Featuredஆய்வுக் கட்டுரைகள்இலக்கியம்கட்டுரைகள்

திருமந்திரத்தில் சிறுநீர் மருத்துவம்

-பா.சீனிவாசன்

முன்னுரை:- 

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்
”      (குறள் – 948)

வள்ளுவப் பெருந்தகை இக்குறளில் நோய்கள், அந்நோய்கள் ஏற்படும் விதம், அவற்றைத் தீர்ப்பதற்கான வழிமுறைகள் போன்றவற்றை நன்கு ஆராய்ந்து அதற்குரிய சிகிச்சை முறைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறுகின்றார். இக்கருத்தோடு இன்றைய அறிவியல் உலகினை உற்றுநோக்கும் பொழுது இவ் உலகினில் நாளுளொரு வண்ணம் பொழுதொரு மேனியாக நோய்கள் பெருகிக்கொண்டே வருகின்றன. இதற்கான காரணங்களாக இன்றைய வாழ்க்கைச் சூழலையும், நம் பாரம்பரிய பழக்கவழக்கங்களை இழிவாகக் கருதி அவற்றினை மறந்து செயல்பட்டதினையும் கூறலாம். இவ்வாறு நாம் மறந்தது அழிய விட்டுக்கொண்டு இருக்கின்ற நம் முன்னோர்களின் பழக்க வழக்கங்களில் முக்கியமானது அவர்கள் நமக்கு விட்டுச்சென்ற எளிய மருத்துவ முறைகள் ஆகும். அவர்கள் வாழ்ந்த காலங்களில் ஏற்பட்ட நோய்களுக்கு எவ்வித மருத்துவமனையும் நாடவில்லை. மாறாக இல்லங்களில் பயன்படுத்தக்கூடிய பொருள்களைக் கொண்டே பலநோய்களுக்கு தீர்வு கண்டனர்.

இவ்வாறு நம் முன்னோர்கள் விட்டுச்சென்ற மருத்துவமுறைகளில் மிகவும் முக்கியமானது சித்த மருத்துவ முறையாகும். இச்சித்தமருத்துவத்தில் ‘சித்’ என்னும் சொல் எளிமை, தனிமை, தொன்மை, வன்மை, வாய்மை, தூய்மை, முழுமை, மேன்மை எனப் பலவகையாகப் பொருள் தருவதோடு இவை அனைத்தையும் தனக்குள்ளே கொண்ட சிறந்தொரு மருத்துவமுறை ஆகும். இம்மருத்துவம் திருமூலர் முதல் கோரக்கர் வரையுள்ள பதினெண் சித்தர்களால் நமக்கு அளிக்கப்பட்டதாகும். இப்பதினெண் சித்தர்களால் நமக்கு அளிக்கப்பட்ட இச்சித்த மருத்துவமுறைகளுள் ஒன்றுதான் “சிறுநீர் சிகிச்சை’, அல்லது ”சிறுநீர் மருத்துவம்” என்பதாகும்.

இம் மருத்துவம் ‘’சிவாம்பு’’ ‘’அமுரி’’ ‘’சந்திர புஸ்பகரணி’’ என்ற பல பெயர்களில் அழைக்கப்படுகின்றது. இச்சிறுநீர் மருத்துவம் பற்றி பதினெண் சித்தர்களில் ஒருவரான திருமூலரும் கூறத் தவறவில்லை. அவர் இதனை

வீர மருந்தென்றும் விண்ணோர் மருந்தென்றும்
 நாரி மருந்தென்றும் நந்தி அருள்செய்தான்   ……………………………………………………..
……………………………………………………..
சோழி மருந்திது சொல்லவொண் ணாதே.”    (திருமந்திரம்-830)

என்று தம் திருமந்திரத்தில் மூன்றாம் தந்திரத்தில் அமுரிதாரணைஎன்ற அதிகாரத்தில் சிறுநீர் மருத்துவம் பற்றி ஆறே ஆறு பாடல் வழி எடுத்துரைக்கின்றார். அவர் கூறிய சிறுநீர் சிகிச்சை பற்றியும், சிறுநீர் மருத்துவம் தொடர்பான செய்திகளையும் தக்க சான்றுகளோடு இவ்வுலகறியச் செய்வதே இக்கட்டுரையின் நோக்கம் ஆகும்.

சிறுநீர் கழிவுப் பொருள் அல்ல:-

காட்டுப் பூனையின் மலம் எவ்வாறு புனுகு என்ற வாசனை திரவியப் பொருளாக மாறுகின்றதோ அதனைப் போன்று நாம் கழிவுப்பொருள் என்று எண்ணக்கூடிய ‘சிறுநீர்’ சிறந்த மருத்துவக் குணங்கள் நிறைந்தது. வள்ளுவர் தம் திருக்குறளில்,

கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள
”  (குறள் – 1101) அதாவது காமமயக்க நிலையில் இருக்கும் ஒருவன் தன் துணையின் சிறுநீரைப் பருகுவதோடு, உடல் முழுவதும் அதனை பூசிக் கொள்கின்றான் என்கின்றார். சிறுநீர் என்பது கழிவுப்பொருள் அன்று என்பதற்கு இச்சான்றே போதுமானது. இன்றைய காலகட்டத்தில் இச்சிறுநீரின்  மருத்துவகுணம் அறியமால் அதனை கழிவுப்பொருள் என்று நம்மிடையே நம்ப வைத்து கொண்டிருக்கின்றனர். நம் சிறுநீரை கழிவுப்பொருள் என்று எண்ணும் நாம் ஏன் பசுமாட்டின் சிறுநீரைப் பஞ்ச கவ்வியம் என இல்லற சுபநிகழ்ச்சிகளில் பயன்படுத்துகின்றோம், அதனை பருக கூடச் செய்கின்றோம். ஏனெனில் சிறந்த மருத்துவ குணம் கொண்டது என்பதால் அவ்வாறு மற்ற உயிரினங்களின் சிறுநீரைப் பருக அனுமதிக்கும் நம் உள்ளுணர்வு நம்முடைய சிறுநீரைப் பருக அனுமதிப்பதில்லை. இதற்குக் காரணம் கழிவுப்பொருள் என்று நம்மிடையே நம்ப வைத்ததே. இச்சிறுநீரின் மருத்துவக்குணங்கள் அறிந்து நம் முன்னோர்களான சித்தர்கள் இதனைப் போற்றி மருத்துவப்பொருளாக பயன்படுத்தி வந்துள்ளனர். இதனை

செய்யவே பதினெட்டுக்குட்டம் சூலை தீரவே
சிறுநீரில் கடசங் கேளு, பையவே பேய்த்தேற்றான
ஒன்று செய்து வைத்துக் கொண்டு நையவே காலைதனில்
எழுந்திருந்து நன்மையுடன் ஒரு சேர்வாங்கிஎன்று போகர் தம் பாடலில் சிறுநீர் என்பது சிறந்த மருத்துவக்குணம் நிறைந்தது. இச்சிறுநீரை பருகினால் தோல் நோய்கள் குணமாகும் எனக் கூறுகின்றார். 

அரவக்கடி யகலவங்கு சிறுநீர் சிரங்கை, பரவக்குடி விஷம்படும்

என்று  மற்றொரு பாடலில் விஷத்தைப் போக்கக் கூடிய அருமருந்து இச்சிறுநீர் என்கின்றார். சித்த வைத்திய நூலான பதார்த்த குணசிந்தாமணியில்,

காணிக் கடிங்கதித்தெழுந்த வீக்கமத
காணாது காயசித்தி கைக்குளாம் – பூணே
பதித்த கொங்கை மாதே பகர் மாந்தருக்குள்
உதித்த சிறுநீருக்கென்று ஓர் இதுவுமலை
சர்வ விஷம்
, விசசுரமும், தவருண்டோடும்
இங்களைத் தொட்டம்பில் கண்
, முகம், காது” (பதார்த்த குணசிந்தாமணி -164)

என்று இச்சிறுநீரினை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் விஷத்தை முறிக்கும் ஆற்றல் கிடைக்கும் என்றும், தோல் நோய்கள் குணமாகும் என்றும் கூறுகின்றது. போகர் கூறியவாறு விஷத்தையும் போக்கக் கூடியது என்ற அதே கருத்தினை இச்சித்த வைத்திய நூலும் கூறுகின்றது. எனவே இக்கருத்துக்களை கொண்டு ஆராய்ந்தால் சிறுநீர் என்பது கழிவுப்பொருள் அல்ல என்பது நமக்கு புலனாகும்.

பிறக்கும் முன்னரே சிறுநீர் சிகிச்சை:-

நாம் ஒவ்வொருவரும் நம்முடைய தாயின் வயிற்றில் சிசுவாக இருக்கும்பொழுது இச்சிறுநீர் சிகிச்சையை மேற்கொள்ள தொடங்கிவிடுகின்றோம். ஆம் கருவறையில் பனிக்குடத்தில் சிசுவாக இருக்கும் நாம் அங்கேயே சிறுநீரரைக் கழிக்கின்றோம். அவ்வாறு கழிக்கும் சிறுநீரில் ஒரு பகுதியை பருகுகின்றோம். இக்கருத்துக்களை இன்றைய நவீன மருத்துவம் ஏற்றுக் கொள்கின்றது. அதோடு இது சிசு வளர உதவுவதாகவும் கூறுகின்றது.

சிறுநீரில் காணப்படும் பொருட்கள்:-

உயிர்நூல் ஆசிரியர் மருத்துவர் பரன் (Dr.FRHIRN)  தனது உலகப் புகழ் பெற்ற நூலான “Introduction  to Bio- Chemistry” என்ற நூலில் ஆரோக்கியமாக இருக்கக் கூடியவனின் சிறுநீரில் பத்தொன்பது போஷாக்கு தத்துவங்கள் அடங்கி இருக்கின்றன என்று கூறுகிறார். இதனை உடல்நூல், இரசாயன நூல் ஆராய்ச்சியாளர்களும் ஏற்றுக்கொண்டு உடலுக்கு நன்மை அளிக்கக்கூடியதே என்று கூறுகின்றனர். மேலும் இச்சிறுநீரில் பத்தொன்பது வகையான மனித உடலுக்கு தேவையான பொருட்கள் அடங்கியுள்ளது என்று தன் ஆராய்ச்சியின் மூலம் தெரிவிக்கின்றார். அப்பொருட்களின் முழுவிவரம் கீழ்வருமாறு.

வ.

எண்

பொருள் மி.

கிராம்

வ.

எண்

பொருள் மி.

கிராம்

1 யூரியா 682.00 10 பொட்டாசியம் 137.00
2 யூரியா 1459.00 11 கால்சியம் 19.50
3 கிரிய்டினீன்(நயிட்ரஜன்) 36.00 12 மக்னீஷியம் 11.30
4 கிரிய்டினீன் 97.00 13 க்ளோராயிட் 314.00
5 யூரிக் ஆசிட் (நயிட்ரஜன்) 12.00 14 டோடல் சல்பேட் 91.00
6 யூரிக் ஆசிட் 36.00 15 இனார்கானிக் சல்பேட் 83.0
7 அமினோ (நயிட்ரஜன்) 9.70 16 இனார்கானிக் பாஸ்பேட் 127.00
8 அமினோ 57.00 17 P.ர். 6.40
9 சோடியம் 212.00 18 டோடல் ஆசிடிடி (யளஉஉ)  
      19 Nஃ10 27.80

 

சிறுநீர் குணமாக்கும் நோய்கள்:-

10-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வெளியான “1000 முக்கியமான விஷயங்கள்என்ற நூலின் வழியாகச் சிறுநீர் பயன்படுத்தி குணமடைகின்ற சில நோய்களை அறியலாம்.  இந்நூல் சிறுநீரினை தொடர்ந்து ஒன்பது நாட்கள் ஒவ்வொரு நாள் காலையில் பருகுவதோடு, அதனை உடல் முழுவதும் பூசிக் கொள்வதால் சொறி, சிரங்கு போன்ற தோல் நோய்கள் குணமாகும் என்று கூறுகிறது. இக்கருத்தினை உறுதி செய்யும் விதமாக “1695–ஆம் ஆண்டு வெளிவந்த சாலமோன் ஆங்கில வைத்தியம் என்ற நூலிலும் தோல் நோய்களை போக்கக் கூடியது சிறுநீர் என்று கூறப்பட்டுள்ளது.

பம்பாய் மருத்துவர் பிராக்ஜிபாய் – டி – தேசாய் (pragjibhai D- Desai M.B.B.S Bulsar, Gujarat ) என்பவர் “05.02.1973” அன்று தினமலர் நாளிதழுக்கு அளித்த பேட்டி ஒன்றில் தம்மைக் காணவரும் நோயாளிகளுக்கு இச்சிறுநீரினை பயன்படுத்தி சிகிச்சையளித்து வருவதாகவும் அதனால் அவர்களுக்கு ஏற்படும் டைபாய்டு, வயிற்றுபுண், காலரா போன்ற நோய்கள் குணமடைந்துள்ளன என்றும், இம்முறையை தொடர்ந்து பதினைந்து ஆண்டுகள் கையாண்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

சபர்மதி ஆசிரமத்தில் காந்தியடிகளுடன் இருந்து சேவை செய்து வந்தவர் ராவுஜீபாய் மணிபாய்படேல் தனக்கு ஏற்பட்ட இருதய நோயை இலண்டனில் வசித்து வந்த  “ஜான் டபிள்யூ ஆர்ம்ஸ்ட்ராங் எழுதிய வாட்டர் ஆப் லைப்என்ற சிறுநீர் சிகிச்சை நூலின் உதவியால் சிறுநீர் சிகிச்சையை மேற்கொண்டு குணமடைந்துள்ளார். அதோடு மட்டும் அல்லாமல் மானவ மூத்திரம் என்று சிறுநீர் சிகிச்சை பற்றிய நூலினையும் வெளியிட்டுள்ளார். திருமந்திர ஆராய்ச்சி” “சித்தர்கள் போற்றிய சிறுநீர் மருத்துவம் போன்ற நூல்களை வெளியிட்ட டாக்டர்.ரா.மாணிக்கவாசகம் இச்சிறுநீரைப் பருகிவருவதாக கூறியுள்ளார்.

திருமந்திரத்தில் சிறுநீர் மருத்துவம்

சிறுநீரைப் பருகுங்கள்:-

உடலில் கிடந்த உறுதிக் குடிநீர்க்
கடலிற் சிறுகிணற்று ஏற்றம்இட் டால்ஒக்கும்
உடல் ஒருவழி ஒன்றுக்கு இறைக்கில்
நடலைப் படாதுயிர் நாடலும் ஆமே” (திருமந்திரம் – 845)

தெளிதரும் இந்தச் சிவநீர் பருகில்
ஒளிதரும் ஓராண்டில் ஊனம் ஒன்று இல்லை
வளியுறும் எட்டின் மனமும் ஒடுங்கும்
களிதரும் காயம் கனகமது ஆமே” (திருமந்திரம் – 846)

மேற்கூறிய இவ்விரு பாடல்களில் திருமூலர் சிறுநீர் பருகும் முறையை கூறுகிறார். அதாவது முதல் கடைசியில் வரும் நீரை விட்டுவிட்டு இடையில் வருகின்றவற்றை பருகுகுங்கள் நோய் நொடி அண்டாது, மனம் தெளிவு பெறும் எனக் கூறுகிறார். இதே கருத்தினை திருவாசகத்தில் மாணிக்கவாசகர் ‘யானை துதிக்கையால் நீரைப்பருகுகின்றது என்று கூறும் அவர் தொடர்ந்து இறைவன் எனக்கு இருகரங்களை அளித்துள்ளான். ஆனால் அதன் மகத்துவம் தெரியாமல் நிறையத் துன்பப்பட்டுவிட்டேன் என்றும் அதன் மகத்துவம் அறிந்தும் துன்பங்கள் பறந்து போயின என்றும் கூறுகின்றார். அதாவது அவர் சிறுநீர் பருகுவதையும், அதன் மூலம் கிடைக்கும் பயன்பற்றியும் மேற்கூறிய கருத்துக்கள் வாயிலாக உலகமக்களுக்கு தெரிவிக்கின்றார். புகழ்பெற்ற தாமர் தந்திரா” (Damar Tantra) சிவாம்புகல்பத்தில் (Shivambukalpa) 107 சுலோகங்கள் உள்ளன. இதில் இரண்டு மாதங்களுக்கு சிறுநீரினைத் தொடர்ந்து பருகினால் அறிவுநுட்பமாகிறது என்று கூறுகிறது. ஜீன மதத்திலும் சிறுநீர்ப் பருகும் முறை இருவேறு விதங்களாகக் கூறப்படுகிறது. இவற்றில் எளிதான முறையின்படிக் கோடைக்கால ஆரம்பத்தில் ஆகாரத்துடன் பருகத் தொடங்கினால் ஆறு பட்டினி நாளிலும் ஆகாரம் இல்லாமல் ஒப்புக் கொள்வானாகில் ஏழு பட்டினிகளுக்குப் பின்னும் நிறுத்த வேண்டும் எனக்கூறுகின்றது.  “The Hundred Thousand Songs of Milarepa, Boulder and London” (1977) என்ற புத்தகத்தின் மூலம் திபெத்திய புத்தமுனிவர்கள், லாமாக்கள் சிறுநீரைப் பருகுவதன் மூலம் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்தார்கள் என்பதனை அறியமுடிகின்றது. 

உடல், பொன்னிறமாக மாற நரை மயிர் கருக்க:-

நுறும் இளகும் நுகரும் சிவத்தினீர்
மாறும் இதற்கு மருந்தில்லை மாந்தர்கள்
தேறில் இதனைத் தெளியுச்சி கப்பிடின்
மாறும் இதற்கு மறுமயி ராமே
”   (திருமந்திரம் – 847)
தம்முடைய  சிறுநீரை கையளவு பிடித்து ஒவ்வொரு நாளுக்கு நூறு மிளகு வீதம் உட்கொண்டு வந்தால் உடல் பொன்னிறமாகவும், நரைத்த மயிர் கறுக்கும் எனவும் எடுத்துரைக்கின்றார். சாலமனின் இங்கிலீஷ் வைத்தியன்”(1695) என்ற புத்தகத்தில் சிறுநீரைக் கொண்டு உடல் முழுவதும் மாலிஸ் செய்வதால் உடல் பொன்னிறமாக மாறும் என்கின்றது. பைபிளில் சிறு பட்டினியாக இருக்கும் நாட்களில் உன் தலையை சிறுநீரால் தேய்த்தும் முகத்தை அலம்பியும் கொள் என சுருக்கமாக கூறுகின்றது.

மரணம் இல்லை:-
கரையரு கேநின்ற கானல் உவரி
வரைவரை என்பர் மதியில்லா மாந்தர்

நுரை திரை நீக்கி நுகரவல் லார்க்கு
நரை திரை மாறும் நமனும் அங்கில்லை
”                 

(திருமந்திரம் – 848)

முதல் மற்றும் கடைசி நீரை விடுத்து தம் சிறுநீரை தொடர்ந்து அருந்தி வருபவர்களுக்கு இறப்பு என்பது இல்லை. இக்கருத்தினை சிவாம்புகல்பம் ஒன்பது வருடங்கள் தொடர்ந்து இச்சிவாம்வை (சிறுநீர்) அருந்தி வருபவன் இறப்பிலிருந்து விடுபடுகின்றான் என்று கூறுவதோடு விஷம் அவனை ஒன்றும் செய்யாது என்றும் கூறுகின்றது. ஆயுர்வேத நூலான சுசுரூத சம் ஹிதையில்” “மூத்ரம் மானுஷம் ச விஸாபஹம்என்கிறது. அதாவது இச்சிறுநீர் விஷத்தை போக்கி மரணத்திலிருந்து காக்க கூடிய சக்தியினை பெற்றது. பிரான்சு தேசத்தில் பக்ஸ்டர் என்பவர் தொடர்ந்து தன்சிறுநீரையே பருகி தனக்கு இருந்த புற்றுநோயிலிருந்து தன்னை காத்து மரணத்திலிருந்து விடுபட்டு இருக்கின்றார்.

உடல் இளைப்பதற்கு:-

அளக நன்னுத லாய்ஓர் அதிசயம்
களவு காயம் கலந்த இந்நீரில்
மிளகு நெல்லியும் மஞ்சளும் வேம்பிடில்
 இளகும் மேனி இருளும் கபாலமே‘ (திருமந்திரம் – 849)

என்று இச்சிறுநீரோடு சிறிதளவு மிளகு, நெல்லிக்காய், வேம்பு, மஞ்சள் ஆகியவற்றை கலந்து உட்கொண்டு வந்தால் உடல் இளைக்கும், இளமையாக இருக்கலாம் எனக் கூறுகிறார். திருமூலர். இவர் கூறுவது போல் இந்தியாவில் நாகசாதுக்கள் என்ற பிரிவினர் சிலர் இருக்கிறார்கள். வருடம் முழுவதும் ஆடை இல்லாமல் இருக்கின்ற இவர்கள் தங்கள் உடலை நல்ல நிலையில் ஆரோக்கியமாக வைத்ததுக்கொள்ள இச்சிறுநீரை உபயோகிக்கின்றார்கள். இவர்களில் பலபேர் சாதாரணமாக தங்களுடைய சிறுநீரையே பருகுகிறார்கள். அவர்கள் அதனால் இளமையாக காணப்படுகின்றனர்.

 முடிவுரை:-

 1. நோய்களை தீர்க்க அவர்களின் சொந்த சிறுநீரையே உபயோகப்படுத்த வேண்டும். எத்தனை உடல்கள் இருக்கின்றனவோ அத்தனை மூத்திரங்கள் உள்ளன. அதனால் தான் அவரவர்களின் சிறுநீரையே பயன்படுத்த வேண்டும் என்பது.
 2. எந்த ஒரு வியாதிக்கும் சிறுநீரைப் பிடித்து வைத்து சிகிச்சையைத் தொடங்க வேண்டும். அவ்வாறு தொடங்கிச் செய்யும்பொழுது இடர்பாடுகள் தோன்றும் அதற்காக அதனை விடுத்து மற்றொரு சிகிச்சையை நாடக்கூடாது. உதாரணமாக தோல் நோய்களுக்கு சிறுநீரை பயன்படுத்தும் பொழுது சிலருக்கு முதல் வாரத்திலேயே பலன் தெரிந்துவிடும். ஆனால் சிலருக்கோ நான்கு, ஐந்து தினங்களில் உஷ்ணம் வெளியேறி கொப்பளங்கள் தோன்றலாம். அதற்காக இச்சிகிச்சையை விடக்கூடாது. சிறுநீர் கொண்டு தேய்த்தால் பலமாக இரண்டொரு நாளில் மறைந்துவிடும்.
 3. சிறுநீரை உடலில் மாசாஜ் செய்ய ஆரம்பித்த 1 வாரத்திற்கு பின் வேளைக்கு 1 டம்ளர் என்ற முறையில் அருந்தவும். 3 (அல்லது) 4 வேளை போதுமானது. இத்துடன் சாதாரண உணவு உட்கொள்ளலாம்.
 4. கொடிய, தீராத நோய்களினால் அவதிப்பட்டு வருபவர்கள் இச்சிறுநீரை சுத்தமான தண்ணீருடன் சேர்த்து பருகி அன்ன ஆகாரமின்றி அவரவருடைய உடல்நிலைக்கு ஏற்றவாறு 3, 5, 7, 10, 15 நாட்கள் உபவாசமிருக்க வேண்டும்.
 5. முக்கியமாக இரத்த ஓட்டம் குறைவாக இருந்தாலும், இருதயம் பலவீனமாக இருந்தாலும் உபவாசம் இருக்க கூடாது. மாறாக சிறுநீர் குடித்து. மாசாஜ் செய்து லேசான உணவை உட்கொள்ளலாம்.
 6. சிறுநீருடன் உபவாசம் இருப்பதால் இருதயமும், மூத்திரக் காய்களும் அதிகமாக வேலை செய்யும். எனவே இதயத்துடிப்பு, நாடித்துடிப்பு அதிகமாகும். உபவாச காலங்களில் பழைய சிறுநீர் கொண்டு மாசாஜ் செய்வது மிக அவசியம்.

இவ் ஆறு வழிமுறைகளை கடைப்பிடிப்பதோடு, தகுந்த மருத்துவர்களை நாடி தன் உடல் நிலையை அறிந்த பிறகு இச்சிறுநீர் சிகிக்சையை மேற்கொள்வது என்பது நலம் பயக்கும்.

மேற்கொள் நூல்கள்:- 

 1. திருமந்திரம் –     ஞா.மாணிக்கவாசகர்
 2. மானவ மூத்திரம் –     ராவுஜீபாய்படேல்
 3. சர்வரோக நிவாராணி –     சுவாமி பூமானந்தா
 4. மூத்திர சிகிச்சை –   ஆண்டியப்பன்
 5. சித்தர்கள் கண்ட சிறுநீர் மருத்துவம் – டாக்டர்.ரா.மாணிக்கவாசகம்
 6. திருக்குறள் –     திருவள்ளுவர்
 7. பதார்த்த குணசிந்தாமணி

கட்டுரையாளர் – முனைவர்பட்ட ஆய்வாளர்,
மருதுபாண்டியர் கல்லூரி, வல்லம், தஞ்சாவூர்.
அலைபேசி: 9786964680
மின்னஞ்சல்: sribalu1986@gmail.com

 

Share

Comment here