நிர்மலா ராகவன் 

உள்ளுணர்வைக் கேளுங்கள்!

மிக மலிவானது எது தெரியுமா? அறிவுரை வழங்குவதுதான்.

சிலர் யாரும் கேளாமலேயே அறிவுரைகளை வாரி வழங்குவர். பிறருக்கு நன்மை செய்வதாகத்தான் எண்ணிக்கொண்டிருப்பார்கள். உண்மையில், தம் அதிகாரத்தை நிலைநாட்டுவதற்கென வழிகாட்டுகிறோம் என்று அவர்களுக்கே புரிவதில்லை.

`நான் செய்த தவற்றை நீயும் செய்யக்கூடாது!’ என்று ஓயாது வழிகாட்டும் பெற்றோர் தம் குழந்தைகளின் சுதந்திர உணர்வைப் பறிக்கிறார்கள்.

ஒருவருக்குச் சரியெனப்படுவது எல்லாருக்கும் அப்படித்தான் இருக்குமா?

பிறரது விருப்பத்துக்கு எதிராக வழிகாட்டுவது எந்தப் பலனையும் தராது.

பிறர் சொற்படி நடப்பதைவிட, அவர்கள் புரியும் பிழைகளிலிருந்து கற்பதே மேல்.

அவசரப்படும் அம்மா

தம் குழந்தைகளுக்குச் சிறந்த வாழ்க்கை அமையவேண்டும் என்ற பதைப்பில் பல தாய்மார்கள் சிலவற்றை மறந்துவிடுகிறார்கள்.

ஒருவருக்கு எதையாவது கற்றுக்கொடுக்க நினைப்பவர்கள் முதலாவதாக, அவர்களுடைய திறமையையும், புரிந்துகொள்ளும் ஆற்றலையும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

“அந்த நாட்டிய வகுப்பில் மிகவும் கண்டிப்பாக இருக்கிறார்கள். என் நான்கு வயதுக் குழந்தையை சேர்த்துக்கொள்ள மாட்டார்களாம்!” என்று ஓர் இளம் தாய் என்னிடம் புகார் செய்தாள்.

நம் கை, கால், உடல் எல்லாம் நாம் சொன்னபடி கேட்க ஆறு வயதாவது ஆகவேண்டும். கையை நீட்டவும் முடியாது, கால்களால் தரையை ஓங்கித் தட்டவும் முடியாது, வலம், இடம் என்ற வித்தியாசமும் புரியாது என்ற நிலையில் பரதநாட்டியம் ஆடுவதாவது!

பிழை புரியுங்கள். அதுவே பாடமாகும்!

தவறிழைத்துவிடுவோமோ என்று பயந்து, புதிய அனுபவங்களை நாடத் தயங்குபவர்கள் அனேகர்.

வாழ்வில் எத்தனையோ இடர்கள். அவைகளை எப்படித் தவிர்ப்பது?

புதிய முயற்சிகளில் இறங்கும்போது, பிழைகளும் ஏற்படத்தான் செய்யும் என்பதை மனதில் கொள்ளவேண்டும். துணிந்து ஒரு காரியத்தில் இறங்கிவிட்டு, அப்போது எழும் பிழைகளைப் பாடமாக எடுத்துக்கொண்டால், அடுத்த முறையும் அதேபோன்று நடக்காதிருக்க கவனமாகச் செயல்படலாம்.

அப்படி நாம் இழைக்கக்கூடிய பிழைகளிலிருந்து கற்க ஒரு வாழ்நாள் போதுமா? பிறரது அனுபவங்களையும் நமக்குப் பாடமாக ஆக்கிக்கொள்ளலாமே!

மாறாக, செய்த பிழைகளையே ஓயாது எண்ணிக் கலங்கி, `அக்காரியமே தவறு!’ என்பதுபோல் நம்மையும் நம்மைச் சார்ந்தவர்களையும் அவை அச்சுறுத்த விடுவானேன்!

சிறந்த வழிகாட்டி

ஒருவருக்கு எல்லாவற்றையும் கற்றுக்கொடுப்பது என்பது சாத்தியமில்லை. உள்மனம்தான் சிறந்த வழிகாட்டி. அது நம்முடன் பேசும்.

எப்போது தெரியுமா?

இரவில் கண்ணயரும் முன்னர், அதிகாலையில் அரைத்தூக்கத்தில் இருக்கும்போது. உள்மனம் கூறுவதை ஏற்றால், பிறகு எந்த நேரமும் அதை நாடலாம்.

கதை

சில ஆண்டுகளுக்கு முன்னர், நான் ஒரு புடவை வாங்க கடைத்தெருவிற்குப் போயிருந்தேன். பல கடைகள் ஏறி இறங்கியும், எதுவுமே எனக்குத் திருப்திகரமாக அமையவில்லை. `இது ஐம்பது வருஷங்களுக்கு முன்னால் இருந்த டிசைன்!’ என்று ஏதேதோ சொல்லித் தட்டிக்கழித்தேன்.

நிறைய புடவைகளை எடுத்துக் காட்டிய ஒரு கடைச் சிப்பந்திக்குப் பொறுமை மீறியது. “உங்களுக்கு என்னதான் வேணும்?” என்றார், எரிச்சலை மறைக்காது.

நானும் அலுப்பின் எல்லையில் இருந்தேன். மூச்சை நிதானமாக இழுத்து விட்டபடி, `என்னுடன் வரப்போகும் புடவையே, நீ எங்கே இருக்கிறாய்?’ என்று மனதிற்குள் கேட்டுக்கொண்டேன். அடுத்த ஓரிரு நிமிடங்களிலேயே அது என் கண்ணில் பட்டது!

இப்போது அதே கேள்வியை வெவ்வேறு விதமாகக் கேட்டு, உடனடியாக முடிவு எடுக்க முடிகிறது. வாங்கப்போகும் புடவையின் வண்ணத்திலிருந்து, அடுத்த பரீட்சையில் என்ன வரப்போகிறது என்பதுவரை சரியாக ஊகிக்க முடிகிறது. (நான் ஆசிரியையாக இருந்தபோது, ஆறு ஆண்டு காலம் பள்ளி இறுதியாண்டுப் பரீட்சைக்குமுன் வரப்போகும் கேள்விகளை உத்தேசமாகக் கணித்தேன். எல்லாமே சரியாக இருந்தன. பின்னென்ன! நான்தான் அக்கேள்விகளைத் தயாரித்திருக்க வேண்டும் என்று வதந்தி பரவ, அவைகளைப் பெற பிற பள்ளிமாணவர்கள் போட்டியிட்டார்களாம்!)

உள்ளுணர்வின் உந்துதலில் கிடைக்கும் விடை நாம் எண்ணியதற்கு மாறாக இருக்கலாம். ஆனால், சரியாக இருக்கும். ஏன், எப்படி என்ற கேள்விகள் உதவாது. நம்பிக்கையுடன் துணிந்து ஏற்கவேண்டும்.

இளைஞர்களே, வாழ்க்கைத்துணையைத் தேட ஒரு வழி இதோ!

`என் வாழ்நாளை எல்லாம் என்னுடன் மகிழ்ச்சியாகக் கழிக்கப்போகிறவர் எப்படி இருப்பார்?’

இந்தக் கேள்வியைக் கேட்டுக்கொள்ளுங்கள். முகம், கண், மூக்கு எதுவுமே நினைவில் எழாது. அவரது குணங்கள் ஒவ்வொன்றாக, பல நாட்களில் பிடிபடும். அப்படி ஒருவரைப் பார்க்கும்போது, `இவர்தான் நாம் தேடியவர்!’ என்று மனம் ஆர்ப்பரிக்கும்.

விஞ்ஞானமும் உள்ளுணர்வும்

எல்லாவற்றிலும் அவநம்பிக்கை கொள்வதுதான் அறிவாற்றலுக்கு அடையாளம் என்று ஒரு சாரார் நினைக்கிறார்கள். `இதை விஞ்ஞான ரீதியில் பரிசோதிக்க முடியுமா?’ என்று கேட்பார்கள், அலட்சியமாக. ஆனால், விஞ்ஞானிகள்கூட, எண்ணற்ற பரிசோதனைகளால் குழம்பி இருக்கும் ஒரு தருணத்தில் எதிர்பாராத விதமாக விடை கிடைக்க, `நமக்குமேல் ஒரு சக்தி இருக்கிறது!’ என்று ஒப்புக்கொண்டிருக்கின்றனர்.

கடவுள், உள்மனம் – பெயர் எதுவாக இருந்தால் என்ன! பலன் கிடைக்கிறதே! ஏதாவது துன்பம் நேரும்போதுதான் ஒருவரை நமக்கு வழிகாட்ட நாட வேண்டும் என்பதுமில்லை.

“வழிகாட்டல் என்பது இருண்ட கானகத்தில் ஒரு சிறிய விளக்கிற்கு ஒப்பானது. எதிரிலிருப்பவை யாவும் புலப்படாது. ஆனாலும், அடுத்த அடியை எடுத்துவைக்க அதுவே போதும்”. (ஸ்வாமி விவேகானந்தர்)

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *