போதுமென்ற மனமே..

இளம் வயதினர் எதை எதையோ எட்டிப் பிடிக்க விரும்புவர். அந்த முயற்சியில் என்னென்ன அபாயங்கள் காத்திருக்குமோ என்ற அச்சத்தால் மூத்தவர்கள் அவர்களுக்கு அறிவுரை கூறுவார்கள்: `போதுமென்ற மனமே பொன்செய்யும் மருந்து!’

இந்த அறிவுரையை ஏற்று நடந்தால், இறுதியில் இளைஞர்களுக்கு ஏமாற்றம்தான் ஏற்படும்.

விரும்பியதை அடைவது என்றால் பிறருக்குச் சேரவேண்டியதை தட்டிப் பறிப்பதல்ல. இருப்பினும், இன்றைய உலகில் பலரும் பணம், பதவி என்று பேராசையை வளர்த்துகொண்டே போக, எந்தப் பதவியில், ஏதாவது செய்து, அமர்ந்தால் குறுகிய காலத்தில் பெரும் பொருள் திரட்டலாம் என்று மட்டுமே அவர்கள் சிந்தனை போகிறது.

பணம், புகழ், அல்லது சமூக அந்தஸ்து என்று நாடுபவருக்கு அதெல்லாம் கிடைத்தாலும் நிறைவு கிட்டுமா என்பது சந்தேகம்தான்.

அளவுக்கு அதிகமான சொத்தால் நிறைவா?

அரசியல் என்பது மக்களுக்காக என்று யார் கூறினார்கள்? இத்துறையைத் தேர்ந்தெடுப்பவர்களில் பெரும்பான்மையோர் தம் வாழ்நாட்களில் உபயோகப்படுத்த முடியாத அளவுக்கு சொத்து சேர்க்கின்றனர். கோடி கோடியாகப் பணம், நகை, கார், பங்களா என்று எவ்வளவு சேர்த்தாலும் மனநிறைவு கிட்டுவதில்லை.

திருப்தி கிடைக்காதபோதுதான் ஆசைகள் அதிகரித்துக்கொண்டே போகின்றன. ஒரு பெண்ணுக்கு ஆயிரக்கணக்கான காலணிகள் எதற்கு? நூறு காரட் எடைகொண்ட வைர அட்டிகையை அணியத்தான் முடியுமா? இதையெல்லாம் அவர்கள் யோசிப்பதே கிடையாது.

“தன் சுகத்தையே பெரிதாக எண்ணி வாழ்பவனுக்கு இறுதியில் ஏமாற்றம்தான்!” (ஐன்ஸ்டீன்).

அதிகமாகச் சேர்க்கச் சேர்க்க, வெறுமைதான் ஏற்படுகிறது. அந்த வெறுமையைப் போக்க, மேலும் கொள்ளையடித்தாக வேண்டும். சட்டத்தின் பிடிகளில் அகப்பட்டுக்கொண்டால், `என்மேல் எந்தத் தவறும் இல்லை, எல்லாம் எதிரிகளின் சதி!’ என்று சாதிப்பார்கள்!

பாராட்டால் நிறைவா?

`நாம் மிகுந்த செல்வந்தராக ஆனால் எல்லாரும் மதிப்பார்கள். நம் பேச்சுக்கு மதிப்பு கிடைக்கும்,’ என்று கணக்குப்போட்டு, திறமை, உழைப்பு, அதிர்ஷ்டம் எல்லாம் சேர, ஒருவர் பணக்காரராக ஆகலாம். ஆனால், பிறர் பாராட்ட வேண்டும் என்ற இலக்கைக் குறி வைத்தால், அதை அடையும்போது நமக்கும் மகிழ்ச்சி கிட்டும் என்பது என்ன நிச்சயம்?

`பிறர் பாராட்டினால்தான் நம் மனம் குளிரும்’ என்றிருப்பவர்கள் பரிதாபத்துக்கு உரியவர்கள் என்றே தோன்றுகிறது. எதிர்பார்த்த பாராட்டு கிடைக்காதபோது மனம் வெம்பிப்போவார்கள். நம் மகிழ்ச்சிக்கு எப்போதும் பிறரை எதிர்பார்த்தால் ஏமாற்றம்தான் மிஞ்சும்.

பிடித்ததைச் செய்

சிறந்த தேர்ச்சி பெற்றவர்கள் உயர்நிலைப்பள்ளியில் மேலும் படிக்க கணக்கு, விஞ்ஞானம் என்று பாடங்களை பள்ளியே தேர்ந்தெடுத்துவிடும். குறிப்பிட்ட மாணவருக்கோ மொழி, கலை என்று வேறு எதிலாவதுதான் மனம் லயிக்கும்.

`இதெல்லாமா நாளைக்கு உனக்கு சோறு போடப்போகிறது?’ என்று பெற்றோரும் அவநம்பிக்கை அளிப்பார்கள்.

ஒரு சிலர் ஓய்வு நேரத்தில் தம் மனம் விரும்பும் பொழுதுபோக்கில் ஈடுபடுவார்கள். அதில் ஈடுபடும்போதே இவ்வளவு மகிழ்வாக இருக்கிறதே என்று எண்ணுபவர்களுக்குத்தான் நிறைவு கிட்டுகிறது. இருப்பினும், தம் மனம் நாடுவதை நோக்கித் துணிச்சலுடன் பயணம் செய்பவர் மிகக் குறைவு.

தம் இலக்கில் குறியாக இருப்பவர்களுக்குத் தானே சரியான பாதை புலப்படும். அவ்வழியில் ஏற்படக்கூடிய தவறுகள், தோல்விகள் ஆகியவற்றைப் பெரிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்று அவர்கள் அறிவார்கள்.

எவ்வளவுதான் திறமையும் ஆர்வமும் இருந்தாலும், வெற்றியும், அதனால் கிடைக்கும் நிறைவும் நீடிக்க வழியில் எழக்கூடும் உயர்வு மனப்பான்மையைத் தவிர்க்கக் கற்க வேண்டும்.

ஆனாலும், பிறருடைய குறைகளில் கவனம் செலுத்தி `நான் அப்படி இல்லை!’ என்ற அற்பதிருப்தி கொள்ளும் மனப்பான்மையை எத்தனை பேரால் தவிர்க்க முடிகிறது!

கதை

நடராஜன் வாத்தியக் கலையில் வல்லுனர். வசதிகுறைந்த பல மாணவர்களுக்கு இலவசமாகவே பயிற்சி அளித்தார். அவர்கள் அவரைக் கடவுளாகவே பாவித்ததில் அதிசயமில்லை.

நடராஜனின் செருக்கு மிகுந்தது. `என்னைவிட சிறப்பாக யாரால் வாசிக்க முடியும்!’ என்று நினைக்க ஆரம்பித்தார். அதன் விளைவாக, தன்னையொத்த, தன்னைவிட பிரபலமான வாத்தியக்காரர்களைப்பற்றி அவதூறாகப் பேச ஆரம்பித்தார். சிஷ்யர்களும் அக்கதைகளைக் கேட்டுச் சிரிப்பார்கள். குருபக்தியைப் பின் எப்படித்தான் வெளிக்காட்டுவது!

நடராஜன் கூறியதெல்லாம் உண்மையாகவே இருந்தாலும், பிறர் என்ன தவறு செய்கிறார்கள் என்பதிலேயே கவனம் போயிற்று. கச்சேரியை ஆரம்பிக்குமுன், திமிருடன் சக கலைஞர்களை சண்டைக்கு இழுப்பார்.

நாளடைவில், எவரும் நடராஜனுடன் இணைந்து வாசிக்க முன்வரவில்லை. `எல்லாருடனும் எப்போதும் சண்டை போடுவார்!’ என்று புகார்கள் எழ, அவருக்கு வாய்ப்புகள் குறைந்தன.

ஒருவர் எப்போது நிறைவடைகிறார்?

பள்ளிச் சிறுவர்களைக் கேட்டால், `பரீட்சை முடிந்து, அதில் திருப்திகரமாக எழுதிவிட்டால்!’ என்பார்கள். மாதக்கணக்கில் உழைத்துப் படித்த களைப்பு அப்போது நினைவில் நிற்காது.

உடல் நோக பல காலம் பயிற்சி செய்துவிட்டு, பார்வையாளர்கள் பாராட்ட தம் திறமையைக் காட்டும்போது விளையாட்டு வீரர்கள் பெருமகிழ்ச்சி அடைகிறார்கள். ஆரம்பத்தில், அவர்களுடைய நோக்கம் பிறர் பாராட்ட வேண்டும் என்பதாக இருந்திருக்காது. தமக்குப் பிடித்த விளையாட்டில் முழுமூச்சுடன் ஈடுபட்டிருப்பார்கள். அவ்வளவுதான். அதில் வெற்றியும் கிடைத்தால் கூடுதல் மகிழ்ச்சி.

சில பிரபலமானவர்கள் இசைக்கச்சேரி செய்யும்போது, அடிக்கடி கைதட்டல் கேட்கும். பாவம் அதிகமிருக்காது. `இவர்கள் ஆத்மார்த்தமாகப் பாடுகிறார்களா, இல்லை, எப்படிப் பாடினால் ரசிகர்களைக் கவரலாம் என்று கணக்குப்போட்டுப் பாடுகிறார்களா?’ என்று இசைஞானம் உள்ளவர்களின் சிந்தனை போகும்.

ஒருவர் தான் பாடுவதில் மனமும் ஒன்றினால்தான் ரசிக்க முடியும். `என் குரலின் இனிமையை வைத்துக்கொண்டே பிறரைக் கவர்ந்துவிடுவேன்!’ என்ற மனப்பான்மை எழுந்தால், அவர் தன் திறமையை முழுமையாகப் பயன்படுத்த முயற்சிக்க மாட்டார். இதனால் அவருக்கும் நீடித்த நிறைவு கிட்டப்போவதில்லை.

ஆக்ககரமாக எதைச் செய்ய வேண்டுமானாலும் நம் முழுமையான கவனத்தை அதில் செலுத்தவேண்டும் என்று புரிந்தவர்கள்தாம் நிறைவடைகிறார்கள். எதைத் தேடுகிறோம் என்று புரியாது அலைவது வீண் முயற்சிதான்.

`வெற்றிமேல் வெற்றி அடைபவர்கள் பரிதாபத்துக்கு உரியவர்கள். ஏனென்றால், அடுத்து எதில் வெற்றி பெறலாம் என்றே அவர்கள் யோசனை போகும்,’ என்று ஒருவர் கேலியாக எழுதியிருந்தார். வெற்றி என்பது ஒரு முடிவு இல்லை, மனநிறைவு தரும் இன்னொரு முயற்சியின் தொடக்கம் என்று அவருக்குப் புரியவில்லை.

கல்வியால் நிறைவு

நம் திறமையை முழுமையாக வெளிக்கொணர கல்வி ஒரு சாதனம். திறமையை வெளிப்படுத்த முடியாதபோது மனம் குழம்பிவிடுகிறது.

கதை

ரேணுகா அழகிய பெண். அழகிலேயே கவனம் செலுத்தியதில் படிப்பு ஏறவில்லை. அவளுடைய அழகில் மயங்கிய ஒருவனுக்குக் கல்யாணம் செய்துவைத்து விட்டார்கள் — பதின்ம வயதிலேயே.

தன்னையொத்த பெண்கள் சுதந்திரமாக, வேலைக்குப் போவதைப் பார்த்து தான் எதையோ இழந்துவிட்டதுபோல் நினைக்க ஆரம்பித்தாள். தன் வாழ்க்கை இப்படியேதான் கழிந்துவிடும், பெரிதாக எதிர்பார்க்க எதுவுமில்லை என்று எழுந்த எண்ணம் எல்லார்மேலும் கோபமாக மாறியது.

“இவளை எப்படிப் பொறுத்துப்போகிறீர்கள்?” என்று ஓர் உறவினர் கேட்டதற்கு, கணவர் பொறுமையாகப் பதிலளித்தார்: “இவளுக்கு வாழ்க்கையில் எந்த எதிர்பார்ப்பும் இல்லை. புதிதாக எதையும் கற்கும் ஆர்வமும் கிடையாது. எல்லா நாட்களும் ஒரே மாதிரி இருப்பதால்தான் அலுப்பு!”

ஓயாமல் மன உளைச்சலுக்கு ஆளாகி, தன்னுடன் பிறரையும் வருத்துவானேன்! கிடைத்ததைக்கொண்டு திருப்தி அடைந்தாலே போதுமே! ஆக்கபூர்வமாக எதையாவது செய்தால் மனம் அமைதி பெறும், நிறைவாகவும் இருக்கும்.

நன்றியைக்கூட எதிர்பாராது பிறருக்கு உதவுவதே உண்மையான நிறைவை அடையும் வழி.

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *