மேகலா இராமமூர்த்தி

காளையும் காளையரும் எதிர்நிற்கும் வீரக்காட்சியைப் படமெடுத்து வந்திருப்பவர் திரு.யெஸ்மெக். இப்படக்காட்சியை ஃபிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்துப் படக்கவிதைப் போட்டிக்கு அளித்துள்ளவர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் என் நன்றி!

முல்லைநில முதுகுடியில் வளர்க்கப்படும் கொல்லேற்றினை அடக்கும் வீர விளையாட்டாம் ஏறுதழுவுதலைப் பல்வேறு தடைகளையும் தகர்த்தெறிந்து இன்றுவரை அழியாமல் காத்துவருகின்ற தமிழ்க்குடியினரைப் போற்றுவோம்! அவ்விளையாட்டுக்கான விதிமுறைகளைத் தவறாது பின்பற்றி காளைக்கும் காளையர்க்கும் நேரும் ஊறுபாட்டைத் தவிர்ப்போம்!

இனி கவிஞர்களின் முறை!

ஏறுபோல் பீடுநடையிட்டு இப்படக்காட்சிக்குப் பாட்டெழுத வாரீர் பெருந்தகையீர்!

*****

விடையை அடக்கவிடாமல் இவ்விடலையரைத் தடுப்பது எது? மனமா… உடலா? என்று கேள்வி எழுப்புகின்றார் திரு. சீனிவாசன் கிரிதரன். 

விடை அடக்க – காளை தம்
படை முடக்கத் தோன்றும் பயம்
இடை மறிக்க இரு இரும்புத் தேர்
உடை களைந்து களமாட
தடை எங்கே?
மனதிலா, உடல் பலத்திலா.

*****

காளையும் காளையரும் இணைந்து வளர்த்தெடுத்த தொல்தமிழ் மரபின் வீரவிளையாட்டான ஏறுதழுவுதல் நம் பண்பாட்டின் உச்சம் என்று உவக்கின்றார் முனைவா் ம. இராமச்சந்திரன். இன்றோ நம் பண்பாட்டின் எச்சமும் அதுவே! 

தொல்குடிச் சமூகத்தின்
உச்சாணிக் கொம்பன்

தான் வளா்த்த பண்பாட்டில்
எழுந்து நிற்கும் இயற்கை
ஒத்த உள்ளன்போடு
எண்ணினான் வாழ

காதலை வெளிப்படுத்த
கையாண்ட காட்சிகள் பல

வேர் தேடி ஓடியவன்
காதலைக் கண்டான் வீரத்தில்
காட்சிகள் மாறினாலும்
சண்டைகள் மாறவில்லை

விலங்கோடு போராடி
விலங்கோடு உறவாடி
விலங்கில் வீரத்தை உணா்ந்து
வீரப் பண்பாடாக வளா்த்தெடுத்த காளை
பண்பாட்டின் வீரனான காளை

மனிதனுக்கு மட்டுமல்ல
ரோசம்
மாட்டிற்கும்தான்
தன்னைத் தொட்டவன்
குடல் சாிக்க வேகத்தொடு

விவேகமாகத் துள்ளியெழும்
காளைக்கு வாழ்க்கை!

பண்பாட்டின் உச்சம்
உலகுக்கு!

*****

”அஞ்சு கத்தை சோளத்தட்டையைக் கஞ்சமின்றி முழுங்கிப்புட்டுத் தெம்பாக வந்து நிற்கும் காளையிவன், உங்களைப் பஞ்சராக்குமுன் ஓடிடுங்க பிஞ்சுகளே!” என்று  ’பஞ்ச்’ வசன கவிதையால் காளையரை எச்சரிக்கின்றார் ஏ.ஆர். முருகன்மயிலம்பாடி.

சோரம் போகாத வீரம்
அக்கட்ட போ அக்கட்ட போ…….
அம்புட்டுப்பயலும்அக்கட்டபோ!
திமிலை ஆட்டித் திமிரா வாரான்
தில்லிருந்தாப் புடிச்சுக்காட்டு!!
அஞ்சு கத்தை சோளத்தட்டை
கஞ்சமின்றி முழுங்கிப்புட்டு
மஞ்சுவிரட்டு நோம்பி போல
பாஞ்சுவந்து நின்னிருக்கான்..
பஞ்சராக்கும் முன்னால
பிஞ்சுகளே ஓடிடுங்க!!!
அம்புபோல கொம்பு சீவி
தெம்போட வந்திருக்கான்..
தள்ளிநில்லு இல்லையுனா
தண்ணிகாட்டிப்போயிடுவான்!
தமிழனோட அடையாளம்

தாங்கி வருகிறான்….
தம் புடிச்சு நின்னு காட்டு
தலை வணங்குவான்…
சிவபெருமான் வாகனம்
கவனமிருக்கட்டும்….
எவ்வளவோ தடைகளையும்
எதித்து ஜெயிச்சவன்!.
கல்வி செல்வம் இருந்தாலும்
துள்ளவேணும் வீரம்..
ஜல்லிக்கட்டு அருமையாக

சொல்லித்தரும் பாடம்!

*****

”மாட்டை அடக்கி மாந்தர் விளையாடிய வீர விளையாட்டு இது! இதை விளையாடுங்க…உடல் பலமாகுங்க!” என்று இளைஞர்கட்கு நம்பிக்கை ஊட்டுகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

கவனமாய் விளையாடுவீர்…

பாயும் காளையை அடக்கிடவே
பதுங்கி நிற்கும் காளையரே,
மேயும் மாட்டைப் பழக்கியேதான்
மாந்தர் அடக்கி விளையாடியது
தூய தமிழர் வீரமானது
தரணி யெல்லாம் போற்றிடவே,
ஓய வேண்டாம் விளையாடுவீர்
உங்கள் நலனுக் கிடர்வராதே…!

*****

”சாதுவாயிருக்கும் காளை சீற்றம் அடைந்தால் மதயானையாய் மாறும்; அனைத்தையும் தவிடுபொடியாக்கும்” என்கிறார் திரு. ஆ. செந்தில்குமார். 

காளையும்.. காளையரும்..
ஆற்றல் மிகுந்திருக்கும்.. ஆனாலும் பரமசாது..
சீற்றம் அடைந்துவிட்டால்.. தோற்றத்தில் மதயானை..
பக்குவம் அடைந்துவிட்டால்.. ஆக்கப்பணிகட்குப் பேருதவி..
அக்கணமே தவிடுபொடி.. அமைதியை இழந்துவிட்டால்..

*****

எந்தப் பயமுமின்றி எதிர்த்துவரும் காளைதனை எந்திரத்தின் பின்னொளிந்து என்ன செய்யப் போகின்றீர்? சல்லிக்கட்டுத் தடைநீங்கத் தடியடி ஏன் பட்டுலைந்தீர்? பாயடா காளை முன்னே பாய்ந்ததன் கொம்பு பற்றிச் சாயடா! என்று மஞ்சு கண்டு அஞ்சும் காளையர்க்கு நெஞ்சுரம் அளிக்கின்றார் திரு. சித்திரவேலு கருணானந்தராஜா. 

மஞ்சினைக் கண்டு அஞ்சிடும் காளைகாள்…….
பாய்ந்து வரும் காளைகண்டு பயந்து நிற்கும் காளைகளே
ஓய்ந்து விட்டதா உங்கள் உள்ளத்தின் தற்றுணிபு?

கல்லிப் பருவதத்தைக் கண்டதுபோல் சுண்டெலியை
ஜல்லிக்கட்டின்று தமிழரடைந்த சொத்து.
கொல்லுகிற பொஸ்பரசுக் குண்டெறிந்து எம்மினத்தை
வல்லார் அழிக்கையிலே வாய்மூடி நின்றவர்கள்
சொல்லாமல் வந்தார் துணிவாய்த் தம் பங்களித்தார்.
நல்ல சகுனமிது நம்மினத்துக் கென்றிருந்தோம்.

எந்தப் பயமுமின்றி எதிர்த்து வரும் காளைதனை
எந்திரத்தின் பின்னொளிந்து என்ன செய்யப் போகின்றீர்?
உற்ற நண்பன் பின்னே ஒளிப்பதுதான் வீரமென்றால்,

விழலுக் கிறைத்தது போல் வீரத்தை வீண்டித்து
பழம் படுபனையின் கிழங்கு பிளப்பதற்கு
ஆப்பு மொங்கான் கோடரியை ஆயுதமாயக் கொண்டதுபோல்

ஜல்லிக் கட்டுக்குத் தடைநீக்கம் பெற்றிடற்காய்
சட்டமொன்றைக் கேட்டு தடியடியேன் பட்டுலைந்தீர்?

மஞ்சுவைக் கண்டு அஞ்சிடும் இளைஞனே நீ
சேயெனப் பசுவைப் போற்று சிரம்பணிந்ததனையேற்று
வாயுறையாகப் பொங்கல் வழங்கி நற் பட்டுச் சாத்து
தூய நல்லன் பினோடும் துணிவொடும் வீரத்தோடும்
பாயடா காளை முன்னே பாய்ந்ததன் கொம்பு பற்றிச்
சாயடா அதனையுந்தன் சமர்த்தினை உலகு காண.
வாயிலா நண்பன் மஞ்சு வதையுறாததனைப் பற்றி
தாயென அன்பு செய்நீ தரணியுன் பண்பைக் காணும்.

ஆய வெம் கலைகளுள்ளே அதுவுமொன்றிது வேறில்லை.
நேயமும் தயையுமெங்கள் நிலத்தினில் புதிதோ இல்லை.

*****

”கோபமே கொம்புகளாய்க் கொண்டு எமைத் தாக்க வரும் காளையே! யாம் கொள்ளையரோ காமுகரோ அல்லர்; உன்னோடு யாம் நிகழ்த்தும் வீரவிளையாட்டைக் காக்க மெரினாவில் கூடிய நல்ல(வ)ர்! எமைக்கண்டு சீறாதே…செல்!” என்று உண்மை விளம்புகின்றார் திரு. கொ.வை. அரங்கநாதன். 

கோபமே கொம்புகளாய்,
குருதிச் சிவப்பே கண்களாய்,
குதித்தோடித் தாக்க வரும் காளையே
நீ எங்களைத்
தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறாய்!

விடிந்தும் விடியாப் பொழுதில்
வாசலில் நீர் தெளித்துக் கோலமிடும்
பெண்கள் தாலிப் பறித்தோடும்
கொள்ளையர்கள் அல்ல நாங்கள்!

பேருந்துக் கூட்ட நெரிசலிலும்
விழாக் கடைவீதி என்றெங்கும்
பெண்களைச் சீண்டுகின்ற
காமப் பித்தர்கள் என்றா
நீ எங்களைக் கருதிவிட்டாய்?

நெருக்கடி மிகுந்த சாலைகளில்
நடப்பவர்கள் நடுங்கியோட
வாகனப் போட்டி நடத்தும்
விபரமறியா விடலைகள் என்றே
நீ நினைத்து விட்டாய் போலும்!

உனக்கும் எங்களுக்குமான
வீர விளையாட்டை மீட்டெடுக்க
மெரினாவில் கூடிய பெருங் கூட்டத்தின்
சிறு அங்கங்கள் நாங்கள்!

ஆராய்ச்சி மணி அடித்த
ஆரூர்ப் பசுவின் வாரிசு போலும் நீ
அதனால்தான் அநீதி கண்டு
சினமுற்றுச் சீறுகிறாய்!
தவறேதும் நாங்கள் செய்யவில்லை
தயவு செய்து திரும்பி விடு!

*****

கருத்தோட்டமும் கற்பனைச் செறிவுங்கொண்ட அற்புதக் கவிதைகளைப் படைத்தளித்திருக்கின்றீர்கள் கவிவலவர்களே! உங்களுக்கு என் பாராட்டுக்கள்!

இனி, இவ்வாரத்தின் சிறந்த கவிதையாய்த் தேர்வாகியிருப்பதைக் காண்போம்!

நாட்டுக் காளையின் பெருமை..!
காளையரைக் கண்டால் ஜல்லிக் கட்டுக்
……….காளையும் தன்காலை யுதைத்துத் திமிரும்.!
பாளைமடல் போன்றதன் கொம்பால் மணற்
……….பாங்கான இடத்தில் முட்டி முறுக்கேற்றும்.!
தோளான அதன்திமில் கர்வ மிகுதியாலது
……….தொய்ந்துயர சற்றேபக்க வாட்டில் சாயும்.!

வேளை வரும்போது வீரத்தை நிரூபிக்க
……….வாடிவாசல் திறக்கும் வரைக் காத்திருக்கும்.!

முட்டிச் சாய்ப்பதற்கென்றே வாழப் பழகிடும்
……….மூர்க்கத்தனமாய் வாய்பிளந்து குரலெழுப்பும்.!
கட்டான இளைஞர்களைக் கண்டு விட்டால்
……….கட்டுக் கடங்காமல் கூட்டத்துள் சீறிப்பாயும்.!
கிட்ட யாரையும் நெருங்கவிடாமல் துரத்தும்
……….கிட்டாத பெருமையெலாமதற்கு வந்து சேரும்.!
போட்டியென வந்துவிட்டால் போதும் அது

……….மாட்டு வண்டியாயினும் மகிழ்ந்தே இழுக்கும்.!

வாசுதேவனுனை மேய்த்த அருஞ் செயலால்
……….வண்டி யிழுக்கும் உனக்குப் பெருமையுண்டு.!
ஈசனும் விரும்பியுனை வாகன மாக்கியதால்
……….பூசைக்குமுன் உனக்குத்தான் முதல் மரியாதை.!
பாசமுடனுனை அரவணைத்துப் பழகி விட்டால்
……….பகுத்தறி வென்பதுனக்குத் தானாக வந்துவிடும்.!
நேசிக்கும் உழவனுக்கே உயர் நண்பனானதோடு
……….நெஞ்சுரத்துக்கு நீயேயோர் சிறந்த உதாரணம்.!

”நாட்டுக் காளையே! கட்டான இளைஞர்களைக் கண்டால் நீ கட்டுக்கடங்காமல் சீறுவாய்; பாசத்தோடு அணைத்துப் பழகிவிட்டால் பகுத்தறிவுடையதாய் மாறுவாய்; நீ ஈசனுக்கு வாகனம்; உழவனென்னும் நேசனுக்கு நண்பன்” என்று காளையின் பெருமையினைக் கவினுறத் தன் பாட்டிலே காட்டியிருக்கும் பெருவை திரு. பார்த்தசாரதியை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

 

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “படக்கவிதைப் போட்டி 181-இன் முடிவுகள்

  1. இந்த வாரத்தின் (8-10-18 – 13-10-18) சிறந்த கவிதையாகவும், கவிஞராகவும் தேர்ந்தெடுத்த நடுவர் திருமதி மேகலா ராமமூர்த்தி அவர்களுக்கும், கவிதைக்குப் படத்தைக் கொடுத்த திரு யெஸ்மெக், படக்குழுமத்தின் ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பனுக்கும், ஆசிரியர் திருமதி பவளசங்கரிக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    நடுவர் திருமதி மேகலா இராமமூர்த்தி அவர்களின் பாராட்டுரைக்கு மிக்க நன்றி.

    கவிதைப் போட்டியில் பங்குபெற்ற ஏனைய கவிஞர்களுக்கும் எனது பாராட்டுக்கள்.

    நான் ஜல்லிக் கட்டு விளையாட்டை விரும்பிப் பார்ப்பவன், நமது பாரம்பரிய விளையாட்டு, தமிழரின் பெருமையைப் பறைசாற்றிக் கொண்டு இன்றும் வெற்றி நடை போடும் வீரவிளையாட்டு.

    அன்புடன் பெருவை பார்த்தசாரதி

Leave a Reply to பெருவை பார்த்தசாரதி

Your email address will not be published. Required fields are marked *