தொல்காப்பியப் புறத்திணையியல்: (வரலாற்றுத் தொடர்ச்சியில் விரியும் பன்முக வாசிப்பு)

1

முனைவர் பா. ஜெய்கணேஷ்

தொல்காப்பியரின் பொருளிலக்கண உருவாக்க முறை

தொல்காப்பியம் எழுதப்பட்டது எவ்விலக்கியங்களின் வரையறையை வைத்து என்று முழுமையாகக் கூறமுடியவில்லை என்றாலும் தொகுக்கப்படாத பல சங்க இலக்கியப் பாடல்களின் கூறுகளை அடிப்படையாகக் கொண்டும் தொல்காப்பியம் எழுதப்பட்டுள்ளது என்று கூறமுடியும். தொகுக்கப்படாத சங்க இலக்கியப் பாடல்களின் முதல் ஆய்வாளராக இன்று அறியப்படுபவர் தொல்காப்பியரே. இவர் வாசகர் என்ற நிலையினைக் கடந்து சங்கப் பாடல்களைத் தொடக்கக் காலங்களில் மதிப்பிட்டறிந்த முதன்மை இலக்கணியாகவும் அறியப்படுகின்றார்.

இவர் காலத்தில் தனிநிலைச் செய்யுள் உருவாக்க முறையே அதிகம், தொடர் நிலைச் செய்யுள் பாடல் உருவாக்கமுறை என்பது குறைவு. எனவே இவரது பொருளதிகார இலக்கணமும் தனிநிலைச் செய்யுளை முதன்மைப்படுத்திப் பெரிதும் வரையறுக்கப்பட்டது என்று கூறமுடியும்.

தொல்காப்பியப் புறத்திணையியல்

சங்க இலக்கியப் பாடல்களில் அகப்பாடல்கள் எண்ணிக்கை அதிகளவு இருப்பதுபோல் தொல்காப்பியத்தில் அதற்கேற்ப இயல் எண்ணிக்கையும் கூடுதலாக உள்ளது. புறப்பாடல் எண்ணிக்கை குறைவு என்பதால் அதற்கேற்பப் புறத்திணையியல் மட்டுமே உள்ளது. இருந்தபோதிலும் தொல்காப்பியர் பொருளதிகாரத்தின் ஒவ்வோர் இயலையும் ஒன்றோடொன்று தொடர்புபடுத்துகின்றார்.

குறிப்பாக அகத்தையும், புறத்தையும் தனித்துப் பிரித்து அவர் பார்க்கவில்லை. இரண்டையும் பொருளிலக்கணம் என்ற ஒரே இணையில் ஒன்றுக்கொன்று தொடர் புடையதாக வலுவாகக் கருதுகிறார்.

      ”அகத்திணை மருங்கின் அரில்தப உணர்ந்தோர்,
      புறத்திணை இலக்கணம் திறப்படக் கிளப்பின்…” (புறத்திணையியல்  -நூ. 1)

இத்தொடர்பு இன்னும் வலுவாக இயங்குவதை இளம்பூரணர் தன்னுடைய அகத்திணையியல் அறிமுக உரையில் விரிவாக விளக்குகிறார். மேலும் ஒருபடி சென்று, அகத்திணை யியலுக்குப் பிறகு அதனோடு தொடர்புடைய களவியல் கற்பியல்தானே வரவேண்டும் ஏன் புறத்திணையியலை வைத்தார் என்ற கேள்வியெழுப்பும் மாணவனுக்குப் பதிலாக,

இது நடுவணைந்திணைக்கண் நிகழும் பொருட்பாகுபாடாயின், அகத்திணையியலின் பின் வைக்கற்பாலது எனின், ஆண்டு வைக்கக் கருதின் வெட்சி தானே குறிஞ்சியது புறனே என்னும் மாட்டேறு பெறாதாம். அதனிடைக் களவியலும் கற்பியலும் கிடத்தலான் என்க ( களவியல் முகப்பு).

தொல்காப்பியர் வகுக்கும் புறத்திணைகள்

தொல்காப்பியர் புறத்திணையியலை அமைத்துள்ள முறை குறித்து,

தொல்காப்பியர் அகப்பொருள் இலக்கணத்தில் (களவியல், கற்பியல்) நிகழ்ச்சி முறையாக இலக்கணத்தைக் கூறிச் செல்லாமல் கூற்றுகளுக்கே முதன்மை கொடுத்து இலக்கணம் இயம்பியுள்ளார். ஆனால் புறத்திணையியலில் திணை வாரியாக இலக்கணத்தைத் தொகுத்துத் துறைகளாக அமைத்துள்ளார். இது தொல்காப்பிய அமைப்பின் முக்கியப் பகுதியாகும்.( தமிழ் இலக்கண மரபுகள், ப. 175)

என்னும் இரா. சீனிவாசனின் கூற்று எடுத்துரைக்கின்றது. தொல்காப்பியர் அகத்திணைகளை ஏழு என்று வரையறை செய்வது போன்று புறத்திணைகளையும் ஏழு என்றே வரையறை செய்கின்றார்.

வெட்சி     –  நிரை கவர்தல், நிரை மீட்டல்

வஞ்சி      –  மாற்றாரை நோக்கிப் பகைமேற் செல்வது

உழிஞை   –  பகைவர் கோட்டையை முற்றுகை இடுவது

தும்பை    –  இருவர்க்கிடையிலான போர்

வாகை     –  முதலில் போர் வெற்றி, பின்னர் ஒருவர் தம் திறன்களால் வாழ்விலுறும் வெற்றியைக் கொண்டாடுவது

காஞ்சி     – முதலில் போரின் துயரங்களையும் பின்னர் வாழ்வின்              நிலையாமையைக் கூறுவது.

பாடாண் – முதலில் வெற்றிப்புகழ், பின்னர் குறிக்கோள் வாய்ந்த மனிதன், அவன் வாழ்க்கை ஆகியவற்றைப் பாடுவது.

இவ்வாறு வரையறை செய்வதோடு மட்டுமல்லாமல் அவை இரண்டிற்கும் ஒரு தொடர்பு இருப்பதாகக் காட்டுகின்றார்.

வெட்சி தானே குறிஞ்சியது புறனே, (புறத்திணையியல்  -நூ. 1)

வஞ்சி தானே முல்லையது புறனே, ( புறத்திணையியல்  -நூ. 6)

உழிஞை தானே மருதத்துப் புறனே, ( புறத்திணையியல்  -நூ. 8)

தும்பை தானே நெய்தலது புறனே, ( புறத்திணையியல்  -நூ. 12)

வாகை தானே பாலையது புறனே, ( புறத்திணையியல்  -நூ. 15)

காஞ்சி தானே பெருந்திணைப் புறனே,( புறத்திணையியல்  -நூ. 18)
பாடாண் பகுதி கைக்கிளைப் புறனே ( புறத்திணையியல்  -நூ. 20).

ஆனால் இத்தொடர்பு எவ்வகையில் எல்லாம் அமைந்தது என்று எந்த விதமான விளக்கமும் தொல்காப்பியரால் வழங்கப்படவில்லை. உரையாசிரியர்களே இதற்கான விளக்கத்தை அளிக்கின்றனர்.

வெட்சி குறிஞ்சிக்குப் புறனாயது எவ்வாறெனின், நிரைகோடல் குறிஞ்சிக்குரிய மலைசார்ந்த நிலத்தின்கண் நிகழ்தலானும், அந்நிலத்தின் மக்களாயின் பிறநாட்டு ஆனிரையைக் களவிற் கோடல் ஒரு புடை குறிஞ்சிக்கு உரித்தாகிய களவோடு ஒத்தலானும் அதற்கு அது புறனாயிற்று என்க. சூடும் பூவும் அந்நிலத்திற்குரிய பூவாதலானும் அதற்கு அது புறனாம். (புறத்திணையியல், நூ. 1, இளம்பூரணர் உரை)

களவொழுக்கமுங் கங்குற் காலமுங் காவலர் கடுகினுங் தான் கருதிய பொருளை இரவின்கண் முடித்து மீடலும் போல்வன ஒத்தலின் வெட்சி குறிஞ்சிக்குப் புறனென்றார். (புறத்திணையியல், நூ. 1, நச்சினார்க்கினியர்உரை)

இவ்விணைவில் இறுதியாக இருக்கக்கூடிய காஞ்சி, பாடாண் ஆகியவற்றின் சிக்கல்களைத் தமிழண்ணல்:

உரையாசிரியர்கள் காஞ்சித்திணை என்பது பெருந்திணையின் புறமென்றும், பாடாண் கைக்கிளையின் புறமென்றும் இலக்கணம் கூறுவதை விளக்குகின்றனர். எனினும் தொல்காப்பியரும் அவர்க்கு முற்பட்டோரும் இவ்விரு அகத்திணைகளைப் புறத்திணையியலில் இறுதியாக அமைந்த இருதிணைகளோடு ஏன் இணைத்தனர் என்பதை நாம் விளங்கிக்கொள்ள இயலவில்லை. அகத்திணைகள் ஏழாக வகுத்தபின் புறத்திணைகளையும் ஏழாக வகுக்க முயன்றிருக்க வேண்டும். இவ்வகத்திணைகளும் புறத்திணைகளும் ஒரு நாணயத்தின் இரு பக்கம் போல்வன என அவர்கள் கருதியிருக்கின்றனர். எனவே இயற்கைக் காரணங்களின்றிச் செயற்கைக் காரணங்களும் இவற்றை இணைக்கப் பயன்படுத்தப் பட்டிருக்கலாம். (சங்க மரபு – 135)

இவ்வாறு உரையாசிரியர்கள் சொல்கின்ற காரணங்களைத் தமிழண்ணல்,

உரையாசிரியர்கள் அகத்திற்கும் புறத்திற்குமான தொடர்பு குறித்து இசையத்தக்க விளக்கங்களைத் தர முயன்றுள்ளனர். அவர்கள் விளக்கங்களிற் சில பொருந்துவன; சில செயற்கையும் கற்பனையும் உடையன.  (சங்க மரபு – 133)

இந்தக் காரணங்களில் கற்பனை இருந்தாலும் தொல்காப்பியர் உருவாக்கிய இணைவு என்பது பொருளதிகாரம் என்ற அவரின் இலக்கண உருவாக்க முறைக்கு நியாயம் சேர்ப்பதாகவே உள்ளது. (இன்றைய நவீன இலக்கிய விமர்சகர்களும் பெண்ணியச் சிந்தனையாளர்களும் இவ்விணைவின் விளக்கத்தை வேறொரு நிலையில் அளிக்கின்றனர்.)

      தொல்காப்பியப் பொருளதிகாரம் பிற்கால இலக்கிய வளர்ச்சிக்கு ஏற்ப தனித்தனித் இலக்கணங்களாக உருவாக்கம் பெறத் தொடங்கின, அல்லது நெகிழத் தொடங்கின. இந்த மரபு மாற்றம் எல்லா நிலையிலும் நிகழத் தொடங்கியது. தனி அகப்பொருள் இலக்கண நூல்கள், யாப்பிலக்கண நூல்கள் என்ற வரிசையில் புறப்பொருளுக்கென்றும் இலக்கண நூல்கள் தோன்றத் தொடங்கின.

இத் தனிநூல் உருவாக்க முறைகள் பெரிதும் தொல்காப்பியத்தைப் பின்பற்றியும் சமகால இலக்கிய உருவாக்கத்திற்கேற்பவும் அமைந்தன. இவ்வாறு உருவாக்கம் பெற்ற தனிநூல்களில் புறத்திணையியல் சார்ந்து அமைந்தவை பன்னிருபடலமும், புறப்பொருள் வெண்பாமாலையுமே ஆகும்.

பன்னிருபடலம், புறப்பொருள் வெண்பாமாலை

பன்னிருபடலம், புறப்பொருள் வெண்பாமாலை ஆகிய இரண்டு நூல்களில் பன்னிருபடலம் இன்று முழுமையாகக் கிடைக்கவில்லை. கிடைக்கக்கூடிய நூல் புறப்பொருள் வெண்பாமாலை மட்டுமே. புறப்பொருள் வெண்பாமாலை நூல் உருவாக்க முறையில் பன்னிருபடலத்தைப் பின்பற்றியுள்ளது என்பதைப் பல சான்றுகளின் வழி அறியமுடிகிறது. அதே சமயம் பல இடங்களில் விலகியும் இருப்பதோடு தொல்காப்பியத்தையும் பல நிலைகளில் முதல் நூலாக இந்நூல் கொண்டுள்ளதை அறிய முடிகிறது. பன்னிருபடலத்தில் அகப்புறம் என்று சொல்லப்பட்டவற்றைப் புறப்பொருள் வெண்பாமாலை அவ்வாறே பின்பற்றாமல் அதை வேறு நிலையில் அணுகுகிறது.

தொல்காப்பியத்திலிருந்து இந்நூல்கள் மாறிய தன்மை:

  • தொல்காப்பியர் வகுத்தளித்த பொருளிலக்கண மரபிலிருந்து புறத்திணையியலைப் பிரிப்பது.
  • அகத்தோடு அவற்றைத் தொடர்புபடுத்தாதது.
  • ஏழு என்ற எண்ணிக்கையைப் பன்னிரண்டு என்று விரிப்பது முதலானவை இந்நூல்களில் நிகழ்ந்த மாற்றங்களாகும்.

தொல்காப்பியர் வகுத்தளித்த ஏழோடு புதியதாகச் சேர்ந்தவை ஐந்து

கரந்தை, நொச்சி, பொதுவியல், கைக்கிளை, பெருந்திணை

தொல்காப்பியப் புறத்திணையியலிலேயே இருந்தவை இரண்டு

      கரந்தை – (தொல்காப்பியத் துறைகளில் ஒன்று), (நிரை மீட்டல்)

      நொச்சி – (தொல்காப்பியத் துறைகளில் ஒன்று),

கோட்டையைக் காத்தல் என்னும் தனித்துறையாகத் தோற்றம் பெறல்

தொல்காப்பியரின் வேறொரு திணையிலிருந்து இடம்பெயர்ந்தவை

கைக்கிளை – (தொல்காப்பிய அகத்திணையியலிலிருந்து புறத்திணைக்கு மாற்றம் பெற்றது.)

பெருந்திணை – (தொல்காப்பிய அகத்திணையியலிலிருந்து புறத்திணைக்கு மாற்றம் பெற்றது.)

கைக்கிளையும் பெருந்திணையும் இவ்வாறு புறத்திணையியலில் சேர்க்கப்பட்டதற்கான காரணம் குறித்துத் தமிழண்ணல் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

ஐந்து திணைகளில் இயற்பெயர்கள் இடம்பெறக்கூடா என்பது தொல்காப்பியர் வகுத்த விதியாகும். இது கைக்கிளைக்கும் பெருந்திணைக்கும் விரிவுபடுத்தப் பெற்றது. கைக்கிளை பெருந்திணையில் இயற்பெயர்கள் இடம்பெறுமாயின் அவை அகத்திணை வகுப்புள் இடம்பெறா. எனவே பிற்கால வளர்ச்சியை அவர்கள் கருத்திற் கொண்டு, அவர்கள் இவ்விரண்டையும் புறத்திணையின் இறுதியிற் சேர்த்தனர். (சங்க மரபு – 149)

தொல்காப்பியரின் பலதுறைகளில் இருந்து சேர்த்து உருவாக்கப்பட்டது

பொதுவியல்  – புதியதாகச் சேர்க்கப்பட்ட திணை. தொல்காப்பியத்தின் வெட்சி, காஞ்சி, பாடாண் ஆகியவற்றின் உட்பிரிவுகள் அல்லது துறைகள் இப்புதுத் திணைக்குரியனவாகச் சேர்க்கப்பெற்றன.

பொருள்வகையில் மாற்றம் பெற்றவை, வேறோர் இலக்கணம் பெறல்     

காஞ்சி –  தொல்காப்பியத் திணையில் நிலையாமை குறித்துப் பேசிய காஞ்சி பிற்கால இலக்கண நூல்களில் வஞ்சியின் இன்னொரு பிரிவாக மாற்றம் பெற்று எதிரூன்றல் காஞ்சி என அமைந்தது.

இந்நூல்களில் ஒவ்வொரு திணைக்கும் இடையே ஓர் இணை உருவாக்கப்பட்டது.

வெட்சி – கரந்தை, வஞ்சி – காஞ்சி, உழிஞை – நொச்சி

இவ்வாறு இணை உருவாக்கப்பட்டதோடு ஒவ்வொரு திணைக்கும் இடையே ஒரு தொடர்ச்சியும் உருவாக்கப்பட்டது.

சில ஆய்வாளர்கள் தொல்காப்பியத் திணைகளையும் இந்தப் பின்புலத்திலேயே புரிந்து கொண்டனர். இந்தக் கருத்து தொல்காப்பியப் புறத்திணையியலைப் பொறுத்தவரை தவறான கருத்து என்றும் அவ்வாறு கட்டமைப்பது திணைச் செய்யுளுக்கு எதிரானது என்றும் தமிழண்ணல் கூறுகிறார்.

புறத்திணைகள் ஒன்றற்கொன்று உறவுடையன அல்ல; தலைவன் தலைவியின் காதல் தொடர்பில் ஒரு நிகழ்வு அல்லது சூழலை அகத்திணைகள் குறிப்பது போலவே புறத்திணைகளிலும் போரில் ஒரு வீர நிகழ்வைக் குறிக்கின்றன. ஒரு கதைத்தொடர்ச்சி போலவோ ஒழுங்கான நிகழ்ச்சிகளின் கோவையான ஒரு நாடகம் போலவோ செய்யுட்களை இயற்றுவது திணைச் செய்யுளின் மரபுக்கு அடிப்படையிலேயே மாறுபட்டதாகும். (சங்க மரபு, ப. 147)

தொல்காப்பிய உரையாசிரியர்கள் வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை ஆகியவற்றைத் தனித்தனித் போர்களாகவே காட்டுவர். ஆனால் பிற்காலத்தில் இவை ஒரே போரின் நான்கு வேறுநிலைகளாகக் கருதப்பட்டு விட்டன. உண்மையில் இப்போர்கள் தமக்கெனக் குறித்த நோக்கையும் போரிடும் பாங்கையும் உடையன. (சங்க மரபு, ப. 143)

இனக்குழுச் சமூகத்தில் வெவ்வேறு போர்முறைகளாக இருந்தவற்றைத் தொல்காப்பியர் வரிசைப்படுத்திய முறையிலிருந்து, அரண்மனையும் அரசமரபும் தோற்றம்பெற்ற காலத்தில் அவற்றை ஒன்றோடு ஒன்று தொடர்புபடுத்தும் முயற்சியினைப் பிற்கால இலக்கண நூல்களான பன்னிருபடலமும், புறப்பொருள் வெண்பாமாலையும் மேற்கொண்டன. இவ்வித்தியாசத்தை அறியாத ஆய்வாளர் பலரும் தொல்காப்பியத்திலேயே போரின் தொடர்ச்சி இருப்பதாக விளக்கத் தொடங்கிவிட்டனர். இது தவறான பொருள் கோடல் முறையாகும் என்பதைத் தமிழண்ணலின் மேற்சொல்லப்பட்ட கூற்றுகள் தெளிவுபடுத்தி நிற்கின்றன.

பன்னிருபடலத்தைப் பின்பற்றிப் புறப்பொருள் வெண்பாமாலை இத்திணைகளை மூன்றாகப் பகுக்கிறது: புறம், புறப்புறம், அகப்புறம்

புறம்: வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, உழிஞை, நொச்சி, தும்பை

      புறப்புறம்: வாகை, பாடாண், பொதுவியல்

அகப்புறம்: கைக்கிளை, பெருந்திணை

என்று வகைப்படுத்த அவிநயமோ ஒருசார் கூற்றாக அகத்திணை, புறத்திணை, அகப்புறத்திணை என்று வரையறை சொல்கிறது. இவ்விரண்டைத் தொடர்ந்து வீரசோழியம் வகைப்படுத்தும் தன்மையினைப் பின்வரும் இரா. சீனிவாசனின் கூற்று எடுத்துரைக்கின்றது.

புறப்பொருள் இலக்கணத்தைத் தொல்காப்பியம் போல பொருளிலக்கணத்தின் ஒரு பகுதியாகக் கூறியிருந்த போதிலும் புறத்திணை இலக்கணம் சொல்லிய முறையில் பிற்கால மரபுகளையே பின்பற்றுகிறது. புறமும், புறப்புறமும் புறப்பொருள் வெண்பா மாலையை அப்படியே பின்பற்றியிருந்த போதிலும் அகப்புறத்திணையில் மட்டும் மாறுபடுகிறது. இது பன்னிருபடலத்தைப் பின்பற்றுகிறது.

வீரசோழியத்தில் வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, உழிஞை ஆகியவற்றிற்கே துறைகள் கூறப்பட்டுள்ளன. நொச்சி, தும்பை ஆகியவற்றிற்குத் துறைவிளக்கம் இல்லை. துறைகளும் புறப்பொருள் வெண்பாமாலையில் உள்ள அளவுக்கு இல்லாமல் குறைவாகவே உள்ளன. விளக்கம் உரையிலேயே உள்ளது. (தமிழ் இலக்கண மரபுகள் – ப.171)

இவற்றிலிருந்து தொல்காப்பியரின் புறத்திணை இலக்கணம் பிற்காலங்களில் எவ்வாறெல்லாம் வளர்ச்சியடைந்தது என்பதனைப் புரிந்துகொள்ள முடிகிறது.

தொல்காப்பிய உரையாசிரியர்கள்

இந்தப் பின்புலத்தில் தொல்காப்பியப் புறத்திணையியலுக்கு இளம்பூரணர் உரையும், நச்சினார்க்கினியர் உரையும் கிடைக்கின்றன.

இவ்விருவரும் ஏழு புறத்திணைகள் பன்னிரெண்டு திணைகளாக வளர்ச்சி பெற்ற காலத்திலும், பல பகுப்புகளாக அவை மாறிய காலத்திலும், துறைகள் வளர்ந்தும் வீழ்ந்தும் முறைமாறிய தன்மையில் அமைந்த காலத்திலும் தமது உரைகளை எழுதுகின்றனர். இதே தன்மையைச் செய்யுளியல் உரை எழுதும் போதும் காணமுடிகிறது.

  • பலநிலைகளில் புறப்பொருள் மரபு மாற்றமடைந்த காலத்தில் உரை எழுதும் இவ்வுரையாசிரியர்கள் தொல்காப்பிய நூற்பாக்களை மட்டும் கவனத்தில் கொண்டு தமது உரையை வகுக்கின்றனரா? அல்லது பிற்கால வளர்ச்சியையும் கவனத்தில் கொள்கின்றனரா?
  • பிற்கால மரபுகளை இவர்கள் ஏற்கின்றனரா? அல்லது மறுக்கின்றனரா?
  • இளம்பூரணருக்கும் நச்சினார்க்கினியருக்கும் புறத்திணையியலை விளக்குவதில் மாறுபாடு உள்ளதா? இல்லையா?

என்ற கேள்விகளை எழுப்பிப் பார்க்கும்போது சிலவற்றை நாம் கண்டறிய முடிகின்றது.

இளம்பூரணரும் புறத்திணையியலும்

இளம்பூரணர் தொல்காப்பியப் புறத்திணையியலுக்கு உரைஎழுதும் போது தொல்காப்பியரின் இலக்கண உருவாக்க முறைக்குப் பல நிலைகளில் வலுசேர்க்கிறார். அவரின் பின்வரும் விளக்கங்கள் அதற்குச் சான்று:

பொருளதிகார அறிமுக உரையில், புறப்பொருளை உரிப்பொருள் என்று சொல்ல முடியுமா? என்ற கேள்வி எழுப்பி அதற்கு,

புறமாவது, நிரை கோடற் பகுதியும், பகைவயிற் சேறலும், எயில் வளைத்தலும், இருபெரு வேந்தரும் ஒரு களத்துப் பொருதலும் வென்றி வகையும் நிலையாமை வகையும், புகழ்ச்சி வகையும் என எழுவகைப்படும். அஃதேல், புறப்பொருளை உரிப்பொருள் என ஓதிற்றிலரால் எனின்,

      வெட்சி தானே குறிஞ்சியது புறனே

எனவும், பிறவும் இவ்வாறு மாட்டேறு பெற ஓதலின் அவையும் உரிப்பொருள் ஆம் என்க (அகத்திணையியல் அறிமுகம்).

என்று விளக்கமளிக்கின்றார்.

தொல்காப்பியப் பொருளதிகாரம் எவ்வகையில் பயனுடையது என்பதை விளக்க வந்த இளம்பூரணர் அவ்விலக்கணம் உறுதிப்பொருட்கள் நான்கையும் விளக்குகிறது என்று கூறுகிறார்.

அஃதற்றாக அறம், பொருள், இன்பம், வீடு என உலகத்தோரும் சமயத்தோரும் கூறுகின்ற பொருள் யாதனுள் அடங்குமெனின், அவையும் உரிப்பொருளினும் அடங்கும் என்னை? வாகைத்திணையுள்,

”அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும்” (புறத்.16)என இல்லறத்திற்கு உரியவும்,

”காமம் சான்ற கடைக்கோட் காலை” (கற்பு. 51)என நான்கு வருணத்தார் இயல்பும்,

      ”நாலிரு வழக்கின் தாபதப் பக்கமும்‘’ (புறத். 17) எனவும்,

      ”காமம் நீத்த பாலினானும்’‘ (புறத்.17)

எனவும், புறமாகிய வீடுபேற்றிற்குரிய வானப்பிரத்த சந்நியாசிகள் இயல்பும் கூறுதலின், அறமும் வீடும் அடங்கின. வெட்சி முதலாகத் தும்பை ஈறாகக் கூறப்பட்ட பொருண்மையும், வாகையிற் கூறப்பட்ட ஒருசாரனவும் காஞ்சிப் படலத்து நிலையாமையும், பாடாண் பகுதியிற் கூறப்பட்ட பொருண்மையுமாகிய இவை எல்லாம் பொருளின் பகுதியாதலின், அப்பொருள் கூறினாராம். அகத்திணையியலானும் களவியலானும் கற்பியலானும் இன்பப் பகுதி கூறினாராம். அஃதேல் இந் நூலகத்து விரித்துக் கூறிய பொருள் யாதெனின், காமப் பகுதியும் வீரப்பகுதியும் என்க. இன்பம் காரணமாகப் பொருள் தேடும் ஆகலானும், பொருளானே அறஞ்செய்யும் ஆகலானும், இன்பமும் பொருளும் ஏற்றம் என ஓதினார் என உணர்க.

இதே பகுதியை நச்சினார்க்கினியரின் பின்வரும் விளக்கமும் உறுதிசெய்கிறது.

அகத்திணைக்கண் இன்பமும், புறத்திணைக்கண் ஒழிந்த மூன்று பொருளும் உணர்த்துப. ( அகத்திணையியல் நூ. 1)

வெட்சி முதலா வாகை யீறாக அறனும் பொருளும் பயக்கும் அரசியல் கூறி, அவற்றது நிலையின்மை காஞ்சியுட் கூறவே, அறனும் பொருளும் அவற்றது நிலையின்மையுங் கூறினார். அறுவகைப்பட்ட பார்ப்பனப்பக்கமும் என்னுஞ் சூத்திரத்தான் இல்லறமுந் துறவறமுங் கூறினார். இந்நிலையாமையானும் பிறவாற் றானும் வீட்டிற்குக் காரணங் கூறினார். இங்ஙனங் கூறவே இவ்வாசிரியர் பெரிதும் பயன் தருவதோர் இலக்கணமே கூறினாராயிற்று.( அகத்திணையியல் நூ. 1)

இவ்விருவரும் தம் உரை வழி தொல்காப்பியப் பொருளதிகார உருவாக்கம் ஒரு பயனுடைய இலக்கணம் என்று கூறுகின்றனர். அதில் புறத்திணையியலே மூன்று உறுதிப் பொருள்களையும் விளக்கும் இலக்கணம் என்பதை இவர்கள் தம் உரைகளின் வழி உறுதிப்படுத்துகின்றனர்.

இளம்பூரணர் புறத்திணையியலில் தொல்காப்பியரின் இலக்கண வரையறைப்படி ஏழு என்பதைக் கூறியிருந்த போதிலும் வெட்சியையும் உழிஞையையும் பிற்கால மரபுப்படி இரண்டிரண்டாகப் பிரிக்கிறார்.

அஃது யாங்ஙனம் உணர்த்தினாரோ எனின், அகத்திணையாகிய எழுதிணையும் சாற்றி, அவற்றின் புறத்து நிகழ்வன எழுதிணை உணர்த்தினார் என்று கொள்க அவை:-

மலையாகிய குறிஞ்சித்திணைப்புறம் நிரை கோடலும் நிரை மீட்டலும் என்னும் வேறுபாடு குறித்து வெட்சி எனவும் கரந்தை எனவும் இரண்டு குறி பெறுதலும்.

காடுறையுலகாகிய முல்லைப்புறம் மண்நசை வேட்கையால் எடுத்துச்செலவு புரிந்த வேந்தன்மேல் அடல் குறித்துச் செலவு புரிதலான், அவ்விரு பெருவேந்தரும் ஒரு வினையாகிய செலவு புரிதலின் அது வஞ்சி என ஒரு குறி பெறுதலும்.

புனலுலகாகிய மருதத்துப்புறம் எயில் அழித்தலும், எயில் காத்தலும் என்னும் வேறுபாடு குறித்து உழிஞை எனவும் நொச்சி எனவும் இரண்டு குறி பெறுதலும்.

பெருந்திணைப்புறம் நிலையாமையாகிய நோம்திறப்பொருளே குறித்து வருதலின் காஞ்சி என ஒரு குறி பெறுதலும். (புறத்திணையியல் முகப்பு, இளம்பூரணர் உரை )

இவ்விளக்கத்தில் வஞ்சி, காஞ்சியை அவர் இணையாகப் பார்க்கவில்லை, வெட்சி, கரந்தை, உழிஞை, நொச்சி என அவர் இரண்டு கூறாகப் பகுத்தாலும் அவை குறிஞ்சி, மருதம் என்ற ஒரே திணைக்கண் நிகழ்வதால் அவற்றையும் அதனுள் அடக்க முடியும் என்று கூறுகிறார். இவரைப் பொறுத்தவரை திணை ஏழு என்பதில் உறுதியாக நிற்கிறார்.

இதனை மேலும் வலியுறுத்தும் விதமாகப் பன்னிரண்டு என்று பிற்காலத்தார் திணை கூறுவதை மறுக்கிறார்.

புறப்பொருள் பன்னிரண்டு வகைப்படக் கூறில், அகமும் பன்னிரண்டாகி மாட்டேறு பெறுதல்வேண்டும். அகத்திணை ஏழாகிப் புறத்திணை பன்னிரண் டாகில்,

‘மொழிந்த பொருளோடு ஒன்றவைத்தல்” (மரபு.112) என்னுந் தந்திர உத்திக்கும் பொருந்தாதாகி

      “மிகைபடக் கூறல்”:

தன்னான் ஒரு பொருள் கருதிக் கூறல்” (மரபு. 110) என்னும் குற்றமும் பயக்கும் என்க. அன்றியும் பெருந்திணைப் புறனாகிய காஞ்சி நிலையாமையாதலானும், பொதுவியல் என்பது,

      ”பல் அமர் செய்து படையுள் தப்பிய
நல்லாண் மாக்கள் எல்லாரும் பெறுதலின்
திறப்பட மொழிந்து தெரிய விரித்து
முதற்பட எண்ணிய எழுதிணைக்கும் உரித்தே’‘ எனத் தாமே கூறுகின்றாராதலின், மறத்திற்கு முதலாகிய வெட்சியின் எடுத்துக் கோடற் கண்ணும் கூறாமையானும், கைக்கிளையும் பெருந்திணையும் புறம் என்றாராயின் அகத்திணை ஏழ் என்னாது ஐந்து எனல் வேண்டுமாதலானும், பிரமம் முதலாகச் சொல்லப்பட்ட மணம் எட்டனுள்ளும் யாழோர் கூட்டமாகிய மணத்தை ஒழித்து ஏனைய ஏழும் புறப்பொருளாதல் வேண்டுமாதலானும், முனைவன் நூலிற்கும் கலி முதலாகிய சான்றோர் செய்யுட்கும் உயர்ந்தோர் வழக்கிற்கும் பொருந்தாது என்க. (புறத்திணையியல் முகப்பு, இளம்பூரணர் உரை)

பன்னிருபடலத்தை எழுதியவர்களுள் தொல்காப்பியர் ஒருவர் என்னும்  கருத்தை இளம்பூரணர் மறுக்கிறார். இதனை,

பன்னிருபடலத்துள் தன்னுறு தொழிலே வேந்துறு தொழிலென்று, அன்ன இரு வகைத்தே வெட்சி, என இரண்டு கூறுபடக் கூறினாராயினும், முன்வருகின்ற வஞ்சி, உழிஞை, தும்பை முதலாயின எடுத்துச் செலவு, எயில்காத்தல், போர் செய்தல் என்பன அரசர் மேல் இயன்று வருதலின் வேந்துறு தொழில் ஒழித்து, தன்னுறு தொழில் எனத் தன் நாட்டும் பிறர் நாட்டும் களவின் ஆன்நிரை கோடலின் இவர் அரசரது ஆணையை நீங்கினாராவர். ஆதலால் அவர் அவ்வாறு கூறல் மிகைபடக் கூறலாம். அதனால், பன்னிருபடலத்துள் வெட்சிப் படலம் தொல்காப்பியர் கூறினாரென்றல் பொருந்தாது.

என்று கூறி,

ஒத்த சூத்திரம் உரைப்பின் காண்டிகை – மரபு, 100

சிதைவெனப் படுபவை வசையற நாடின் – மரபு, 110

என்ற நூற்பாக்களை எடுத்துக்காட்டி,

எனவும் கூறிய ஆசிரியர் தாமே மாறுகொளக்கூறல், குன்றக்கூறல், மிகைபடக் கூறல், பொருளிலகூறல், மயங்கக்கூறல், தன்னானொரு பொருள் கருதிக்கூறல் என்னும் குற்றம் பயப்பக் கூறினாரென வருமாகலான். (புறத்திணையியல் நூ. 2, இளம்பூரணர் உரை)

என்ற விளக்கத்தின் வழி அறியலாம். இவ்விளக்கத்தை நச்சினார்க்கினியர் எங்கும் தம் உரையில் முன்வைக்கவில்லை.

”தும்பை தானே நெய்தலது புறனே” எனத் தொடங்கும் புறத்திணையியல் நூற்பா உரையில் இதனானே எதிரூன்றல் காஞ்சி ( பிங்க. அநுபோக :1474) என்பாரை மறுத்தவாறு அறிக. (புறத்திணையியல் நூ. 12, இளம்பூரணர் உரை ).

என்று இளம்பூரணர் மேலும் தம் மறுப்பை வலியுறுத்துகிறார்.

நச்சினார்க்கினியரும் புறத்திணையியலும்

இளம்பூரணர் போலவே நச்சினார்க்கினியரும் தம் விவாதங்களைப் புறத்திணையியல் உரையில் நிகழ்த்துகிறார்.

நூற்பா வைப்புமுறை

”தும்பைதானே நெய்தலது புறனே” என்னும் நூற்பாவை எஞ்சா மண்ணசை எனவரும் வஞ்சித்திணை நூற்பாவிற்கும், உழிஞைதானே என்னும் உழிஞைத்திணை நூற்பாவிற்கும் அடுத்து வைத்த காரணத்தை,

இதுவும் மைந்து பொருளாகப் ( புறத் – 15) பொருளாதலின், மண்ணிடையீடாகப் பொரும் வஞ்சிக்கும், மதிலிடையீடாகப் பொரும் உழிஞைக்கும் பிற்கூறினார். (புறத்திணையியல் நூ. 14, நச். உரை ).

”காஞ்சிதானே பெருந்திணைப் புறனே” என்னும் நூற்பா வைப்புமுறையை,

இத்துணையும் உரிப்பொருள் பெற்ற அகத்திணைக்குப் புறங்கூறி இஃது உரிப்பொருளல்லாத பெருந்திணைக்குப் புறனிது என்கின்றது. இதனை வாகைக்குப்பின் வைத்தார், வீரக்குறிப்பு நிலையாமைக் குறிப்போடு உறவுடைத்து என்றற்கு. (புறத்திணையியல் நூ. 22, நச். உரை). என்று விளக்கம் தருகின்றார்.

துறை என்பதற்கான சிறப்பு விளக்கம்

நச்சினார்க்கினியர் துறை என்பதற்கு சிறப்பு விளக்கம் ஒன்றைத் தருகின்றார். இவ்விளக்கம் குறிப்பிடத்தக்க விளக்கமாக அமைகின்றது.

மக்களும் மாவும் முதலியன சென்று நீருண்ணுந் துறை போலப் பலவகைப்பட்ட பொருளும் ஒருவகைப்பட்டு இயங்குதலாகும் மார்க்கமாதலிற் துறையென்றார்:

அகத்திணைக்குத் துறையுட் பகுதிகளெல்லாம் விரித்துக்கூறிப் பின்னும் பன்முறையாற் பரந்துபட்டு வரம்பிகந்தனவற்றையுந் தொகுத்துத் துறைப்படுத்துக் கிளவி கூறுக என்றற்குச் செய்யுளியலுள் துறையென்பது உறுப்பாகக் கூறினார்.

புறத்திணைக்கு அங்ஙனம் பரந்துபட விரித்தோதாது தொகுத்து இலக்கணஞ் செய்தாராயினும் அவையும் அவ்வாறே பலபொருட்பகுதியும் உடையவென்பது உணர்த்துதற்குத் துறையெனப் பெயராகக் கொடுத்தார்.

இதனானே அகப்பொருட்பகுதி பலவாயினும் ஒரு செய்யுள் பலபொருள் விராய் வரினும், ஒரு துறையாயினாற்போலப், புறத்திணைக்கும் அவ்வப்பொருட் பகுதியும் ஒரு துறை யாதலும், ஒரு செய்யுள் பலதுறை ஒருங்கு வந்தும் ஒரு துறைப்படுதலுங் கொள்க. இன்னும் இதனானே அகத்திணைக்கு உரியன வெல்லாம் புறத்திணைக்குங் கொள்க.(புறத்திணையியல் நூ. 1, நச். உரை ).

என்று விளக்கமளித்துச் செல்கின்றார்.

வெட்சி குறிஞ்சிக்குப் புறன் என்பதன் சிறப்பு விளக்கம்

நச்சினார்க்கினியர் வெட்சித்திணை குறிஞ்சித்திணைக்குப் புறனாக எவ்வாறு அமைகின்றது என்று விளக்கமளிக்கின்றார்.

வெட்சி குறிஞ்சிக்குப் புறனெனக் களவு கூறிய அதனானே, அகத்திற்கு ஏனைத் திணைக் கண்ணுங் களவு நிகழ்ந்தாற் போலப் புறத்திணை ஏழற்குங் களவு நிகழுங்கொலென்று ஐயுற்ற மாணாக்கற்கு வெட்சிக்கே களவு உள்ளதென்று துணிவுறுத்தற்கு மீட்டுங் களவினென்று இத்திணைக்கே களவு உளதாக வரைந்தோதினார். (புறத்திணையியல் நூ. 2, நச். உரை ).

நச்சினார்க்கினியர் பிற்கால மரபுகளை மறுத்துக்கூறும் இடங்கள்

நச்சினார்க்கினியர் பிற்கால மரபுப்படி திணைவகை பன்னிரண்டு என்பதை மறுக்கின்றார். இம்மறுப்பிற்குச் சிறந்ததோர் பழமொழியையும் காட்டுகின்றார்.

பிற்படக் கூறப்பட்ட புறத்திணையும் ஏழுள வென்றாவாறாயிற்று. எனவே இப் பதினான்கு மல்லது வேறு பொருளின்றென வரையறுத்தாராயிற்று. அகப் புறமும் அவை தம்முட் பகுதியாயிற்று ( அகத்திணையியல் நூ. 1)

ஒழிந்தோர் பன்னிரண்டென்றாராதலிற் புறத்திணை யேழென்ற தென்னை யெனின், அகங்கை இரண்டுடையார்க்குப் புறங்கை நான்காகாது இரண்டாய வாறுபோல, அகத்திணை யேழற்குப் புறத்திணை யேழென்றலே பொருத்த முடைத்தாயிற்று.எனவே அகத்திணைக்குப் புறத்திணை அவ்வந் நிலத்து மக்கள் வகையாற் பிறந்த செய்கை வேற்றுமையாதலின் ஒன்றொன்றற்கு இன்றியமை யாதவாறாயிற்று. ( அகத்திணையியல் நூ. 1)

 இளம்பூரணர் கரந்தை என்று சொல்வதை மறுத்தல்

இளம்பூரணர் புறத்திணையியலில் வரக்கூடிய வெட்சித்திணைக்குத் துறையாகக் கூறிய இரண்டு நூற்பாக்களில் இரண்டாவது நூற்பாவை (வெறியறி சிறப்பின் ) கரந்தை என்று கூற நச்சினார்க்கினியரோ அதை எல்லாத் திணைகளுக்கும் உரிய வழுவமைதி என்று கூறி மறுக்கிறார்.

கரந்தை அவ்வேழற்கும் பொதுவாகிய வழுவாதலின் வேறு திணையாகாது.

இருவர்க்குங் கோடல் தொழில் உளதாயிற்றாதலின் அடித்துக் கோடலும் மீட்டுக் கோடலும் வெட்சியாயின. ஆயின் மீட்டல் கரந்தை என்பரால் எனின், அதனையும் இச்சூத்திரத்தானும் வருகின்ற சூத்திரத்தானும் வெட்சியென்றே ஆசிரியர் கொண்டார். மீட்டலை வெட்சிக் கரந்தை என்பாரும் உளர். மீட்டலைக் கரந்தை என்பார்க்கு அது திணையாயிற் குறிஞ்சிக்குப் புறனாகாமை உணர்க. (புறத்திணையியல் நூ. 2, நச். உரை ).

என்று கூறுவதன் மூலம் நச்சினார்க்கினியர் வெட்சித் திணையின் முதல் துறைசார் (படையியங்கு அரவம்) நூற்பாவையே நிரை கோடலுக்கும் நிரை மீட்டலுக்கும் கொள்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

காஞ்சித்திணை மறுப்பு

நச்சினார்க்கினியர் காஞ்சித்திணை என்பது நிலையாமையை பற்றியே கூறுவது. எனவே அது வஞ்சியின் இணையாக மாறாது என்று கூறுகின்றார். இதேபோல் புறப்புறம் என்னும் பிற்கால வகைப்பாட்டையும் மறுகின்றார்.

ஒருவன் மண்ணசையான் மேற்சென்றால் அவனும் அம்மண்ணழியாமற் காத்தற்கு எதிரே வருதலின், இருவர்க்கும் மண்ணசையான் மேற்சேறல் உளதாகலின் அவ்விருவரும் வஞ்சிவேந்தராவரென்றுணர்க. எதிர்சேறல் காஞ்சி என்பராலெனின் காஞ்சியென்பது நிலையாமை கூறுதலிற் பெரிதும் ஆராய்ச்சிப்படும் பொதுவியற் பொருண்மையாற் கூறலாகாமை உணர்க (புறத்திணையியல் நூ. 7, நச். உரை ).

புறப்புறம் மறுப்பு

கைக்கிளை முதலாப் பெருந்திணையிறுவாய், ஏழனையும் அகமென்றலின் அவ்வகத்திற்கு (பெருந்திணைக்கு) இது (காஞ்சி) புறனாவதன்றிப் புறப்புற மென்றல் ஆகாமையுணர்க. இது மேலதற்கும் ஒக்கும். (புறத்திணையியல் நூ. 22, நச். உரை ).

துறைகள் பிற்கால இலக்கண நூல்களில் விரிவதை மறுத்தல்

திணைகளைத் தொடர்ந்து துறைகள் பிற்காலங்களில் பலநிலைகளில் விரிவதையும் மறுக்கின்றார்.

இத்திணைக்கும் (வஞ்சி) பலபொருள் ஒருங்கு வந்து ஒரு துறைப்படுத்தலுங் கொள்க. அவை – கொற்றவை நிலையும், குடைநாட்கோலும், வாணாட்கோலும், படையெழுச்சி கண்டோர் கூறுவனவும், பகைப்புலத்தார் இகழ்வும், இவை போல்வன பிறவும் இயங்குபடையரவமாய் அடங்கும். (புறத்திணையியல் நூ. 8, நச். உரை ).

இனித் தேவர்க்குரியவாக உழிஞையிற்றுறைகள் பலருங் கூறுவராலெனின், அவை உலகியலாகிய அரசியலாய் எஞ்ஞான்றும் நிகழ்வின்றி ஒருகால் ஒருவர் வேண்டியவாறு செய்வனவாகலிற் தமிழ் கூறு நல்லுலகத்தன அல்லனவென மறுக்க. இனி முரசுவுழிஞை வேண்டுவாருளர் எனின் முரசவஞ்சியும் கோடல் வேண்டுமென மறுக்க. இனி ஆரெயிலுழிஞை முதலரணம் என்றதன்கண் அடங்கும் (புறத்திணை யியல் நூ. 22, நச். உரை ).

இது போன்று பல இடங்களில், பிற்கால நூல்களில் குறிப்பாகப் புறப்பொருள் வெண்பா மாலையில் விரித்துக் கூறப்பட்ட துறைகளை நச்சினார்க்கினியர் தொல்காப்பியரின் துறைகளுக்குள் அடக்கி அவற்றை மறுக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

நிறைவாக

  • இளம்பூரணரின் விளக்கங்கள் வழியாக அவர் தொல்காப்பியப் புறத்திணை யியலைத் தம்சமகால வாசிப்பிற்கேற்றவாறு எளிமைப்படுத்துவதோடு பிற்கால இலக்கணக் கொள்கைகளிலிருந்தும் வேறுபடுத்திக் காட்டுகின்றார் என்பதை அறியமுடிகிறது.
  • நச்சினார்க்கினியர் தொல்காப்பியரின் காலத்திற்கே சென்று தம் உரையை வகுக்க முற்பட்டிருப்பதோடு (அல்லது முற்படுவதாக அவர் நினைத்தல்) இளம்பூரணரைக் காட்டிலும் பல இடங்களில் விரிவான விளக்கங்களை அதிகம் தருகின்றார். மறுப்புரை வழங்குமிடங்களில் பிற்கால இலக்கண நூல்களின் கோட்பாடுகளை மறுப்பதோடு தொல்காப்பியரின் இலக்கண நூலாக்கத்திற்கு அவை எந்த விதத்திலும் இடையூறாக இல்லாதவாறு தமது உரையை வகுத்துச் சென்றுள்ளார்.
  • தொல்காப்பிய நூற்பாக்களுக்கு உரை எழுத வந்த இவ்வுரையாசிரியர்கள் அதற்கு மட்டும் உரிய பொருளை எழுதாமல் பிற்கால வளர்ச்சியையும் கவனத்தில் கொள்கின்றனர். பிற்கால மரபுகளை இவர்கள் ஏற்கவில்லை, அவற்றைத் தொல்காப்பியத்திலிருந்து விலக்கி மறுக்கின்றனர்.
  • இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் புறத்திணையியலை விளக்குவதில் சிறிதளவே மாறுபாடு கொள்கின்றனர். இவ்விரு உரையாசிரியருமே புறத்திணை யியலைப் பொறுத்தவரையில் தொல்காப்பியரின் சிந்தனை வழிப்பட்டே தமது உரையை வகுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
  • இந்தப் பின்புலத்தில் தொல்காப்பியப் புறத்திணையியலுக்கும் பிற்காலப் புறப்பொருள் மரபுகள் வளர்ச்சி பெற்ற காலத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் தொகுக்கப்பட்ட புறநானூற்றுப் பாடல்களுக்கு வகுக்கப்பட்ட திணை, துறைகள் குறித்துப் பல விவாதங்கள் உரையாசிரியர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
  • நச்சினார்க்கினியர் தொல்காப்பியர் வழிப்பட்டே துறை வகுக்க வேண்டும் என்று கூறுகின்றார். இதனை “தத்தம் புதுநூல் வழிகளாற் புறநானூற்றிற்குத் துறை கூறினாரேனும், அகத்தியமும் தொல்காப்பியமுமே தொகைகளுக்கு நூலாகலின் அவர் சூத்திரப் பொருளாற் துறைகூற வேண்டுமென்றுணர்க.”( நச்சினார்க்கினியர் உரை, நூ.35) என்னும் கூற்றின் வழி அறியலாம்.
  • இதனாலேயே இளம்பூரணர், நச்சினார்க்கினியர் புறத்திணையியலில் மேற்கோள் காட்டிய புறநானூற்றுப் பாடல்களின் துறைகளுக்கும் புறநானூற்றில் இடம்பெற்றுள்ள துறைகளுக்கும் வேறுபாடுகள் காணப்படுகின்றன.

துணைநூற் பட்டியல்

  1. இந்திரா மனுவேல், செவ்வியல் ஆய்வுக்களங்கள், கிரேஸ் – வேதம் பதிப்பகம், திருச்சி, 2009
  2. சண்முகம், செ.வை., இலக்கண உருவாக்கம் – 1, (பல்லவ – பாண்டியர் காலம்) மணிவாசகர் பதிப்பகம், சென்னை,  மு.ப., 1994.
  3. சீனிவாசன், இரா., தமிழ் இலக்கண மரபுகள் கி.பி. 800 – 1400, இலக்கண நூல்களும் உரைகளும், தி பார்க்கர், சென்னை, மு.ப., 2000.
  4. தமிழண்ணல், சங்க மரபு ( தமிழாக்கம், கு.வெ. பாலசுப்பிரமணியன்), சிந்தாமணிப் பதிப்பகம், மதுரை, 2009.
  5. தொல்காப்பியர், தொல்காப்பியம் பொருளதிகாரம், இளம்பூரணர் உரையுடன், கழக வெளியீடு, சென்னை, 1969.
  6. தொல்காப்பியர், தொல்காப்பியம் பொருளதிகாரம் முன்னைந்தியல்களும், நச்சினார்க்கினியர் உரையும் (முதல் பாகம்), கணேசையர் பதிப்பு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 2007.

*****

கட்டுரையாளர்- துறைத்தலைவர்,
தமிழ்த்துறை, அறிவியல் மற்றும் கலையியல் புலம்,
எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்விநிறுவனம், காட்டாங்குளத்தூர் – 603203
ilamarantamil@gmail.com
9884277395, 9566197141

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “தொல்காப்பியப் புறத்திணையியல்: (வரலாற்றுத் தொடர்ச்சியில் விரியும் பன்முக வாசிப்பு)

  1. அகத்திணை புறத்திணை பற்றிய ஆராய்ச்சி கட்டுரைதனை தெளிந்த நீரோடை போல  வழங்கியிருக்கிறார் பேரா.முனைவர். பா.ஜெய்கணேஷ் அவர்கள். அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகளும் வணக்கங்களும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *