படக்கவிதைப் போட்டி 185-இன் முடிவுகள்

-மேகலா இராமமூர்த்தி

திருமிகு. நித்தி ஆனந்த் எடுத்திருக்கும்  இந்தப் படத்தை வல்லமை ஃபிளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார் திருமதி. சாந்தி மாரியப்பன். இவ்விருவருக்கும் என் நன்றி!

சின்னஞ்சிறு கைகள் அடுப்பெரிக்க விறகினைச் செருகிக் கொண்டிருந்தாலும், சிறுவனின் முகத்தில் தெரியும் நம்பிக்கைக் கீற்று, உலகம் போற்றும் உயர்ந்த மனிதனாய் வரும் வாய்ப்பு இவனுக்கு உண்டு என்பதைப் பறைசாற்றி நிற்கின்றது!

”வறுமை கண்டு அஞ்சாதே தம்பி
உன் திறமைதனை நீ என்றும் நம்பி
கற்றிடவே உயர்ந்திடும் உன் வாழ்வு!
விலகி ஓடிடுமே மிடிமையெனும் தாழ்வு!” என்று நானும் சிறுவனுக்கு நன்மொழி பகர்ந்து நகர்கின்றேன்.

இனி கவிஞர்களின் முறை…

பள்ளி செல்லத் தாமதமானாலும் பரவாயில்லை என்று நோயில் வீழ்ந்து பாயில் கிடக்கும் அன்னைக்கும், பசியில் துடித்துப் புரண்டழும் தம்பிக்கும் சேர்த்துச் சோறுபொங்கத் தலைப்படும் சிறுவனின் இரங்கத்தக்க நிலையை உருக்கமாய்த் தன் கவிதையில் வார்த்திருக்கின்றார் திரு. சி. ஜெயபாரதன்.

தாயிக்கு உதவடா!

நேற்று முதல்
தாயிக்கு நோய்!
வாய்ச் சண்டை நடக்கும்
வாடிக்கை யாய்!
தந்தை மதுக் கடையில்,
தவம் கிடப்பார் !
கும்பி கொதிக்கிறது!
தம்பி அழுகிறான்!
பசி மிகுந்து
தரையில் புரள்கிறான்!
பள்ளிக்கு நான்
போக வேண்டும்!
தேர்வு இன்றெனக்கு!
பாடம் கணக்கு!
புரியாத மனப் பிணக்கு!
யாருமில்லை
சொல்லித் தர எனக்கு!
தாய் வயிறு
நிரம்பட்டும் இன்றாவது!
தம்பி அழுகை
நிற்கட்டும்!
பள்ளிக்குச் செல்ல
தாமத
மாகட்டும்!

*****

காற்றுப்புகா அறையில் உறங்கி, கையகலக் கணினியில் கிறங்கி இதுவே வாழ்க்கை என எண்ணுவோருக்கு, ”விவசாயம் செய்து விளைந்ததைச் சமையல் செய்யும் நான் சாதனையும் செய்வேன்!” என்றுரைக்கும் பிஞ்சினைப் பெருமிதத்தோடு அறிமுகம் செய்கிறார் நாங்குநேரி திருமிகு. வாசஸ்ரீ.

……காற்று புகா அறையினிலே
கண்ணுறக்கம் கொண்டெழுந்து
காரில் சென்று
கல்வி பயின்று
கையகலக் கணினியிலே
கண்டதே வாழ்க்கையென
கதை பேசி வாழ்வோருக்கு
விவசாயம் செய்து
விளைந்ததைக் கூடி உண்டு
வாழும் வாழ்வைக் காட்ட
என் வீட்டுச் சமையலறையில்
எடுப்பாக நானமர்ந்தேன்
சமையலும் செய்வேன்
சாதனையும் படைப்பேன்.

இதே கவிஞர் தனது மற்றொரு கவிதையில், பல் மருத்துவம் பயில விரும்பும் பள்ளிமாணவனாய்ப் படத்திலுள்ள சிறுவனைச் சித்திரித்து, பாட்டியின் யோசனைப்படி சாம்பலிலே உப்பினையும் கற்பூரத்தையும் சேர்த்து அவன் செய்யும் அரிய பற்பொடியையும் நமக்கு அறியத் தருகின்றார்.

படத்தைப் பார்த்து பதைக்காதீர்
பள்ளி மாணவன் நான்
பல் மருத்துவர் நினைப்பால் தூங்காமல்
பரிதவித்த எனக்குப்
பாட்டி சொன்ன யோசனை
பல்லுக்குப் பலம் கொடுக்கப்
பழைமைப் பற்பொடி தயாரிப்பு
பண்ணை வீட்டுத் தொழுவத்தில்
பாட்டனின் வெந்நீர் அடுப்புப்
பசுஞ் சாணத்துச் சாம்பலுடன்
பாத்திரத்திலுள்ள உப்பும் வறுத்துப்
பொடித்த உமியையும் கற்பூரப்
பொடியையும் கலந்து எனது
பற்பொடி தயார்- இதைப்
படித்தவர்கள் வரலாம் எங்கள்
பண்ணை வீட்டுக்கு…
பற்பொடி இலவசம்!

*****

”ஏழைப் பெற்றோர், தன்னைப் படிக்கவைக்கப் படும் பாடறிந்து அவர்தம் பசிபோக்கப் பொறுப்போடு சமையல் செய்யும் உத்தமப் பையனிவன்” என்றுரைத்து நம்மை நெகிழ்த்துகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

உத்தமன்…

பிள்ளையைப் பள்ளிக் கனுப்பிடவே
பெற்றோர் சென்றனர் வயல்வேலை,
பள்ளி சென்ற பிள்ளையவன்
பாடம் படித்து முடிந்ததுமே,
எள்ளிப் பிறரெலாம் நகைத்தாலும்
ஏழைப் பெற்றோர் பசியாற
சுள்ளி பொறுக்கித் தீமூட்டி
சமையல் செய்வது சிறப்பன்றோ…!

*****

சின்னஞ்சிறு பிள்ளையின் சீரிய செயலைப் போற்றிப் பாவியற்றித் தந்திருக்கும் வலவர்களுக்கு என் பாராட்டுக்கள்!

இனி இவ்வாரத்தின் சிறந்த கவிதையாய்த் தெரிவாகியிருப்பது…

சாதாரணனல்ல சாதனையாளன்!

கலாமின் கனவுகளைக்
கலசமிட்டுக் கனிச்சோறு கடைந்திட,
திண்ணைப்பள்ளியும் அண்டிடா
வண்ணக் கனவுகளுடன்
எண்ணக் குவியலைக்
கன்னத்தில் தேக்கியபடி
மரத்தடிக் கொட்டகையில்
மண்டியிட்ட மாணவனே!
புகைமூட்டத்தின் நடுவே
மேகமூட்டத்தில் மிதந்து
பகைக் கூட்டம் கலைந்து
பன்மணிக்கூட்டம் பார்த்தொழுகி
போதிமர புத்தனானாயோ?
நின் அழகு முகத்தின்
சாந்தமும்
செம்பவளவாயின் புன்சிரிப்பும்
சான்று பகராதோ – நீ
சாதாரணனல்ல
சாதனையாளனென்று…!!!

”திண்ணைப் பள்ளியும் அண்டிடா வண்ணக் கனவுகளை எண்ணக் குவியலாய்த் தேக்கி, மரத்தடிக் கொட்டகையில் மண்டியிட்ட இவன் இவ்வையம் கண்டிரா புத்தனோ? வறுமையிலும் செம்மையாய்ப் புன்னகை சிந்தும் இவன் சாதரணன் அல்லன் சாதனையாளனே!” என இச்சிறுவனை வியந்தும் நயந்தும் பாப்புனைந்திருக்கும் முனைவர் மு. புஷ்பரெஜினாவை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டி மகிழ்கின்றேன். 

 

 

 

மேகலா இராமமூர்த்தி

மேகலா இராமமூர்த்தி

Share

About the Author

மேகலா இராமமூர்த்தி

has written 382 stories on this site.

One Comment on “படக்கவிதைப் போட்டி 185-இன் முடிவுகள்”

  • முனைவர். புஷ்ப ரெஜினா
    முனைவர் மு. புஷ்பரெஜினா wrote on 20 November, 2018, 21:52

    எனது கவிதையை தேர்ந்து, எனக்கு ஊக்கமளித்தமைக்கு நன்றி.

Write a Comment [மறுமொழி இடவும்]

Security Question: (* Solve this math to continue) *


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.