வடிவாய் கவிசெய்வோம் வா!

நாகினி

 

நடித்து மனத்தினுள் நஞ்சை மறைத்து
கடிக்கும் உறவினி கானலாய் மாற
வடிவாய் கவிசெய்வோம் வா!

அடித்து எதையும் அபகரிக்கும் எண்ணம்
மடிந்து புவியில் மனிதம் நிலைக்க
வடிவாய் கவிசெய்வோம் வா!

தடியை எடுத்து தவறைத் திருத்த
படிகள் அமைக்கும் பதங்கள் இணைய
வடிவாய் கவிசெய்வோம் வா!

இடியாய் மனதில் இறங்கிடும் நஞ்சாய்
தடிக்கும் உரையை தகர்த்தே எறிய
வடிவாய் கவிசெய்வோம் வா!

படித்த நலமிகு பாதை தவறும்
துடிக்கும் இளமை துவண்டுவிழா தேற
வடிவாய் கவிசெய்வோம் வா!

படிக்கல் எடுத்தளவு பாதி கொடுத்து
மடிக்கும் களவுநிலை மாற்றும் கருத்தில்
வடிவாய் கவிசெய்வோம் வா!

ஒடித்து மரத்தை ஒதுக்கி அடுக்கு
மடிப்பில் மனைகளாக்கும் மாற்றம் எதிர்த்து
வடிவாய் கவிசெய்வோம் வா!

துடித்து பிறருறும் துன்பம் துடைத்தால்
இடித்து நகைத்திடும் ஈனரைக் கிள்ளி
வடிவாய் கவிசெய்வோம் வா!

…. நாகினி

Share

About the Author

நாகினி

has written 48 stories on this site.

இறைவன் உண்டு என்ற ஒரே நம்பிக்கைத் தவிர மற்றபடி ஆன்மீகத்தில் அதிக நாட்டம் இல்லாத பெண்மணி. முதுகலை, இளநிலை கல்வியியல், ஆய்வியல் அறிஞர், பட்டம் பெற்ற ஆசிரியை. எனது கதைகள்,கவிதைகள் .. காற்றுவெளி, மகாகவி, இனிய நந்தவனம் ஆகிய சிற்றிதழ்களிலும், பெரியார்பிஞ்சு இதழில் குழந்தை இலக்கியமும், கவிச்சூரியன் இதழில் எனது ஹைக்கூ படைப்புகளும் வெளிவந்துகொண்டிருக்கின்றன. மேலும் முத்துக்கமலம், வார்ப்பு, வலைத்தமிழ், வல்லமை இணைய இதழ்களிலும் எனது கவிதைகள் வெளிவருகின்றன.

Write a Comment [மறுமொழி இடவும்]

Security Question: (* Solve this math to continue) *


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.