இலக்கியம்கவிதைகள்

காண அருள் தாமுருகா !

 

மகாதேவஐயர் ஜெயராமசர்மா
மெல்பேண் .. அவுஸ்திரேலியா

தேவரை வதைத்த சூரர்
திருந்திடச் செய்த வேலா
பூவுலகு எங்கும் அசுரர்
புரிகின்ற கொடுமை தன்னால்
மேவிய துயரம் கொண்டு
விக்கித்து நிற்கும் மக்கள்
ஓலங்கள் போக நீயும்
ஓடியே வருவாய் ஐயா !

உபதேசம் அளித்த குருவே
உலகுளோர் துயரம் பார்நீ
நிலையான அறத்தை மறந்து
நிற்கின்றார் மனதை மாற்று
விலைபேசும் நிலையில் உள்ளார்
வெற்றிவேல் என்றிட செய்வாய்
குலையாத ஞானம் தன்னை
குமராநீ கொடுக்க வேண்டும் !

காமம் நிறை மக்களெலாம்
காமம் அற்ற கந்தனுக்கு
கல்யாணம் செய்து வைத்து
களிப் பெய்தி நின்றிடுவர்
சேமம் உற வாழ்வதற்கு
சேவல் கொடி வேலவனார்
பாதமதை பற்றி நின்று
பாடி நிற்போம் கவசந்தனை

வள்ளி தெய்வ யானையுடன்
காட்சி தரும் திருமுருகா
உள்ள மெலாம் உன்நினைவை
இருத்தி விடு திருமுருகா
கள்ளம் நிறை எண்ணமெலாம்
கழன்றோடச் செய் முருகா
கால மெலாம் திருமுகத்தை
காண அருள் தாமுருகா !

Comment here