-மேகலா இராமமூர்த்தி

மகாபாரதக் காவியத்தின் உச்சகட்டம், குருக்ஷேத்திரத்தில் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்குமிடையே நடைபெற்ற பதினெட்டு நாள் போர். இதில் இருதரப்பிலுமே வீராதிவீரர்களும் சூராதிசூரர்களும் எண்ணிறந்தோர் இருந்தனர். அவர்களில் ஒருவன்தான் பிரோக்ஜோதிஷ நாட்டு அரசனான பகதத்தன் என்பவன். இவன் யானைப்போரிலே ஈடு இணையற்ற ஆற்றல் வாய்ந்தவன். போர்க்களத்திலே பிறருடைய யானைகளை அலறி ஓடவைக்கும் பேராற்றலும் போராற்றலும் வாய்ந்தது இவனுடைய பட்டத்து யானையான ‘சுப்ரதீகம்.’ அசகாய சூரனான பகதத்தன் பாண்டவர்கள் பக்கம் சேராது கௌரவர்கள் பக்கம் சேர்ந்ததற்கு முக்கியக் காரணம், இவன் தந்தை பார்த்தசாரதியான கிருஷ்ணனால் கொல்லப்பட்டதே ஆகும்.

கிருஷ்ணனால் கொல்லப்பட்ட இவன் தந்தை யார்?

அவன் வேறு யாருமில்லை.  தீபாவளிப் பண்டிகை கொண்டாடக் காரணமானவன் என்று இந்துமத புராணங்கள் செப்பும் நரகன் என்னும் நரகாசுரன்தான் பகதத்தனின் அத்தன் (தந்தை).  

இதுவல்லாமல், பகதத்தன் கௌரவர்கள் பக்கம் இணைய மற்றொரு காரணமும் சொல்லப்படுகின்றது. அஃது, இவன் மகளாகிய பானுமதி, கௌரவர் தலைவனான துரியோதனனை மணந்திருந்தது. துரியோதனனின் உயிர் நண்பனான கர்ணனோடு பானுமதி சொக்கட்டான் ஆடியதும், அதில் அவள் தோற்றோடியபோது, அவளை ஓடவிடாமல் தடுக்கக் கர்ணன் அவள் மேலாடையைப் பற்றியிழுத்ததும், அதிலிருந்த முத்துக்கள் நிலத்தில் சிதற,  அப்போது அவ்விடத்துக்கு வந்த துரியோதனன் அதைக்கண்டு, அவர்கள் இருவரிடமும் சிறிதும் ஐயமோ கோபமோ கொள்ளாமல் மிகவும் நிதானத்தோடு உதிர்ந்த முத்துக்களை நான் எடுக்கவோ கோக்கவோ என்று கேட்டதும் நம்மால் மறக்கவியலாத கர்ணன் தமிழ்த்திரைப்பட வசனங்கள் அல்லவா?

எப்படிப்பட்ட தீயவனிடமும் குன்றிமணி அளவேனும் உயர்குணம் இருக்கும் என்பதற்குத் துரியனின் இச்செயல் சிறந்ததோர் சான்றாகும்.

மீண்டும் பகதத்தனிடம் வருவோம்.

குருஷேத்திரப் போரின் பன்னிரண்டாம் நாள் நிகழ்வில் பகதத்தனின் யானை சுப்ரதீகம் போர்க்களத்தில் சூறாவளியெனச் சுழன்று, பாண்டவர் சேனையைக் கதிகலங்க அடித்துக்கொண்டிருந்தது. அதைக்கண்ட பாண்டவர்கள் சுப்ரதீகத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் பாண்டவர் படை விரைவில் நிர்மூலமாகும் என்றுணர்ந்தனர். உடனே வீமன் விரைந்து சுப்ரதீகத்திடம் வந்தான்; வந்தவன் சுப்ரதீகத்தின் மர்மப் பகுதியில் நுழைந்து அதனைக் கடுமையாகத் துன்புறுத்தத் தொடங்கினான். இவ்வாறெல்லாம் செய்வது போர்விதிகளுக்கு முரணானதே; எனினும் அவன் செய்தான். போரில் இருபக்கமும் இழப்புகளின் எண்ணிக்கை கூடக்கூட இருதிறத்தாருமே போர் நெறிமுறைகளையும் விதிகளையும் காற்றில் பறக்கவிடத் தொடங்கினர் என்பதைப் பாரதம் படிப்பவர்கள் நன்குணரலாம்.

வீமனால் துன்புறுத்தப்பட்ட சுப்ரதீகம் வலிதாளாமல் இப்படியும் அப்படியும் சுழன்று தன் கால்களை நெருக்கி அவனைக் கொல்லப் பார்த்தது. அந்த ஆபத்திலிருந்து தப்பிப்பதற்கு வீமன் அங்கிருந்து நகர்ந்து அதன் உட்புறம் சென்று மறைந்தான். வீமனைக் காணாத பாண்டவர்கள் அவன் மாண்டுவிட்டானோ என்று அஞ்சி, பகதத்தனைத் தாக்க தசார்ண தேசத்து அரசனை யானையோடு அனுப்பினர். ஆனால் அந்த யானையால் சுப்ரதீகத்தை எதிர்த்துத் தாக்குப்பிடிக்க முடியவில்லை; அது சுப்ரதீகத்தினால் குத்தப்பட்டுப் பரிதாபமாகக் கீழே வீழ்ந்தது!

சூப்பர் ஹீரோவாகப் போர்க்களத்தில் எல்லாரையும் பந்தாடிக்கொண்டிருந்த சுப்ரதீகமும், அதை இயக்கிக்கொண்டிருந்த சூரன் பகதத்தனும் பின்னர், கிருஷ்ணனின் துணையோடு போரிட்ட அர்ச்சுனனால் கொல்லப்பட்டனர் என்கிறது பாரதம்.

இம் மாபாரதப் போருக்குமுன்பே தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடந்த சண்டையில் தேவர்கள் பக்கம் நின்று அவர்களுக்கு வெற்றியைத் தேடித் தந்தவன் இந்த பகதத்தன். அதனால் இந்திரன் இவனுடைய உற்ற நண்பனாய்த் திகழ்ந்தான் என்பதும் பாரதம் நமக்குத் தரும் செய்தி.

இவ்விடத்தில் பகதத்தனின் தந்தை நரகாசுரன் குறித்தும் அவனோடு இணைத்துப் பேசப்படும் தீபாவளிப் பண்டிகை குறித்தும் சிலவற்றைச் சிந்திப்போம்.

நரகாசுரன் என்பவன் திராவிடன்/தமிழன். அவனை ஆரியனான கிருஷ்ணன் கொன்ற நாளே தீபாவளிப் பண்டிகையாகக் கொண்டாடப்படுகின்றது. எனவே இதனைக் கொண்டாடுவது தமிழினத்துக்கு இழுக்கு என்றொரு வாதம் தமிழுணர்வாளர்களால் பல காலமாகச் சொல்லப்பட்டு வருவது நாமறிந்ததே.

நரகாசுரன் உண்மையிலேயே தமிழனா?

நரகாசுரன் ஆண்டது வடகிழக்கு இந்தியாவிலுள்ள அஸ்ஸாமின் ஒரு பகுதி. அன்று ’காமரூபம் அல்லது பிரோக்ஜோதிஷ தேயம் (Kāmarūpa/Pragjyotisha) என்றழைக்கப்பட்டிருக்கின்றது இப்பகுதி என்பதைப் புராணங்கள் மூலம் அறிகிறோம். எனவே நரகாசுரன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவன் அல்லன் என்பது உறுதி. இவனைத் தமிழல்லாத வேற்றுமொழி பேசிய ஓர் இனத்தின் தலைவன் என்று கருதலாம். இல்லை…அப்போதைய அஸ்ஸாம் பகுதி ஆதித்தமிழரின் வசிப்பிடமாகத்தான் இருந்தது; அதனால் அவன் தமிழன்தான் என்ற வாதத்தை, ஒரு பேச்சுக்கு, ஏற்றுக்கொள்வதாக இருந்தாலும் இந்த நரகனின் எதிரியாகக் காட்டப்படும் கிருஷ்ணன் யார்? அவனும் யமுனைக்கரையிலுள்ள ஆயர்பாடியில் வாழ்ந்த ஓர் இடையர்குலத்தவன்தானே! அவனை எப்படி ஆரியன் என்று முடிவுகட்டுவது?

ஆரியர் என்பவர் ஆசியாவின் மத்தியப் பகுதியிலிருந்து இந்தியாவுக்குள் ஊடுருவியர்கள் என்பதுதான் பொதுவான கருத்து. அவர்களோ வெளுத்த நிறம் கொண்டவர்களாகக் கருதப்படுகின்றார்கள். ஆனால் யமுனைத் துறைவனான கிருஷ்ணனோ கரியவன்! (Krsna என்ற வடசொல்லுக்கே கறுப்பு என்பதுதான் பொருள்!). ஆக வண்ணத்தின் அடிப்படையிலும் கிருஷ்ணனை ஆரியனாகக் கருத வாய்ப்பில்லை!

சொல்லப்போனால் தொல்காப்பியம் சுட்டும் காடுறை உலகத் தலைவனான, தமிழ்மண்ணின், மாயோனை (மாமை என்றால் கருமை) ஒருவாறு கிருஷ்ணனோடு பொருத்திப் பார்க்கலாம்; தமிழன் என்று நாம் நம்பும் நரகாசுரனுக்கு அந்த வாய்ப்புமில்லை!

ஆக, கிருஷ்ணன் நரகாசுரனிடையே நிகழ்ந்த சண்டையை எப்படிப் புரிந்துகொள்வது?

கிருஷ்ணன் ஓர் இனக்குழுவின் தலைவன். அதுபோல் நரகன் மற்றோர் இனக்குழுவின் தலைவன். (நரகன், பன்றிக்கும் பூமிக்கும் பிறந்தவன் என்ற அருவருக்கத்தக்க, அறிவுக்குப் பொருந்தா Fantasy கதைகளையெல்லாம் விட்டுவிடுவோம்.) இவர்கள் இருவருக்குமிடையே நடந்த சண்டையில் கிருஷ்ணன் வென்றான்; நரகன் தோற்றான்; அவ்வளவுதான்! இதில் ஆரிய திராவிட இனபேதத்தைப் புகுத்துவது தேவையற்றது!

’அசுரன்’ என்று சொன்னாலே அது திராவிடனைத்தான் குறிக்கும் என்பது நம்முடைய தவறான புரிதல். மோசமான நடத்தையால் மக்களைத் துன்புறுத்தியவர் யாரேனும், எந்த இனத்தவரேனும் அவருக்கு அசுரன் என்ற அடைமொழி அன்று வழங்கப்பட்டிருக்கின்றது என்பதே புராணங்கள் வாயிலாகத் தெரியவருகின்ற உண்மை. சான்று: விருத்திராசுரன் எனும் பார்ப்பன அசுரன்!

நரகாசுரனின் மகனாகிய பகதத்தனின் வரலாற்றைக் காணும்போதும் அவன் அசுரர்களுக்கு (அதாவது நாம் திராவிடர்களாக அடையாளப்படுத்துவோருக்கு) ஆதரவாக எதுவும் செய்ததாகத் தெரியவில்லை. மாறாகச் சுரர்களுக்கு (தேவர்களுக்கு) சாதகமாகவே அனைத்தும் செய்திருக்கிறான். அசுரர்களின் பகைவனான இந்திரனின் உற்ற நண்பனாகவும் திகழ்ந்திருக்கிறான்!

இவர்களின் பெயர்களைக் கவனித்தாலும் நரகன், பகதத்தன், அவன் மகன் வஜ்ரதத்தன், நரகாசுரனின் அமைச்சர்களான ஹயக்ரீவன், பஞ்சகன், நிசும்பன், பிராபணன், முரன் என்று எதுவுமே தமிழ்ப்பெயர்களில்லை; அனைத்தும் வடமொழிப் பெயர்கள்! திராவிடராக/தமிழராக இருந்திருந்தால் ஆதன், உதிரன், எரவாதன், கோதை என்பனபோல் அல்லவா இவர்களின் பெயர்கள் இருந்திருக்க வேண்டும்?

எப்படிப்பார்த்தாலும் நரகாசுரனைத் தமிழன் என்று நிரூபிக்க நம்மிடம் போதிய சான்றாதாரங்கள் இல்லை; அவன் தமிழனல்லன் என்று நிரூபிக்கவே அவனுடைய வழித்தோன்றல்களின் வரலாறும், அதைச் சொல்லும் மாபாரதமும் துணைநிற்கின்றன.

எனவே அடிப்படையில் தீபாவளிக்கும் நரகாசுரனுக்கும் எந்தச் சம்பந்தமும் இருந்திருக்க வாய்ப்பில்லை. இவையெல்லாம் பிற்காலத்தில், நிறுவனப்படுத்தப்பட்ட சமயங்களால், கிருஷ்ணன் பெருந்தெய்வமாக்கப்பட்டபோது அவன் மாட்சியைப் பேசுவதற்காக இணைக்கப்பட்ட புனைவுகளாகவே இருக்கவேண்டும்.

*****

துணைநூல்கள்:

1.மகாபாரதம் (வியாசர் விருந்து) – சக்கரவர்த்தி இராஜகோபாலாசாரி, வானதி பதிப்பகம்.

2. அபிதான சிந்தாமணி – ஆ. சிங்காரவேலு முதலியார்

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “பகதத்தனும் அவன் அத்தனும்!

  1. அருமை.. இதுவரை அறியாத தகவல்கள்.. வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *