கு.ப.ரா. சிறுகதைகளில் பெண்மனப் பதிவுகள்

0

முனைவர் ப.சு. மூவேந்தன்,

உதவிப்பேராசிரியர்,

தமிழியல்துறை,

அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,

அண்ணாமலைநகர் – 608 002.

————————————————————-

முன்னுரை

தமிழ்ச் சிறுகதைகளின் தொடக்கக் காலத்தில் சிறுகதைகள் எழுதிப் புகழ்பெற்றவர் கு.ப.ரா. ஆவார். அவரது சிறுகதைகள் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட, அடிமைப்படுத்தப்பட்ட இனமாகக் கருதப்பட்ட பெண்ணினத்தின் குரலாக ஒலிப்பதுடன் பெண்களின் மன உணர்வுகளை நுண்ணோக்கோடும் வெளிப்படையாகவும் அறிவிக்கின்றன. தமிழில் பெண்ணுர்வுகளைச் சிக்கல்களைச் சிறுகதைகளில் வெளிப்படுத்திய முதல் பதிவாளராக அவர் விளங்குகின்றார். அவரது ‘தனபாக்கியத்தின் தொழில்’, ‘குந்துமணி’ என்னும் இரு சிறுகதைகளில் வெளிப்படுத்தப்படும் பெண்மன உணர்வுப் பதிவுகள் குறித்து இக்கட்டுரையில் ஆராயப்படுகின்றது.

மனச் செயல்பாடுகள்

மனிதனது ஆறாவது அறிவு மனம் ஆகும். மனிதனது செயல்பாடுகள் யாவற்றினுக்கும் மனமே அடிப்படை அலகாக அமைகின்றது. மனம் உள்ளவன் மனிதன். அவ்வகையில் நமது இலக்கியங்கள் மனம் என்பதனைக் குறித்துப் பரவலாகப் பேசியுள்ளன. மனத்தின் செயல்பாடுகளாலேயே மனிதச் செயல்பாடுகள் அமையும் என்பதனைக் கருதியே திருவள்ளுவர் ‘மனத்துக்கண் மாசிலன் ஆதல்’ என்று அறிவுறுத்தினார். ஆனால் நடைமுறைச் சிந்தாத்தந்தில் மனத்தின் செயல்பாடுகள் ஒத்த தன்மையினதாக அமைவதில்லை. தன்னைப் போன்றே மற்றவர்களுக்கும் மனம் என்பது உண்டு என்று அறியவாய்ப்பே கொடுக்கப்படாமல் ஆதிக்கத்தை மட்டுமே கையில் வைத்துக் கொண்டு ஆண்டுவரும் மாக்களின் செயல்பாடுகளைத் தனது சிறுகதைகளின் மூலம் காட்டியுள்ளார் கு.ப.ரா.

மனஉணர்வு என்பது ஆண் பெண் யாவர்க்கும் ஒன்றுதான். என்றாலும் மனத்தின் வழியான செயல்பாடுகளிலும் ஏற்றத்தாழ்வுகள் நிலவுகின்றன என்னும் கருத்தினை ‘தனபாக்கியத்தின் தொழில்’ (1934), ‘குந்துமணி’ (1934) என்னும் சிறுகதைகளின்வழி புலப்படுத்தியுள்ளார் கு.ப.ரா.

‘தனபாக்கியத்தின் தொழில்’ (1934), ‘குந்துமணி’ (1934) என்னும் இரு சிறுகதைகளும் அன்றைய சமூகத்தில் தள்ளிவைக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட பெண்ணினமான தேவதாசியர் நிலையைப் பேசுகின்றது. தேவதாசிச் சமூகத்தைச் சார்ந்த பெண்கள் ‘ஆடல் பாடல் வல்லாராகி;, இன்பமும் பொருளும் நல்கி, ஒருவர் மாட்டும் தங்காதார்’ என்ற கருத்து வலுப்பெற்றிருந்த காலகட்டத்தில் இக்கதைகள் படைக்கப்பட்டன என்பது கருத்தில் கொள்ளத் தக்கது. தாசியர் குலத்தைச் சார்ந்த பெண்கள் தங்கள் சமூகத்தின் இழிநிலையிலிருந்து மேலே வருவதற்கு அனுமதிக்காத சமூகத்தை இக்கதைகளின்வழி காட்டுகின்றார் கு.ப.ரா.

தனபாக்கியத்தின் காதல்

‘தனபாக்கியத்தின் காதல்’ என்னும் சிறுகதையில் இடம்பெறும் தனபாக்கியம் தாசியர் குலத்தில் பிறந்தவள்; என்றாலும் அவள் உள்ளத்தில் தன்னைக் காதலிப்பதாகச் சொல்பவனுடன் சேர்ந்து மணமுடித்துக் கொண்டு வாழ்ந்திட வேண்டும் என்ற ஆர்வம் பிறக்கின்றது. இதனால் தன் குலத்தின் இழிவும், ஊரார் தூற்றும் பழியும் நீங்கும் என்று நினைக்கின்றாள். அவள் ஒரு புலவனைக் காதலிக்கின்றாள். புலவனோ தாசியரைப் பழிவாங்க நினைக்கும் ஒரு வஞ்சகனால் அவள் வீட்டுக்குக் கொண்டுவந்து விடப்படுகின்றான். என்றாலும் பாதகமில்லை; புலவனாகிய சண்முகசுந்தரம் தனபாக்கியத்தை உயிருக்கு உயிராகக் காதலிக்கின்றான்: என்றாலும் தன் ஏழ்மையைக் கருத்தில் கொண்டு அவள் தன்னை விட்டுவிட்டுச் செல்லக்கூடும் என்ற அச்சவுணர்வு அவன் உள்ளத்தில் எப்பொழுதும் நிறைந்திருக்கின்றது. தனபாக்கியத்தின் உள்ளத்திலோ தான் ஒரு தாசிதானே என்று கருதி, புலவன் தன்னைவிட்டுச் செல்லக்கூடும் என்ற உணர்வு மேலெழுந்து நிற்கின்றது.

“காதல் தழைப்பதற்கு உலகத்தில் இடையூறுகள் உண்டா? உண்டு. உதாரணமாக உன் தாய் என்னை இங்கு வரவேண்டாமென்று தடுத்துவிட்டால்? எதற்காக? நன்றாயிருக்கிறது அவள்தானே”     (ப. 22)

என்னும் பகுதியில் புலவனின் வறுமைவயப்பட்ட வாழ்வியல் நிலை இக்காதலுக்குத் தடையாக நிற்கும் என்ற நிலைப்பாட்டினையும்,

“அடி தனம் ! இனிமேல் அந்தப் பரதைப்பயல் இந்த வாசல் நுழையக்கூடாது தெரியுமா? என்று தனத்தின் தாய் கமலம் வெடுக்கென்று பேசினாள். தொழிலில் கண்ணும் கருத்தும் உடையவள் அவள் …..இன்றைக்கு அவன் வந்தால் வீட்டை விட்டுத் துரத்து”  (ப. 22)

என்னும் பகுதியில் தனத்தின் தாய் எதிர்நோக்கியிருக்கும் வியாபார நிலையினையும் காட்டுகின்றார் கு.ப.ரா.

“உன்னை ஏமாற்றும் நோக்கிலேயே புலவன் உன்னைக் காதலிப்பதாகக் கூறுகின்றான்” என்ற தனபாக்கியத்தின் தாயாரது குரலுக்கு, தனபாக்கியம் “காதல் என்பது வலிந்து வரக்கூடிய விசயமில்லை” என்று மறுத்துரைக்கின்றாள்.

“நீ சுத்த அசடாயிருக்கியேம்மா. அவன் செய்யவாவது? என் மனசை ஆக்க அவனால் ஆகுமா?”              (ப. 23)

என்று கேள்வி எழுப்புகிறாள். இதனால் பெண்ணின் மனதை யாரும் குழப்பவும் குறைத்தும் மதிப்பிட்டுவிட முடியாது என்பதனை இப்பகுதியில் எடுத்துரைக்கின்றார் கு.ப.ரா.

மீண்டும் புலவன் வந்து தனபாக்கியத்தைச் சந்திக்கும் போது, தங்கள் காதல் நிறைவேறாது என்று அவநம்பிக்கைக் கொள்ளுகிறான். தான் ஒரு ஏழைப்புலவன் என்று தெ ரிந்துவிட்டால் அவள் தன்னை மறுத்துவிடுவாள் என்று கருதி அவளை விலக நினைக்கின்றான்;. அப்போது தனபாக்கியத்தின் உள்ளத்தில் எழும் மன உணர்வுகளையும், தாசியர்களைப் பற்றிய சமூக மதிப்பீட்டினையும் கு.ப.ரா. இவ்விருவரது உரையாடலின் மூலம் தெளிவாக்குகின்றார்.

“நீங்கள் பணக்காரரா?

இல்லை. நான் ஏழைப்புலவன். ஆ! என்னை வெறுக்கிறாயல்லவா?

நீ பணத்தை விரும்புவது சகஜந்தானே….?

என் ஜாதிக்குச் சகஜம் என்று சொல்லிக்காட்டுகிறீர்களா? என் ஜாதி ஸ்வபாவத்துடனா நான் உங்களை-என் குலத்து வழக்கப்படியா உங்களை – என்று அவள் விம்மி விம்மிச் சொல்வதற்குள் கண்ணீர் நெஞ்சை அடைத்து விட்டது”             (பக். 23-24)

என்னும் பகுதியில் தெளிவாக உணர்த்துகின்றார்.

தனபாக்கியம் தன் குலத்தொழிலாகிய தாசியர் குலத்தொழிலைச்; செய்யாமல் ஏழைப்புலவனைத் திருமணம் செய்து கொண்டு எவ்வாறு வாழமுடியும் என்று கேள்வி எழுப்புகின்றாள் அவளது தாய் கமலம். இனி நீங்கள் இருவரும் இங்கிருக்கக் கூடாது என்று ஆணையும் இடுகின்றாள்.

“வெளியே கமலத்தின்குரல் கேட்டது.

அடியே, அவனை வெளியே போகச் சொல்லு !

மாட்டேனம்மா !

ஆனால், இருவரும் வெளியே போங்கள் !”                                         (ப. 24)

என்று கதையை நிறைவு செய்கின்றார். உண்மையாகக் காதலித்தவனை மணந்து கொள்வதற்குத் தனது தாய் உரிமை தராதபோது தன் வாழ்க்கையினை அவளே கையில் எடுத்துக்கொள்கிறாள். தன் காதலனுடன் வீட்டைவிட்டு வெளியேறத் தயராகிவிட்டாள் என்று குறிப்பாக உணர்த்துகின்றார் கு.ப.ரா. இதில் பெண் மன உணர்வு வெளிப்பாட்டையும் சமூக எதிர்ப்புணர்வினையும், எதிர் வினையாற்றலையும் கதை நிகழ்ச்சிகளின் போக்கில் எடுத்துரைத்துள்ளார் கு.ப.ரா.

தாசியர்குலப் பெண்கள் பணம் ஒன்றையே நோக்கமாகக் கொண்டு செயல்படுவார்கள் என்றும், தங்களிடம் வருகின்ற ஆண்களின் சொத்துக்களையெல்லாம் பறித்துக் கொள்வார்கள் என்ற கருத்தும் மேலோங்கி இருந்த காலகட்டத்தில் உண்மையான காதல் உணர்வால் உந்தப்பட்டு பொன்னையும் பொருளையும் இழப்பதற்குத் தயராகும் பெண்மன உணர்வினை இக்கதையின்வழி காட்டுகின்றார்.

குந்துமணி

காதலை மையமாக வைத்து எழுதப்பட்ட சிறுகதை ‘குந்துமணி’ ஆகும். இதில் பணக்கார இளைஞனான ராமு, தாசியர் குலத்தைச் சேர்ந்த ராஜலட்சுமியைக் காதலிப்பதாகப் பொய்சொல்லி அவளுடன் பழகுகின்றான். அவனது காதலை உண்மை என்று நம்பி அவனிடம் தன்னை ஒப்படைக்கின்றாள் ராஜலட்சுமி. நாட்கள் செல்லச் செல்ல அவளது உடல் மட்டுமே அவனுக்குத் தேவைப்படுகின்றது. அவளுக்கோ அவனால்  தனக்கு ஒரு வாழ்க்கை கிடைத்தால் தனது குலத்தொழிலை விட்டுவிட்டு தன்மானத்துடன் வாழலாமே என்ற உணர்வு எழுகின்றது. இந்தக் கதையிலும் அவளது தாய் பணக்கார ஆண்களின் மனஉணர்வினைத் தெளிவாக அறிந்துவைத்துள்ளாள்;. இதனால் இந்தக் காதல் நிலைக்காது என்ற கருத்தினைத் தன் வாய்மொழியாகப் பதிவுசெய்கிறாள்.

“உங்களை வரவேற்பதில் என் தாயாருக்கு கொஞ்சம் கூட இஷ்டம் இல்லை.

அவளிஷ்டம் எனக்கெதற்கு?

நன்றாயிருக்கிறது! ….இல்லவேயில்லை. இப்படித்தான் புருஷர்கள் பேதைப் பெண்களின் மேல் பழியைச் சுமத்துவது”       (ப. 30)

என்னும் பகுதியில் தன் தாயின் மறுப்பினையும், இளைஞனின் பொய்யைச் சொல்லி ஏமாற்ற நினைக்கும் மனப்பாங்கினையும் காட்டுகின்றான்.

தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு ராமுவை வலியுறுத்துகின்றாள் ராஜலட்சுமி. அந்நிலையில் அவர்களிடையே நடைபெறும் உரையாடல் பகுதியால் பெண்மன உணர்வுகளைப் பதிவிடுகின்றார்.

“எங்கள் ஜாதித் தொழிலை நான் பழகவேண்டுமென்று படுத்துகிறாள் – அதாவது நான் பொட்டுக் கட்டிக் கொள்ள வேண்டுமென்று வற்புறுத்துகிறாள்.

அதற்கு நான் வந்துகொண்டிருப்பது தடையொன்றும் இல்லையே?

இல்லை, இல்லை நான் தான் மாட்டேன் என்று சொல்லிவிட்டேனே…

ஏன்?

ஏனா? உங்களுக்கு இன்னும் விஷயம் புரியவில்லையா? சொல்லுகிறேன்- என் தாயார் என்னை விலைமாதா இருக்க வேண்டுமென்கிறாள்.

நீ சொல்வது எனக்கு அர்த்தமே ஆகவில்லை. இப்பொழுதும் அப்படித்தான்-

அதாவது நான்…

ராஜத்தின் முகம் வெளுத்தது. கண்கள் பயத்தால் பெரிதாகிப் பரந்தன.

என்ன, என்ன? என்ன சொன்னீர்கள்?

ராஜம் ஏனிப்படிப் பதறுகிறாய்? நான் என்ன சொல்லிவிட்டேன்?

நான் உங்களுடைய வைப்பு என்கிறீர்களா?

அதிலென்ன உனக்குக் குறை? எந்தப் பெயரானால் என்ன?

அவன் சொன்னது ஒன்றும் அவள் காதில் விழவில்லை. கண்களில் நீர்வடிய, குழந்தை போன்ற விக்கல் குரலுடன்,

நான்-ஆனால் நான் உங்கள் தாஸி தானா?

சுத்த அசடா யிருக்கியே? பின் என்னவென்று எண்ணிக் கொண்டிருந்தாய்?

நீங்கள்… ஆனால், என்னை மணக்கப் போவதில்லையா?

……………………

நீங்கள் கொடுத்த உறுதிகளெல்லாம் பொய்யா?               (பக். 31-32)

இப்பகுதியில் சமூகத்தின் கொடூரப்பிடியிலிருந்து வெளியேறத் துடிக்கும் அவளது உள்ள உணர்வினையும் அதை அலட்சியமாகவும், அது சமூக நடைமுறைதான் என்று சொல்லித் தப்பிக்க நினைக்கும் ஆணாதிக்க எதேச்சதிகார நிலைப்பாட்டினையும் பதிவிடுகின்றார். பெண்கள் சமூகத்தில் எத்தகைய நிலையிலிருந்தாலும் அவர்களைப் பொருளாகக் கருதும் நிலைப்பாட்டினை இக்கதையின்வழி காட்டுகின்றார் கு.ப.ரா.

இவர்களது உரையாடல் இவ்வாறே நீண்டு கொண்டு செல்கின்றது. ஒரு கட்டத்தில் ராமு, ராஜலட்சுமியைப் பார்த்து,

“ஓஹோ! ஏது குலப்பெண்களுக்கு மேற்போய்விட்டதே உனது எண்ணம்?”  (ப.32)

என்று சொல்லி அவளை அடக்கப் பார்க்கின்றான். அப்பொது பொங்கிவரும் தன் மன உணர்வினை ராஜலட்சுமி,

“நற்குணத்தில் குலப்பெண்களுக்குத்தான் உரிமையோ? ஐயோ! என் கனவுகளெல்லாம் கானலாகவா போகவேண்டும்? என்னுயிர் ஏக்கங்கள் இத்துடன் இப்படியா முடிவடைய வேண்டும்?”                 (ப. 32)

என்று சொல்லி புலம்புகின்றாள். தான் பிறந்த குலத்தின் இழிநிலையைக் கருதி வருந்தவும் செய்கின்றாள்.

இறுதியில் ஆண்சமூகத்தை எதிர்த்து வாழ்வது தன்னால் இயலாத செயல் என்று தன் விதியை நொந்தபடி தாசியாகவே தன் வாழ்க்கையைக் கழிப்பது என்று முடிவெடுப்பதாகக் கதையை நிறைவுசெய்துள்ளார் கு.ப.ரா.

இவ்விரு கதைகளிலும் பெண்களின் மன உணர்வுகளையும், ஏக்கங்களையும், உணர்வுக் குமுறல்களையும் எடுத்துரைத்துள்ள அதே வேளையில் சமூகத்தில் எதிர்த்து வாழத்துடிக்கும் நிலையினை ஒருகதையிலும், சமூகத்தை எதிர்த்து நின்று வாழத் துடித்தாலும் பெண்களை ஆண்சமூகம் அடிமைகளாகவே கருதும் நிலைப்பாடு உள்ளதனை அடுத்த கதையின் மூலமும் எடுத்துரைத்துள்ளார்.

இக்கதைகள் எழுதப்பட்டு பல ஆண்டுகள் கழிந்துள்ள பின்னரும், இன்றைக்கும் பெண்களின் மனஉணர்வுகள் மதிக்கப்படாத நிலையில் இருக்கின்றது. தமிழின் தொடக்கக் காலச் சிறுகதைகளில் பெண்களின் மன உணர்வுகளை மிகத் துல்லியமாக வெளிப்படுத்திய படைப்பாளர்களின் கு.ப.ரா. தனித்து விளங்கும் திறன் இக்கட்டுரையின்வழி தெளிவாகிறது.

———————-

கருவி நூல் :

  1. அ, சதீஷ், (ப.ஆ.) கு.ப.ரா. கதைகள், அடையாளம் வெளியீடு, சென்னை. பதி. 2008.

மதிப்பீடு

மனித உறவுகளின் நுட்பமான தருணங்களைத் தமது படைப்பின் வெளிப்பாடாகக் கொண்டிருந்தவர் கு.பா.ரா. ஆண், பெண் உறவுகளைப் பற்றி அதிகம் எழுதியவர். இவரின் தனபாக்கியத்தின் தொழில், குந்துமணி என்னும் இரு சிறுகதைகளில் பெண்களின் மன உணர்வுகள் எவ்வாறு சித்தரிக்கப்பட்டுள்ளது என்பதை மேற்கண்ட கட்டுரை ஆராய்ந்துள்ளது. கு.பா.ரா.வின் சமகால எழுத்தாளர்களின்  பெண் பற்றிய மனச்சித்தரிப்பிலிருந்து கு.பா.ரா.வின் பெண் பதிவுகள் எவ்வாறு தனித்துவம் பெறுகிறது என்று நோக்கியிருந்தால் இன்னும் அவரைப் புரிந்துகொள்ள வாய்ப்பாக அமைந்திருக்கும்.

கல்பனாசேக்கிழார்.


 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *