வாழ்ந்து பார்க்கலாமே 43

0

க. பாலசுப்பிரமணியன்

 

மன அழுத்தங்களும் தோல்விகளும்

வாழ்க்கையிலே பல பேர்கள் நல்ல அறிஞர்களாக இருந்தாலும், நன்கு படித்தவர்களாக இருந்தாலும், நல்ல திறனுடையவர்களாக இருந்தாலும் அடிக்கடி தோல்வியைத் தழுவிக்கொள்கின்றனர். “இவ்வளவு இருந்தும் நாம் வாழ்க்கையில் வெற்றி பெற முடியவில்லையே” என்ற ஆதங்கத்தில் தங்களைத் தாங்களே வருத்திக்கொள்கின்றனர். இதற்கு ஒரு முக்கிய காரணம் – அவர்களில் பலர் மன அழுத்தங்களுக்கு இரையாகித் தங்கள் வெற்றிப்பாதைகளுக்குத் தேவையான சக்தியையும் முழுக்கவனத்தையும் இழந்து தடுமாறுவதால் மட்டுமே.

 தற்கால சமுதாயத்தின் வாழ்க்கை மேடையில் பலரும் இந்த மன அழுத்தத்திற்கு இரையாகி நிம்மதியையும் மகிழ்ச்சியையும் இழந்து நிற்கின்றனர். தேவைகளை அதிகரித்துக்கொண்டு அவைகளை அடைய முடியாததால் ஒரு பொய்யான சமாளிக்க முடியாத வழிமுறைகளை மேற்கொண்டு சிறிது காலத்திலேயே மன அழுத்தங்களுக்கு இரையாகி வாழ்க்கையிலே தோல்வியடைந்துவிட்டோம் என்ற தவறான கருத்தை மனதில் நிறுத்தி வாழ்க்கையை முடித்துக் கொள்வதற்குத் தயாராகி விடுகின்றனர்.

இந்த மாதிரியான மன அழுத்தங்களுக்குப் பல காரணங்கள் உண்டு.

  1. நாம் செய்கின்ற எல்லா வேலைகளையும் நூறு விழுக்காடு சரியாகச் செய்யவேண்டும் (urge for perfection) என்ற ஒரு ஆதங்கம். இது ஒரு உன்னதமான எண்ணம்தான். இது ஒரு உயரிய நோக்கம்தான். ஆனால் இது அவ்வளவு எளிதில் எல்லோருக்கும் எல்லா நேரங்களிலும் எல்லாச் சூழ்நிலைகளும் நடக்கக்கூடியது அல்ல. ஆனால் அதற்கான முயற்சிகளை நாம் நிச்சயமாகக் கைவிடக் கூடாது. எந்தச் செயலிலும் குறைகள் இருக்க வாய்ப்புகள் உண்டு. அவைகளை அறிந்து அந்தக் குறைகளைத் தொடர்ந்து களைந்து கொண்டு வருதலே வாழ்க்கையின் சிறப்பு. இதுவன்றி குறைகளுக்காகவும் இயலாமைகளுக்காகவும் மனதில் வீணான பயம் மற்றும் தாழ்வு மனப்பான்மைகளை வளர்த்துக்கொள்ளுதல் தோல்விக்குத் தேவையான அடித்தளத்தை அமைந்துவிடும்.
  2. “தங்கள் வாழ்க்கையில் தாங்களே புயலை ஏற்படுத்திக்கொள்பவர்கள் சிலர் உண்டு.” என்பது ஒரு மனோதத்துவக் கணிப்பில் காணப்பட்ட உண்மை. தங்களுடைய அறியாமையினாலேயோ, அரைகுறை அறிவினாலேயோ அல்லது தங்களிடம் இல்லாத ஒரு திறனை இருப்பதாக மற்றவர்களுக்குக் காட்டத்துடிக்கின்ற பொய்யான பக்குவமின்மை காரணமாகவோ ஒரு செயலில் இறங்கி திக்கு முக்காடுபவர்கள் பலருண்டு. பல நேரங்களில் தங்களுக்குத் தெரியாத வியாபாரங்களைத் தொடங்கி அதன் நுணுக்கங்களை அறியாமல் பண இழப்புகளுக்கு ஆளாகி மன அழுத்தத்தில் முன்னேறமுடியாமல் தவித்து தோல்வியைத் தழுவிக்கொண்டவர்கள் பல பேர். ஒரு அலுவலகத்தில் மிகச் சிறப்பாகப் பணிசெய்துக்கொண்டிருந்த ஒருவருக்குப் பாராட்டுகள் குவிந்தவண்ணம் இருந்தன. அதனால் ஏற்பட்ட தன்னுடைய தகுதியைப் பற்றிய ஒரு மாயை அவரைத் தான் அது போன்ற நிறுவனத்திற்குத் தலைவராகவே ஆகிவிட வேண்டும் என்ற ஒரு வெறியை உண்டாக்கி தற்போது இருக்கும் வேலையைத் தூக்கி எறியத் தூண்டியது. அதன்பின் ஓராண்டிற்கும் மேலாக இன்னொரு வேலை கிடைக்காமல் வேறு தொழிலும் தொடங்க முடியாமல் மன அழுத்தங்களுக்கு ஆளாகி மனநல நிபுணர்களைச் சந்திக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. ஒரு சுவரில் தலையை நாமே முட்டிக்கொண்டு வலிக்கின்றதே என்று சொன்னால் அது முட்டாள்தனமான செயலன்றோ? அதைப்போலத்தான் பல நேரங்களில் சிலர் தனக்குத் தானே வேதனைகளையும் துன்பங்களையும் ஏற்படுத்திக்கொள்கின்றனர் ஆகவே தோல்விகளை நாமே ஏற்படுத்திக் கொள்வதைத் தவிர்த்தல் மிக அவசியம்.
  3. பதட்டம், அவசரம் காரணமாக மன அழுத்தங்களை ஏற்படுத்திக்கொண்டு தவறுகளுக்கு இலக்காகி மேலும் மேலும் அதே தவறுகளை திரும்பத் திரும்பச் செய்து “உதவாக்கரை” என்று பலரால் அடைமொழி கொடுக்கப்பட்டு தோல்வியைத் தழுவியவர்கள் சிலர். பதட்டங்கள் ஏற்படுவதற்குப் பல காரணங்கள் உண்டு. மற்றவர்களைவிட தான் அதிகமாகச் சாதிக்க வேண்டும், மற்றவர்களைவிட தான் அதிகம் சேகரிக்க வேண்டும், காலங்கள் கனிவதற்கு முன்னேயே தான் சாதனைகளை நிகழ்த்த வேண்டும், தன்னுடைய சாதனைகளையும் சேகரிப்புகளையும் விட மற்றவர்கள் அதிகம் சேகரிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் – என்ற சிந்தனைகள் மன அழுத்தத்தில் பதட்டங்களை ஏற்படுத்துகின்றன. அது மட்டுமின்றி, நாம் ஒரு செயலைச் செய்யும் பொழுது மற்றவர்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றார்களா அவர்கள் நம்மை எவ்வாறு மதிப்பீடு செய்திருப்பார்கள் என்ற ஒரு சிந்தனை பதட்டங்களை ஏற்படுத்துகின்றது. உதாரணமாக தேர்வுகளுக்குச் செல்லும் மாணவர்கள் பேசிக்கொண்டிருக்கும் பொழுது ” நீ இதைப் படித்துவிட்டாயா?”  “இந்த கேள்விகளெல்லாம் வந்துவிட்டால் என்ன செய்வது என்று தெரியவில்லையே” என்ற கேள்விகள் அவர்களுடைய பதட்டங்களுக்கும் மன அழுத்தங்களுக்கும் சில முன்னுதாரணங்கள். பல நேரங்களில் தேர்வுகளில் மாணவர்கள் இந்த பதட்ட நிலை காரணமாகவே தங்கள் முழுத் திறமையைக் காட்டாமல் தவறி விடுகின்றனர்.

இதே போன்று மிகச் சிறப்பான தகுதி உடையவர்கள் கூட நேர்காணல்களில் பதட்டத்தினாலும் உடனே பதில் சொல்லவேண்டும் என்ற அவசர புத்தியினாலும் தவறுகள் இழைத்துத் தோல்வியை தழுவிக்கொள்கின்றனர்.

மன அழுத்தங்களைத் தவிர்ப்பதற்கான வழிகள் என்ன?

  1. நம்மை நாமே புரிந்துகொள்ளுதல்
  2. நமது திறன்களையும் நமது சூழ்நிலைகளையும் ஏற்றுக்கொள்ளுதல்
  3. நமது செயல்களுக்கான இலக்குகள், வழிமுறைகள், எண்ணப்போக்குகள், திறன்கள் ஆகியவற்றை அலசி ஆராய்ந்து செய்தல்

4.நம்முடைய தனித்தன்மையை உணர்ந்து மற்றவர்களோடு போட்டிபோடாமல் இருத்தல்

  1. இன்ப-துன்பங்களைச் சமமாக நினைத்துச் செயல்படுதல்
  2. உடல்-மனம் இரண்டையும் ஒருங்கிணைத்துக் கட்டுப்பாடாக வைத்தல்
  3. நிகழ்காலத்தில் வாழ்தல் (இறந்த மற்றும் வருங்காலச் சிந்தைங்களுக்கு இரையாகாமல் இருத்தல்)

இது போன்ற பல கருத்துக்கள் நம்மை மன- அழுத்தம் இல்லாத வாழ்வு வாழ்வதற்கு உதவும்.  முயன்று பார்க்கலாமா ?

வாழ்க்கை ஒரு போராட்டம்தான் -ஆனால் இனியது !! – வாழ்ந்து பார்க்கலாமா ?

(தொடரும் )

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *