பேரா. நாகராசன்

கற்பனையும் அனுமானமும்

 

உள்ளத்தில் உருவாகும் மனப்படங்களுக்கு எழுத்து வடிவம் தருவது கற்பனை. ஒரு எழுத்தாளன் தன் உள்ளத்தில் உருவான காட்சியை எழுத்து மூலம், படிப்பவர்கள் புரிந்துகொள்ளும் வண்ணம் காட்சியாகப் படைக்கிறான். தமிழர் மனிதவியலில் தொன்மை மிக்க இலக்கியங்கள் கற்பனை வழியாகவே சமுதாயத்தில் பரவியது. கற்பனை படைப்பாற்றலை வளர்த்து படைப்புகளை உருவாக்கத் தூண்டுகோலாக அமைவது.

தற்கால ஊடகமான வெள்ளித்திரை கனவுத் தொழிற்சாலையாக விளங்கி கற்பனையை ஒளி ஒலியுடன் பார்ப்போரைக் கண்ணைத் திறந்துகொண்டு கனவு காணச் செய்கின்றது. கணினியும் தொலைக் காட்சிப் பெட்டியும் எண்ணிம வடிவில் திரையில் தோன்றும் இல்லாத மாயத் தோற்றத்தை உண்மை என்று நம்பவைக்கிறது.

இன்றைய தமிழ் கூறும் நல்லுலகில் கற்பனையும் கனவும் மாயத் தோற்றமும் தொழில்நுட்ப வளர்ச்சியின் உதவியுடன் எண்ணற்ற வளங்களை கருத்துக் கருவூலங்களாகப் படைத்து அவற்றை இணைய வெளியில் எளிதில் கிட்டுமாறு செய்துள்ளது.

ஆய்வுலகம் இவ்வாறு காணக்கிடைக்கும் கருத்துவளங்களைத் தகவலாக ஏற்றுக்கொள்வதில்லை. பகுத்தறிவால் சீர்தூக்கி ஐம்பொறிகள் வழியாகத் தரவுகளின் அடிப்படையில் பொய்யையும் புனைவையும் வடித்து அகற்றி எல்லாரும் ஏற்றுக்கொள்ளும் முடிவுகளை வெளியிடும் பண்பு கொண்டது. ஆய்வு அறிவு வளர்ச்சிக்கும் சமுதாய முன்னேற்றத்துக்கும் தகவல்களைப் படிக்கட்டுகளாகப் பயன்படுத்தி ஒரு சமூகத்தை மூட நம்பிக்கைகளிலிருந்து மீட்டெடுத்து ஒரு அறிவார்ந்த சமூகமாக மாற்ற வல்லது.

எண்ணற்ற சிந்தனைகள் எண்ணிம வடிவில் இணைய வெளியில் கொட்டிக்கிடந்தாலும் ஆய்வாளர்கள் பழையன கழிதலும் புதியன புகுதலும் என்று எதிர்கால வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு செயல்படுவர். திருவிழாவில் எவ்வாறு ஒரு சிறு குழந்தை தந்தையின் தோளில் அமர்ந்து தந்தையின் பார்வைக்கு அப்பாலும் காண இயலுவதுபோல் ஆய்வாளன் கடந்தகாலக் கருத்துக் குவியல்மேல் ஏறிநின்று தொலை நோக்குப் பார்வையுடன் சமுதாயத்துக்குத் தேவையான புதிய தகவல்களை உருவாக்குகிறான்.

ஆய்வு வெளியில் திக்குத் தெரியாத காட்டில் திரியும் வழிப்போக்கனை அனுமானம் மூலம் முன்னெட்டு எடுக்க வைக்கும். அனுமானம் என்பது கற்பனையோ கனவோ தோற்ற மயக்கமோ அல்ல. அனுமானம் என்பது ஆய்வில் முன்னேற ஆய்வாளன் கைகொள்ளும் உத்தி. ஆய்வுக்கு அனுமானம் ஒரு இன்றியமையாத கருவியாகும்.
ஆய்வாளர்கள் அனுமானம் என்றால் என்ன? எவ்வாறு அனுமானத்தை உருவாக்குவது? போன்ற கேள்விகளுக்கு விடைகளை அறிந்து அனுமானத்தை உருவாக்குதல், அனுமானத்தை நிறுவுதல் போன்ற செயல்களுக்கான திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

ஆண்டிகள் கூடி மடம் கட்டுவது கற்பனை. அய்வாளர்கள் மடம் தொடர்பான கருத்துகளை அனுமானமாகக் கொண்டு மடத்தின் தோற்றம் கட்டமைப்பு என்று அலகீடுகள் மூலம் தரமான நம்பகத்தன்மை மிக்க தகவல்களை நிறுவுவர்.

தொடரும்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *