சேக்கிழார்   பா நயம் – 13  

திருச்சி புலவர்.இராமமூர்த்தி

========================

அடுத்து, திருவாரூரில் ஆண்ட மனுநீதிச் சோழனின் சிறப்பு கூறப்படுகிறது! திருவாரூர் நகர்ச் சிறப்பு  பெரியபுராணத்துக்கு எவ்வாறு துணை புரிகிறது என்பதைச் சில அகச்சான்றுகளால் விளங்கிக்  கொள்ளலாம்!  திருவாரூரின்  பெருமைக்கு   முதற்காரணம். அந்நகருக்குத்  திருமகளே வந்து சிவபெருமானை வழிபாடு செய்தருளினாள்  என்பதாம். அதற்கு ஆதாரம் திருவாரூரில் பெரிய திருக்கோயிலின்  பெயரே கமலாலயம் என்பதாம்!  இதனைச் சேக்கிழார்,

‘’சொன்ன நாட்டிடைத்  தொன்மையின்  மிக்கது

மன்னு  மாமல  ராள்வழி  பட்டது ‘’

என்று பாடுகிறார்!  மேலும் தியாகேசப் பெருமான் பலகாலம்  பாற்கடலில் மகாவிஷ்ணுவின் இதயத்திலும், பின்னர் பலகாலம் தேவருலகிலும், பின்னர் திருவாரூரிலும்  எழுந்தருளிய சிறப்புடையது.  மேலும் அந்த நகரில்தான், கைலாயத்தில் சுந்தரரை விரும்பிய இருசேடியருள் ஒருத்தியாகிய கமலினி, பரவை நாச்சியாராக வந்துஅவதாரம் செய்த மாளிகை உள்ளது! தொண்டர்கள் தேடும் சிவபிரான், தாமே சுந்தரரைத்  தேடிப்போய்,  சுந்தரருக்காகப் பரவை நாச்சியாரிடம்  இருமுறை தூதுவராக நடந்தருளிய பாதத் தாமரையின் நறுமணம் கமழும் திருவீதி உடையது. இதனைச் சேக்கிழார்,

“இடந்த  ஏனமும்  அன்னமும்  தேடுவார்

தொடர்ந்து கொண்டவன்  தொண்டர்க்குத்  தூதுபோய்

நடந்த  செந்தா  மறையடி  நாறுமால் ‘’

எனப்பாடுகிறார்! இவ்வூரில்தான், சுந்தரமூர்த்தி சுவாமிகளைத் தடுத்தாட்கொண்ட சிவபெருமான், ‘’தில்லை வாழந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்’’ என்று அடி எடுத்துக் கொடுத்தார். அவ்வகையில் உருவான திருத்தொண்டர் புராணத்துக்குப்  பொருளாகிய அடியார் திருக்கூட்டமும் எழுந்தருளிய ஊர்  திருவாரூராகும். இத்தனைச் சிறப்புக்களும் அமைந்த ஊர் திருவாரூராகும். இவ்வூரில்   சோழர்களின் மரபு வழியில், சேக்கிழாரை ஆதரித்த அநபாயச்  சோழன் மரபின் முன்னோனாகிய  மனுநீதிச் சோழன் ஆட்சி புரிந்தான்! அவன் அறநெறி தவறாமல் ஆட்சி செய்ததோடு, வேள்விகள் பல புரிந்து , திருக்கோயி லுக்கான நிபந்தங்களையும் வழங்கினான். அவனுக்கு உலகோர் போற்றத்தக்க முறையில் அருமையான ஆண்மகவு பிறந்தது! அந்த ஆண்மகன் வளரும்போதே  போர்க்கலை ஆட்சிக்கலை, ஆன்மிகம் ஆகியவற்றைப் பயின்றான்

ஒருநாள்  அவன் இளவரசர் பலரும், நாள் வகைப் படையினரும்  நாற்புறமும் சூழ்ந்து வர, அரசவீதியில் மணிகள் ஒலிக்கும் தேரில் ஏறிச்  சென்றான். அப்போது எவரும் அறிந்து கொள்ளாத நிலையில் ஓர்  இளைய ஆன் கன்று இளவரசன் சென்ற தேரின் சக்கரங்களுக்கிடையில் சிக்கி மாண்டது! உடனே இளவரசன், தான் செய்த  பிழையை நீக்கிக் கொள்ளும் கழுவாயை,   தம் நாட்டு மன்னனாகிய தந்தை அதனை அறியும் முன்னரே அந்தணர்களிடம் சென்று  கேட்டான்!  இந்தச் செய்தி பரவியது. அப்போதே தன் அருமைக்  கன்றை இழந்த தாய்ப்பசு, அரண்மனை வாசலில் இருந்த ஆராய்ச்சி மணியைக்  கொம்பால்  முட்டி அசைத்து ஒலிக்கச் செய்தது! அந்த மணியோசை அரசன் செவியில் ஒலித்தது. இதுவரை ஆராய்ச்சி மணியோசையைக் கேட்டறியாத அரசன் விரைந்து வெளியே வந்தான். காவலர்கள் ஒரு பசுமாடு மணியை அசைத்தது. என்று கூறினார். அரசன் அமைச்சர்களைப் பார்த்தான். அவர்களுள் அறிவால் மிக்க ஓர் அமைச்சர், அரசனின் பாதங்களை வணங்கிப் பேசலானார்.

‘’சோழ மன்னனே!  நீங்கள் பெற்ற  புதல்வனாகிய இளவரசன், பலவகை மணிகள் பெரிதாய் ஒலிக்கும் , மிகவுயர்ந்த தேரின்  மேலேஉள்ள தேர்த்தட்டில்  ஏறி,எண்ணிக்கையற்ற தேர்கள் சூழ்ந்துவர, அரசர்கள் மட்டுமே சென்று பழகும் பெரிய வீதியில் நகர் வளம் செய்யும்போது, மிகவும் இளைய பசுங்கன்று ஓன்று எங்கிருந்தோ யாரும் அறிந்து கொள்ள இயலாத வகையில் தானாகச் சென்று, மிகவும் கீழேயுள்ள தேர்ச்  சக்கரங்களின் இடையே எப்படியோ புகுந்து இறந்தது. அதனால் மனத்தளர்ச்சியுற்ற தாய்ப்பசு, மணியோசையை உண்டாக்கியது!” என்றார்.

இப்பாடலில் புலப்படும்  அமைச்சரின் நுண்ணறிவு நம்மை வியப்புக்கு ஆளாக்குகிறது. முதலில்  ‘வளவ!’ என்று மன்னனை அழைக்கிறார்! குழப்பத்துடன்  இருந்த மன்னன் மனத்தில் அவன்  நாட்டை ஆளும் மிகப்பெரிய சோழர்  பரம்பரையினன் என்பதை  ‘வளவன்’  என்ற சொல்லால்  விளக்குகிறார்!

அடுத்து, அத்தகைய பெருமைமிக்க அரசனாகிய ‘நின்’ புதல்வன் என்கிறார்! ஆதலால் பெருமை மிக்க நின் மகன்  சிறுமை  செய்பவனல்லன்  என்கிறார்! புதல்வன் என்ற சொல்லாட்சி அவன்   குலத்துக்கே  நீத்தார் கடன் புரிவதற்குரிய ஒரே புதல்வன் என்பதைக் குறிக்கிறது. ‘’அங்கு ஓர் மணி நெடுந்தேரில் ஏறி’’ என்று கூறுகிறார். ஆங்கு என்ற சொல், அவனுக்கே உரிய இடத்தில் என்ற பொருளை உடையது. ‘ஓர்’ என்பது ஒப்பற்ற என்ற பொருளில் உடன் வரும் பல தேர்களுள்  இத்தேர் சிறப்பு வாய்ந்தது என்பதைப் புலப்படுத்துகிறது.அதனால் இளவரசன் பற்பல தேர்களின் இடையே தனித்த சிற்ப்புடைய தேரில் ஏறி வருகிறான் என்பதைக் குறிக்கிறது. அதனால் பசுங்கன்று இவற்றைத் தாண்டி உள்ளே நுழைந்தது நடவாத செயல் என்ற ஐயத்தை உருவாக்குகிறது!  ‘மணி’ என்ற சொல் அத்தேரில் ஆரவாரத்துடன் ஒலித்த மணிகளின் ஓசையைக் குறிக்கிறது.அந்த ஆரவார ஓசை இளங்கன்றை அச்சுறுத்தி விலகியோடச் செய்திருக்குமே, என்று கருத வைக்கிறது. ‘’நெடுந்தேரில்’’ என்ற தொடர் மிகவுயர்ந்த தேர் அது, என்பதைக் காட்டுகிறது.அவ்வாறு உயர்ந்த தேரிலிருந்து சக்கர பகுதி கண்ணில் புலப்படாது என்ற கருத்தைப் புலப்படுத்துகிறது. ‘ஏறி’ என்ற சொல் தேர்த்தட்டின் உயரத்தைக் குறிக்கிறது. அவ்வாறு ஏறி வருபவன் பார்வை வழியைப் பார்த்துச் செலுத்தும் வாய்ப்பில்லாமையைக் காட்டுகிறது.   ‘அளவில் தேர்த்  தானை சூழ ‘ என்ற தொடர் எண்ணிக்கை அளவைக் கடந்த தேர்களுக்கிடையில் இளவரசன் ஏறிவந்த நெடுந்தேர் சென்றது என்பதைப் புலப்படுத்தி எல்லாவற்றுக்கும் இடையில் வரும் இளவரசன் தேரை யாராலும் நெருங்க வியலாது என்ற நுணுக்கமான விளக்கத்தால் ஆன்கன்று இந்தத்    தேரின் கீழே செல்லும் வாய்ப்பே  இல்லை என்று வலியுறுத்துகிறது. அவன் தேரேறிச் செல்லும் தெரு, அரசகுடும்பத்தினர் மட்டுமே செல்வதற்குரிய மேன்மை மிக்க தெரு என்பதை விளக்குகிறது. அங்கே எளிய மனிதரோ, விலங்கோ செல்வது அரச நிந்தனை என்ற குற்றத்துக்கு உரிய செயல் என்பதை நிலைநாட்டுகிறது. ‘போங்கால்’ இளவரசன் எந்த நோக்கமும் இல்லாமல் மகிழ்ச்சி உலாவை மேற்கொண்டு  சென்றான் என்பதைப் புலப்படுத்தி, அவனுக்கு அந்த ஆன்கன்றைக்  கொல்லும் நோக்கமில்லை என்பதையும் குறிக்கிறது. அடுத்து  ‘இளைய ஆன்கன்று ‘ என்று அமைச்சர் கூறுகிறார்.மிகவும் இளையது அக்கன்று, ஆதலால் தானாக அக்கன்று தேரின் கீழே செல்லாது என்பதையும், ‘இளங்கன்று பயமறியாது!’ என்ற பழமொழிக்கேற்ப அக்கன்று  அறிவும் அச்சமும் அற்றது என்பதையும் அத்தொடர் குறிக்கிறது. அடுத்து ‘’தேர்க்கால் இடைப்புகுந்து ‘’ என்கிறார் அமைச்சர். முன்சக்கரத்தில் புகுந்தால் அது தேரை ஓட்டுபவனின் கவனமின்மையைக் குறிக்கும். ஆனால் பல சக்கரங்களை உடைய பெருந்தேரின்  இடையில் புகுந்தது என்பதால், இளவரசன் அதனை நேரில்  காணாத நிலையை அனுமானிக்க வைக்கிறது. அனுமானம் குற்றத்தை நிரூபிக்காது. கன்று இறந்ததை யாரும் அறிந்து கொள்வதற்குள், அதனை ஒரு பசு அறிந்து கொண்டது என்பது நடவாத செயல். அப்பசுவின் தளர்ச்சியால் எவ்வாறு  அறிவுடன் ஆராய்ச்சி மணியை அசைத்தது என்பதைப்  புரிந்துகொள்வது? என்ற ஐயமும் தோன்றுகிறது!

இந்தக்  கொலைவழக்கு விசாரணைக்கு  வந்தால், குற்றத்தின் பின்னணி, குற்றச்செயலின் தன்மை ,குற்றம்  நடந்த சூழ்நிலை, கொலை நோக்கம்,  கொலை செய்யப்பட்ட கன்றின் அறிவு, இவை அனைத்தும் இக்கால இந்தியக் குடியாட்சியின் குற்றவியல், தண்டனைச் சட்டத்தின் பிரிவுகளில் எந்த வகை யினுள்ளும்   அடங்காது. ஆகையால் அக்கால முடியாட்சிச் சட்டங்கள் பற்றி நாம் எந்த முடிவுக்கும் வருதல் இயலாது. சட்டமும் நீதியும், எல்லாக் காலத்துக்கும்  உரியனவே! என்பதையும், இந்தக் குற்றத்தை அன்றைய அமைச்சர் அணுகிய விதம் எக்காலச் சட்டத்துக்கும் இசைவாகவே உள்ளது என்பதையும் நாம் சிந்தித்தால் சேக்கிழார் பெருந்தகையின் சட்ட நுணுக்க அறிவும் , அவர் அக்காலத்திலேயே சோழமன்னனின்  முதலமைச்சராக விளங்கிய பெருமையும் ஒருங்கே புலப்படுகின்றன! கொலைக்குற்றம் சாட்டப் பட்டவரின் சார்பில் வைக்கப்படும் வாதங்கள் எவ்வாறிருக்க வேண்டும் என்பதை இப்பாடல் விளக்குகிறது. இனி நாம் பாடல் முழுவதையும் படித்து இப்பாடலின்  சொல்லாட்சிச் சிறப்பைப் புரிந்து கொள்வோம்!

“வளவ! நின் புதல்வன் ஆங்கோர் மணி நெடுந் தேர்மேல் ஏறி
அளவில் தேர்த்தானை சூழ அரசுலாந் தெருவில் போங்கால்
இளையஆன் கன்று தேர்க்கால் இடைப் புகுந்து இறந்ததாகத்
தளர்வுறும் இத்தாய் வந்து விளைத்ததித் தன்மை” என்றான்”

இந்த வழக்கின் பின்புலத்தை மிகவும் நுட்பமாக விளக்கும் வகையிலும், பின்நிகழ்ச்சியை முன்னதாகவே உணர்த்தும் உத்தியாகவும், திருவாரூர் பற்றிய அறிமுகப் பாடலில்,

“பல்லி  யங்கள் பரந்த வொலியுடன்

 செல்வ  வீதிச்  செழுமணித்  தேரொலி

 மல்லல் யானை  ஒலியுடன்  மாவொலி

 எல்லை  இன்றி  எழுந்துள  எங்கணும்” 

என்று சேக்கிழார் பாடி வைத்த நுட்பம், எண்ணி யெண்ணி மகிழ்தற்குரியது!

============================================================

 

 

 

Share

About the Author

இராமமூர்த்தி இராமசந்திரன்

has written 52 stories on this site.

கல்வித் தகுதி : புலவர்; எம்.ஏ.;எம்.எட்; பணி : தமிழாசிரியர் ,இ.ஆர்.மேனிலைப் பள்ளி திருச்சிராப்பள்ளி - 620 002 (36- ஆண்டுகள் - 2001 பணி நிறைவு) இலக்கியப் பணி : சமய, இலக்கியச் சொற்பொழிவாளர், கவிஞர், எழுத்தாளர்(40ஆண்டுகள்) பட்டிமண்டபம், வழக்காடுமன்றம்,தொடர் விரிவுரை, கவியரங்கம், கோல உரையாடல் சிறப்பு பட்டங்கள் : இலக்கியச்சுடர்; இன்கவித்தென்றல்; இன்தமிழ்ச் சொல்லேந்தல்; நகைச்சுவை இமயம்; பாரதி இலக்கியச் செல்வர் இலக்கிய சேவாரத்தினம்   பெற்ற விருதுகள் : 1. ரோட்டரி சாதனையாளர்(கவிதைவிருது) 1997-98 2. தமிழ்ச் செம்மல் (கல்கத்தா தமிழ் மன்றம்) 3. இலக்கியச் செல்வர் (கல்கத்தா பாரதி தமிழ்ச் சங்கம்) 4. சிறந்த நூலாசிரியர்(2005-06)உரத்த சிந்தனை 5. சைவசித்தாந்தப் புலவர்- 2007 ஸ்ரீ காஞ்சி மடம் 6. பாரதிபணிச்செல்வர் 2007 அ.இ.தமிழ் எழுத்தாளர் சங்கம் 7. குலோத்துங்கன் கவிதை விருது -இலக்கியப்பீடம் 8. சாதனையாளர் -2009 (மனித நேயப் பேரவை,உரத்த சிந்தனை) 9. பாரதி இலக்கியச் செல்வர் -2009 அ. இ. தமிழ் எழுத்தாளர் சங்கம். 10. தமிழ் இலக்கிய சேவாரத்னா - 2014 (காஞ்சி ஸ்ரீ சங்கர மடம் ) எழுதிய நூல்கள் : 1. ஐயப்பன் அந்தாதி 1995 (ஒலிப்பேழை- உன்னிக்கிருஷ்ணன்) 2. எழுத்தும் பேச்சும் (மணிவிழா) 3. மொழியும் பொருளும் (மணிவிழா) 4. திருக்காளத்தித் தலச்சிறப்பு.- 2004 5. திருக்குறள் தெளிவுரை 2008 (இலக்கியப் பீடம்) 6. அருந்தொண்டாற்றிய தமிழக அந்தணர் (ஆசிரியர் குழு) 7. பாரதியின் பேரறிவு 2011 8. தமிழ்க் கடல்மணி 2013(70-ஆம் அகவை) 9. ஐயப்பன் அந்தாதி விளக்கவுரை (அச்சில்) 10. மனங்கவரும் மலர்கள் (அச்சில்) 11. வாட்போக்கிக் கலம்பகம் விளக்கவுரை (அச்சில்) 12. திருக்குறளும் தெய்வத்தின் குரலும் சொற்பொழிவாற்றிய ஊர்கள் : தமிழகம் முழுவதும் திருவனந்தபுரம்,ஆல்வாய் , கொழிஞ்சாம்பாறை, பாலக்காடு ஹைதராபாத், பெங்களூர், மும்பை, புதுதில்லி, கொல்கத்தா.. நாடுகள் : இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், இங்கிலாந்து (இலண்டன்), அமெரிக்கா (பீனிக்ஸ்) மற்றும் மஸ்கட்.

Write a Comment [மறுமொழி இடவும்]

Security Question: (* Solve this math to continue) *


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.