=======================

(திருச்சி புலவர் இராமமூர்த்தி)

—————————————————

 

திருவாரூர்  நகரத்தின் தோற்றம் இங்கே சிறப்பாகக் கூறப் பெறுகிறது. இப்பாடலில் உள்ள தொடர்கள் அடுத்தடுத்து வெவ்வேறு  பொருள்களைப்  புலப் படுத்துகின்றன. ஒரே தொடர் மீண்டும் வந்து , பொருள் நோக்கிப் பிரிந்து வெவ்வேறாகப் பொருள்தரப்   பாடுவது இரட்டுற மொழிதல் என்ற அணி என்பர். இந்த அணி இருவகைப் படும் , அவை செம்மொழிச் சிலேடை, பிரிமொழிச்  சிலேடை என்பனவாம்.

சேக்கிழார் பெருந்தகை , திருவாரூரில் உள்ள மாளிகைகளின் சூழல் பற்றிக் கூறுகிறார்! மாளிகைகள் கட்டப்பெற்ற இடங்களுக்குப் புறம்பே உள்ள சோலைகளில் அந்நாட்டு மக்களால் வளர்க்கப் பெறும் யானைக் கன்றுகள் திரிகின்றன. அந்தச்   சோலைகளில் , வண்டுகள் பறந்து சென்று தேனுண்ணும் மலர்கள் எங்கெங்கும் பூத்துள்ளன!

அடுத்து அங்கே  மகளிர்  விளையாடும் பொழுது  பாடும்   அம்மானைப் பாடல்கள்  எங்கெங்கும்  ஒலிக்கின்றன! அவர்கள் வாழும் அழகிய பெருமனைகள்  எங்கெங்கும் உள்ளன.

அங்குள்ள இல்லங்களின்மேல் ஏற்றிவைத்த கொடிகள் படபடக்கின்றன. அந்த இல்லங்களுக்குள்  பெரும் செல்வங்களின் வைப்புப்  பெட்டகங்கள் உள்ளன.

பூக்களால் தொடுக்கப் பெற்ற  மாலைகள் எங்கெங்கும் உள்ளன. அந்த மாலைகளை அழகாக அணிந்து கொண்டு இன்புறும் ஆடவரும் பெண்டிரும் எங்கும் உள்ளனர்.

இப்பாடலில் போதகங்கள்  என்ற சொல், யானைக் கன்றுகளைக் குறித்தது; மாடு என்ற அடைமொழி ஊரின் பக்கத்தில் என்று பொருள்தந்து, அங்கே  சோலையில் திரியும் யானைக்கன்றுகளைக் குறித்தது.  அதே சொல் அடுத்து,   வண்டு போது  அகங்கள் என்று பிரிந்து , மலரிதழின் உட்பாகங்கள் என்று பொருள் தருகிறது. அதற்கு அதன் அடைமொழியாக உள்ள வண்டு  என்ற சொல் போதகம் என்ற யானையை நீக்கி, போது , அகங்கள் அதாவது வண்டுகள் தேனுண்ணக்  கிண்டுவதால் ,  விரியும் போது காணப்படும் அகவிதழ்கள் என்று,   பொருள் தருகிறது. இங்கே போதகங்கள் என்ற சொல் இருவகையாகப் பொருள் தருவதே சேக்கிழாரின் இலக்கிய ஆளுமையைக் காட்டுகிறது.

அடுத்த அடியில், பாடும் அம்மனை என்பதில் உள்ள அடை மொழி, பாடுகின்ற அம்மனை என்ற கருத்தைத் தருகிறது. அம்மனை என்பது அம்மானை என்ற விளையாட்டுப் பாடலைக் குறிக்கும்! ஆதலால் அங்குள்ள வீடுகளில் எங்கெங்கும்  பெண்கள் அம்மானைப் பாடல்களைப் பாடி விளையாடுகின்றனர் என்பது புலனாகின்றது.  அடுத்து  அம்மனைகள் என்பது  பயிலும் அம்  மனைகள் எங்கும் என்ற தொடராகப் பிரிந்து அழகிய வளமனைகள்  எங்கெங்கும் அமைந்துள்ளன என்பதைக் கூறுகின்றது.

அங்குள்ள மாளிகைகளில்  நெடிதுயர்ந்து  நீற்று அசையும் கொடிகள் எங்கெங்கும்  விண்ணில் பறக்கின்றன! இதனைச் சேக்கிழார் ‘’நீடு கேதனங்கள்’’ என்று பாடுகிறார்.  அடுத்து நிதி நிகேதனங்கள் எங்கும் என்கிறார். ‘’அம் மாளிகைகளுக்குள் செல்வத்தின் வளத்தை எடுத்துக் காட்டும் பொற்கூடங்கள் எங்கெங்கும் உள்ளன ‘’ என்பது இதன் பொருள். இங்கு கேதனங்கள் என்ற சொல் இருவகைப் பொருளாக தருகிறது.

பூவிதழ்களால் கட்டப் பெற்ற மலர் மாலைகள் எங்கெங்கும் உள்ளன! இதனைச் சேக்கிழார் , ‘’தோடு சூழ் மாலை எங்கும் ‘’ என்று பாடுகிறார். அடுத்து, கணவன் மனைவியர் இணைந்து மாலையணிந்து மகிழும் இடங்கள் எங்கும் உள்ளன! என்பதை, ‘’ துணைவர் சூழ்  மாலை எங்கும் ‘’ என்கிறார். இங்கு மாலை என்ற சொல்  அடுத்தடுத்து  வந்துள்ளது.

இனி முழுப்பாடலையும் பார்ப்போம்.

’மாடு போதகங்கள் எங்கும் வண்டு போதகங்கள் எங்கும்
 பாடும் அம்மனைகள் எங்கும் பயிலும் அம்மனைகள் எங்கும்
 நீடு கேதனங்கள் எங்கும் நிதி நிகேதனங்கள் எங்கும்
 தோடு சூழ் மாலை எங்கும் துணைவர் சூழ் மாலை எங்கும்.”

இப்பாடலில் அலையும் யானைக் கன்றுகள், சோலையில் பூக்கும் மலர்கள், அம்மானைப் பாடல் பாடுவோர், வளமனைகளில் வாழ்வோர்,கொடியசையும் மாளிகை மக்கள், பெருஞ் செல்வம் பெற்றோர், மலர்ச்சோலை வைத்தோர், மாலை சூடி மகிழ்வோர் ஆகியோரின் சிறப்பை இரட்டுற மொழிதல் என்ற அணி நயத்துடன் சேக்கிழார் பாடியுள்ளார். இதன் வழியே திருவாரூரின்  இயற்கை வளம், செல்வச்சிறப்பு, செல்வவளம் ஆகியவற்றை உணரலாம்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *