-மேகலா இராமமூர்த்தி

திரு. சுந்தரம் செந்தில்நாதனின் கைவண்ணத்தில் வெளிவந்திருக்கும் இந்தப் புகைப்படத்தை வல்லமை ஃபிளிக்கர் குழுமத்திலிருந்து தெரிந்தெடுத்துப் படக்கவிதைப் போட்டிக்கு வழங்கியிருக்கின்றார் திருமதி. சாந்தி மாரியப்பன். புகைப்படக் கலைஞர், தேர்வாளர் இருவருக்கும் என் நன்றி!

கடலைப் பார்த்து ஆரவாரிக்கும் இளஞ்சிறார்களைக் காண்கிறோம் படத்தில். இவர்களின் மகிழ்ச்சிக்குக் காரணம் அலையெழுச்சியா அல்லது தாங்கள் எதிர்பார்த்திருக்கும் ஒன்றைக் கண்டதால் ஏற்பட்ட மனவெழுச்சியா என்பதைக் கண்டுபிடித்துத் தம் கவிதையில் ஏற்றும் பொறுப்பை நம் வித்தகக் கவிஞர்களிடம் விட்டுவிடுவோம்!

*****

முங்கிக்குளித்து முத்தெடுப்போரும், வலைவீசி மீன்பிடிப்போரும், உணவுக்கு ருசியூட்டும் உப்பெடுப்போரும் ஆழி அன்னைக்கு அன்பு வணக்கம் செலுத்துவதைக் காண்கிறோம் நாங்குநேரி திருமிகு. வாசஸ்ரீயின் கவிதையில்.

எம் வணக்கம்!

காலை நேர விடியலிலே
கதிரவனுக்கு எம் வணக்கம்
தங்கச் சேலை உடுத்திய
தாயவளின் அலை மடியில்
பயணித்து அனுதினமும்
பல பொருள் ஈட்டுகிறோம்
முங்கிக் குளித்து
முத்து எடுப்போரும் யாம்
மீன் பிடித்துக் கரைக்கு
மீண்ட பின் விற்போரும் யாம்
உணவு ருசிக்க உலகிற்கு
உப்பு அளிப்போரும் யாம்
இத்தனையும் கொடுத்து
இனிதே வாழ்விக்கும்
ஆழி அன்னைக்கும் எங்களின்
அன்பான வணக்கம்
வாழ்த்தி எம்மை
வாழ்விப்பீர் இருவரும்

*****

”ஆதவன் உதிக்கும் அழகிய காலைநேரத்தில் உழைக்கத் தொடங்கினால், அவன் மறையுமுன்னே சாதனை செய்வீர் சத்தியமாய்!” என்று இவ்விளையோரை வாழ்த்துகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

சாதனை செய்வீர்…

ஆதவன் உதிக்கும் நேரம்
அழகிய காலை நேரம்,
வேதனை மறையும் நேரம்
வெற்றியைத் தொடங்கும் நேரம்,
சோதனை செய்திடும் கதிரவன்
சொக்கத் தங்கமாய்க் கடலும்,
சாதனை செய்வீர் இன்றே
சாயும் கதிரின் முன்னே…!

*****

கவிதைகளின் ஊடே தம் கருத்துக்களைச் சிறப்பாய்ச் செப்பியிருக்கும் கவிஞர்களுக்கு என் பாராட்டுக்கள் உரித்தாகுக!

இவ்வாரத்தின் சிறந்த கவிதையாய்த் தேர்வாகியிருப்பது இனி…

சென்றவர் மீள்வரோ!

ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்ற தங்கள்
அப்பாவை, அண்ணாவைத் தம்பிமாரை
மீளவும் தாம் காண்போமா அல்லதன்னார்
தாழமுக்க வலயத்துள் நுழைந்திட்டாரா?

வீசிய சூறாவளியில் சிக்கினாரா?
விதி முடிந்து கடலுக்குப் பலியானாரா?
ஆசையிலே பெருமீனைப் பிடிக்கச் சென்று
அதன் வாய்க்கு இரையாக வீழ்ந்திட்டாரா?

எல்லையிலே அயல் நாட்டுப் படைகள் நின்று
எதிர்ப்படுவோர்க் கின்னல்தரும் இயல்புக் கஞ்சி
தொல்லைக்குள் ளாகாமற் தூர ஓடி
துறை தெரியாதாழ் கடலிற் தொலைந்திட்டாரா?

கொதியறிந்து வலை வீசக் கொஞ்ச தூரம்
கோடறியா தெல்லைதனைத் தாண்டிச் செல்ல
கொலை வெறியில் எதிர்ப் படைஞர் தாக்கினாரா?
கொடுமையினாற் தமர் உயிரைப் போக்கினாரா?

என்று மனங்கவன்றபடி அடி வானத்தை
ஏக்கமுடன் பார்க்கின்றார் கரையில் நின்று
ஒன்றுமிலை கடல் விளிம்பில் உற்றுப்பார்க்க
உருளையென மிதப்பதெது படகா வென்று

ஏது மறியாராகத் தவித்து நின்று
எதிரில் வரும் படகுகளின் வரவு காணக்
கடல் விளிம்பிற் செங்கதிரோன் வரவுக்காகக்
கையுயர்த்திக் காத்திருக்கும் இளையோர் கூட்டம்!

ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றோரின் நிலையறியா இவ்விளையோர் கூட்டம், ”அவர்கள்  பெருமீனுக் கிரையானாரா? எதிர்ப்படைஞரிடம் சிக்கிச் சிதைந்தாரா? துறையறியாது ஆழ்கடலில் தொலைந்திட்டாரா?” என்று கவன்றபடி தமர் நிலையறியக் கடலில் தோன்றும் படகைப் பதைபதைப்போடு பார்த்திருக்கின்றனர்!” என்று இன்றைய சூழலுக்குப் பொருத்தமான சிந்தனையைத் தன் கவிதையில் பதிவுசெய்திருக்கும் திரு. சித்திரவேலு கருணானந்தராஜாவை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

 

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “படக்கவிதைப் போட்டி 187-இன் முடிவுகள்

  1. எனது கவிதையை வாரத்தின் சிறந்த கவிதையாக அறிவித்ததற்கு நெறியாளர் மேகலா இராமமூர்த்திக்கும் வல்லமை குழுமத்திற்கும் எனது நன்றிகளைத் தெரிவிக்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *