-முனைவர் த. மகாலெட்சுமி

கம்பராமாயணத்தில் தசரதன் என்ற அரசன் அயோத்தியை ஆண்டு வந்தான். அவனுக்கு கோசலை, கைகேயி, சுமத்திரை என்ற மூன்று மனைவியர்கள் இருந்தனர். எல்லா செல்வமும் இருந்தும் குழந்தைச் செல்வம் மட்டும் இல்லை. அதனால் தசரதன் பெரிதும் வருந்தினான். யாகங்கள் பல செய்தான். யாகங்களின்  பயனாக அவன் மனைவியர் மூவரும் கருவுற்றனர். தசரத‌னி‌ன் முதல் மனைவி கோசலைக்கு திருமால் இராமராகப் பிறந்தார். இரண்டாம் மனைவி கைகேயிக்கு பரதன் பிறந்தான். மூன்றாம் மனைவி சுமத்திரைக்கு இலக்குவன், சத்துருக்கன் என்ற இருவரும் பிறந்தனர். தசரதன் தம் மக்கள் நால்வரையும் குலகுருவாகிய வசிட்டரிடம் கல்வி கற்கச் செய்தான். அவர்கள் நால்வரும் கல்வி கேள்விகளிலும், போர்ப்பயிற்சிகளிலும் சிறந்து விளங்கினர். கைகேயி ஒருமுறை போரில் தசரத மன்னனின் உயிரைக் காப்பாற்றினாள். அதற்குப் பரிசாக தசரத மன்னர் கைகேயி விரும்பும் வரங்களை அளிப்பதாக வாக்களித்தார். இந்த வரங்களின் துணையோடு, ராமன் பட்டம் சூடும் வேளையில் கைகேயி, கூனியின் தூண்டுதலால் ஆட்சிப் பொறுப்பை தன் மகன் பரதனுக்கும், பதினான்கு ஆண்டு வனவாசத்தை இராமனுக்கும் பெற்றுத் தந்தாள். இத்தகைய பாத்திரமேற்றிருக்கும் கைகேயி பற்றிச் சுருக்கமாகக் காண்போம்.

கைகேயியின் பிறப்பு

கைகேயியைப் பற்றிப் பலரும் பல்வேறு விதமாகப் பேசுகின்றனர். இவளை ஏசுபவர்களும் உண்டு. உத்தமமான கைகேயியைப் பற்றிய உண்மையான தகவல் இதுதான்! துருபதன் மகள் திரௌபதி. சனகன் மகள் சானகி. பாஞ்சாலன் மகள் பாஞ்சாலி என்பதைப் போல, கேகய மன்னன் மகள் என்பதால் கைகேயி என்று பெயரே தவிர, கைகேயிக்குப் பெற்றோர் வைத்த பெயர் அதுவல்ல. கேகய தேசத்தின் மன்னர் அச்வபதி. தலைசிறந்த தர்மவான். எல்லாக் கலைகளிலும் மிகுந்த அனுபவசாலி. வைச்வானர என்பது வித்தைகளில் மிகவும் தேர்ந்த வித்தை. அதில் அவர் தேர்ச்சி பெற்றவர். அத்துடன் சரசுவதி தேவியை உபாசிக்கும் பக்தர். ஒரு நாள் பூஜையை முடித்து எழுந்தார் மன்னர் அச்வபதி. எதிர்பாராத விதமாகக் கையில் வீணையுடன் பால வடிவத்தில் சரசுவதிதேவி தரிசனம் தந்தாள். ஆனந்தத்தின் எல்லையை அடைந்த மன்னர், அம்பிகையை வலம் வந்து துதித்தார். தன் உள்ளத்தில் இருந்ததை வெளிப்படுத்தினார். அம்மா! உனக்குச் சமமான குழந்தையை எனக்குத் தந்தருள வேண்டும். இதுவே நான் கேட்கும் வரம்! என வேண்டினார்.

சரசுவதி சிரித்தவாறு, எனக்குச் சமமாகவா.. சரிதான்! நானேதான் உனக்குப் பெண்ணாக அவதரிக்க வேண்டும். நீ ஒன்று செய். ஐப்பசி மாதப் பவுர்ணமி அன்று சாரசுவத இஷ்டீ என்ற யாகம் செய். நான் அந்த யாகத் தீயில் தோன்றி, உனது வீட்டில் உன் குழந்தையாகவே வளர்வேன்! என்று சொல்லிவிட்டு மறைந்தாள் சரசுவதி. ஐப்பசி மாத பவுர்ணமியில் சரசுவதி சொன்ன சாரசுவத இஷ்டீ யாகத்தை முறைப்படி செய்தார் அச்வபதி. கௌதம முனிவர், முனிவர்களுக்குத் தலைவராக இருந்து யாகத்தை நடத்தினார். மாலை நேரம். யாக அக்னியில் இருந்து சரசுவதிதேவி வெளிப்பட்டாள். தங்க மயமான பாத்திரத்தில் நிறைந்திருந்த அவிர்பாகத்தை (யாகத்தீயில் தேவர்களுக்காகப் போடப்படும் சாதம்) சுட்டிக் காட்டியபடி, அச்வபதி மன்னா! உனது அபரிமிதமான அன்பின் காரணமாக இந்த அவிர்பாகம் மிகவும் இனிமையாக உள்ளது. இதை நான் மட்டும் ஏற்றால் சரியாகாது. இதோ, இங்குள்ள தேவர்கள் அனைவருக்கும் இந்த அவிர்பாகத்தைப் பங்கிட்டுக் கொடு! அப்போதுதான் எனக்கு திருப்தி உண்டாகும்! என்றாள். அவிர்பாகம் அங்கிருந்த தேவர்களுக்கெல்லாம் பங்கிட்டுக் கொடுக்கப்பட்டது.

தங்களுக்குக் கிடைத்த அவிர்பாகத்தை (சாதத்தை) சிவபெருமானுக்கு சமர்ப்பணம் செய்தார்கள் தேவர்கள். இது ஏன்? சிவபெருமானுக்கு அவிர்பாகம் தராமல் அவரை விலக்கிவிட்டு யாகம் செய்த தட்சனும், அதில் கலந்து கொண்ட தேவர்களும் அவமானப்பட்டு, சிவபெருமானிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்ட நேரம் அது. எனவே, தட்ச யாகத்தில் கலந்து கொண்ட பாவம் தீர்வதற்கு அச்வபதி மன்னர் தங்களுக்குத் தந்த அவிர்பாகத்தை சிவபெருமானுக்குச் சமர்ப்பித்தார்கள்.

ஐப்பசி மாதத்தில் சிவ பெருமானுக்கு நாம் செய்யும் அன்னாபிசேகத்துக்கு இதுவே மூலாதாரமாக அமைந்துள்ளது. யாகத்தில் அச்வபதி மன்னருக்கு தரிசனம் தந்த தேவி, அவரது பிரார்த்தனைக்கு இணங்கி ஒரு மானிடப் பெண்ணாக, கேகய ராஜனான அச்வபதிக்கு மகளாக அவரிடம் வந்தாள். இவளே கைகேயி. இவளுக்குப் பெற்றோர் வைத்த பெயர் சரசுவதி. நாளடைவில், தன் தந்தை பார்த்து வந்த வேலையை தானே பார்க்க ஆரம்பித்தாள் சரசுவதி. அது என்ன வேலை? அச்வபதி மன்னர் வேதத்திலும் கலைகளிலும் மிகுந்த திறமைசாலி என்பதால், போன ஜென்மத்தின் பலாபலன்களைக் கண்டறியும் சக்தி அவருக்கு உண்டு. பிரச்சனை என்று தன்னை நாடி வருபவர்களுக்கு, அவரவர் பூர்வ ஜென்மத்தையும், அதனால் ஏற்படும் சுக துக்கங்களையும் உணர்ந்து இன்னது செய்யலாம், இன்னது செய்யக் கூடாது என்று சொல்லி நல்வழி காட்டுவார். இதுதான் வைச்வானர வித்தை. அதனால் அரசர்கள் பலர் வந்து தங்கள் அல்லல்களைத் தீர்த்துக் கொண்டு போவார்கள்.

இத்தகைய வேலையைத்தான் சரசுவதியும் செய்ய ஆரம்பித்தாள். அடுத்தவர் குறை தீர்க்கும் பணியை சரசுவதி செய்யட்டும். அவளைத் தேடி அயோத்தி மன்னர் வரப் போகிறார். நாம் அவரிடம் போகலாம். அயோத்தி மன்னர் தசரதருக்குக் குழந்தை இல்லை, இதற்கு என்ன செய்யலாம்? சரி! நாமும் கேகய மன்னர் அச்வபதியிடம் போய் வழி கேட்க வேண்டியதுதான்! என்று தீர்மானித்த தசரதர், கேகய நாட்டுக்குக் கிளம்பினார். தசரதரை வரவேற்றாள் சரசுவதி. மன்னா! என்ன காரியமாக வந்தீர்கள்? என்றாள். பெண்ணே! மழலைச் செல்வம் இல்லாத மனக்குறைதான் எனக்கு. அதற்காக அச்வபதியைப் பார்க்க வந்தேன் என்றார் தசரதர்.

சரசுவதி வழி சொன்னாள். அதில் தசரதரின் பூர்வ ஜென்ம வரலாறே இருந்தது. தசரதர் திகைத்தார். மன்னா! போன பிறவியில் நீங்கள், உலகுக்கே ஒளி கொடுக்கும் சூரிய பகவானாக இருந்தீர்கள். காயத்ரி, சாவித்ரி, சரசுவதி என மூன்று மனைவிகள் இருந்தார்கள். நீங்கள் இந்தப் பிறவியில் தசரதராகப் பிறந்திருக்கிறீர்கள். உங்கள் மூன்று மனைவியரும் இந்தப் பிறவியிலும் உங்களை மணந்து கொள்வதற்காக அரசிகளாகப் பிறந்திருக்கிறார்கள். அதில் காயத்ரிதான் உங்கள் முதல் மனைவி கௌசல்யாதேவி. சாவித்ரி. சுமித்ராதேவி. நான் சரசுவதி. நீங்கள் என்னையும் மணம் செய்து கொண்டால், உங்கள் தோசங்கள் நீங்கும். மேலும், சாட்சாத் மகாவிஷ்ணுவே உங்கள் பரம்பரை பூசா விக்கிரமாக ஸ்ரீரங்கநாதர் என்ற பெயரில் விளங்கி வருகிறார். அவரை பூசை செய்யுங்கள். உங்கள் விருப்பம் நிறைவேறும். திருமணம் குறித்து  என் தந்தையிடம் பேசுங்கள்! என்றாள். மனக் கவலை தீர மருந்தைத் தெரிந்து கொண்ட தசரதர், அச்வபதி மன்னரைச் சந்தித்தார். நடந்ததை விவரித்தார். அச்வபதியும் ஒப்புக் கொண்டார். சரசுவதிக்கும் தசரதருக்கும் திருமணம் நடந்தது. இந்த சரசுவதி, கேகய இளவரசி என்பதால் கைகேயி என அழைக்கப்பட்டாள்.

கைகேயிக்கும் இராமனுக்கும் உள்ள உறவு நிலை                                                     

கைகேயியிக்கும் இராமனுக்கும் இடையே இருந்த உறவு மிகவும் ஆழமானது. அவன் தாயான கோசலையிடம் அவன் வளரவில்லை. அவன் கைகேயிடமே வளர்ந்தவன். இராமனுக்கு முடிசூட்ட தீர்மானம் ஆனவுடனேயே எல்லோரையும் விட அதிகமாய் மகிழ்ந்தவள் கைகேயி. இராமனைப் போன்ற மகன் இருக்கையில் எனக்கு என்ன குறை என்று பெருமிதப்பட்டு மகிழ்ந்தாள். முதலில் கூனி தன் சதிவலையைப் பின்ன ஆரம்பித்த போது அவளுக்கு உண்டான கோபம் சிறிதல்ல. கடுமையான வார்த்தைகளால்  அவளை ஏசுதலாய் பேசி விமர்சிக்கிறாள்.

“எனக்கு நன்மை செய்பவளும் அல்ல நீ, என் மகன் பரதனுக்கு நன்மை செய்பவளும் அல்ல நீ. தர்மப்படி பார்த்தால் உனக்கே நீ நன்மை செய்பவள் அல்ல” (இராமனைப் போன்ற ஒரு உயரிய குணம் படைத்த ஒருவனுக்குக் கெடுதல் நினைப்பதால் நீ பெரிய பாவத்தை சம்பாதிப்பதால் உனக்கே நீ கெடுதல் செய்து கொள்கிறாய் என்று மறைமுகமாய் சொல்கிறாள்) என்றெல்லாம் கைகேயி கூனியை ஏசிப்பேசுகிறாள்.

எனக்கு நல்லையும் அல்லை நீ! என் மகன் பரதன்
தனக்கு நல்லையும் அல்லை நீ! தருமமே நோக்கின்
உனக்கு நல்லையும் அல்லை! வந்(து) ஊழ்வினை தூண்ட
மனக்கு நல்லன சொல்லினை; மதியிலா மனத்தோய்!
(கம்ப.1471)

என்று சொல்லக் கேட்டதும், இராமனைப் பற்றி கெடுதலாகச் சொல்வது அவன் மீது அளவுகடந்த பாசம் வைத்திருக்கும் இவளிடம் எடுபடாது என்று அறிந்தாள் கூனி. ‘கோசலைக்கு அதிகாரம் கூடும், நீயும் உன் மகனும் ஓரம் கட்டப்படுவீர்கள்’ என்ற வாதத்தை திறம்பட கைகேயி முன் வைக்கிறாள். கடைசியில் கைகேயி மனம் மாறுகிறது.

கைகேயியின் சூழ்வினை

நல்லவளாக இருந்த கைகேயி, மந்தரையின் சூழ்ச்சியால் மனமாற்றம் ஏற்பட்டு இராமனைக் காடு புகப் பணித்தாள். ஆயினும் நல் அரசனாய் வருவதற்குத் தவம் மேற்கொண்டு, புண்ணியத் துறைகள் நீராடி 14 ஆண்டுகள் கழித்து வா என்றும். 14 ஆண்டுகள் என்பதை ஏழு-இரண்டு ஆண்டுகள் என்று சுருக்கிக் கூறியும், ‘வா’ என்றும் கூறினாள். மேலும் ‘இயம்பினன் அரசன்’ என்பதால் அரசு ஆணை இது மீறுதற்கு அரிது என்பதைச் சுட்டினாள். ‘பரதனே’ என்பதில் அவளின் புத்திர பாசம் மேலோங்கியது.

ஆழி சூழ் உலகம் எல்லாம்
பரதனே ஆள, நீ போய்த்
தாழ் இரும் சடைகள் தாங்கித்,
தாங்க அரும் தவம் மேற் கொண்டு,
பூழி வெம் கானம் நண்ணிப்,
புண்ணியத் துறைகள் ஆடி,
ஏழ் இரண்டு ஆண்டின் வா ‘என்று
இயம்பினன் அரசன்‘‘ என்றாள்.
(அயோத்தி – கைகேயி  சூழ்வினை.1601)

தசரதனிடம் பரதன் நாடாள வேண்டும் என்றும், இராமன் 14 வருடங்கள் காட்டுக்குச் செல்ல வேண்டும் என்றும் வரம் கேட்கிறாள்.

கைகேயி இராமனை 14 ஆண்டுகள் வனவாசம் அனுப்பக் காரணம்

யுகங்கள் 4 வகைப்படும். அவை கிருத, திரேதா, துவாபர, கலி யுகங்கள். இந்த கலியுகத்தில் தந்தையும், மகனும் 12 ஆண்டுகள் பிரிந்திருந்தால் (ஒருவரை ஒருவர் சந்திக்காமல்) 12 ஆண்டுகள் கழிந்தபின்பு தந்தை, மகன் என்கிற உறவு முறிந்து விடும், என்கிறது இந்துமத சாத்திரம். இந்த கருத்து துவாபர யுகத்தில் 13 ஆண்டுகள், திரேதாயுகத்தில் 14 ஆண்டுகள், கிருத யுகத்தில் 15 ஆண்டுகள். இராமாயணம் நடந்த காலம் திரேதா யுகம். இதில் தசரதனும், இராமனும் 14 ஆண்டுகள் சந்திக்காமல் இருந்தால் தந்தை, மகன் உறவு இல்லாமல் போய்விடும். எனவே இராமன் 14 ஆண்டுகள் வனவாசம் கழித்து வந்தால் இராமனுக்கு பட்டம் கிடைக்காது, பரதனே அரசாள்வான் என்பது கைகேயியின் கணக்கீடாகும்.

தசரதன் துக்கப் பெருங்கடலில் மூழ்குகிறான். முதலில் கைகேயிடம் புலம்புகிறான். பின், இராமனை காட்டுக்கு அனுப்பிவிட்டு அவனை நினைத்து புலம்புகிறான். இராமன்மேல் கொண்ட பாசம் ஒருபுறம், இராசநீதி தவறிவிடக் கூடாதே என்ற ஆதங்கம் மறுபுறம், கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டுமே என்ற கவலை இன்னொரு புறம்… தசரதன் தவிக்கிறான்…. அந்தத் தவிப்பை கம்பன் இங்கே படம் பிடிக்கிறான்.

“என் கண்களைக் கேள். என் உயிரைக் கேள், இந்த நாட்டையே எடுத்துக் கொள். உன் மகன் ஆளட்டும். இரண்டாவது வரத்தை மட்டும் திரும்ப வாங்கிக் கொள். இராமனை இங்கேயே இருக்க விடு” என்று கதறுகிறான்.

கண்ணே வேண்டும் எனினும் ஈயக்கடவேன்; என்
உள்நேர் ஆவி வேண்டினும் இன்றே உனதன்றோ?
பெண்ணே! வண்மைக் கேகயன் மானே! பெறுவாயேல்
மண்ணே கொள் நீ மற்றையது ஒன்றும் மற’ என்றான்  (கம்ப.1611)

கைகேயி இரண்டு வரங்களை கேட்டுவிட்டாள். ஒன்று பரதன் நாடாளவும், மற்றது இராமன் காடாளவும். என் கண்ணை வேண்டுமானாலும் தருகிறேன், என் உயிரை வேண்டுமானாலும் தருகிறேன், முதல் வரத்தை பெற்றுக் கொள், இரண்டாவது வரத்தை மற என்று கெஞ்சுகிறான்.

கண்ணே வேண்டும் என்னினும் ஈயக் கடவேன் = என் கண்கள் வேண்டும் என்றாலும் நான் தருகிறேன்.

என் உள்நேர் ஆவி வேண்டினும் இன்றே உனதன்றோ? = என் உயிர் வேண்டுமா, அது உனது, எடுத்துக் கொள்.

பெண்ணே! நீ பெண் அல்லவா (கொஞ்சம் பெண்மையின் இரக்கம் இருக்காதா என்று சொல்லிப் பார்க்கிறான்)

ண்மைக் கைகேயன் மானே!  இப்படிச் சொல்லியும் அவள் அசைந்த பாடு இல்லை… கைகேயன் குலத்துப் பிறந்த மானே

பெறுவாயேல் = வேண்டும் என்றால்

நீ மற்றையது ஒன்றும் மற = அந்த இன்னொரு வரத்தை மறந்து விடு (கேட்காதே என்று சொல்லவில்லை, மற என்கிறான் )

நின்மகன் ஆள்வான்; நீ இனிது ஆள்வாய்; நிலம் எல்லாம்
உன் வயம் ஆமே! ஆளுதி தந்தேன்; உரை குன்றேன்;
என் மகன், என் கண், என் உயிர் எல்லா உயிர்கட்கும்
நன்மகன் இந்த நாடிறவாமை நய’ என்றான். (கம்ப.1526)

கைகேயி மனம் இரங்கவில்லை. இராமனுக்கு சொல்லி அனுப்புகிறாள். இராமன் கைகேயி மாளிகையை நோக்கிச் செல்வதைப் பார்த்த அயோத்தி மக்கள் சொல்வது கைகேயி-இராமன் நட்பை அழகாய் விளக்குகிறது. “இராமன் தாயிடம் வளர்ந்தவனல்ல. அவனை வளர்க்கும் பாக்கியத்தை தவமிருந்து கைகேயியே பெற்றிருக்கிறாள். அப்படிப்பட்டவளுக்கு அயோத்தி மன்னனாக இராமன் முடிசூடுவதில் இருக்கும் பேரானந்தத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது” என்று மக்கள் பேசிக் கொள்கிறார்கள்.

தாய்கையில் வளர்ந்திலன்; வளர்த்தது தவத்தால்
கேகயன் மடந்தை; கிளர்ஞாலம் இவன் ஆள
ஈகையில் உவந்தவள், இயற்கை இதென்றால்
தோகை அவள் பேருவகை சொல்லல் அரிது என்பார். (கம்ப.1591)

இராமனைக் கண்டு அந்தக் கொடிய கட்டளையைச் சொல்ல தசரதன் நாக்கு எழவில்லை. கைகேயியே அந்தக் கட்டளையை மன்னன் சொன்னதாகச் சொல்கிறாள். அந்த இடத்தில் இராமன் கைகேயியிடம் முகமலர்ச்சி (இராமனின் முகம் வரைந்த செந்தாமரை போல் மாறாமல் இருந்ததென்று கூறுகிறார் கம்பர்) குறையாமல் சொல்கின்ற சொற்கள் மிக அழகானவை. “மன்னன் சொல்லா விட்டால் என்ன நீங்கள் சொன்னால் நான் மறுக்கவா போகிறேன். என் தம்பிக்குக் கிடைத்த செல்வம் எனக்கே கிடைத்தது போல் அல்லவா? நான் இப்போதே போகிறேன். விடை கொடுங்கள்.”

மன்னவன் பணி அன்றாகில் நும்பணி மறுப்பனோ? என்
பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றதன்றோ
என் இனி உறுதி அப்பால்; இப்பணி தலை மேல் கொண்டேன்
மின் ஒளிர்க் கானம் இன்றே போகின்றேன் விடையும் கொண்டேன் (கம்ப.1604)

தசரதன் மூர்ச்சையாகி மயங்கி விழுகிறான். பின் “நீ என் மனைவியும் அல்ல. பரதன் என் மகனுமல்ல” என்று தசரதன் மனம் வெறுத்துக் கைகேயியை ஒதுக்குகிறான். கைகேயியிடம் ஒளிவு மறைவு கிடையாது. குலகுரு வசிட்டர் தசரதனுக்கு என்ன ஆயிற்று என்று கேட்ட போதும் சரி, பின் பரதன் வந்து கேட்ட போதும் சரி தன் வரங்களைப் பற்றியும் அதனால் தசரதனுக்கு ஏற்பட்ட நிலையையும் ஒளிக்காமல் அப்படியே சொல்கிறாள். அவர்கள் இருவரிடமும் வசவுகளையும் வாங்கிக் கொள்கிறாள். பரதன் கோபப்பட்டு “நீ என் தாயே அல்ல” என்று சொல்லிவிட்டுப் போனபின் கைகேயி இராமாயணத்தில் பேச்சிழக்கிறாள். பின் அவள் இராமாயணத்தில் ஒரு வார்த்தை கூடப் பேசியதாய் தகவல் இல்லை.

எந்த மகனுக்காக அவள் அரச பதவியை வரமாக வாங்கினாளோ அந்த மகன் தன் அண்ணனின் செருப்பைக் கொண்டு வந்து சிம்மாசனத்தில் வைத்து ஒரு துறவியைப்போல் வாழ ஆரம்பித்தபோது அவள் மனம் துடித்திருக்க வேண்டும். தன் வரங்கள் தனக்கு சாபமாக மாறியதை உணர்ந்து மீளாத்துயரில் ஆழ்ந்திருக்க வேண்டும். ஆனால் அதை நம் கற்பனைக்கே விட்டு விடுகிறார்கள் வால்மீகியும், கம்பனும். இராமனைக் காண காட்டுக்கு மற்றவர்கள் போன போது அவளும் கோசலையுடனும், சுமத்திரையுடனும் சென்றாள் என்று மட்டும் அவர்கள் சொல்கிறார்கள். அந்த ஒரு செய்கையில் தன் தவற்றை உணர்ந்து விட்டதாக அவள் அறிவிக்கிறாள் என்றே சொல்ல வேண்டும்.

இராமன் அயோத்தியில் காட்டிய அதே பாசத்தைக் காட்டிலும் காட்டுகிறான். தாயர் மூவரையும் ஒரு போலவே தொழுது எழுகிறான். அவன் மனத்தில் கைகேயியிடம் சிறிதும் வருத்தமில்லை. அவன் அவள்மீது வைத்திருக்கும் பாசத்தில் சிறிதும் குறைவில்லை. கடைசியில் வானுலகில் இருந்து இராமனைக் காண வரும் தசரதனிடம் கேட்கும் வரம் ஒப்புயர்வில்லாததாக அமைகிறது.

தசரதன் எப்போது கைகேயியைத் தன் மனைவியல்ல, பரதன் மகனுமல்ல என்று துறந்து விட்டானோ அப்போது முதல் இராமன் கைகேயியைத் தாய் என்று அழைப்பது தந்தை சொல்லை மீறிய செயலாக உள்ளது. ஆனால் இராமன் கைகேயிமீது வைத்துள்ள பாசம் அளப்பரியது. அவளுடைய ஒரு செய்கையை வைத்து அவள் முன்பெல்லாம் காட்டிய பாசத்தை மறக்க அவன் தயாரில்லை என்பதை உணர்த்துகிறது. அதனால் தசரதனிடம் “தீயவள் என்று நீங்கள் துறந்த என் தெய்வத்தையும், அவள் மகனையும் மீண்டும் என் தாயும், தம்பியுமாக அனுமதி வேண்டும்” என்று அனுமதி கேட்கிறான். அப்போது கூட அவளைத் தாயென்று அவனால் அழைக்க முடியவில்லை. குறைத்துச் சொல்லவோ மனம் ஒப்பவில்லை. எனவே தாயான கைகேயியை ‘தெய்வம்’ என்று உயர்த்துகிற பண்பைக் காணலாம்.

தீயள் என்று நீ துறந்த என் தெய்வமும் மகனும்
தாயும் தம்பியும் ஆம் வரம் தருகெனத் தாழ்ந்தான். (கம்ப.10079)

இதைக் கேட்டு உலகமே அவனைத் தொழுதது என்கிறார் கம்பர். இதனால் இராமன் கடைசி வரை கைகேயியின் மீது தாய்ப்பாசம் குறையாமல் இருந்தான் என்பது புலப்படுகிறது.

இராமன் காடு சென்றதால் கைகேயிக்கு என்ன நன்மை என்றால் எதுவுமே இல்லை. மாறாகத் தன் கணவனான தசரதனை இழந்து விதவையாகிப் போனமை; தன்மகன் பரதனின் வெறுப்புக்கு ஆளாகியமை; சிற்றன்னையாக இருந்தபோதிலும் தன் தாய் போல கைகேயிக்கு மதிப்பளித்த இராமனை காட்டிற்கு அனுப்பியமை; இதனால் அயோத்தி மக்களின் ஆத்திரத்திற்கு ஆட்பட்டமை எனப் பல வழிகளிலும் கைகேயி துன்பப்பட்டாள். அதேநேரம் கூனியாகிய மந்தரை இராமனைக் காட்டிற்கு அனுப்பியதன் மூலம் தனது சதித்திட்டத்தை நிறைவேற்றிக் களிப்புற்றாள்.

தன் கணவனுடைய இன்னொரு மனைவிக்குப் பிறந்தவனாக இருந்தாலும் இராமனை தன் மகன் போல் பாவித்தவள். இதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டால் இன்று சித்தியரால் முதல் மனைவி பிள்ளைகளுக்கு வரும் கடினம் வராது. இரண்டாவது பாதி கைகேயி படி நடக்கக்கூடாது என்பதற்காக ஒரு நேர்மறையான பாத்திரம். கூடவே இருந்தவர்கள் என்றாலும் அவர்கள் சொல்வதை அப்படியே கேட்டால் ஆபத்து தான் என்பதை உணர்த்திய பாத்திரம்.

இக்கட்டுரை வழி கைகேயியின் பிறப்பு நிலை மற்றும் மண வாழ்க்கை நிலை வெளிப்பட்டு இருப்பினும் இராமனைத் தன் மகனாகவே பாவித்து வளர்த்த பாங்கு சிறப்பிற்குரியது. எனினும் சூழ்ச்சிக்காரி மந்தரை(கூனி)யின் சூனியப் பேச்சைக் கேட்டு மனமாற்றம் அடைந்து தன் மகன் பரதனை அரியணையில் அமர்த்த நினைப்பது மற்றும் இராமனைப் பதினான்கு ஆண்டுகள் காட்டுக்கு அனுப்புவது கதைக்கு வேண்டுமானால் சிறப்பாக இருக்கலாம் ஆனால் உண்மையில் கைகேயி கேட்பார் பேச்சைக் கேட்பவளாகவே காட்டப்படுகிறாள் என்பது நன்கு விளங்கும். 

துணை நூற்கள்

  1. கம்பராமாயணம் – ஆரண்ய காண்டம் உரையுடன், கம்பன் அறநிலை, கோவை-37
  2. ஸ்ரீமத் கம்பராமாயணம், புலவர் சி. திருநாவுக்கரசு, நர்மதா பதிப்பகம், தி.நகர், சென்னை-17
  3. கம்பர், மூதறிஞர் வ.சுப. மாணிக்கம், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம்-1
  4. கம்பன் புதிய பார்வை, அ.ச. ஞானசம்பந்தன், கங்கை புத்தக நிலையம், தி.நகர், சென்னை-17
  5. கம்பன் கற்பனை, முனைவர் ச.வே. சுப்பிரமணியன், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம்-1

*****

கட்டுரையாளர் – முனைவர்பட்ட மேலாய்வாளர்(யு.ஜி.சி.)
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை – 113

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “கம்பனின் படைப்பில் கைகேயியின் மனம்

  1. 14 ஆண்டு காரணம் சிறப்பான செய்தி வாழ்த்துகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *