பழநி முருகன் கோவில்

திருமதி.ச.ஜெயந்திமாலா
வரலாற்றுத்துறை,
உதவிப்பேராசிரியர்,
அருள்மிகு பழனியாண்டவர்
மகளிர் கலைக்கல்லூரி,பழனி.

———————————–
தமிழகத்தில் உள்ள மலைக்கோவில்களில் பழநி முருகன் கோவிலும் ஒன்று. பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவில் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. முருகப்பெருமானின் அறுபடை வீடு களுள் மூன்றாவது திருத்தலம்- ‘ஆவினன் குடி’யாகிய பழநி. இந்தத் தலம், உடலின் உயிர்நாடியான மணிபூரகத்தை (இதயம்) குறிப்பது என்பர். குரா மரத்தடியில் முருகன், குரா வடிவேலனாக அகத்தியருக்கு தமிழை உபதேசித்த தலம் இது. வையாபுரி’ என்றும் பழநிக்கு ஒரு பெயர் உண்டு மலையடிவாரத்தில் மலையைச் சுற்றியுள்ள நகர்- ‘ஆவினன்குடி’ என்றும், மலை- பழநி மலை என்றும் அழைக்கப் பட்டன. தற்போது நகரம் மற்றும் மலையையும் சேர்த்தே ‘பழநி’ என்கின்றனர். ஒரு தலத்தில் இரு ஆலயங்கள் கொண்ட படை வீடு பழநி மட்டுமே. ‘பழனங்கள்’ (வயல்கள்) சூழ்ந்ததால், இந்தத் தலம் ‘பழநி’ எனப்பட்டது.

பழநியில் மலைக்கோயில் தவிர ஆவினன்குடி கோயில், பெருவுடையார்- பெரியநாயகி கோயில், மாரியம்மன், அங்காளம்மன், படிப்பாறைக் காளியம்மன் ஆகிய அம்மன் கோயில்களுடன், விநாயகர் கோயில்கள் ஐந்து மற்றும் வேணுகோபாலர், லட்சுமி நாராயணர், சங்கிலி பரமேஸ்வரர், அகோபில வரத ராஜ பெருமாள் ஆகிய கோயில்களும் உள்ளன. கொடைக்கானல் மலைக்கும் மேற்கு மலைத் தொடர்ச்சியில் இடம்பெற்றுள்ள வராக மலைக்கும் நடுவே அமைந்துள்ளது பழநி மலை. இது கடல் மட் டத்தில் இருந்து சுமார் 1,500 அடி உயரம் கொண்டது. பூமி மட்டத்திலிருந்து உயரம் 450 அடி. கோவில் அமைந்திருக்கும் மலையின் உயரம் 150 மீ. மொத்தம் 693 படிக்கட்டுகள் ஏறினால். மலையைச் சுற்றி 2.4 கி.மீ கிரிவலப்.பாதை உள்ளது. கொடைக்கானல்- குறிஞ்சி ஆண்டவர் கோயி லும், பழநி கோயிலும் நேர்க் கோட்டில் அமைந்து உள்ளன. குறிஞ்சி ஆண்டவர் கோயிலில் இருந்து பழநி மலையைக் காண முடியும்!

அருணகிரியார்

அருணகிரியார் அதிசயம் அநேகமுற்ற பழநி மலை’ என்று சிறப்பிக்கிறார் . இவர், பழநித் திருத்தலம் பற்றித் திருப்புகழில் 90 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். அவற்றில் பழநியை ‘ஆவினன்குடி’ என்றே குறிப்பிடுகிறார். மேலும் அவர், பழநி முருகனை ஞானமூர்த்தி, ஞானநாதா, ஞானாசிரியன், ஞானசொரூபன் என்றெல்லாம் அழைத்து மகிழ்கிறார். அருணகிரிநாதர் பழநி தண்டாயுதபாணியிடமிருந்து ஜப மாலை பெற்றார். இதை, ‘ஜப மாலை தந்த சற்குருநாதா திரு ஆவினன்குடி பெருமாளே’ என்ற திருப்புகழ் சொற்றொடரில் இருந்து அறியலாம்.

தல வரலாறு:

இந்தக் கோவிலின் வரலாறு ஞானப்பழத்தில் இருந்து ஆரம்பிக்கிறது. கலகம் பண்ணுவதற்கென்றே பிறந்தவர் நாரதர். ஞானப்பழத்தை எடுத்துக்கொண்டு கைலாச மலையில் இருக்கும் சிவபெருமானையும் பார்வதியையும் காண சென்றார். பழத்தைக் கொடுத்து இந்தப் பழத்தை உண்டால் அதிக ஞானம் பெறலாம் என்று கூறினார். மேலும் முழுப்பழத்தையும் ஒருவரே உண்ணவேண்டும் என்றும் விதி விதித்தார். சிவபெருமானோ தன் மகன்களான முருகனுக்கும், பிள்ளையாருக்கும் பகிர்ந்தளிக்க விரும்பினார். பின்னர்த் தன் மகன்கள் இருவரையும் அழைத்து உலகத்தை மூன்று முறை சுற்றி முதலில் வருபருக்கு ஞானப்பழம் பரிசு என்றார் சிவபெருமான். இதனைக் கேட்டு முருகன் தன் வாகனமான மயிலை எடுத்துக்கொண்டு உலகத்தைச் சுற்ற கிளம்ப, பிள்ளையாரோ தந்தையும் தாயுமே உலகம் என்று கூறி சிவபெருமானையும் பார்வதியையும் சுற்றி வந்து ஞானப்பழத்தை பெற்றுக்கொண்டார். உலகத்தை வலம் வந்து ஞானப்பழத்தை கேட்ட முருகன், நடந்தது அறிந்து, கோபமுற்று இந்த மலையில்வந்துதங்கிவிட்டார். சிவனும் பார்வதியும் இங்கு வந்து முருகனை சமாதானபடுத்தினர். ஞானப்பழமான உனக்கு எதற்கு இன்னொரு பழம் என்று கூறி சமாதானம் செய்தனர். முருகனை “பழம் நீ” என்றதால் இந்த இடம் பழநி எனப் பெயர் பெற்றது. மலை அடிவாரத்தில் திருஆவினன்குடி குழந்தை வேலாய்தசுவாமி கோவிலும் உள்ளது. இந்தக் கோவிலே அறுபடை வீடுகளில் மூன்றாவதாக் கருதப்படுவது.

அமைவிடம்
இதற்கும் ஒரு கதை உண்டு. அகஸ்திய மாமுனிவர் தன் இருப்பிடத்திற்குச் சிவகிரி, சக்திகிரி என்னும் இரண்டு மலைகளை எடுத்துச் செல்ல விரும்பினார். தன் சேவகனான இடும்பனிடம் இந்த மலைகளைத் தூக்கி வரச்சொன்னார். அவனும் காவடி போல் இரண்டு மலைகளையும் கம்பில் கட்டி தோளில் சுமந்து சென்றான். செல்லும் வழியில் தூக்கமுடியாமல் சோர்வுற்று மலையைக் கீழே வைத்தான். அச்சமயம் பார்த்து முருகன் ஞானப்பழம் கிடைக்காத கோபத்தில் சிவகிரி மலையின் மீது ஏற, இடும்பனால் மலையைத் தூக்க முடியவில்லை. கோபமுற்ற முருகன் இடும்பனை அழித்தார்.. பின்னர் இடும்பனை தன் பக்தனாக ஏற்றுக் கொண்டான் முருகன். இடும்பனைப் போல் காவடி சுமந்து தன்னை வழிபடுவருக்குச் சகல செளபாக்கியங்களும் உண்டாகும் என வரமளித்தான். இன்றும் மலை ஏறும் வழியில இடும்பனுக்குக் கோவில்உண்டு.

ஆவினன்குடி

‘சித்தன் வாழ்வென்று சொல்கிற ஊர் முன் காலத்து ஆவினன்குடி என்று பெயர் பெற்றிருந்தது!’ சேரன் செங்குட்டுவனின் தாத்தா வேளாவிக்கோமான் ஆட்சி செய்த பகுதி பழநி. இவன் வழியில் வந்தவன் வையாவி கோப்பெரும் பேகன். இவன் கடையெழு வள்ளல்களில் ஒருவன். ஆவியர் குல தலைவனான இவனது தலைநகராகத் திகழ்ந்ததால், பழநிக்கு ‘ஆவினன்குடி’ என்ற பெயர் வந்ததாம். அடிவாரக் கோயிலில் உள்ள முருகப் பெருமானை நக்கீரர் பாடியுள்ளார். இங்கு மயில் மீது அமர்ந்து காட்சி தருகிறார் முருகன். இதை ‘ஆதிகோயில்’ என்கிறார்கள்.

ஒரு முறை கோபம் கொண்ட திருமால், திருமகளைப் புறக்கணித்தார். தனது பதியை அடைய திருமகள், இங்குத் தவம் இருந்து பலன் பெற்றாள். விஸ்வாமித்திரர்- வசிஷ்டர் ஆகியோருக்கு இடையே நடந்த போரில் விஸ்வாமித்திரரது ஆயுதத்தை வென்றதால் அகம்பாவம் கொண்டது காமதேனு. இதனால் ஏற்பட்ட பாவம் தீர காமதேனு வழிபட்ட தலம் இது. ‘உயிர்கள் வாழ்வது என்னால்தான்!’ என்று கர்வம் கொண்ட சூரிய பகவானைச் சபித்தார் சிவபெருமான். சாபம் தீர இங்கு வந்து பூஜித்தான் சூரியன்.

சிவபெருமானுக்குத் தெரியாமல், தட்ச யாகத்தில் கலந்து கொண்டதால் ஈசனிடம் தண்டனை பெற்ற அக்னியும், வாயு பகவானும் இங்கு வந்து வழிபட்டுள்ளனர். இப்படித் திரு= லட்சுமி, ஆ= காமதேனு, இனன்= சூரியன், கு= பூமி, டி= அக்கினி- வாயுபகவான் ஆகியோர் தவமிருந்து பலன் பெற்றதால் பழநி திருஆவினன்குடி என்று ஆனது.
அகத்தியர், ஒளவையார், நக்கீரர், சிகண்டி முனிவர், அருணகிரிநாதர், கச்சியப்பர், பொய்யாமொழிப் புலவர், முருகம்மை, மாம்பழக் கவிச்சிங்க நாவலர், பகழிக் கூத்தர், சாது சாமிகள், பாம்பன் சாமிகள், வள்ளிமலை சுவாமிகள் உட்பட நூற்றுக்கு மேற்பட்டோர் பாடிய திருத்தலம் இது.

பழநி மலை
ஒரு முறை நாரதரை வாழ்த்தி அபூர்வ மாங்கனி ஒன்றைக் கொடுத்தார் பிரம்மன். அந்த ஞானப் பழத்துடன் ஈசனை தரிசிக்கச் சென்றார் நாரதர். அதைத் தம் மைந்தர்களுக்குத் தர விரும்பினார் ஈசன். ஆனால், பழத்தை ஒருவருக்கே வழங்க முடியும். இதற்காகக் கணபதிக்கும் கந்தனுக்கும் போட்டி வைக்கப்பட்டது. ‘யார் முதலில் உலகை வலம் வருகிறார்களோ அவருக்கே கனி!’’ என்றார் சிவ பெருமான்.‘பெற்றோரே உலகம்’ என்று தாய்- தந்தையரை வலம் வந்து விநாயகர் பழத்தைப் பெற்றுக் கொண்டார். மயில் வாகனத்தில் பயணித்துத் தாமதமாக வந்து சேர்ந்த முருகன், பழம் கிடைக்காததால் கோபித்துக் கொண்டு, கோவணத்துடன் தண்டாயுதபாணியாக, தென்திசையில் வந்து சேர்ந்த இடம் சிவகிரி. சிவபெருமானும் உமையவளும் அங்கு வந்து, ‘அடியாருக்கு ஞானம் அருளும் ஞானப்பழம் நீ’ என்று முருகனை சமாதானப் படுத்தினர். அதனால் முருகன் வசிக்கும் மலை, ‘பழம் நீ’ என்று ஆகி, பிறகு ‘பழநி’ என்று மருவியது என்பர். கருவறையின் கிழக்குப் பகுதி மாடத்தில் ஊது வத்தி தூபம் காட்டி, இஸ்லாமியரும் ‘பழநி பாபா’ என ஓதி வழிபடுகின்றனர்.
காலையில் முருகனை ஆண்டிக் கோலத்தில் தரிசிப்போர், மாலையில் ராஜ அலங்காரத்தையும் தரிசிக்க வேண்டும் என்பது ஐதீகம். இதனால் குடும்பத்தில் சுப நிகழ்வு நடக்கும்.

கிரிவலப்பாதை

பழநியின் கிரிவலப் பாதை சுமார் இரண்டேகால் கி.மீ. தூரம் உள்ளது. கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டுள்ளது. மலையின் நான்கு திசைகளிலும் மயில் மண்டபமும், அவற்றில் கல்லால் ஆன பெரிய மயில் உருவங்களும் உள்ளன.
கிரிவலப் பாதையில் மதுரைவீரன் சுவாமி, ஐம்முக விநாயகர் கோயில், சந்நியாசியப்பன் கோயில், அழகு நாச்சியப்பன் ஆலயம் ஆகியன உள்ளன. தவிர நந்தவனங்கள், திருக்கோயிலின் ஏழை மாணவர் இல்லம், நாகஸ்வர- தவில் இசைப்பள்ளி, சண்முக விலாசம் (அன்னதான சமாஜம்), நந்தனார் விடுதி ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.
697 படிகள் கொண்டது பழநி மலை. மலைக்கோயிலை அடைய நான்கு தடங்கள் உண்டு. அவை: படிக்கட்டுப் பாதை, யானைப் பாதை, இழுவை ரயில் பாதை மற்றும் ரோப் கார் பாதை.
யானைப் பாதையின் தொடக்கத்தில் பதினெட்டாம்படி கருப்பசாமி கோயில் உள்ளது. முருகனின் காவல் தெய்வமான இவரை வணங்கி விட்டே பக்தர்கள் மலையேறத் தொடங்குவர். வண்ண சரபம் தண்டபாணி சுவாமிகள் இவரை வணங்கிச் சிறப்பித்துள்ளார்.

இழுவை ரயில்

இந்தியாவிலேயே முதன் முதலாகப் பழநி ஆலயத்தில் இழுவை ரயில் அறிமுகமானது. ஆண்டு 1966. இதற்குக் காரணமானவர் காமராஜரது அமைச் சரவையில் அமைச்சராக இருந்த பக்தவச்சலம். இரண்டாம் வழித்தடம் 1981-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இதன் இரு பெட்டிகளில் 32 பேர் பயணிக்கலாம். மலைக்குச் செல்ல சுமார் 8 நிமிடங்கள் ஆகின்றன. இந்த இழுவை ரயில்கள் காலை 5 முதல் இரவு 9 மணி வரை இயங்குகின்றன. விசேஷ காலங்களில் காலை 4 மணி முதல் இயங்கும்.

திரு மஞ்சனப் பாதை’

முருகனுக்கு அபிஷேகம் செய்ய நீர் மற்றும் பூஜைப் பொருட்கள் எடுத்து வருவதற்காக ‘திரு மஞ்சனப் பாதை’ என்பது மலையின் பின்புறம் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அந்த வழியைப் பயன்படுத்துவதில்லை.

தீர்த்தங்கள்

பழநி அடிவாரத்தில் உள்ள தீர்த்தங்கள் மூன்று. அவை: வையாபுரிக் குளம், சண்முக நதி, சரவணப் பொய்கை. சரவணப் பொய்கை ஒரு காலத்தில் கல் கிணறாக இருந்ததாம். சட்டிசாமி எனும் துறவி பிச்சை எடுத்த பணத்தால் அதைப் புதுப்பித்தாராம். பழநி மலையில் ஆசிமுகத் தீர்த்தம், தேவ தீர்த்தம், அமுத தீர்த்தம், ஞானத் தீர்த்தம், பிரம்ம தீர்த் தம் ஆகிய புண்ணியத் தீர்த்தங்கள் உள்ளன.

மரபு.

புனித நீராடியபின் பாத விநாயகர், குழந்தை வேலாயுத சுவாமி, பெரிய நாயகி அம்மன்- பெரு வுடையார் கோயில்கள் மற்றும் கிரிவலப் பாதையில் உள்ள கோயில்களை வழிபட்ட பின்னர் மலை ஏறி தண்டாயுதபாணி சுவாமியை வணங்க வேண்டும் என்பது மரபு.

சிற்பங்கள்

மலையடிவாரத்தில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் மண்டபத்தில் சூரசம்ஹாரம், சுப்ரமண்யர்- தேவசேனை திருமணக் காட்சிகள், காளத்திநாதருக்குக் கண்களை அப்பும் கண்ணப்பன் மற்றும் வீரபாகு தேவர் ஆகியோரது சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன.

மூலவர்சிற்பம்

இங்கு இருக்கும் மூலவர் சிலை பதினெட்டு சித்தர்களுள் ஒருவரான போகர் என்பவரால் உருவாக்கப்பட்டது. 4448 அறிய மூலிகைகளைக் கொண்டு இவர் ஒன்பது விதமான நஞ்சு பொருட்களை உருவாக்கினார். பின்னர் இந்த ஒன்பது விதமான நஞ்சு பொருட்களைக் கலந்து நவபாஷானம் என்னும் மூலிகையை உருவாக்கினார். பல்வேறு நோய்களுக்கு இந்த மூலிகையைப் பயன்படுத்தலாம் என்றும் கண்டறிந்தார். அப்படிச் சிறப்பு வாய்ந்த நவபாஷாணத்தைக் கொண்டு முருகன் சிலையை அவர் உருவாக்கினார். அவர் உருவாக்கிய அந்தச் சிலையே தற்போது பழநி முருகனாக நமக்குக் காட்சியளிக்கிறது. பஞ்சாமிர்தத்தாலும், பாலாலும் அபிஷேகம் செய்தால் மருந்து வெளிவரும் என்பதை உணர்ந்து, தினமும் சிலைக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு வந்தார் போகர். தன்னுடைய சமாதியை பழநி கோவிலிலேயே அமைத்துக்கொண்டார்.

சோழர்கள் காலத்தைச் சேர்ந்த சோமஸ்கந்தனின் வடிவ அமைப்புக்கள்

சோழர்கள் காலத்தைச் சேர்ந்த பித்தளை உலோகங்களில் செதுக்கப்பட்டு உள்ள சோமஸ்கந்தனின் வடிவ அமைப்புக்கள் அவை எந்த அளவு கலை நுணுக்கமாகச் செய்யப்பட்டு உள்ளன என்பதற்கு எடுத்துக் காட்டாக உள்ளன. அவற்றில் உள்ள வடிவமைப்புக்கள் ஸ்கந்தனை நின்ற நிலையிலும், அமர்ந்த நிலையிலும் மற்றும் நடனமாடும் நிலையிலும் காட்டுகின்றன. சோழர்கள் காலத்து ஆலயங்களில் மிகச் சிறப்பானது பல்லவநீஸ்வரத்தில் உள்ள பல்லவநீஸ்வர ஸ்வாமி ஆகும். அந்தப் பெயரே அது பல்லவ மன்னர்களின் காலத்து சிலை என்பதைக் காட்டுகின்றது.
பல்லவன் காலம் முதல் சோழர்கள் காலம் வரை பித்தளை உலோகத்தினால் செய்யப்பட்டு உள்ள வடிவமைப்புக்கள் ஒன்பதாம் நூற்றாண்டை சேர்ந்த சோழர்களின் கலை வண்ணத்தில் உள்ளது. அவைகளில் சிவன் மற்றும் பார்வதிக்கு இடையே அமர்ந்து உள்ள முருகன் ஏதோ யோசனையில் ஆழ்ந்தபடி தன்னை மறந்த நிலையில் காணப்படுகிறார். அது பல்லவ காலத்திய சிலை வடிவமைப்புடன் ஒத்து உள்ளது. (சிவராமமூர்த்தி 1963 -58). ஸ்கந்தனின் காதுகளைப் ‘பத்திரக் குண்டலங்கள்’ அலங்கரிக்கின்றன. நெற்றியில் உள்ள அணிகலன்கள் ஒவ்வொருவருடைய கவனத்தையும் இழுக்கும் வகையில் அமைந்து உள்ளன. வலது கையில் தாமரைப் பூவை வைத்து இருக்க இடது கை வரத முத்திரை தோற்றத்தை தந்தபடி உள்ளது.கழுத்தில் காணப்படும் அணிகலன்கள் அற்புதமான வடிவமைப்புடன் துல்லியமான கலை நுணுக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்து உள்ளன. கண்கள் மேல்நோக்கிப் பார்த்தவண்ணம் இருக்கக் கொயுரைகள், தண்டைகள் (கொலுசு), மற்றும் கணுக்காலில் உள்ள அணிகலன்களும் கலை நயம் மிகுந்து கம்பீரமாகக் காட்சி தரும் வகையில் வடிவமைகபட்டு உள்ளன

950 ஆம் நூற்றாண்டை சார்ந்த திருத்துறைப் பூண்டியில் உள்ள வர்தமானஸ்வரர் ஆலயத்தில் உள்ள சோமாஸ்கந்த சிலையில் உள்ள ஸ்கந்தன் தனது வலது காலை மடக்கி வைத்துக் கொண்டபடி காட்சி தருகிறார். சன்னவீராவையும் (ஒருவித அணிகலன்), பூமாலையையும் கழுத்தில் அணிந்து கொண்டு ஒரு கையால் கடக முத்திரை சின்னத்தையும், மறு கையால் வரத முத்திரை சின்னத்தையும் காட்டியவாறு உள்ளார்

சிவபுராணத்தில் காணப்படும் சோமாஸ்கந்தன் பத்தாம் நூற்றாண்டின் மத்திய பகுதியைச் சேர்ந்தவர். அதில் உள்ள ஸ்கந்தன் உண்மையிலேயேயே வைரம் போன்று ஜொலித்தவாறு அற்புதமாகக் காட்சி தருகிறார். அதில் உள்ள வடிவமைப்பு மிகவும் நுண்ணியமாகச் செய்யப்பட்டு உள்ளன. ஒவ்வொரு அங்கத்திலும் நேர்த்தியான கலை நயம் வெளிப்படுகின்றது. மொத்தத்தில் நடனமாடும் வடிவில் அமைந்து உள்ள மூர்த்தியின் வடிவம் சொல்ல முடியாத அளவு அழகு சொட்டும் அதி அற்புதமான வடிவமைப்பில் செய்யப்பட்டு உள்ளது. திருவேங்காட்டில் உள்ள ஸ்வேதனாரீஸ்வரர் ஆலயத்தில் உள்ள சோமாஸ்கந்த சிலையில் உள்ள ஸ்கந்தனின் வடிவம் மிகவும் வசீகரமாக உள்ளது. நின்ற நிலையில் படைக்கப்பட்டுள்ள அதன் தலையில் காணப்ப்படும் கரண்ட மகுடமும், கிண்கிணிகள் அடங்கிய ஒட்டியாணமும் நவநாகரீகமான தோற்றத்தில் மனதை அல்லும் விதத்தில் செய்யப்பட்டு உள்ளன

தஞ்சாவூர் நீடூரில் உள்ள சோமாஸ்கந்த சிலை 11 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது. குழந்தை முருகனின் அழகு அதில் விவரிக்கவே முடியாத அளவு கலை நயத்துடனும் கம்பீரமான தோற்றத்துடனும் அமைக்கப்பட்டு இருக்கக் கரண்ட மகுடம், காதணிகள், நெக்லேஸ், சன்னவீரா, ஒட்டியாணத்தில் இருந்து இருபுறமும் தொங்கும்குஞ்சலங்கள், பாதசரச்ஸ் போன்ற அணிகலன்கள் அதன் அழகிற்கு இன்னும் அழகு சேர்க்கும் விதத்தில் அமைந்து உள்ளன

12 ஆம் நூற்றாண்டை சேர்ந்த வட்டிகுவாரன் கோவிலில் உள்ள சோமாஸ்கந்தன் தனது வலது காலை தூக்கி வைத்தபடியும், இடது கையை நீட்டி வைத்துக் கொண்டு நடனமாடும் நிலையில் காணப்படுகிறார். வலது கையில் மலர் இருக்கக் கேச மகுட அமைப்பில்தலை தலைமுடி காணப்படுகிறது

12 ஆம் நூற்றாண்டை சேர்ந்த தஞ்சாவூர் வெல்லூர் எய்ருவரை ஆலயத்தில் உள்ள சோமாஸ்கந்தன் சிலையில் ஸ்கந்தனின் வலது கை அபாய முத்திரை காட்டியவண்ணம் நீண்டு இருக்க இடது கை வரதக் கோலத்தைக் காட்டும் அமைப்பிலும் வடிவமைக்கப்பட்டு உள்ளன. விக்டோரியா அருங்காட்சியகத்தில் உள்ள 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்த சோமஸ்கந்தனின் ஸ்கந்த வடிவம் சமபங்க கோலத்தில் கரங்களில் மலர்களை ஏந்தியவண்ணம் காட்சி தரும் அமைப்பில் உள்ளது. அந்தக் கலைவண்ணம் சிறந்து விளங்கும் வகையில் அமைந்து உள்ளது

பங்கால் ஆலயத்தில் உள்ள சோமஸ்கந்தனின் சிலையில் ஸ்கந்தனின் இரண்டு கரங்களும் நீண்டு இருக்க இடது கால் நேராகவும், வலது கால் சற்றே முன் நோக்கி வளைந்து உள்ள நிலையிலும் காணப்படுகின்றது

தில்லையாடி சோமஸ்கந்தனின் சிலையில் ஸ்கந்தனின் கைகளில் மலர்கள் அதே 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்த குன்னான்டார் ஆலயத்தில் உள்ள சோமஸ்கந்தனின் சிலையில் அவருடைய கரங்களில் மலர்கள் காணப்படுகின்றன. தலையைச் சடைமுடி அலங்கரிக்கின்றது ராமனன்தீஸ்வரா ஆலயத்தில் உள்ள சோமஸ்கந்தனின் சிலையில் வலது கையில் மலர் இருக்க இடது கை கீழ் நோக்கி நீண்டு உள்ளது. திருப்பனையூர் சௌந்தரீஸ்வரர் ஆலயம் மற்றும் கொடவாசல் கோணீஸ்வாரர் ஆலயத்தில் உள்ள சோமஸ்கந்தனின் சிலையில் உள்ள ஸ்கந்தன் பத்மாசனக் காட்சியில் அமர்ந்து கொண்டு கைகளில் மலர்களை ஏந்தியபடி உள்ளார். திருவல்லிமலை ஆலயத்தில் காணப்படும் முருக வித்தியாசமான கோலத்தில் உள்ளார். வலது கை காடாக முத்திரையைக் காட்டியபடியும் இடது கை மேலே தூக்கியபடியும் உள்ளது. வலது கால் எதோ யுத்தத்திற்குக் கிளம்புவர் போல அமைந்து இருக்கக் காதுகளைப் பத்திர குண்டலங்கள் அலங்கரிக்கின்றன.

பாண்டியர் காலத்துச் சிலைகளில் மிக அற்புதமானவை திருப்பரம்குன்றம் மற்றும் திருப்பாக்கலி ஆலயங்களில் உள்ளன (ஏகாம்பரநாதன் 1984 -78).

விஜயநகரக் காலத்திலும் நிறையப் பித்தளை உலோகத்திலான சிலைகள் செய்யப்பட்டு உள்ளன. AD 1913 ஆம் ஆண்டு நெல்லூரில் கிடைத்த சிற்பத்தின் கலை நயம் அது விஜயநகரக் காலத்தை ஒட்டியது என்பதை நினைவுபடுத்தியது. (கங்கோலி 1915 – 125). அதில் ஸ்கந்தன் தன் கரங்களில் மலர்களை ஏந்தியவண்ணம் நின்ற கோலத்தில் காட்சி தருகின்றார்

ஹோசூரில் உள்ள சிற்பத்தில் ஸ்கந்தன் மாடு ஒன்றின் மீது சாய்ந்து நின்றபடி கடுரா தோற்றத்தை தந்தபடி இருக்கின்றார். விஜயநகரச் சிற்பங்களில் உள்ள கரண்ட மகுடம் அதிக நீளமாக உள்ளது. ஆபரணங்களும் அதிகமாகவே உள்ளது. உதயாபாளையம் கொலுமூர் ஆலயத்தில் உள்ள சோமாஸ்கந்தன் சிலையில் உள்ள ஸ்கந்தனின் தலை விரிந்த கோலத்தில் உள்ளது. ஆனால் மாலைகளும் காதணிகளும் அற்புதமான தோற்றம் தரும் வகையில் செதுக்கப்பட்டு உள்ளன

கல்லிடைக் குறிச்சி சோமாந்தர் கோவிலில் உள்ள ஸ்கந்தன் சிலையில் அவர் முன்னால் தெரியும்படி இரண்டு கால்களையும் ஒரே மாதிரியாக வைத்துக் கொண்டு உள்ளார். திருக்குரலத்தில் உள்ள குரலனாதஸ்வாமின் ஆலயத்தில் உள்ள ஸ்கந்தன் இடது காலை மடித்து ஆசனம் போல வைத்து இருந்தும் வலது காலை குட்குடிகாசன கோலத்தில் வைத்தபடி இருக்கத் தலை அலங்காரம் குரிதமுகுடா தோற்றத்தில் செய்யப்பட்டு உள்ளது

கல்வெட்டுக்களில் சோமாந்தர்

சலுவான்குப்பத்தில் உள்ள அதிரானகண்டா ஆலயத்தில் உள்ள கல்வெட்டுக்களில் சிவனைப் பசுபதி என்றும் பார்வதியை மலைமகள் என்றும் ஸ்கந்தனை குஹா என்றும் கூறப்பட்டு உள்ளது. ராரராஜ சோழன் I னின் உமா ஸ்கந்த சாஹித்தியத்திலும் இவ்வாறே கூறப்பட்டு உள்ளது

மயில் மண்டபம்

மயில் மண்டபத்தில் கூத்தாடும் பிள்ளையாரை வணங்கி தொட்டியில் சிதறு தேங்காய் அடிக்கலாம். தீப ஸ்தம்பம் மற்றும் வேல் கொடியுடன் ராஜ கோபுரம் தொழுது, தல விநாயகரின் முன் தோப்புக்கரணமிட்டு விட்டுச் செல்ல வேண்டும்
மயில் மண்ட பத்திலிருந்து படியேற வேண்டும். வழியில் களைப்பாற மண்டபங்களும், விநாயகர், வள்ளி, இடும்பன் ஆகியோரது சந்நிதிகளும் உள்ளன. யானைப் பாதையில் தல வரலாற்றுச் சிற்பங்களுடன் வள்ளியைச் சோதிக்க வேடனாக வந்த முருகனின் திருவுருவங்களும், வள்ளியம்மன் சுனையும் உள்ளன.

பழநி மலைக் கோயில் அமைப்பு

மலைக் கோயில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. ராஜ கோபுரமும், இரு புறமும் நாயக்கர் மண்டபங்களும், 42 கல் தூண்கள் கொண்ட பாரவேல் மண்டபமும் உள்ளன. கருவறை மீது தங்க விமானம் காட்சியளிக்கிறது.

கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் பிரதான கோயிலை, சேர மன்னன் சேரமான் பெருமாள் கட்டியதுடன், தினசரி பூஜை மற்றும் விழாக்கள் கொண்டாட மானியங்களும் அளித்துள்ளான். முருகன் சந்நிதி தெற்குச் சுவரின் வெளிப் புறம் குதிரை மீது கம்பீரமாகக் காட்சியளிக்கும் சேரமானின் சிற்பம் இடம்பெற்றுள்ளது.

பிராகாரங்கள்

பழநி திருக்கோயிலில் இரண்டு பிராகாரங்கள் உள்ளன. மலைப் பாதை வழியாக வருவோர், 2- வது பிராகாரத்தை அடைவர். இங்கிருந்து கோயிலுக்குச் செல்லும் வழியில் சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய மணிக்கட்டு மண்டபம் உள்ளது. இங்கு வல்லப விநாயகர் சந்நிதி, கொடிமரம், அக்னி குண்டம், தங்க ரத மண்டபம் ஆகியவை உள்ளன.

முதல் பிராகாரம், பாரவேல் மண்டபத்திலிருந்து கோயிலைச் சுற்றிச் செல்கிறது. இதன் வட பாகத்தில் மலைக்கொழுந்தீஸ்வரர், நவவீரர் ஆகியோர் சந்நிதி. மலைக்கொழுந்தீஸ்வரர் சந்நிதியின் முன்புறத் தூண் இரண்டும் ரத வடிவில் அமைந்துள்ளன இதன் தென்கிழக்கில் போகர் சந்நிதி உள்ளது. இங்கு அவரால் பூஜிக்கப்பட்ட புவனேஸ்வரியம்மன் மற்றும் மரகத லிங்கம் ஆகியவை உள்ளன. இங்குள்ள சுரங்கப் பாதை, ஸ்ரீதண்டாயுதபாணியின் திருவடி வரை செல்கிறது என்றும், போகர் இறுதியாக இதில் நுழைந்து தண்டாயுதபாணியின் திருவடியில் ஐக்கியமானார் என்றும் கூறப்படுகிறது.

நவரங்க மண்டபம்

நவரங்க மண்டபம் அருகே உலோகத்தாலான சேவற்கொடி உள்ளது. இதன் மீது ஒரு சேவல் அடிக்கடி வந்து அமர்ந்து கூவுவது பழநியின் சிறப்புகளுள் ஒன்று. இதன் நிழலில் அமர்ந்து தியானிப்பது பக்தர்களது வழக்கம். இந்த மண்டபத்தில் சண்முகருக்கும், ஞானத் தண்டாயுதபாணியின் உற்சவ மூர்த்தியான சின்னக் குமாரருக்கும் தனித் தனிச் சந்நிதிகள் உள்ளன. இதை அடுத்து அர்த்த மண்டபம்; கர்ப்பக்கிரகம். கர்ப்பக் கிரகச் சுவர்களில் கல்வெட்டுகள் உள்ளன.

மாக்கல்

பழநியாண்டவர் முன்பாக ‘மாக்கல்’ எனப்படும் பெரிய கல் ஒன்று உள்ளது. இது, பள்ளியறைக்கு எழுந்தருளும் முருகனின் திருவடியை (ஸ்ரீபாதம்) தாங்கும் மேடையாகக் கருதப்படுகிறது.

பிரம்மன் விக்கிரகம்.

இங்குள்ள மற்றொரு சிறப்புப் பிரம்மன் விக்கிரகம். இந்தப் பிரம்மன் அம்பு- வில்லோடு வேடுவ வடிவத்தில் காணப்படுகிறார். ஒரு முறை பிரம்மா, தானே முதன்மையானவர் என ஆணவம் கொண்டார். இதனால் சினம் கொண்ட ஸ்ரீருத்ரன், வேடுவனாக, பிறக்கும்படி பிரம்மனுக்குச் சாபமிட்டார். தன் தந்தை பிரம்மனுக்குச் சாப விமோசனம் தரும்படி முருகனைப் பிரார்த்தித்துக் கொண்டார் நாரதர். பிரம்மன் தவறை உணர்ந்து இங்கு வந்து முருகனை வழிபட்டு சாப நிவர்த்தி அடைந்தார்.

சனீஸ்வர பகவான்

திருநள்ளாறு சனி பகவானைப் போன்றே இங்குள்ள சனீஸ்வர பகவானும் சிறப்பானவர். திருவாவினன்குடி வந்து தன்னை வழிபட்டால், சனியால் ஏற்படும் தொல்லைகள் தீரும் என்று நிடத நாட்டு அரசன் நித்தியநாதனுக்கு வரம் தந்தார் முருகப் பெருமான். எனவே, சனி தோஷ பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது பழநி. அங்காரகனான செவ்வாயும், பழநி முருகனை வழிபட்டு நலம் பெற்றான் என்கிறது ஸ்தல புராணம் .

ஸ்தல விருட்சங்கள்

தண்டாயுதபாணிக்கு கடம்ப மரமும் திரு ஆவினன்குடி முருகனுக்கு நெல்லி மரமும் ஸ்தல விருட்சங்கள்.

நவ பாஷாணங்கள்

மலைக்கோயில் கருவறையில் வலக் கையில் தண்டாயுதம் ஏந்தி இடக் கையை இடையில் அமர்த்தி, ஞானத் தண்டாயுதபாணியாக மேற்கு நோக்கி கோவணக் கோலத்தில் காட்சி தருகிறார் ஸ்கந்த வடிவமான இது, போகர் எனும் சித்தரால் நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டது. பாதரசம், மதார்சிஸ், தானகம், லிங்கம், கந்தகம், வீரம், பூரம், வெள்ளை, மனோசிலை ஆகியவை நவ பாஷாணங்கள். திருமுருக பாஷாணம், கார்முகில் பாஷாணம், இந்திர கோப பாஷாணம், குங்கும பாஷாணம், இலவணப் பாஷாணம், பவளப் புற்றுப் பாஷாணம், கௌரி பாஷாணம், ரத்த பாஷாணம், அஞ்சன பாஷாணம் ஆகியவையே நவபாஷாணங்கள் என்றும் கூறுவதுண்டு. சாதி லிங்கம், மனோசிலை, காந்தம், தாரம், கெந்தி, ரச கற்பூரம், வெள்ளை பாஷாணம், கௌரி பாஷாணம், தொட்டி பாஷாணம் ஆகியவையும் நவபாஷாணங்கள் எனப்படுகின்றன. நவபாஷாணக் கலவையைக் கல்லாக்குவது, சித்து வேலை. இதை அறிந்தவர் அகத்தியர். அவரிடம் இருந்து கற்றவர் போகர் இந்த விக்கிரகம் காற்று, நீர், எண்ணெய், தேன், நெய் ஆகியவற்றால் கரையாது. நெருப்பால் பாதிப் படையாது. தீராத நோய்களையும் தீர்த்து ஆயுளை அதிகரிக்கச் செய்யும் வல்லமை நவபாஷாணத்துக்கு உண்டு. நவபாஷாணத்தினாலான மூலவர் விக்கிரகத்தை அபிஷேகிக்கும்போது மேலிருந்து கீழாகவே தேய்ப்பர். ஏனெனில், இந்த விக்கிரகத்தின் மேற்பரப்பு கீழ்நோக்கிய நிலையில் செதில் செதிலாக உள்ளதே காரணம். மேல் நோக்கித் தேய்த்தால் கைகள் ரணமாகும்.

போகர்

போகரின் சீடர் புலிப்பாணிச் சித்தரும், அவரது வழிவந்த பண்டாரப் பெருமக்களும் தண்டாயுத பாணியைப் பராமரித்து வந்தனர். போகரின் உபாசனா தெய்வமான புவனேஸ்வரியின் அறிவுரைப்படி போகர், பழநி மலையில் தவம் இருந்தார். அவரது தவத்துக்கு இரங்கிய பழநி ஆண்டவர், தன்னைப் பிரதிஷ்டை செய்யும் முறை மற்றும் வழிபாடுகள் குறித்துச் சொல்லி மறைந்தார். அதன்படி தண்டபாணி வடிவை உருவாக்கி ஆகம விதிப்படி கர்ப்பக்கிரகத்துக்குள் பிரதிஷ்டை செய்தார் போகர். போகருக்கு பழநி கோயிலில் தனிச் சந்நிதி உள்ளது. போகரின் சீடர் புலி பாணி முனிவருக்கு ஒரு மடம் உள்ளது. இவர் சந்ததியினருக்குக் கோயில் பூஜை செய்யும் உரிமையும், விஜய தசமி அன்று அம்பு போடும் உரிமையும் உள்ளது.ஆலயத்தின் தென்மேற்கு மூலையில் போகரது சமாதி உள்ளது. அதில் அவர் வழிபட்டதாகக் கருதப்படும் புவனேஸ்வரியின் திருவுருவமும், மந்திரச் சக்கரங்களும், மரகத லிங்கமும் உள்ளன. இவற்றுக்குத் தினசரி வழிபாடுகள் நடைபெறுகின்றன.

பிணிகள் நீங்கும் பிரசாதமாகச் சந்தனம்

தினமும் இரவில் முருகப்பெருமான் மேனி முழுவதும் சந்தனம் பூசுகின்றனர். மறுநாள் காலையில் இது பிரசாதமாகப் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்தச் சந்தனத்தைத் தொடர்ந்து 48 நாட்கள் அருந்தி வந்தால், பிணிகள் நீங்கும் என்பது ஐதீகம். இவ்வாறு இரவில் திருக்காப்பிட்ட பின், மறு நாள் காலையில் பார்க்கும்போது இறைவனின் மேனி வியர்த்திருக்கும். அதைத் துணியால் ஒற்றி எடுத்துத் தீர்த்தமாக வழங்குகின்றனர்.

தண்டாயுதபாணி அலங்காரம்.

தண்டாயுதபாணி, மொட்டை அடித்த ஆண்டி அல்ல. அபிஷேகத்தின்போது கவனித்தால், அவர் சடைமுடியுடன் காட்சி தருவதைக் காணலாம்.காலை பூஜையின்போது தண்டாயுதபாணி ஈஸ்வரனை வழிபடுவதாக ஐதீகம். அப்போது காவி உடையில் வைதீக கோலத்தில் தண்டாயுதபாணியை அலங்கரிப்பார்கள்.

காலச் சந்தியில் குழந்தை வடிவ திருக்கோலம். உச்சி காலத்தில் கிரீடத்தோடு கூடிய வைதீக அலங்காரம். சாயரட்சையில் ராஜ அலங்காரம். ராக்காலத்தில் முதிய வடிவம்.

மூல விக்கிரகத்துக்குச் செய்யப்படும் தேன் மற்றும் எலுமிச்சைச் சாறு அபிஷேகம் சிறப்பான ஒன்று. ஒவ்வொரு அபிஷேகத்துக்குப் பிறகும் தண்டாயுதபாணி வெவ்வேறு அலங்காரங்களில் காட்சி தருவார். அவை: ராஜ அலங்காரம், வேடன், சந்தனக் காப்பு, பாலசுப்பிரமணியர், விபூதி அதாவது ஆண்டிக் கோலம். ஒரு காலத்தில் செய்து வந்த பெண் அலங்காரம் தற்போது செய்யப்படுவது இல்லை.

மூலவருக்கு அருகில் சிறிய பேழை ஒன்று உள்ளது. அதில் சாளக்கிராம ஸ்படிக லிங்க ரூபத்தில் சிவபெருமானும், உமாதேவியும் இருக்கின்றனர். இவர்களைத் தண்டாயுத பாணி பூஜிப்பதாக ஐதீகம்.

பல்லக்கு

இங்குப் பள்ளியறை உற்சவம் விசேஷம். அப்போது வெள்ளிப் பல்லக்கு ஒன்று சந்நிதிக்கு வருகிறது. ஓதுவார்களும், கட்டிய காரர்களும் இறைவனின் புகழ் பாட மூலஸ்தானத்திலிருந்து சுவாமி பாதுகைகள் பல்லக்கில் வைக்கப்பட்டு ஊர்வலமாக வருகிறது. (வெள்ளி, திங்கள் மற்றும் கிருத்திகை ஆகிய நாட்களில் தங்கப் பல்லக்கு வரும்) அப்போது, கொப்பரைத் தேங்காய்- ஏலக்காய்- சர்க்கரை கலந்த பிரசாதம் வழங்கப்படுகிறது. பிறகு பல்லக்கு பள்ளியறைக்கு வந்து சேரும். அங்குப் பாதுகைகள், பல்லக்கில் இருந்து தொட்டில் போன்ற மஞ்சத்துக்கு மாற்றப்படுகின்றன. கடைசியாக அன்றைய வரவு-செலவு கணக்குகளைப் படித்துக் காட்டுவர். இறுதியில் நடை சாத்தப்படுகிறது.

காவடி பிரார்த்தனை

பழநியில் பக்தர்களது காவடி பிரார்த்தனை பிரசித்,தம். கயிலாயத்தில் இருந்த சிவகிரி, சக்திகிரி ஆகிய மலைகளை அகத்தியருக்குத் தந்தருளினார் இறைவன். அகத்தியரின் கட்டளைப்படி இந்த மலைகளை இடும்பன் என்பவன் பொதிகைக்குத் தூக்கிச் சென்றான். ஓய்வுக்காக ஓரிடத்தில் அவற்றை இறக்கி வைத்து விட்டு மீண்டும் எடுக்க முற்பட்டபோது, முடியவில்லை. காரணம் சிவகிரி மீது ஏறி நின்ற ஒரு சிறுவன். அவனுடன் போரிட்டு மாண்டான் இடும்பன். சிறுவனே முருகப் பெருமான் என்று உணர்ந்த இடும்பனின் மனைவி தன் கணவனை உயிர்ப்பிக்குமாறு முருகனிடம் வேண்டினாள். முருகன் அவ்வாறே அருளியதுடன் இடும்பனை தன் காவல் தெய்வமாக்கினார். அவனது விருப்பத்தின் படி பழநிக்குக் காவடி தூக்கி வரும் பக்தர்களின் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதாக வரமும் தந்தார். திருவிழா காலங்களில் பக்தர்கள்- தங்கக் காவடி, வெள்ளிக் காவடி, பால் காவடி, சந்தனக் காவடி உட்படப் பல்வேறு வகையான காவடிகளை எடுத்து வந்து ஸ்ரீதண்டாயுதபாணி சுவாமிக்கு நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர்.

பஞ்சாமிர்தம்.

பழநியின் தனிச்சிறப்புப் பஞ்சாமிர்தம். மலை வாழைப்பழம், நெய், தேன், நாட்டுச் சர்க்கரை, கற்கண்டு ஆகியவற்றின் கலவை இது. இதைத் தண்டாயுதபாணிக்கு அபிஷேகம் செய்யும்போது பாஷாண சக்தியால் மருத்துவக் குணம் பெறுகிறது.

ராமப்ப ஐயர்

15- ஆம் நூற்றாண்டில் மதுரையைத் திருமலை நாயக்கர் ஆட்சி செய்த காலம். அப்போது ராமப்ப ஐயர் என்பவர் தளவாயாக இருந்தார். இவர் பழநி கோயிலுக்கு வந்தபோது, புலிப்பாணியின் வழி வந்த பாத்திரசாமி என்பவர் அர்ச்சகராக இருந்தார். ஐயர் அல்லாத அவரிடம் இருந்து பிரசாதம் வாங்க வேண்டாம் எனக் கருதி, கொடுமுடியிலிருந்து சரசுவதி ஐயரை குருக்களாகவும், அவருக்குத் துணையாக மருதூர் தம்பா ஐயன், நாட்டார் அப்பன் கோயில் அகிலாண்ட ஐயன் ஆகியோரை பரிசாரகர் மற்றும் நம்பிமார்களாகவும் நியமித்தார் தளவாய் ராமப்ப ஐயர். இந்தத் தகவல்களைச் செப்பேட்டில் குறித்து, ராமப்ப ஐயர் செப்பேடு கொடுத்த காலம் கி.பி. 1477-ஆம் ஆண்டு
தங்க ரதம்

இங்கு வெள்ளி மற்றும் தங்க ரதங்கள் உலா வருவது தனிச் சிறப்பு. கார்த்திகை, விசாகம், சஷ்டி, மாத பிறப்பு, அமாவாசை ஆகிய நாட்களிலும், விசேஷ விழாக்களிலும் மலை மீது உற்சவர் சின்னக் குமாரர் பவனி வருகிறார். தமிழகத்தில் முதன் முதலாகப் பழநி தண்டாயுத பாணி திருக்கோயிலில்தான் முருகேச முதலியார் என்ற பக்தரின் முயற்சியால் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் தங்க ரதம் ஓடத் துவங்கியது. G 1960- ஆம் ஆண்டுக் கருவறைக்குத் தங்க விமானம் அமைக்கப்பட்டது

பூஜைகள் மற்றும் விழாக்கள்

தினசரி இங்கு ஆறு காலப் பூஜைகள் நடைபெறுகிறது. விழாக்களைப் பொறுத்த வரையில் தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், ஆடி கிருத்திகை, கந்த சஷ்டி விழா ஆகிய விழாக்கள் இங்குச் சிறப்பாகக் கொண்டாடப்படும்.
மூலவர் சந்நிதி வழக்கமாகக் காலை 6 முதல் இரவு 8 மணி வரையிலும், கார்த்திகை மற்றும் திரு விழா நாட்களில் காலை 4 முதல் இரவு ராக்காலப் பூஜை முடியும் வரையில் திறந்திருக்கும்..

பங்குனி உத்திர விழா

பழநியின் பங்குனி உத்திர விழாவை ‘நாட்டுப் புறத் திருவிழா’ என்பர். வருடம்தோறும் சூலமங்கலம் சகோதரிகளது கச்சேரி அன்று நடை பெறும். ‘பழநி எனும் ஊரிலே, பவனி வந்தான் தேரிலே’ என்ற பாட்டை அவர்கள் பாடுவதற்கும் முருகனின் தங்கத் தேர் அங்கு வருவதற்கும் சரியாக இருக்குமாம். ! பங்குனி உத்திரத் திருவிழாவின்போது பத்து நாள் உற்சவத்தில் முருகப் பெருமான், வள்ளி- தெய்வானையுடன் பற்பல வாகனங்களில் கிரிவலம் வருவார்.

கந்தசஷ்டி
கந்தசஷ்டியின்போது சூரபத்மனை வதம் செய்வதற்காக மலையிலிருந்து கீழே இறங்கி வருவார் முருகப்பெருமான். அவர், மலையின் நான்கு புறங்களிலும் கஜமுகாசுரன், தாரகன், சிங்கமுகன், சூரபத்மன் ஆகியோரை வதம் செய்து வெற்றி வீரராகக் கோயிலுக்குத் திரும்புவார்.

விசாகப் பெருவிழா

பத்து நாள் நடைபெறும் விசாகப் பெருவிழாவின் ஏழாம் நாளன்று திருத்தேர் வடம் பிடிப்பார்கள்.

தைப்பூசத் திருவிழா

தைப்பூசத் திருவிழாவின் 10-ஆம் நாள் மண்டகப் படியாகப் பெரியநாயகி அம்மன் கோயிலுக்கு அருகில் உள்ள தெப்பக்குளத்தில் பழநி முருகன், வள்ளி- தெய்வானையுடன் தெப்பத்தேரில் மும்முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.தைப்பூச விழாவின்போது நடைபெறும், முருகனுக்கு அம்பாள் வெற்றி வேல் வழங்கும் காட்சி குறிப்பிடத் தக்கது. ஏழாம் நாள் பூச நட்சத்திரத்தன்று தேரோட்டம். அன்று இடும்பன் குளம், சண்முக நதி, பழநி அடிவாரம் ஆகிய இடங்களில் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்துகிறார்கள்.
‘ போகர் வடித்த தெய்வச் சிலை முருகப் பெருமான் அல்ல; தண்டாயுத பாணிதான். தேவ ஸ்தானத்தின் பெயரும் ரசீதுகள், விடுதிகள் மற்றும் கோயில் சொத்துகள் எல்லாவற்றிலும் உள்ள பெயர் தண்டாயுதபாணியே என்றும் சொல்கிறார்கள்.
போகரால் செய்யப்பட்ட சிலையில் வேல் இல்லை; தண்டமே உள்ளது. உற்சவர் கையில் வேலும் தண்டமும் மயிலும் இல்லை. அடிவாரத்தில் உள்ள குழந்தை வேலாயுதசாமியே மயில் வாகனத்தில் வேலுடன் காட்சி தருகிறார்.

பழநி கோவில் கட்டுப்பாட்டில் இயங்கும் மற்ற கோவில்கள்

• திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோவில், பழநி அடிவாரம்.
• பெரிய நாயகி அம்மன் கோவில், அடிவாரத்தில் இருந்து 2 கி.மீ தொலைவில்.
• மாரியம்மன் கோவில்
• பெரிய ஆவுடையார் கோவில், சண்முக நதி அருகில்.
• குறிஞ்சி ஆண்டவர் கோவில், கொடைக்கானல்.
• வேலப்பர் கோவில், கொடைக்கானல்

கையில் கோலுடன் ஆண்டியை காட்சியளிக்கும் முருகன் சிலை நமக்கு உணர்த்துவது யாதென்றால் “அனைத்தையும் துறந்தால் கடவுளை அடையலாம்” என்பதாகும்.முன்னர் கோவில் மூலவர் சிலை காணமல் போயிற்று. அச்சமயம் முருகன் அவ்வழியே வந்த சேர மன்னன் சேரமான் பெருமாள் கனவில் தோன்றி, சிலையை மீட்டு மலை மீது கோவில் அமைக்குமாறு கட்டளையிட்டான். அதன் பின்னர்ச் சேர மன்னனே இந்தக் கோவிலை கட்டினான் என்ற வரலாறும் உண்டு.
பெரும்பாலும் தமிழகக் கோவில்களில் மூலவர் சிலை கிழக்கு பார்த்தே அமைந்திருக்கும். ஆனால் இங்கு வடக்கு பார்த்து அமைந்துள்ளது. இதற்குக் காரணம் சேர மன்னர்கள் வடக்குத் திசையில் ஆதிக்கம் செலுத்தியதே!

——————————————

துணைமேற்பட்டியல்:

1. காந்திதாசன்.மா, தமிழகத்தில் முருகவழிபாடு என்னெஸ் பப்ளிஷேசன்,
மதுரை முதல் பதிப்பு 1998.
2. கிருஷ;ணமூர்த்தி , பழனி தலவரலாறு, அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில்,பழனி.
3. சுப்பிரமணியன் .பெ, பழனி முருகன் கோவிலும் தீர்த்தமும். ராம்குமார் பதிப்பகம்,1994.
4. வைத்தியலிங்கம் செ., தமிழ் பண்பாட்டு வரலாறு, அண்ணாமலை பல்கலைக்கழக வெளியீடு. சிதம்பரம் 1991.
5. மணிவண்ணன்,க. முற்காலச் சோழர்கள் கோவில் கலைகளும் அழகியல் கோட்பாடுகளும். தமிழ்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1999. (ஆய்வேடு)
6. கிருஷ;ணண் க., திருஆவினன்குடி கோவில் ஓர் ஆய்வு. அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரி, 2005 (ஆய்வேடு)
7. ஜகந்நாதன் கி.வா. பழனி திருநாமம் , அமுத நிலையம் லிமிடெட், இராயப்பேட்டை ஹரோடு,சென்னை .
8. நாகசாமி, இரா.சுந்தர ராமசாமி, தமிழ கோவிற்கலைகள், தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை, சென்னை.
9. கும்பாபிஷேக மலர்கள் , பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா, சிறப்பு மலர் 1975.
10. கும்பாபிஷேக மலர்கள், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா,சிறப்புமலர் , 05.07.2000.
11. பால சுப்பிரமணிய கவிராயர், பழனி தலபுராணம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி
சுவாமி திருக்கோவில் வெளியீடு, 1998.

Share

About the Author

has written 1 stories on this site.

திருமதி.ச.ஜெயந்திமாலா வரலாற்றுத்துறை, உதவிப்பேராசிரியர், அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக்கல்லூரி,பழனி.

Write a Comment [மறுமொழி இடவும்]

Security Question: (* Solve this math to continue) *


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.