சம்பந்தர் தேவாரம்: கூடசதுர்த்தமும் வஞ்சிவிருத்தமும்

0

-முனைவர் அ.மோகனா

சைவத்திருமுறைகளைப் பொறுத்தவரை பொருண்மையோடு, வடிவத்திற்கும் முதன்மை அளித்து பாடப்பெற்றவையாகச் சம்பந்தரின் தேவாரப் பாடல்கள் உள்ளன. பிற தேவார ஆசிரியர்களைக் காட்டிலும் மிகுந்த அளவிலான புது வடிவங்களைக் கையாண்டவர் சம்பந்தர். மரபாக வழக்கத்திலுள்ள வடிவங்களையும் அவர் பயன்படுத்தியுள்ளார். சில புது வடிவங்களையும் இசையின் பொருட்டுக் கையாண்டுள்ளார். இதனை,

இப்பாடல்களின் பாவமைப்பு, புதுமைக்கும் பழமைக்கும் பாலமாக அமைகின்ற இடைக்கால இலக்கிய நிலையை வெளிப்படுத்துகின்றது. மரபுவழி வருகின்ற பாவகைகளும் இனங்களும் பயின்றன; அதோடு, புதுவகைச் செய்யுட்களும் சித்திரக் கவிகளும் இணைந்தன. (யாப்பியல்: 1998:132,133) என்கிற அன்னிதாமசின் கருத்து அரண் செய்யும். மரபாக வழங்கி வருகின்ற வடிவங்களுள் காப்பியங்களில் ஆட்சி செலுத்திய விருத்த வடிவம் சம்பந்தரின் பாடல்களிலும் பெருமளவு இடம்பெற்றுள்ளது. பலவிதமான வாய்பாட்டு அமைப்புகளையுடைய விருத்தங்களை அவர் பயன்படுத்தியுள்ளார். சீர்களின் எண்ணிக்கையிலும் சோதனை முயற்சிகளைக் கையாண்டுள்ளார். முச்சீர் நான்கடிகளால் அமைந்த வஞ்சி விருத்தங்கள் முதல் ஒன்பது சீர்களைக் கொண்டமைந்த விருத்தங்கள் வரை அவர் பாடியுள்ளார். அவற்றுள் வஞ்சி விருத்தங்கள் குறித்த சில செய்திகள் இங்கு முன்வைக்கப்படுகின்றன.

வஞ்சிவிருத்தம் என்பது முச்சீரடி நான்கு ஒத்து வருவது என்கிறது யாப்பருங்கலம். சிறுகாக்கை பாடினியம், காரிகை ஆகியனவும் இவ்வரையறையினையே கொண்டுள்ளன. இவ்வடிவத்தின் தோற்றுவாய் மற்றும் வளர்நிலைகள் குறித்த அ.சண்முகதாஸின் கருத்துகள் கவனத்திற்குரியன.

வஞ்சிவிருத்தத்தின் வளர்ச்சி பற்றிக் கூறும் அ.சி.செ. அவர்கள் அது சாதாரண வஞ்சிப்பாவின் திரிபேயாகும் என்பர். ஆனால் இசைப் பண்பு கொண்டனவாகிய கலி, பரிபாட்டு ஆகியவற்றிலிருந்து வளர்ச்சியடைந்தன எனக்கூறுதல் மிகப் பொருத்தமாகும்.       இக்கருத்துக்குச் சான்று பகருவன போல அமைகின்றன 18-ஆம் பரிபாடலில் இடம்பெறும் நான்கு அடிகள்.

ஆர்ததும்பு மயிலம்பு நிறைநாழி
சூர்ததும்பு வரைய காவால்
கார்ததும்பு நீர்ததும்புவன சுனையால்
ஏர்ததும்புவன பூவணி செறிவு

என்ற நான்கு அடிகளையும் அப்பரிபாடலிலிருந்து தனியாக எடுத்தால் அவை பிற்கால யாப்பிலக்கணக்காரர் வஞ்சிவிருத்தத்துக்கு கூறிய எல்லா இலக்கணங்களும் பொருந்தி  அமைகின்றன. ஒரு காலத்தில் வாழும் புலவன் தனக்கு முன்னெழுந்த இலக்கியங்களிற்       காணப்படும் கருக்களை நோக்கி அவற்றைத் தனியாக எடுத்து விரித்துக் கூறுவது ஓர்       இலக்கிய உண்மையாகும், ஆகவே பரிபாடலில் இடம்பெற்றுள்ள இத்தகைய அடிகளைத் தனியாக எடுத்துப் பிற்காலத்தவர்கள் வஞ்சி விருத்தத்தினை அமைத்துக்கொண்டனர்       என்று கூறலாம். இந்த வகையிலே பல்லவர் காலத்துக் கையாளப்பட்ட வஞ்சிவிருத்தவடிவம் வளர்ச்சியுற்றதாகும் (தமிழின் பாவடிவங்கள்:1998:117,118).

பாவினக் கோட்பாடு பற்றிய எதிர்நிலைக் கருத்தாடல்களைக் கொண்ட உரைகாரர்கள் (பேராசிரியர், நச்சினார்க்கினியர்) இவ்வடிவத்தை முச்சீர் நான்கடித் தரவுக் கொச்சகம் என்பர். சோ.ந.கந்தசாமி இந்த இருவகை வழக்குகளையும் தனது ஆய்வில் பயன்படுத்துகின்றார். சம்பந்தரது பாடல்களைப் பொறுத்தவரை வடிவ வரையறையில் அவை வஞ்சிவிருத்தமாக அமைந்திருந்தாலும் சண்முகதாஸ் கூறியபடி அதன் வளர்ச்சியடைந்த வடிவமாகக் கொள்ளற்குரிய கூறுகள் பல அப்பாடல்களில் உள்ளன. அவை சந்த வஞ்சி விருத்தங்கள். பாக்களுக்குரிய ஓசை என்கிற இயல்பு நிலையைக் கடந்து இசையை முதன்மைப்படுத்திய மாத்திரை அளவுகளால் வரையறுக்கப்பட்ட பாடல்கள். வடிவ ஒப்புமை கருதி அவற்றை வஞ்சிவிருத்தங்கள் என்றும் இசைநலம் கருதி அவற்றை சந்த வஞ்சி விருத்தங்கள் என்றும் கொள்ளலாம். இவரது வஞ்சித்துறை மற்றும் வஞ்சி விருத்தப்பாடல்கள் குறித்த ப.பா.இராசேந்திரனின் மதிப்பீடு இங்கு கருதத்தக்கது.

விழுமிய தத்துவக் கருத்துக்களை ஒழுகிய ஓசையினால் விளக்குவதற்கும், இறைவன் புகழ்       பாடுவதற்கும், கவிதைச் சுவை நலங் கூட்டுவதற்கும் பாவினங்களை இடமறிந்து கையாளுதல் சம்பந்தரின் போக்காக உள்ளது என்பதற்கு வஞ்சித்துறை பற்றிய பாடல்களும் வஞ்சிவிருத்தம் பற்றிய பாடல்களும் சான்றாகத் திகழ்கின்றன. (திருஞானசம்பந்தர் தேவாரத்தில் இலக்கியக் கொள்கைகள்:1988:246).

சம்பந்தர் முதல்திருமுறையில் 12 பதிகங்களும், இரண்டாம் திருமுறையில் 14 பதிகங்களும் பாடியுள்ளார். மொத்தம் 292 பாடல்கள் இவ்வடிவத்தைப் பெற்றுள்ளன என்று சோ.ந.கந்தசாமி கூறியுள்ளார். அன்னிதாமசும், சண்முகதாஸும் எண்ணிக்கையில் இவர் கருத்தினின்று மாறுபடுகின்றனர். முதல் திருமுறையில் 12 பதிகங்களும் மூன்றாம் திருமுறையில் 1பதிகமும் ஆக 133 பாடல்கள் வஞ்சிவிருத்தத்திற்குரியன என்று கூறியுள்ளனர். ஆனால் இரண்டாம் திருமுறையில் 148, 149 மற்றும் 153 முதல் 164 வரையிலான கலிவிருத்தப் பாடல்களை சோ.ந.கந்தசாமி வஞ்சிவிருத்தப்பாடல்களாகக் கணக்கிட்டுள்ளார். மூன்றாம் திருமுறையில் இடம் பெற்றுள்ள 367வது பதிகத்தை இவர் தமிழ் யாப்பியலின் தோற்றமும் வளர்ச்சியும் ஆய்வில் கவனத்தில் கொள்ளவில்லை.

இரண்டாம் திருமுறையில் இடம்பெற்றுள்ள பாடல்கள் நாற்சீர் நான்கடி கொண்ட கலிவிருத்தப்பாடல்கள் என்பதில் எந்தவித சிக்கலும் இல்லை. சில கட்டளைக் கலிவிருத்தங்களாகவும் சில பதிகங்கள் வெண்டளைக் கலிவிருத்தங்களாகவும் அமைந்துள்ளன. அன்னிதாமசும் சண்முகதாஸும் குறிப்பிடும் மூன்றாம் திருமுறையில் அமைந்துள்ள 367வது பதிகப் பாடல்கள் ‘கூடசதுர்த்தம்’ என்ற பெயரினைப் பெற்றுள்ளன. இது குறித்து சோ.ந.கந்தசாமி, யாப்பருங்கல விருத்தியில் ‘கூட சதுர்த்தம் ஆவது நான்காம் அடிக்கு எழுத்து முதல் மூன்றடியுள்ளும் பெருக்கிக் கொள்ளப் பாடுவது’ என்று விளக்கப்பெற்றது. குணசாகரர் அங்ஙனம் பாடப்பெற்ற கட்டளைக் கலித்துறைப் பாடலையும் மேற்கோள் தந்தார்…எனின், யாப்பருங்கலம் உள்ளிட்ட இலக்கண நூல்கள் தோன்றுவதற்குக் குறைந்தது முந்நூறு ஆண்டுகள் முற்பட்ட காலத்தில் தோன்றிய திருஞானசம்பந்தர் பாடியுள்ள கூட சதுக்கப்பதிகம் முற்றிலும் வேறுபட்டது… (2005:260,261) என்று திருமுறையில் இலக்கிய வகை என்னும் ஆய்வில் கூறிவிட்டு ஒரு பாடலைச் சான்று காட்டி இதனை வஞ்சி விருத்தத்திற்கு மூல இலக்கியமாகக் கொள்ளலாம் என்கிறார். இவர்களது எண்ணிக்கை மாறுபாடுகளிலிருந்து சம்பந்தரது வஞ்சிவிருத்தப் பாடல்கள் குறித்து இவர்கள் கொண்டிருந்த இருவேறு கருத்துநிலைகள் புலனாகின்றன. ஒன்று வரையறுக்கப்பட்ட சந்த வஞ்சிவிருத்தங்கள்; மற்றொன்று கலிவிருத்தங்களாகக் கொள்வதற்குச் சிற்சில மாறுபாடுகள் உள்ள பாடல்களைச் சீர்களை இணைத்து வஞ்சிவிருத்தங்களாகக் கணக்கிடுவது.

அவ்வாறு கணக்கிடும்போது வஞ்சிவிருத்தத்தில் நாலசைச்சீர்கள் இடம் பெற்றுவிடுவதை இவர்கள் கணக்கில் கொள்ளவில்லை. முதல்மூன்றடிகள் எழுத்தெண்ணிக்கையில் ஒத்தும் இறுதியடி மட்டும் ஓர் எழுத்து குறைந்தோ கூடியோ வருகின்ற கலிவிருத்த வடிவங்கள் சம்பந்தரது பாடல்களில் அதிக அளவு காணப்படுகின்றன. அந்த வகையில் மேற்கூறியவற்றுள் இரண்டாம் திருமுறை மற்றும் மூன்றாம் திருமுறைப் பாடல்களையும் கலிவிருத்தங்களாகக் கருதமுடியும். முதல் திருமுறையில் அமைந்துள்ள பன்னிரண்டு பதிகங்களும் சந்த வஞ்சிவிருத்த யாப்பிற்கு முழுமையாகப் பொருந்தி வருபவை. அவற்றை மட்டும் வஞ்சி விருத்தங்களாகக் கொள்ளலாம். சந்த வஞ்சிவிருத்தம் எனும்போது சந்த விருத்தங்களுக்குச் செழுமையான இலக்கணம் வகுத்த விருத்தப்பாவியலின் கருத்து இங்கு நோக்கத்தக்கது.

கலிசந்த விருத்தத்திற்கு இலக்கணம் கூறிய விருத்தப்பாவியல் ‘மனோரமா’ என்ற வகைமையினைப் பற்றிக் குறித்துள்ளது. முதல் மூன்று சீர்களும் மூன்று மாத்திரைகளைப் பெற்று நான்காம் சீர் நான்கு மாத்திரைகளைப் பெறுகின்றவை மனோரமா என்கிற கலிவிருத்தவடிவம் என்று வரையறுத்துள்ளது. மேலும் அதன் அடிக்குறிப்பில் வஞ்சிவிருத்தத்தில் அமைந்த சில கம்பராமாயணப் பாடல்களை எடுத்துக்காட்டி ‘ஒரு சீர் குறைந்து மனோராமா வினிலக்கணம் பொருந்தும் வஞ்சி விருத்தங்களுள’ (35) என்று குறிப்பிட்டுள்ளது. ஆனால் சம்பந்தரது வஞ்சி விருத்தங்கள் இவ்வாய்பாட்டிற்குப் பொருந்தி வரவில்லை. அவை முதல் மூன்று சீர்களும் நான்கு மாத்திரைகளும் நான்காம் சீர் ஆறுமாத்திரைகளும் பெற்றமைகின்றன. இவ்வமைப்பு குறித்து பாவலர் பண்ணையில் சில கருத்துக்களைக் காணமுடிகின்றது.

முதற்சீராகத் தன்னா, தானா, தனனா, தத்தம், தந்தம் முதலியனவும் வரலாம். அவை 4 மாத்திரை உள்ள மாச்சீராக இருக்கவேண்டும். இரண்டாம் சீராகத் தன்னன, தானன, தத்தன முதலியனவும் வரலாம். அவை 4 மாத்திரையுள்ள விளச்சீராக இருக்கவேண்டும். மூன்றாம் சீராகத் தன்னானா, தானானா, தந்தானா, தத்தந்தா முதலியனவும் வரலாம். அவை 6 மாத்திரையுள்ள காய்ச்சீராக இருக்க வேண்டும். (இரா.திருமுருகன்:1997:117). இக்கருத்தில் இடம்பெற்றுள்ள மாத்திரை அளவிற்குச் சம்பந்தரின் பாடல்கள் பொருந்தி வருகின்றன. ஆனால் அவர் அளித்துள்ள சந்த வாய்பாட்டிற்குச் சில சீர்கள் பொருந்தி வரவில்லை. சான்றாக,

அரையார் விரிகோ வணவாடை
நரையார் விடையூர் திநயந்தான்
விரையார் பொழில்வீ ழிம்மிழலை
உரையா லுணர்வா ருயர்வாரே (1:35:1)

இப்பாடலில் முதல் இரண்டு சீர்களும் நான்கு மாத்திரைகளைப் பெற்றும் இறுதிச் சீர் ஆறு மாத்திரைகளைக் கொண்டும் அமைந்துள்ளன. தனனா தனனா தனதானா என்கிற சந்த வாய்பாட்டைக் கொண்டுள்ளது. இவ்வமைப்பு முதல் திருமுறையில் இடம்பெற்றுள்ள அனைத்து வஞ்சி விருத்தங்களுக்கும் பொருந்தி வருகின்றது. பிற பாடல்களுக்கு ஆய்வாளர்கள் வகுத்துள்ள வரையறைகள் மறுபரிசீலனைக்கு உட்பட்டவை. அவற்றைக் கலிவிருத்தங்களாகக் கொள்வதற்கான வாய்ப்புகள் மிகுதி.

துணைநூற்பட்டியல்

  1. அன்னிதாமசு, யாப்பியல், அமுதநிலையம், சென்னை,1998
  2. இராசேந்திரன், ப.பா., திருஞானசம்பந்தர் தேவாரத்தில் காணப்படும் இலக்கியக் கொள்கைகள், வேதவல்லி பதிப்பகம், மதுரை, 1988.
  3. கந்தசாமி,சோ.ந., தமிழ் யாப்பியலின் தோற்றமும் வளர்ச்சியும் முதற்பாகம் – இரண்டாம் பகுதி, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1989
  4. கந்தசாமி,சோ.ந., திருமுறையில் இலக்கியவகை, மெய்யப்பன் பதிப்பகம், சென்னை, 2005
  5. கோபாலையர், தி.வே., தேவாரம் ஆய்வுத் துணை, ப்ரெஞ்சு இந்திய நிறுவனம், பாண்டிச்சேரி,1991.
  6. சண்முகதாஸ், அ., தமிழின் பாவடிவங்கள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை,1998.
  7. திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரப் பதிகங்கள் திருமுறை 1,2,3., கழக வெளியீடு, திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1973.
  8. திருமுருகன், இரா., பாவலர் பண்ணை, ஏழிசைச்சூழல், புதுச்சேரி,1997
  9. வீரபத்திரமுதலியார், தி., விருத்தப்பாவியல் (விருத்தப்பா யாப்பியல்), திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1984.

*****

கட்டுரையாளர் – உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை
தியாகராசர் கல்லூரி, மதுரை.

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *