சியின் தொடர்ச்சியாகப் பருத்தி, பட்டு, எலிமயிர் முதலியவற்றால் ஆடை நெய்தனர். மேலும் கைம்பெண்களும் நெசவுத் தொழிலில் ஈடுபட்டு இருந்தனர் என்பதைக் கீழ்வரும் நற்றிணைப் பாடல்வாயிலாக அறியலாம்.

“ஆள்இல் பெண்டிர் தாளின் செய்த
நுணங்குநுண் பனுவல் போல” (நற் 353: 1-2) தற்காலத்தில் நாகரிக வளர்ச்சியின் காரணமாகத் தொழிற்கூடங்களில் இத்தொழில் நடைபெறுவதால் நூல் நூற்கும் பணியை வீடுகளில் மேற்கொண்டு வந்தவர்கள் வறுமைகோட்டுக்கு உள்ளாகியுள்ள நிலைமையைக் காணமுடிகிறது.

சங்குத் தொழில்

சங்கு வேலைச் செய்தவர்கள் நெய்தல் நிலப்பகுதியில் வாழ்ந்தனர். யாகம் புரிதல் முதலிய தமக்குரிய கடமைகளை நிறைவேற்றாத அந்தணர்கள் சிலர் இத்தொழிலில் ஈடுபட்டனர். சங்குகளை வளையாக அறுத்து தொழில் செய்பவர்க்கு வேளாப் பார்ப்பான் என்று பெயர் கொடுத்து அழைத்துள்ளனர் என்பதைப் பின்வரும் பாடல் சுட்டிநிற்கின்றது.

“வேளாப் பார்ப்பான் வாள்அரம் துமித்து
வளைகளைத் தொழித்த கொழுந்து”  (அகம் : 24:1-2)

“வேளாப்பார்ப்பான் என்பதன் பொருள் வேள்விச் செய்யாத பார்ப்பான் என்பதாகும். அதாவது விசுவ பிராமணர். சங்கு வளைகளை அணிவதை அக்காலத்து மகளிர் நாகரிகமாகக் கருதினார்கள். அன்றியும் அது மங்கலாமாகவும் கருதப்பட்டது. கைம்பெண்கள் தவிர ஏனைச் சுமங்கலிப் பெண்கள் எல்லோரும் சங்கு வளை அணிந்தார்கள்” என்று மயிலை சீனி. வேங்கடசாமி கூறியுள்ளார். அரண்மனையில் வாழ்ந்த அரசகுமாரிகள் முதல் குடிசையில் வாழ்ந்த ஏழைமக்கள் வரை அனைவரும் சங்குவளை அணிந்தனர். கண்ணன் ருக்மணியை மணந்து கொள்ள விரும்பினான் ஆனால் ருக்மணியின் குடும்பத்தினர் அவளைச் சிசுபாலனுக்கு மணம்செய்து தருவதில் பிடிவாதம் காட்டினர். அத்திருமணம் நடைபெற இருக்கும் சமயத்தில் கண்ணன் ருக்மணியைத் தூக்கிச் சென்று அவள் கரத்தில் சங்கினாலான வளையல் ஒன்றினை அணிவித்தாதாகவும் செய்திகள் உள்ளன. தற்காலத்தும் இத்தொழில் விஞ்ஞான வளர்ச்சியின் அடிப்படையில் நடைபெற்று வருகிறது.

வண்ணார்

வண்ணார் என்றழைக்கப்பட்ட சலவைத் தொழிலாளர்கள் ஆறுகளின் கரைகளிலிருந்த வண்ணார்த்துறை என்றும் பகுதிகளில் பணிபுரிந்தனர். “வண்ணாருக்குக் ‘காழியர்’ என்னும் பெயரும் வழக்கத்தில் உள்ளது. வண்ணாரப் பெண் ‘புலைத்தி’ எனச் சுட்டப்படுகிறார். இதனால் அன்று இவர்கள் புலையர்களோடு ஒத்தவர்களாக் கருதப்பட்டமை தெளிவாகும்” என்று அ. தட்சிணாமூர்த்தி சுட்டிக்காட்டுகின்றார். இவர்கள் சமுதாயத்தில் கீழ்நிலையிலுள்ள குடிகளாகக் காணப்பட்டனர். இவர்கள் சலவைச் செய்த துணிகளை கஞ்சியில் நனைத்துக் காய்ச்சி விறைப்புடன் காய வைத்தமையை அகநானூற்றுப் பாடல் வாயிலாக அறியலாம்.

“பசைவிரல் புலைத்தி நெடிதுபிசைந்து ஊட்டிய
பூந்துகில் இமைக்கும்” (அகம் 387.5-6).

வண்ணார்கள் மிகவும் வறுமையில் வாடினார்கள். அவர்கள் களர் நிலத்தில் ஊற்றுக் கிணறுகளைத் தோண்டித் துணி வெளுக்கும் தொழிலில் ஈடுபட்டனர் என்பதை,

“வளன் புலைத்தி எல்லித் தோய்த்தப்
 புகார்ப்புகர் கொண்ட புன்பூங் கலிங்கமொடு” (நற்: 90: 3-4) எனும் பாடலடிகள் புலப்படுத்தி நிற்கிறது. ஆடைகளைத் துவைக்கும் செயலில் இருந்து ஓய்வுப் பெறாத வறுமையுற்ற புலத்தி என்று அவர்களின் வறுமை நிலையையும் இப்பாடல் எடுத்துக் கூறுகிறது. இன்றைய சமுதாயத்திலும் வறுமைக்கோட்டின் கீழ் இச்சாதி மக்கள் உள்ளனர். 

புலைத்தி

தொழில்முறையை அடிப்படையாகக் கொண்டு கீழ்நிலை மக்களாக்கப்பட்ட புலைத்தியர் உடை, ஆடை, துகில், கலிங்கம் எனப் பல்வேறு வகையான ஆடைகளை வெளுக்கும் தொழிலினை மேற்கொண்டிருந்தனர். இத்தொழிலுடன் இவர்கள் ஆடைகளுக்கு வண்ணமிடும் தொழிலையும் செய்து வந்தனர். அரசர், வணிகர், அந்தணர் ஆகியோர் செல்வ நிலையில் காணப்பட்டனர். தங்களுயை துணிகளை வேலையாட்கள் மூலமாகச் சலவை செய்து அணிந்து கொள்ளும் வசதி அவர்களிடமே காணப்பட்டது. சங்க காலத்தில் ஒரு பிரிவினர் மாளிகையிலும், ஒரு பிரிவினர் மழையில் நனைந்த சுவரைக் கொண்ட பழங்கூரைகளிலும் வாழ்ந்தனர். புலைத்தியர் அனைத்து நாட்களிலும் சலவை செய்யப் பணிக்கப்பட்டனர். ஆடையை வெளுத்தவுடன் சாயமிட்டுச் சுருக்கங்கள் நீக்குமாறு ஆடையினை உதறிக் காயவைத்தனர் என்பதை,

“நலந்தகைப் புலைத்தி பசைதோய்த்து எடுத்துத்
தலைப்புடைப் போக்கித் தன்கயத் திட்ட”  (குறு: 330:1-2) என்ற குறுந்தொகைப் பாடல்வாயிலாக அறியலாம். புலைத்தியர் செய்த தொழிலுக்கு எவ்வாறான ஊதியம் பெற்றனர் என்பது இலக்கியங்களில் சொல்லப்படவில்லை. இழிந்த குடியினர் என்ற பொருளிலேயே அவர்கள் வழங்கப்பட்டனர். முல்லை, மருதம், பாலை ஆகிய நிலப்பகுதியில் வாழ்ந்தனர். புலைத்தியர் சமூகத்தில் இழிந்தவராக கருதப்பட்டனர் என்பதை திவாகர நிகண்டு முன்வைக்கிறது.

“குணுக்கர் வங்கர்  கவுண்டர் கனகதர்
இழிஞர் கொலைஞர் புலைஞர் கன்றாங்கு
இசையும் பெயர் சண்டாளர்க்கும் எய்தும்” (திவாகரம்: 212)

தொடக்க காலத்தில் துணிவெளுக்கும் தொழிலினை மட்டுமே செய்துவந்த இவர்கள் பின்னர் இழவு வீடுகளில் இறுதிச்சடங்கு செய்பவர்களாகவும், திருமணச் சடங்குகளில் மனைவிரித்தல் முதலான பணியிலும் பிறப்பு, மற்றும் சடங்குவீடுகளில் தீட்டுக்கழிப்பவர்களாகவும் காணப்படுகின்றனர்.

புலையன்

சங்க இலக்கிய இனக்குழு சமுதாயத்தில் புலையன் என்ற இனம் காணப்படுகின்றது. புலையர்கள் பிணஞ்சுடும் தொழிலைச் செய்து வந்துள்ளனர். பிணஞ்சுடு களத்தின்கண் பாடையை நிறுத்திய பின்பு பரப்பிய புல்லின்மேல் கள்ளுடன் படைக்கப்பட்ட உணவைப் புலையன் பிணத்திற்கு படைப்பான் என்ற செய்தியைப் புறநானுற்றுப்பாடல் வாயிலாக அறியலாம்.

“கள்ளி போகிய களரி மருங்கின்,
 வெள்ளில் நிறுத்த பின்றை கள்ளோடு
 புல்லகத்து இட்ட சில்அவிழ் வல்சி
புலையன் ஏவ புல்மேல் அமர்ந்து உண்டு” (புறம்: 360:16-19)

இன்று சுடுகாடுகளில் பிணத்தைச் சுட நவீன இயந்திரங்களைப் பயன்படுத்தி வருவதால் இச்சாதிமக்களுக்கு வேலை வாய்ப்புகள் அதிகமாக இல்லை. இதனால் தங்கள் வாழ்வியலுக்கான வசதியைத் தேடி பிற வேலைகளுக்குச் செல்கின்றனர். இந்நிகழ்வு மானிடவியலின் வளர்ச்சிப் படிநிலையைக் காட்டுகிறது.

முடிவுரை

சங்ககாலத் தொழில்முறைகள் இயற்கையைச் சார்ந்ததாகவே அமைந்திருந்தன. தொழிற் கருவிகளின் வருகை அதனைக் கையாளுதலின் அடிப்படையில் மனிதனுக்கு மனிதன் தொழிற்சார் பிரிவினைகள் ஏற்பட்டுள்ளதை எட்டுத் தொகைப் பாடல்களில் ஒன்றான புறநானூற்றின் மூலம் அறியமுடிகிறது. இதனை மானுடவியல் ஆய்வாளர்களான பக்தவத்சல பாரதி போன்றோர்கள் உறுதிசெய்கின்றனர்.

பார்வை நூல்கள்

  • இராமகிருஷ்ணன் – தமிழக வரலாறும் தமிழர் பண்பாடும், சர்வோதய இலக்கியப் பண்ணை, மதுரை, 2012.
  • தட்சிணாமூர்த்தி – தமிழர் நாகரீகமும் பண்பாடும், யாழ் வெளீயீடு, சென்னை – 600041, 1999.
  • கலைக்களஞ்சியம் தொகுதி – 12, தமிழ்வளர்ச்சிக் கழகம், சென்னை, 1968.
  • மயிலை சீனி. வேங்கடசாமி – சங்ககாலத் தமிழக வரலாற்றில் சில செய்திகள், பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை : 600014, 2005.
  • எட்கர் தர்சன் – தென்னிந்திய குலங்களும் குடிகளும் தொகுதி – II, தமிழ் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1987.

*****

கட்டுரையாளர் – முனைவர்பட்ட ஆய்வாளர்,
ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி (தன்னாட்சி),
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்.

 

About the Author

has written 1025 stories on this site.

Write a Comment [மறுமொழி இடவும்]


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.