பழமுதிர்ச்சோலை

 

தோகைமயில் பாதையிலே தோரணங்கள் போட்டிருக்கும்

பாகைவழி நீக்கிவிட்டுக் கோள்களெலாம் கூடிநிற்கும்

வாகைசூடி வருபவனை வாழ்த்திடவே காத்திருக்கும்

தேவையென்றுத் தேடியிங்கே கந்தனவன் கண்விழியை !

 

நாசியிலே காற்றடக்கி நானறியத் துடிப்போரும்

ஆசையுடன் பாசம்விட்டு அகமகிழும் பெரியோரும்

பூசையெனச் சேவையிலே புண்ணியத்தைச் சேர்ப்போரும்

பாசத்துடன் குமரய்யா  பாதங்கள் தேடியிருப்பார் !

 

பட்டமரம் மேலிருப்பாய் பசுமேய்க்கும் பாலகனாய்

சுட்டப்பழம் கேட்டுவிட்டால் சுடாதபழம் தந்திடுவாய்

வெட்டவெளி விண்ணெல்லாம் வேலவனே மறைந்திருப்பாய்

கிட்டவந்தே கேட்டிருப்பாய் கிரங்கியிந்தன் தமிழ்ப்பாட்டை !

 

வள்ளியுடன் தெய்வானை வளைத்திருக்க வேலவனை

வெள்ளிமலை தம்பதியர் வாழ்த்திவிட பாலகனை

அள்ளிவந்த ஆசியுடன் வானகத்து வித்தகரும்

துள்ளிவந்தார் தேடியிங்கே சோலைமலை சூட்சுகனை.!

 

கரையில்லாக் கருணைக்கடல் கலையறியா எழில்வண்ணம்

மறையறியா முன்தோன்றல் மனம்நிறையும் ஒளிப்பிழம்பு

சிறைப்பட்டேன் உன்நினைவில் சிதறாத சிந்தனையில்

நிறைவாக  நிலைபெறுவாய் நித்தியனே என்னுயிரில் !

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *