-மேகலா இராமமூர்த்தி

திரு. ஹபீஸ் இசாதீன் எடுத்த இந்த நிழற்படத்தை வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்து படக்கவிதைப் போட்டிக்குத் தந்திருக்கின்றார் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் என் நன்றி உரித்தாகின்றது. 

விண்ணில் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருக்கும் கதிரவனின் எழிற்பிம்பம் கடல்நீரிலும் தன் முகங்காட்டி நம் அகங்கவரும் அழகு அற்புதம்; இதுவொரு புனையா ஓவியம்!  

அதோ… அந்த இணையரும் இணையில்லா இவ்வியற்கை எழிலில் மனங்கரைந்து நிழற்படம் எடுத்துக்கொண்டிருக்கக் காண்கின்றோம்.

இந்த இயற்கைச் சித்திரத்துக்கு உங்கள் எண்ணத் தூரிகையால் வண்ணந் தீட்டுங்கள் வண்டமிழ்க் கவிஞர்களே! 

******

”வண்ணக் கலவையில் தூரிகை தோய்த்து இவ்வெழிலோவியத்தை வானில் வரைந்து அதன் நிழலை மண்ணில் விழவைத்த வித்தகன் எவன்? அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் பரிபூரணானந்தமான அவனை ஆரறிவார்?” என வினவுகின்றார் திரு. அ. இராஜகோபாலன்.

மண்ணில் தெரியுது வானம்!

வண்ணக் கலவையில் தூரிகை தோய்த்திதை
வானில் வரைந்தவர் யார்?
மண்ணில் அதன்நிழல் நீரில் விழும்படி
மாண்புறச் செய்தது யார்?
கண்ணைக் கவர்கிற காட்சியின் மாட்சியைக்
காட்டி மறைப்பவர் யார்?
எண்ணில் அவரிங்கு எங்கும் நிறைந்துளார்
என்பதை யாரறி வார்?

*****

கருமையும் வெளுப்புமாய், இருளும் ஒளியுமாய் நிழலற்று நிற்கும் நிறங்கடந்த காதலை நமக்கு அறிமுகப்படுத்துகின்றார் திரு. எஸ். கிரிதரன்.

உதயமா? இல்லை
ஒருநாளின் முடிவா?
கருமையும் வெளுப்பு
இருளும் ஒளியுமாய்
நிறம் கடந்த காதல்
நிழலற்று நிற்கிறது!

*****

”அடிநாதமாய் பூமிப்பந்தை அசைவிக்கும் கதிரோனே அப்பட்டமான இறைரூபம்” என்று ஒளிவடிவாய் அந்த ஒப்பிலாமணியைக் காண்கின்றார் திரு. ஏ.ஆர்.முருகன், மயிலம்பாடி 

அகிலத்தின் ஆன்மா!!

அதிகாலை வரவோ?
அந்திவேளைமறைவோ?
அழகிய கிரகணங்களால்
அரும்பிடும் வெளிச்சம்
அகிலத்தின் இயக்கம்!!
அனைத்தையும் படைத்து
அரவணைக்கும் பேரொளி!
அணுவளவும்‌ பிசகாமல்
அடிவானில் எழுந்து வந்து
அள்ளித்தரும் ஆற்றலின்
அற்புதத்துக்கிணையேது??
அடிநாதமாய் பூமிப்பந்தை
அசைவிக்கும் கதிரவனே
அப்பட்டமான இறைரூபம்!!
அலைகடல் ஓரம் நின்று
அவன் எழிலை தரிசிப்பது
அளவில்லாப் பேரானந்தம்!!
அனுபவிக்கும் போதுதான்
அதன் அர்த்தம் புரியும்!!
அண்டசராசரம் முழுதையும்
அவதானிப்பவனை எண்ணி
அடிபணியும்பிரார்த்தனையில்
அந்த ஆதவனைசரணடைந்து
அளப்பரிய வளம் பெறுவோம்!!!

***** 

”அடக்கமாய்த் தெரியும் கடல் ஆர்ப்பரித்தெழுந்தால், அது கண்டு வெம்பாது அதனோடு போராடி மீள மீனவர்க்கு வேண்டும் தெம்பு!” என்று தண்ணீரில் பிழைக்கும் மீனவரின் கண்ணீர்க் கதையை கவிதையாய் விவரிக்கிறார் பெருவை திரு. பார்த்தசாரதி.

கடலால் சூழ்ந்த கலையுலகம்
……….கணக்கே இலாத ஆழமுண்டு.!
அடக்க மிருந்தும் ஆபத்தாம்
……….ஆர்ப்ப ரிக்கும் அதனலையே.!
இடமும் கொடுத்து ஏகமாக
……….ஈந்த ருளுமே உணவையுமே.!
கடல்வி ளையும் அமுதங்கள்
……….கொடுப்ப தாலே வள்ளலாமே.!

கம்பு கொண்டு தள்ளுகின்ற
……….கட்டு மரமும் கடலினுள்ளே.!
அம்பு போன்று சீறுகின்ற
……….அலைகள் நடுவே மீனவர்கள்.!
வெம்பு மனமும் கொந்தளிக்க
……….வேத னையை உண்டாக்கும்.!
தெம்பு வேண்டும் கடல்சார்ந்து
……….தம்மு யிரையும் காப்பதற்கே.!

ஓடும் கப்பல் கடல்நடுவே
……….ஓடி ஆடும் ஒர்வாழ்க்கை.!
ஆடும் ஓடம் அதிலுண்டு
……….அடுத்த நொடிநிச் சயமில்லை.!
பாடும் பாட்டும் பண்ணாகும்
……….படும் துன்பம் அளவில்லை.!
தேடும் மீன்கள் அதிகளவில்
……….திண்டா டியபின் கிடைக்குமாமே.!

இந்தக் கவிதையோடு, பகலவனைப் போற்றியும், அன்பை வாழ்த்தியும், அலைகடலின் ஆர்ப்பரிப்பை ஆராதித்தும் மேலும் சில கவிதைகளை ஆர்வத்தோடு படைத்தளித்திருக்கும் பெருவை திரு. பார்த்தசாரதிக்கு என் தனிப்பட்ட பாராட்டு! 

கவிஞனின் காதல்

கவிதை எழுதக் கருவாக வந்தாய்.!
கவிஞரின் நெஞ்சைக் குலைத்தாய்! – புவிதனில்
உன்னழக் கின்னோர் உவமையும் இல்லையே
நின்னையே சுற்றுமே நெஞ்சு.!

 *****

அன்பான காதலர்கள் அங்கே படமெடுக்க
இன்பமாய் இன்று இணைந்தார்கள் – அன்பால்
எவரும் எதைச்செய்ய எத்தனித் தாலும்
எவருக்கும் வெற்றி எளிது!

 *****

அலைகடல் ஆர்ப்பரிக்கும் அற்புதக் காட்சி
அலைபேசி உள்ளே அமர்ந்து – தலைமுறை
போற்றுகின்ற நல்ல படமாய் அமைந்தது
மாற்றம் விரும்பும் மனது. 

*****

”இதயம் இணைந்த சதிபதியை வாழ்த்திச் சிவந்த கதிரவன் இவன்!” என்று கதிரோனின் செம்மைக்குச் சிறந்ததொரு காரணம் பகர்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

சந்திப்பு…

இதயம் இணைந்த காதலர்கள்
இணைந்தே வந்த கடற்கரையில்
உதய நேரக் கதிரவனும்
உவந்தே வந்தான் இணைகாண,
புதிதாய் வாழ்வைத் தொடங்குமிவர்
பகலவன் வரவில் மகிழ்கின்றார்,
சதிபதி யிவர்களை வாழ்த்தியேதான்
சிவந்தது வானின் முகமதுவே…!

***** 

காதலியை வருணிக்கும் காதலனையும், கடல் குளித்தும் நிறம் மாறாச் சூரியனையும், மேற்கே புதைந்தாலும் கிழக்கே சிலிர்த்தெழும் அதன் விடாமுயற்சியையும் குறும்பாக்களில் அருமையாய்ப் பதிவுசெய்திருக்கின்றார் திரு. வசந்திமணாளன்.

குழப்பம்

தூரத்தில் சூரியன்
அருகினில் நிலவு
எதை ரசிப்பது
குழப்பத்தில் அவன்!

*****

கண்ணாடி

அடி பெண்ணே
சூரியனுக்கு நீர்தான்
கண்ணாடி
அந்த சந்திரனுக்கு
நீதான் கண்ணாடியோ
ஆம் உன்முகத்தில்
நிலவு தெரிகிறதே!

*****

நீலக்கடலில்
குளித்த பிறகும்
நிறம் மாறவில்லை
சூரியன்!

*****

சுடும் நிலா

உன்னருகில் சந்திரனை
வைத்துக்கொண்டே
விண்வெளியின்
சூரியனை விரும்பிப்
படம் எடுக்கின்றாயே
அந்தச் சூரியனைவிடவா
சுடுகின்றாள் உந்தன் நிலா?

*****

விடாமுயற்சி

நேற்றுமாலை
மேகக்கூட்டம் அழைத்துச்சென்று
மேற்கில் புதைத்தன
இன்றுகாலை
அதன் சோகம் மனதில் சிறிதுமின்றி
கிழக்கில் உதித்தது!

*****

இயற்கை அழகைப் போற்றியும், இணையரை வாழ்த்தியும் கவிதைகள் வரைந்து குவித்திருக்கும் கவி வலவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் உரித்தாகுக!

அடுத்து இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தேர்வாகியிருப்பது…

செம்பொற் சோதி

அந்திச் சிவப்பழகா அதிகாலைச் சூரியனா
செந்தீ உமிழுகின்ற சிவனது நெற்றிக் கண்ணா
பரிதியாய் அடிவானத்தில் பளிச்சிடும் செம்பொற் சோதி
விரிதழலன்ன முன்னே விளங்கிடும் காட்சியென்னே?

புவியினில் மாந்தர் செய்யும் புன்மைசேர் செயல்கட்காக
ரவியவன் சினக்கின்றானா? ரம்மியமூட்டி மண்ணை
அன்பொடு நோக்கும் நோக்கா அல்லது வெறுக்கும் போக்கா
இன்பமாய் வாழ்வீரென்றே எமக்கவன் அளிக்கும் வாக்கா

மேழியர் போற்றும் செய்ய விரிகதிர் தொலை தூரத்து
ஆழியின் விளிம்பிற் தோன்றும் அற்புதக் காட்சியோடு
ஆழியினீரமண்ணில் ஆதவன் விம்பம் வந்து
வீழ்வதும் அழகுக் காட்சி விரைந்தததை இருவர் சேர்ந்து
தோழமையோடு நின்று சொடுக்கியே கமராவுக்குள்,
வீழவைக்கின்ற காட்சி மேலும் பேரழகு அந்தத்
தோழரின் பின்னே மெல்லத் தொடர்ந்தொரு படஞ்செய்திட்டார்.
வாழ்வினில் இன்பஞ்சேர்க்கும் வழிகளிலிதுவு மொன்றே.

செம்பொற்சோதியாய்ச் சுடர்விட்டு விரிதழலன்ன காட்சி நல்கும் சூரியனின்  தோற்றம் கண்டு,
”புவியினில் மாந்தர் செய்யும் புன்மைசேர் செயல்கட்காக
ரவியவன் சினக்கின்றானா?” என்று வினவுகிறது இக்கவிதை.
இவ்வரிகள் எனக்கு,

மண்மீதில் உழைப்பா ரெல்லாம்
வறியராம் உரிமை கேட்டால்
புண்மீதில் அம்பு பாய்ச்சும்
புலையர்செல் வராம்இ தைத்தன்
கண்மீதில் பகலி லெல்லாம் 
கண்டுகண்டு அந்திக் குப்பின்
விண்மீனாய்க் கொப்ப ளித்த
விரிவானம் பாராய் தம்பி!” என்று எளியோரின் இழிநிலைகண்டு அறச்சீற்றங்கொண்டு பாவேந்தர்  எழுதிய வைர வரிகளை நினைவூட்டின.

வானிடைதிகழ் ஆதவன் ஆழியின் ஈரமண்ணிலும் தன் பிம்பம் பதிக்கும் எழிற்காட்சியை, அதனழகில் திளைக்கும் தோழர்கள் படமெடுக்கும் மாட்சியை, தேர்ந்த வரிகளில் விவரிக்கும் இக்கவிதையின் படைப்பாளி திரு. சித்திரவேலு கருணானந்தராஜாவை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

 

 

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “படக்கவிதைப் போட்டி 178-இன் முடிவுகள்

  1. எனது ‘செம்பொற்சோதி‘கவிதையை நயந்து அதற்காக என்னை வாரத்தின் சிறந்த கவிஞராகத் தெரிவு செய்த மேகலா இராமமூர்த்திக்கும், வல்லமை குழுமத்திற்கும் எனது அன்பார்ந்த நன்றியறிதலைத் தெரிவிக்கிறேன். நான் முன்பு வாசித்திராத பாவேந்தரின் கவிதை வரிகளைச் சிலாகித்து எனது கவிதையுடன் ஒப்பிட்டமைக்கும் நடுவருக்கு நன்றி.

  2. இவ்வாரத்தின் சிறந்த கவிஞர் திரு.சித்திரவேலு கருணானந்தராஜா
    அவர்களுக்கு என் வாழ்த்துகள்!. அவர்களை வணங்கி மகிழ்கின்றேன்.
    -வசந்திமணாளன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *