படக்கவிதைப் போட்டி 188-இன் முடிவுகள்

-மேகலா இராமமூர்த்தி

திரு. முரளிநாதன் வித்யாதரனின் இப்புகைப்படத்தை வல்லமை ஃபிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்துப் படக்கவிதைப் போட்டிக்கு வழங்கியிருக்கிறார் திருமதி. சாந்தி மாரியப்பன். புகைப்படக் கலைஞர், தெரிவாளர் இருவரும் என் நன்றிக்குரியோர்.

”இணையருக்குப் பின்னே இணைந்து நிற்கும் இக் காகங்கள் கரைந்து பேசுவது என்ன?” என்று அறிந்துகொள்ளும் ஆவல் நமக்குள்ளும் ஊற்றெடுக்கின்றது. அதனை ஊகித்துச் சொல்லும் அரும்பொறுப்பை நம் வித்தகக் கவிஞர்களிடம் விட்டுவிடுவோம்!

*****

”திருந்தாத மாந்தர் எறியும் நெகிழிக்குப்பைகளைக் கண்டு மனம் வருந்தி, அவற்றைத் தம் அலகால் அகலச்செய்யக் காத்திருக்கும் காக்கைக் குடும்பமிது” என்றியம்பி நம்மை நெகிழ்த்துகின்றார் திருமிகு. நாங்குநேரி வாசஸ்ரீ.

அமர்ந்திருக்கும் அண்ணனுக்கும்
அக்காளுக்கும் தெரியாமல்
முதுகுக்குப் பின்னே
முத்தான எம் காக்கைக் குடும்பம்
அவர்களின் பேச்சைக் கேட்டு
அம்மாவுடனான அப்பாவின் உரையாடல்
கல்லூரி மாணவர்களிவர்கள்
கடற்கரையச் சுத்தம் செய்து
நெகிழிக் குப்பைகளை அகற்ற
நேரத்துடன் வந்தார்கள்
நாளை அவர்களின் பணி
நடைபாதை வியாபாரிகளோடு
விதிகளைப் பின்பற்றாது
விற்பவர்களுக்கு இனிமேல்
கடுமையான தண்டனை
கட்டாயம் வேண்டும்
உருளை வறுவலை
உண்ணட்டும் நம் மகன் பின்
திருந்தாத மாந்தரெவரோ
திரும்பவும் வீசியெறிந்த
நெகிழிக்குப்பை காண
நெஞ்சம் பதைப்பதால்
அலகால் கொத்திச் சென்று
அகற்றுவோம் இங்கிருந்து
நானிலம் நலம் பெற நாம்
நால்வரும் துணை நிற்போம்..

*****

”சோலைவிட்டு வந்த வாலைக் காதலர்கள் போடும் தீனி இரைபொறுக்கக் காத்திருக்கும் இக்காக்கைகள் வேதனை ஆர் அறிவார்?” என்று வினவுகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

வேதனை…

கால நேரம் பார்க்காமல்
கடற்கரை அமர்ந்தே கதைபேச
வாலை வயதுக் காதலர்கள்
வந்து போவார் எந்நாளும்,
சோலை விட்டு வந்திவர்கள்
சிந்தும் தீனி இரைபொறுக்க
வேலை யின்றி வரும்காக்கை
வேதனை யிவர்தான் அறிவாரோ…!

*****

காகங்கள் வாயிலாய் நல்ல கருத்துக்களைச் செப்பியிருக்கும் கவிஞர்களுக்கு என் பாராட்டுக்கள்!

இனி இவ்வாரத்தி சிறந்த கவிதை…

கரையோரப் பறவைகள்

கங்குலிலே களத்துமேட்டில்
காகங்களின் வரவுக்காகக் காத்திருந்த
கஞ்சமற்ற நெஞ்சம் கொண்ட நம்
கசடற்ற களநாயகன் தாம்
கண்ணுக்கெட்டிய தூரம்வரை
கட்டாந்தரை ஆனபோதும்
கந்தலான ஆடையுடன்
கதியாக வருவார்க்காய்க் காத்திருக்க
கம்பெனிக்காரனாகக் கடுமையுடன்
கப்பம் கட்டக் கட்டாயப்படுத்தி – தன்
கரிய கரம் கொண்ட
கயவனைப் போல் வந்த காலனாக
கவலைகொண்ட முகத்தையும் கண்ணோக்காது
கல்வியறிவற்ற மாக்களை ஒப்பவே
களர்நிலமாக்கிக் களவாடிச் சென்றதால்
கழனியெல்லாமழிந்த கோலம் கண்டு
கன்னத்தில் கரைபுரண்ட கண்ணீரைக்
கரையேற்ற வாராரோ என
’கஜா’வால் களையிழந்த களம்கண்டு
காளையர்கள் காத்திருக்க – இங்கு
கன்னியும் காளையும் கடற்கரை மணலிலே
களவுகொண்டுள்ள காட்சி கண்டு
கலங்கிடும் உள்ளமுடன் கவலையோடு நோக்கிடும்
கனத்த நெஞ்சம் கொண்ட இக் காகங்கள்…

அண்மையில் வந்த கஜா புயலால் கழனிகளை இழந்து, மனமுழந்து வாடும் மக்களைக் காக்க வாராது, கடற்கரையோரம் களவுக்காதல் வளர்க்கும் பொறுப்பற்ற இளையோரைக் கண்டு வெறுப்புற்ற காகங்களைத் தம் கவிதைவழிக் காட்சிப்படுத்தியிருக்கும்  முனைவர் மு. புஷ்பரெஜினாவை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராக அறிவித்து மகிழ்கின்றேன்.

 

 

About the Author

has written 387 stories on this site.