நிர்மலா ராகவன்

நிறைவுகளைப் பட்டியலிடுங்கள்

எப்போதும் மகிழ்ச்சியின்றியே காணப்படுகிறவர்கள் யார்மேலாவது குற்றம் கண்டுபிடித்துக்கொண்டே இருப்பார்கள். அப்படி ஒருவரும் அன்று அகப்படவில்லையா? `எனக்கு அதிர்ஷ்டமே கிடையாது!’ என்று தம்மையே குறை கூறிக்கொண்டு இருப்பார்கள்.

எவரிடமாவது தம் குறைகளைச் சொல்லிக்கொண்டால் வேதனை குறைகிறது என்று நினைத்தவர்களாகப் பலரும் தம் பாரத்தைப் பிறர் தலையில் ஏற்றிவைப்பார்கள். சொல்பவருக்கு மனம் எளிதாக ஆகிறதோ, என்னவோ, கேட்க நேர்ந்தவருக்கும் தாமே அனுபவித்ததுபோன்ற உணர்வு ஏற்பட, அவரது மகிழ்ச்சியும் குன்றிவிடும்.

கதை

சிறு வயதிலேயே தாயை இழந்த பத்மாசனி தந்தையின் செல்ல மகளாக வளர்ந்தவள். புக்ககத்திற்குப் போனபோது, அவள் உலகமே மாறிவிட்டது போலிருந்தது. படுத்த நிலையிலேயே ஓயாது அதிகாரம் செய்த மாமியாரை எப்படிச் சமாளிப்பது என்று புரியவில்லை.

அடிக்கடி தன் சகோதரனின் பிறந்தகத்திற்கு வந்து, மாமியாரைப்பற்றியே பேசிக்கொண்டிருப்பாள். பிறரது முகத்திலும் வருத்தம் தென்படுவது ஆறுதலாக இருக்கும்.

அருமையாக வளர்ந்த பெண்ணை எப்படிச் சமாதானப்படுத்துவது என்று யாருக்கும் புரியவில்லை. அவளுடைய சோகம் வீட்டிலிருந்தவர்களையும் ஓரளவு பற்றிக்கொண்டது.

`இவர்களாவது நம்மைப் புரிந்துகொண்டு, நம்மீது அன்பு செலுத்துகிறார்களே!’ என்று நினத்தவள்போல், அதையே வழக்கமாகக் கொண்டாள் பத்மாசனி. வரும்போதெல்லாம் மாமியாரைப்பற்றிய புகார்தான்.

இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த நான், “தன் வீட்டில் நிம்மதியே இல்லை என்றுதான் இங்கு வருகிறாள். ஆனால், மாமியாரைப்பற்றியே புகார் செய்துகொண்டிருந்தால், நிம்மதி எப்படிக் கிடைக்கும்? பேச்சை மாற்றிவிடுங்கள்!” என்று உபாயம் கூறினேன்.

இம்முறையால் சம்பந்தப்பட்ட எல்லாருக்கும் சற்று நிம்மதி கிடைக்கும்.

மாமியார் மட்டுமின்றி, பெற்ற குழந்தைகளைப்பற்றிகூட புகார் செய்யும் தாய்மார்கள் உண்டு.

கதை: போட்டா போட்டி

பாலம்மா தன் ஒரே மகளின் வீட்டுக்குப் போயிருந்தாள். அங்கு பெண்ணின் மாமியாரும் தங்கியிருக்க, குழந்தை வளர்ப்பிலிருந்து சமையல்வரை இரு தாய்மார்களுக்கும் மறைமுகமான போட்டி.

`ஏனடா போனோம்!’ என்றாகிவிட்டது பெண்ணைப் பெற்றவளுக்கு. முகத்தைச் சுளித்துக்கொண்டு, “ஐயே! யாராவது பெண்வீட்டில் போய் தங்குவார்களா!” என்று அடிக்கடி சொல்ல ஆரம்பித்தாள்.

தனக்கு ஒரு பெண் இருப்பதால்தானே இப்படி அவதிப்பட நேர்ந்தது என்று நினைக்க ஆரம்பித்தவள்போல், அவளைப்பற்றியும் ஓயாது குறை கூற ஆரம்பித்தாள்.

அவளது புலம்பலைச் சகிக்க முடியவில்லை உறவினருக்கு.

“நீ ஏன் சும்மா அதையே சொல்றே? எல்லாக் குழந்தைகளும் அப்படித்தான்!” என்று ஒருத்தி கூறி, அவள் வாயை அடைத்தாள்.

நானும் அப்படித்தான்!

கவுன்செலிங் செய்யும்போது, `எங்கள் குடும்பத்திலும் இப்படித்தான் நடக்கிறது!’ என்று கூறுவது உடனே பலனளிக்கும். `நான் மட்டும் தனியாக கஷ்டப்படவில்லை,’ என்ற நிம்மதி எழ, புகார் செய்பவர் சற்று அடங்குவார்.

எல்லாருக்கும் நிகழ்காலத்தில் பெரிதாக எந்த பிரச்னையும் இருப்பதில்லை. இருந்தாலும், எதைப்பற்றியாவது யோசித்து, குறை கூறி, அனுதாபம் தேடுவது சிலரது குணம். அவர்களைப் பொறுத்தவரை, அனுதாபமும் அன்பும் ஒன்று.

`அலுவலக நண்பர்கள் படுத்தும் பாடு..!’

அவர்களைவிட்டு விலக வேண்டியதுதானே! நம் நிம்மதியைக் கெடுக்க நினைப்பவர்கள் நண்பர்களே இல்லை.

“இந்த அரசியல்வாதிகள் செய்யும் அக்கிரமம்..!’

பிறரைப்பற்றி அவர்பின்னால் பேசினால் அவர் மாறுவாரா, என்ன! நம் நிம்மதிதான் கெடும்.

`நான் சிறுவயதில் பட்ட துயரம் இருக்கிறதே..! சிரிப்பே கிடையாது!’

இன்று அதைப்பற்றிப் பேசினாற்போல், என்றோ நடந்தது மாறிவிடப்போகிறதா?

சிறு வயதில் சிரிப்புதான் முக்கியம்

பிற்கால வாழ்க்கையில் எந்த இடர் வந்தாலும், அதைத் தாங்கும் சக்தி அளிக்கவல்லது சிறுவயதில் ஒருவர் அனுபவிக்கும் மகிழ்ச்சி. இது புரியாது, படிப்பு, பணம், பதவி என்ற நோக்கத்துடன் குழந்தைகளை விரட்டிக்கொண்டே இருந்தால், அவர்கள் வாழ்க்கையில் எவ்வளவு முன்னேறினாலும், என்ன அடைந்தாலும், சிரிப்பு மட்டும் அண்டாது.

கதை

பெற்றோர் அண்ணன்மார்களை மட்டும் படிக்க வைத்துவிட்டார்களே, தான் பட்டதாரி இல்லையே என்ற பெருங்குறை ரதிமலருக்கு. பிற பட்டதாரி ஆசிரியைகளுடன் காரணமின்றி சண்டை பிடித்துக்கொண்டிருப்பாள். தன் மகள் அனுசூயாவாவது படிப்பில் எல்லாரையும் மிஞ்சவேண்டும் என்ற வெறியே வந்துவிட்டது அவளுக்கு.

நிறைய மதிப்பெண்கள் வாங்காவிட்டால், அறையில் பூட்டிவைப்பது, பட்டினி போடுவது என்று பலவாறாக மகளுக்குத் தண்டனை அளித்திருக்கிறாள் ரதிமலர்.

என் மகளுடன் ஒன்றாகப் படித்துவந்தவள் மகள் அனுசூயா. தினமும் தன் தாய் செய்யும் கொடுமைகளைச் சொல்லி வருந்துவாளாம்.

பதினாறு வயதான என் மகளுக்கோ, தோழிக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்றே தெரியவில்லை. என்னிடம் ஆலோசனை கேட்டாள்.

“எங்கம்மாவும் அப்படித்தான்! என்று சொல்லி வை,” என்றேன்.

உடனே, “நீ அப்படி இல்லை என்று அவளுக்குத் தெரியும்!” என்றாள்.

(பள்ளிப் பருவத்தில் வற்புறுத்தி எந்நேரமும் படிக்கவைத்தால், பிற்காலத்தில் புத்தகம் என்றாலே ஒரு வித பயம், அருவருப்பு ஏற்பட்டுவிடும் என்பதை என் அனுபவத்தில் கண்டிருக்கிறேன்).

எட்டாம் வகுப்பின் அரசாங்கப் பரீட்சையில் நிறைய மதிப்பெண்கள் வாங்கி தாயை மகிழ்வித்த அனுசூயா அடுத்த ஆண்டில் அதற்கு எதிர்மாறாக எல்லாவற்றிலும் தோல்வியுற, தலைமை ஆசிரியை விழித்துக்கொண்டாள். அப்பெண்ணை அழைத்து விசாரிக்க, அவள் கதறியபடி தன் தாயின் போக்கை விவரித்தாளாம்.

இன்று அனுசூயா நிறையப் படித்து, நல்ல உத்தியோகத்தில் இருக்கிறாள்.

மகிழ்ச்சி?

சிறு வயதில் இழந்தது மீண்டும் கிடைக்குமா?

கற்பித்தலும் சுதந்திரமும்

சிறு வயதில் தம் குழந்தைகள் பக்கத்திலேயே உட்கார்ந்து ஒவ்வொரு பாடத்தையும் சொல்லிக்கொடுக்கும் தாய்மார்கள் அவர்களுக்குச் சுதந்திர உணர்வு அவசியம் என்பதைப் புரிந்துகொள்வதில்லை.

சிலருக்கு இடைநிலைப்பள்ளியில் படிக்கும் குழந்தைக்குக் கற்பிக்கத் தெரியாமல் போகலாம். அப்போது தானே எதையும் சமாளிக்கத் தெரியாது அல்லல் படுவார்கள் சிறுவர்கள்.

கதை

“என் காலத்தில் கல்வி வித்தியாசம். இல்லையா?” என்றாள் என்னைப் பார்க்க வந்த ஒரு தாய்.

நான் சும்மா தலையாட்டி வைத்தேன். மகன் அமீர் படிப்பில் சுமார் என்ற வருத்தம் அவளுக்கு என்பது புரிந்தது.

“எனக்கு அவனுக்குச் சொல்லிக்கொடுக்கத் தெரியவில்லை,” என்றாள் பரிதாபகரமாக. நான் அவளைக் குற்றம் சொல்லிவிடுவேனோ என்ற அச்சம் அவளுக்கு.

“சும்மா பக்கத்தில் உட்கார்ந்துகொள்ளுங்கள். அது போதும். அவன் ஏதாவது விவரித்தால் கேட்டுக்கொள்ளுங்கள்,” என்றேன்.

`அம்மாவுக்கு நம் நலனில் ஆர்வம் இருக்கிறது!’ என்று ஏற்படும் உற்சாகமே ஒரு சிறுவனை முன்னுக்குக் கொண்டுவந்துவிடும். தீய நட்பை நாடாத குணம் வரும்.

ஓரிரு மாதங்களிலேயே அமீரிடம் நல்ல முன்னேற்றம் தெரிந்தது. படிப்பில் ஆர்வம் மிகுந்து, கலகலப்பாக ஆனான்.

கவலையே இல்லாதவர்களோ?

உம்மணாமூஞ்சிகளாக இருப்பவர்கள், சிரித்த முகத்துடன் காணப்படுகிறவர்களைப் பார்த்து `இவர்கள் வாழ்க்கையில் வருந்தத்தக்கதாக எதுவுமே நடந்திருக்காதா!’ என்று ஆச்சரியப்படுவார்கள்.

உண்மையில், துன்பத்தையும் துயரத்தையும் அனுபவிக்காதவர்களே கிடையாது. அதை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதில்தான் சூட்சுமம் அடங்கியிருக்கிறது.

மன இறுக்கமா?

ஒருவருக்குத் தன்னையே பிடித்துப்போனால், பிறரது வித்தியாசத்தைப் பெரிதுபடுத்தி, நொந்துபோக மாட்டார். தங்களிடமும் சிறிது கருணையும், அன்பும் காட்டலாமே!

காற்றாட வெளியில் போவது, நல்ல புத்தகங்களைப் படிப்பது, இனிய இசையைக் கேட்பது, நண்பர்களுடன் உறவாடுவது, நறுமணமுள்ள மலர்களை முகர்வது – இப்படி எத்தனை வழிகள் இல்லை, நிம்மதி அளிக்க!

மாமியாரைக் குறைகூறியபடி இருந்த பத்மாசனிக்கு ஆதரவான கணவர், அன்பும் அறிவுமாக இருந்த பிள்ளைகள், பணத்தட்டுப்பாடு இல்லாத வாழ்க்கை எல்லாமே கிட்டியிருந்தன. இவைகளை எண்ணி திருப்தி அடைந்திருக்கலாமே! கிடைக்காத ஒன்றுக்காக அநாவசியமாக நோவானேன்!

உங்களிடம் இருக்கும் நிறைவுகளைப் பட்டியலிடுங்கள். குறைகளை அல்ல.

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *