ஆய்வுக் கட்டுரைகள்இலக்கியம்கட்டுரைகள்

நல்வாழ்வுக்கு வழிகாட்டும் நாலடி – 20

-மேகலா இராமமூர்த்தி 

அகத்திலே அன்பின்றி வேற்று ஆடவரின் பொருளைக் கைப்பற்றுவதை நோக்கமாய்க் கொண்டுப் புறத்தே போலி அன்பைக் காட்டுபவர்கள் வரைவின் மகளிராகிய பொதுமகளிர். அத்தகு நாணும் நற்பண்புமில்லா மகளிரின் தொடர்பைத் தவறென்று முதன்முதலில் கண்டித்தவர் வாழ்வியல் அறிஞரான வள்ளுவப் பேராசான். வள்ளுவத்தை அடியொற்றி நாலடியும் நடைபயின்று, பொதுமகளிரின் இயல்பையும் இழிகுணத்தையும் பொருத்தமான உவமைகள் வாயிலாய் விளக்கி அவர்தம் தொடர்பை விலக்க வேண்டும் என்று அறிவுறுத்துகின்றது.

எழிலும் பரந்த இடமும் கொண்ட விண்ணுலகின்கண் வாழும் தேவர்களால் தொழப்படும் செந்தாமரைக்கண்ணனாகிய திருமாலை ஒப்பவனாயிருந்தாலும், கொடுப்பதற்குரிய கைப்பொருள் இல்லாதவனாயின், (அவன் பொருளிலேயே நாட்டமுடைய) தளிர் மேனியுடைய பொதுமகளிர் தம் கைகளால் வணங்கி அவனுக்கு விடைகொடுத்துவிடுவர். 

அங்கண் விசும்பின் அமரர் தொழப்படுஞ்
செங்கண்மா லாயினும் ஆகமன் – தங்கைக்
கொடுப்பதொன் றில்லாரைக் கொய்தளி ரன்னார்
விடுப்பர்தங் கையாற் றொழுது. 
(நாலடி – 373)
 

”நீ செங்கண்மாலே ஆயினும் ஆகுக, எங்கள் அன்பைப்பெறுதற்குரிய ஒண்பொருள் உன்னிடமின்மையின் இங்குமக்கு வேலையில்லை, சென்று வருக!” என்று கும்பிடுபோட்டு அனுப்பிவிடும் பொதுமகளிரின் நீர்மையை நேர்மையாய்ப் பேசியிருக்கின்றது மேற்கண்ட நாலடி.

இன்சுவை மிகுந்த தெளிந்த நீருடைப் பொய்கையில் பாம்புக்குத் தன்னுடலின் ஒரு புறமாகிய தலையைக் காட்டி, மற்றொரு புறத்தே அமைந்துள்ள வாலை  மீனுக்குக் காட்டி அந்தந்த இனத்திற்கு ஏற்றவகையில் ஒழுகி, உயிர்பிழைத்து வாழும் விலாங்கு மீன் போன்ற கள்ளச்செய்கைகளுடைய விலைமகளிரின் தோள்சேரும் காமுகர், விலங்கைப் போன்ற பகுத்தறிவற்ற அறியாமையுடையோர் ஆவர்.

பாம்பிற் கொருதலை காட்டி ஒருதலை
தேம்படு தெண்கயத்து மீன்காட்டும் – ஆங்கு
மலங்கன்ன செய்கை மகளிர்தோள் சேர்வார்
விலங்கன்ன வெள்ளறிவி னார். 
(நாலடி –  375)

விலாங்கு மீனின் தலைப்புறம் பாம்பு போலவும், வால்புறம் மீன் போலவும் இருக்குமாகையால், மீனென்று கருதி பாம்பு இரைபிடிக்க வரும்போது அதற்குத் தலைப்புறங்காட்டி அதன் இனம்போல உலவி உயிர்தப்பியும், தனக்கு உணவாகிய சிறுமீன்கள் பாம்பென்று கருதி அஞ்சி விலகுமாயின் அவற்றிற்கு வால்புறங்காட்டி இரையுண்டு உயிர்பிழைத்தும் அம்மீன் வஞ்சித்து வாழ்தலின், பொருளற்றாரையும் பொருளுற்றாரையும் பகையாதும் நேசித்தும் அவரவர்க்கேற்பக் கள்ளத்தனமாய் ஒழுகிப் பொருள் பறித்து வஞ்சித்து உயிர்வாழும் விலைமகளிர்க்கு அதனை உவமையாய்க் காட்டியிருக்கின்றது நாலடியார். 

 ”தமது பேரழகே தூண்டிலாகவும், அச்சமும் நாணமும் ஊராண் ஒழுக்கமும் ஒப்பனையும் அத்தூண்டிலில் கட்டும் இரையாகவும், உலகத்தில் இளைஞர் திரட்டிய அருங்கலன்களும் பொன்னும் மீனாகவும், அம்மீன்களைப் பிடிக்கும் தமது தொழிலிடத்தே தப்பாத மகளிர்”  என்று பொதுமகளிரின் இயல்பை விவரிக்கின்றது பெருங்கதை எனும் அருந்தமிழ்நூல்.

காரிகை கடுநுனைத் தூண்டிலாக
உட்கும் நாணும் ஊராண் ஒழுக்கும்
கட்கின் கோலமுங் கட்டிரையாக
இருங்கண் ஞாலத் திளையோர் ஈட்டிய
அருங்கல வெறுக்கை யவைமீனாக
வாங்குபு கொள்ளும் வழக்கியல் வழாஅப்
பூங்குழை மகளிர்…
(பெருங்கதை – இலாவாண காண்டம்)

எனவே கள்ளமனமும் பொருள்நோக்கமும் கொண்ட வரைவின் மகளிரைவிட்டு விலகியிருப்பதே போற்றத்தக்க நல்லாண்மை எனலாம்.

இனி, கற்புடைய மகளிரின் இயல்புகளை நாலடியார் வழிநின்று ஆராய்வோம்.

குடநீரட் டுண்ணும் இடுக்கட் பொழுதுங்
கடனீ ரறவுண்ணுங் கேளிர் வரினும்
கடனீர்மை கையாறாக் கொள்ளு மடமொழி
மாதர் மனைமாட்சி யாள். 
(நாலடி – 382)

குடத்திலுள்ள நீரையே காய்ச்சிப் பருகிப் பசியாறும் வறுமை வந்துற்ற இன்னாக் காலத்தும், கடல்நீர் முழுமையும் உண்டு பசியாறுதற்குரிய அத்தனை உறவினரும் ஒருங்கு விருந்தாக வந்தாலும், தன் கடமையாகிய விரும்தோம்பும் இயல்பை விடாது மேற்கொள்ளுகின்ற மென்மையான சொற்களையுடைய பெண்ணே, இல்லற வாழ்க்கைக்குரிய மாட்சிமையுடையவள் ஆவாள் என்பது நாலடி நவிலும் நற்கருத்து.

அக் காலத்தில் விருந்தோம்பும் பண்பே இல்லறத்தினரின் தலையாயக் கடனாய்க் கருதப்பட்டது. அதனால்தான் வள்ளுவமும்,

”இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு.” (81) என்று விருந்தோம்பலை வலியுறுத்துகின்றது.

”வறுமை வந்துற்ற காலை விருந்தினரைக் கண்டால் ஒளிந்துவாழ நேரும்; உடம்பின் ஐம்புலன்களும் குறைவின்றி இருந்தாலும் வறுமையானது அறிவைக் கெடுக்கும் இயல்புடைத்து” என்று தன் இன்மையையும், அதுதரும் அவல வாழ்வையும் சோழன் உருவப்பல்தேர் இளஞ்சேட்சென்னியிடம் வேதனையோடு விளம்புகின்றார் பெருங்குன்றூர் கிழார் எனும் புலவர்பெருந்தகை. 

…உள்ளிய
விருந்துகண்டு ஒளிக்கும் திருந்தா வாழ்க்கைப்
பொறிப்புணர் உடம்பில் தோன்றிஎன்
அறிவுகெட நின்ற நல்கூர் மையே. (புறம் – 266)

குலமகள் ஒருத்தியின் நல்லியல்பாம் நாணத்தை அருங்குணங்கள் பிறவற்றோடு ஒப்பிட்டு விதந்தோதுகின்றது நாலடியார்ப் பாடலொன்று!

உள்ளத் துணர்வுடையான் ஓதிய நூலற்றால்
வள்ளன்மை பூண்டான்கண் ஒண்பொருள் – தெள்ளிய
ஆண்மகன் கையில் அயில்வாள் அனைத்தரோ
நாணுடையாள் பெற்ற நலம். (நாலடி –  386)

உள்ளத்தில் இயற்கை நுண்ணுணர்வுடையானொருவன் கற்ற கல்வியை ஒத்ததாயும், கொடைக்குணம் உடையானொருவனிடத்து மாட்சிமைப்படுகின்ற ஒளிபொருந்திய செல்வத்தை ஒத்ததாயும், வாட்பயிற்சியில் தெளிவடைந்த வீரமிக்க ஆடவனொருவன் கையில் விளங்கும் கூரிய வாட்படையை ஒத்ததாயும் இருக்கின்றது, நாண் முதலிய பெண்ணீர்மைகள் பெற்ற கற்புடைப் பெண்ணொருத்தியின் அழகு முதலிய குணநலங்கள்.

”அச்சமும் நாணும் மடனும் முந்துறுதல்
நிச்சமும் பெண்பாற் குரிய என்ப”
எனும் தொல்காப்பியக் கோட்பாட்டை அடியொற்றி எழுந்த சிந்தனைகள் இவை எனலாம்.

நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டும்” எனும் (பாரதியின்) பிற்காலச் சிந்தனையை இதனோடு பொருத்திப் பார்த்துக் குழப்பிக்கொள்வது தேவையற்றது. அந்தந்த காலகட்டத்தில் வாழும் மக்களின் வாழ்வியலையும் அவர்தம் சிந்தனையோட்டத்தையும் கண்ணாடிபோன்று பிரதிபலிப்பவையே இலக்கியங்கள் எனும் புரிதல் நமக்குத் தேவை.

கற்புடைய மகளிரின் இயல்புகளைப் பரக்கப் பேசுகின்ற நாலடியார் பரத்தையரோடு திரிதரும் ஒழுக்கமற்ற ஆடவரின் இயல்புகண்டு வருந்தும் இல்லக்கிழத்தியரின் மனவுணர்வுகளையும் நமக்குப் படம்பிடித்துக் காட்டத் தவறவில்லை.

கருஞ்கொள்ளுஞ் செங்கொள்ளுந் தூணிப் பதக்கென்று
ஒருங்கொப்பக் கொண்டானாம் ஊரன் – ஒருங்கொவ்வா
நன்னுதலார்த் தோய்ந்த வரைமார்பன் நீராடாது
என்னையுந் தோய வரும்.
(நாலடி –  387)

”மருதநிலத்து ஊரில் இருந்துகொண்டே அவ்வூரானொருவன் தரங்குறைந்த கருங்கொள்ளையும், உயர்ந்த செங்கொள்ளையும் ஒரே விலைக்கு, தூணிப்பதக்கு என்று ஒரே அளவாக, ஒன்றாய் வாங்கினானாம்; அதுபோலப் பெண்மையியல்பில் என்னோடு ஒருங்கு ஒவ்வாத நன்னுதல் பரத்தையரை மருவிய மலைபோலும் பெரிய மார்பினையுடைய என் கணவன் நீராடி உடல்தூய்மையும் செய்யாது என்னையும் தழுவ வருகின்றான்” என்று அவன் இழிகுணத்தை எண்ணி வருந்தி ஊடுகின்றாள் இல்லக்கிழத்தி.

தூணி என்பது நான்கு மரக்காலும், பதக்கு என்பது இரண்டு மரக்காலுமாகத் தூணிப் பதக்கென்பது ஆறு மரக்காலளவைக் குறிப்பதாகும்.

பரத்தையரிடம் சென்ற தன்னிடம் ஊடியிருந்த தலைவியைச் சமாதானம் செய்யப் பாணன் ஒருவனை அனுப்புகின்றான் தலைவன். அவனிடம் தலைவி கூறும் மொழிகள் இவை:

அரும்பவிழ் தாரினான் எம்அருளும் என்று
பெரும்பொய் உரையாதி பாண – கரும்பின்
கடைக்கண் அனையம்நாம் ஊரற் கதனால்
இடைக்கண் அனையார்க் குரை.  
(நாலடி – 390)

அரும்புகள் போதாகி மலரும் மாலையை அணிந்த எம் தலைவன் எமக்குத் தலையளி செய்ய வருகின்றான் என்று பெரியதொரு பொய்ம்மொழியை எம்மிடம் மொழியாதே பாண! ஊரனாகிய எம் தலைவனுக்கு யாம் கரும்பின் நுனிக் கணுக்கள் போலச் சுவையில்லாமல் இருக்கின்றோம். ஆதலால், அதன் நடுக் கணுக்களை ஒப்ப அவனுக்குச் சுவைமிக்கவரான பரத்தையரிடம் இதனைச் சொல் என்று சினந்து கூறுகின்றாள்.

அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாகும். அஃதொப்ப ஆராக்காமம் இல்வாழ்வுக்குத் தீராத்துன்பத்தை தந்துவிடக் கூடியது என்பதை மருதத்திணையில் காட்டப்படும் தலைவர்களின் பரத்தமை ஒழுக்கமும் அதனால் வெளிப்படும் தலைவியரின் மனவேதனையும் தெற்றெனப் புலப்படுத்துகின்றது.

 [தொடரும்]

*****

துணைநூல்கள்:

1. நாலடியார் மூலமும் உரையும் – திரு. தி. சு. பாலசுந்தரம்       பிள்ளை
2. திருக்குறள் தெளிவுரை – மு. வரதராசனார்

 

 

Share

Comments (1)

  1. தூணி, பதக்கு, மரக்கா என்ற தமிழாின் அளவைப் பெயா்களைப் பதிவு செய்தது சிறப்பு.

Comment here