முனைவர் இரா.வெங்கடேசன்

“நாம் படிக்கும் புத்தகம், முஷ்டியால் மண்டையோட்டை இடித்து நம்மை விழிக்கச் செய்யாதபட்சத்தில் நாம் ஏன் அதை வாசிக்க வேண்டும். அது நம்மை மகிழ்விக்கிறது என்பதாலா? அட கடவுளே, நாம் புத்தகங்களே இல்லாமல்கூட சந்தோசமாக இருக்க முடியும். நம்மை மகிழ்விக்கும் அப்படியான புத்தகங்களை, தேவைப்பட்டால், நாமே கூட எழுதிக்கொள்ளலாம். ஆனால் ஒரு துரதிர்ஷ்டத்தைப்போல நம்மை வந்தடைகிற, நம்மைவிடவும் நாம் அதிகம் நேசிக்கிற ஒருவரின் மரணத்தைப் போலவோ, தற்கொலையைப் போலவோ ஆழ்ந்த துயரம் விளைவிக்கக்கூடிய புத்தகங்களே நமக்குத் தேவை. நமக்குள் படிந்திருக்கும் உறைபனிப் பாறையைப் பனிக் கோடாரியால் பிளப்பதாக ஒரு புத்தகம் இருக்க வேண்டும்.” – ஃபிரன்ஸ் காஃப்கா 

சங்கப் பிரதியை மையமிட்டு விமர்சனங்கள், ஆய்வுகள் தமிழிலும் பிற மொழியிலும் ஏராளமாக எழுதப்பட்டுள்ளன. ஆனால் புனைவு வெளிக்குள் பதிவு பெற்றவை மிகக் குறைவுதான். தமிழ் நாவல்களில் தமிழுக்குத் தொடர்பில்லாத மகாபாரதத்தை மையமிட்டு ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், பிரபஞ்சன், தேவகாந்தன், அருணன், பூமணி போன்ற பலரும் எழுதியுள்ளனர். இவர்கள் ஏன் சங்க வாழ்க்கையைப் பதிவு செய்ய முன்வரவில்லை என்ற கேள்வி எழுவது நியாயமானதே. இவர்களிடம் கேட்டால் மகாபாரதம் வசீகரமானது. அதனை எழுதுதல் எழுத்தாளனுக்கு மன நிம்மதி அளிக்கும் எனச் சொல்லக்கூடும். மேலும் இவர்கள் இந்திய அளவில் அங்கீகாரம் கிடைக்கும் என நம்புகின்றனர். சங்ககால வாழ்க்கையைப் புனைவுகளின் வழிக் கடத்தத் தெரியாதவர்கள் வேறு எந்த இலக்கிய வடிவத்தையும் தமிழில் தந்தாலும் அதன்வழி எதையும் கட்டமைத்துவிட முடியாது. தமிழர்கள் புனைவாக எழுதாமல் போய்விட்ட சங்க வாழ்க்கையைக் குறிப்பாகப் பாணர்களின் அலைகுடித்தன வாழ்க்கையை மலையாளத்தில் மனோஜ் குரூர் நிலம் பூத்து மலர்ந்த நாள் என்ற நாவலில் புனைவு ஆக்கியுள்ளார். பிறப்பினால் மலையாளியாக இருக்கும் மனோஜ் குரூர் தமிழ்ச் சூழலையும் சங்கச் சூழலையும் முழுமையாக உள்வாங்கிக் கொண்டு எழுதியுள்ளது முக்கியமானதாகும். பாணர்களின் வாழ்க்கையை மையமிட்ட இந்நாவல் தமிழில் எழுதப்பட்ட நாவல் போன்று வார்த்திருப்பது கவனத்திற்குரியதாகக் கொள்ளலாம்.

ஐந்து திணைகள் கொண்ட தமிழ் நிலப்பரப்பைத் தத்தம் இயல் மாறாத நிலம் யாதாயினும் அதில் நிகழும் ஒழுக்கம் பற்றித் திணை வகுப்பது பழைய மரபு. ஒழுக்க இயல் கருதாது நில வகையால் திணை அமைப்பது பிழைபட்ட பிற்கால வழக்கு. இது தொல்காப்பியருக்கு உடன்பாடன்று என்பது இச்சூத்திரத்தால் தெற்றென விளங்கும். (சாம்பசிவனார், 1997:34). ஐந்து திணைகளின் பிரிப்புப் பின்னணியில் உணவும் உணவு சார்ந்த பண்பாடும் மிக முக்கியமாய் அமைகின்றது. மருத நிலம் உணவில் தன்னிறைவு பெற்ற திணையாக உள்ளது. ஏனைய நான்கு நிலங்களிலும் உணவு காலச் சூழலுக்கு ஏற்ப அதிகமாகவோ குறைவாகவோ கிடைத்துள்ளன. ஐந்து நிலங்களிலும் வாழ்ந்த மன்னர்களும் வள்ளல்களும் தம்மால் இயன்ற அளவு உணவைக் கொடையாக அளித்துள்ளனர். இவர்கள் தவிர இவர்கள் ஆளும் நாட்டில் வாழ்ந்த பல்வேறு நிலங்களைச் சேர்ந்த குடிகள் உணவுகளை அளித்துள்ளனர். சிறுபாணாற்றுப்படையில் வேலூரின் புன்புலப்பகுதிகளில் எயின வேடர் குலப் பெண்கள் புளிச்சோறும் ஆமானின் சுட்ட கறியும் (சிறுபாண்., பக்.175-177) உணவாகத் தந்தார்கள். ஆமூர் என்ற மென்புலப்பகுதியைச் சேர்ந்த உழவர் குடியினர் உலக்கையால் தீட்டிய அரிசியால் வெண்சோறும் நண்டுக் குழம்பும் உண்ணத் தந்தார்கள். (சிறுபாண்., பக்.) பாம்பு வெகுண்டன்ன தேறல் நல்கினார்கள். பெரும்பாணாற்றுப்படை எயிற்றியர், எயினர், பாலைக்கானவர் குடி, மறக்குடி, கோவலர்குடி, வலைஞர், பார்ப்பனர், உழவர்குடி ஆகியோர் வழங்கிய உணவுகளைப் பற்றி விவரித்துள்ளது. (ராஜ்கௌதமன், 2006:211).

விளைவித்த, வேட்டையாடிச் சேகரித்த உணவுகளைப் பெறப்பட்ட போதிலும் இந்த உணவுகளை விருந்தோம்பலுக்குப் பயன்படுத்தியுள்ளனர். ஒருபக்கம் விருந்து நிகழ்த்திய கூட்டம் இருந்ததென்றால் அதனைப் பெறுவதற்கான கூட்டமொன்று இருந்துள்ளது. அக்கூட்டத்தில் பாணர், விறலியர் உள்ளிட்டோர் அடங்குவர். இவர்கள் ஓரிடத்தில் நிலையாக வாழாமல் அலைகுடி வாழ்க்கையை மேற்கொள்வோராக வாழ்ந்துள்ளனர். இவர்களுக்கு உணவை யார் தருகிறோர்களோ அவர்களிடம் சென்று பாடி இசை மீட்டி அதற்கு ஈடாக உணவையோ பரிசையோ பெறுகின்றனர். சங்க காலம் என்பது பாணர்களின் வீழ்ச்சியடைந்த காலக்கட்டத்தின் தொகுதியாகும். பாணர்களின் அலைகுடி வாழ்க்கைத் துயரங்களின் முழுமையைச் சுமந்துகொண்டு திரிந்த வாழ்க்கை. பாணர்களைப் பற்றிய ஆய்வுகள் அதிகமாகச் செய்யப்பட்டபோதிலும் நாவல்வழி அதனைச் சொல்லும்பொழுது அலைகுடி வாழ்க்கையின் அவலத்தைச் சொற்களின் வழியே கடத்த முடிகின்றது. ‘நிலம் பூத்துமலர்ந்த நாள்’ நாவல் பாணர்களின் துன்பியல் நாவலாக மலர்ந்திருக்கின்றது.

பாணர் வாழ்க்கை என்பதே அலைகுடி வாழ்க்கையாக அமையும்போது அவர்கள் ஓரிடத்திலும் நெடுநாள் தங்கமுடியாத சூழல் ஏற்படுகின்றது. பசி, வறுமை அவர்களை வெவ்வேறு இடங்களுக்கு நகர்த்துகின்றது. பாணர்களின் வாழ்க்கை என்பது நிரந்தரமில்லாத3 வாழ்வாகவே அமைகின்றது. வறுமைதான் அவர்களை ஒவ்வொரு இடத்திலும் நிலையாகத் தங்கவிடாமல் செய்கிறது. நாவலில் நாம் எப்போதும் இந்த வறுமையாலயே உழல வேண்டுமா முதலில் நாம் இங்கிருந்து கிளம்ப வேண்டும். இல்லாவிட்டால் ஒவ்வொருவராகச் சாவதை நாம் பார்க்க நேரிடும். கடந்த நாட்களில் நம்மிடையே இறந்து போனவர்களைப் பற்றிச் சிந்தியுங்கள். பட்டினியால்தான் அவர்கள் அனைவரும் இறந்தனர் என்பதை அவர்களின் உற்றார் உறவினர் யாரும் சொல்லவில்லையெனினும் நமக்கே அது தெரியுமில்லையா? (மனோஜ்குரூர் 2016:31) என்ற சிறுபாணனின் கேள்வி உண்மையின் அசலாகும்.

பசி, வறுமை இரண்டும் உந்தித்தள்ளும்போது அதனை நீக்கப் பாணர் கூட்டம் அலைகின்றது. ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குப் பயணப்படும்போது அந்தப் பயணத்தின் துயரம் சொல்லால் அடங்காதவை. குறிப்பாகப் பசியோடு குழந்தைகள் அலைதலை இந்நாவல் பிரதானப்படுத்துகின்றது. பயணம் ஒவ்வொரு நாளும் ஓய்வில்லாமல் தொடர்வதால் குழந்தைகள்4 சோர்வுறுகின்றனர். மீண்டும் மலையேறத் தொடங்கினோம். நீண்டதூரப் பயணத்தில் அனைவரும் சோர்ந்திருந்தோம். தட்டுத் தடுமாறியாவது முன்னேறிச் செல்லாதிருக்க முடியாதென்ற எண்ணமே குழந்தைகளையும் இளைப்பாற விடவில்லை.” (மனோஜ்குரூர் 2016:98) என்று சொல்லும் பாணர்குடி சிறு குழந்தைகளின் அலைதலின் வழி கொடூரமானதாக மாறுகின்றது. பரிசு கொடுப்போரைத் தேடி ஒவ்வொரு மலையாக ஏறி இறங்குவதால் அவர்களால் தொடர்ந்து நடக்கமுடியாத நிலை ஏற்படுகின்றது. எப்படியென்றாலும் இனி நடக்க முடியாது. கால்கள் வீங்கியிருக்கின்றன. உடல் அதன்வழித் திரும்பிவிடுமென்று அறிந்தபோது நான் தரையில் அமர்ந்துவிட்டேன். அத்துடன் சில குழந்தைகளும் பெரியவர்களும் வழியோரங்களில் உள்ள பாறைகள்மீதும் தேற்றாமரங்களின் நிழல்களிலுமாக அமர்ந்துவிட்டனர். (மனோஜ்குரூர் 2016:127)

பெரியவர்களின் பசியைவிடக் குழந்தைகளின் பசி கொடூரமானது5 அதனை மிக நுட்பமாகவே மனோஜ்குரூர் பதிவு செய்கின்றார். பசியோடு அலைந்து திரியக்கூடிய பாணர்களுக்குக் குறவர்கள் உணவு தருகின்றனர். பாணர்களைத் தங்கள் வீடுகளுக்கு அழைக்கும் குறவர்கள் உணவு தருகிறோம் என்று அழைக்கின்றனர். எங்கள் குடில்களுக்கு வந்துவிட்டுச் செல்லுங்கள். மானிறைச்சியும் உடும்பிறைச்சியும் வீட்டில் இருக்கும். வேகவைத்த மூங்கிலரிசியோடு சேர்த்துக் கொதிக்க வைத்த பாலும் இருக்கும். குழந்தைகள் உண்ணட்டும். (மனோஜ்குரூர் 2016:40) எனக் கூறுவதிலிருந்து பாணர்களுக்கு மன்னர்களும் வள்ளல்களும் மட்டுமே உணவு தரவில்லை. இடைக்குடிகள் பலர் உணவு தந்துள்ளனர்.

பாட்டுப்பாடி அலைகுடி வாழ்க்கையை வாழ்வதைவிட வேட்டையாடி நம் வறுமையைப் போக்கலாம்6 என்பது பாணர்குடியில் ஒருசிலரது யோசனையாக நாவலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏனென்றால் அலைகுடி வாழ்க்கை என்பது மோசமானதாகவும் சிக்கலானதாகவும் மாறிய சூழலைத்தான் இந்நாவல் பேசியுள்ளது. ஆனாலும் இந்த யோசனையை யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. அதுதான் பாணர்குடியைச் சிறப்பானதாக ஆக்குகிறது. பாணர்களின் வறுமை மட்டுமே நாவல் பேசவில்லை. உமணர்களின் வறுமையை மிக அழுத்தமாக முன்வைக்கிறது. உப்பு விற்பனைக்காக அடுத்த பட்டணத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்த உமணர்கள் அவர்களின் மனைவியர் ஒரு கையில் குழந்தையையும் மறு கையில் சாட்டையுமாகக் காளைகளை ஓட்டித் தளர்ந்து போயிருந்தனர். அவர்கள் வண்டிகளை வழியோரம் நிறுத்திக் குழந்தைகளை மார்போடு அணைத்துச் சாய்ந்து மயங்கி இருந்தனர். (மனோஜ்குரூர் 2016:41) பாரபட்சமில்லாத இந்த வறுமை அலைகுடி வாழ்க்கையை ஒரு வகையாக ஏற்றுக்கொண்ட உப்பு வணிகர்களையும் விட்டுவைக்கவில்லை. உப்பு வணிகர்களின் அலைகுடி வாழ்க்கையை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய தேவையை இந்நாவல் எழுப்புகிறது.

நாவல் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றது. முதல் பகுதி தந்தையின் (பாணன்) பார்வையில் கதை சொல்லப்படுகின்றது. உறவுகளோடு அலைந்து திரியக்கூடிய பாணன் வறுமையில் வாடிக் கொண்டிருக்கும் தன் மகளின் (குழந்தை) பசியைப் பேசுகிறான். மேலும் அவனின் காணாமல்போன மகனைப் பற்றிய துன்பம் பேசப்படுகிறது. இரண்டாம் பகுதி சித்திரை (மகள்) பார்வையில் கதை நடக்கும்போது இறந்துபோன அப்பாவைப் பற்றியும் விதவையான அம்மாவைப் பற்றியும் காதல், ஏமாற்றம், பிரிவு, துயரம், அடைக்கலம் என விரிகிறது. மூன்றாவதாக மகன் (மயிலன்) பார்வையில் கதை விரியும்போது துரோகம், துயரம் விவரிக்கப்படுகிறது. இந்த நாவல் வறுமையையும் ஏமாற்றத்தையும் துயரத்தையும் முதன்மைப்படுத்தி விளிக்கிறது. துன்பவியலை மிகுதியாகப் பேசுகிறது. சங்கக் கதையாடல் என்றாலும் சிறுபாணாற்றுப்படை, கலித்தொகைச் செய்திகள் மிகுதியாகப் பேசப்பட்டுள்ளன. நாவலைப் படிக்கும்போது போரின்போது திணை வயல்களைத் தீயிட்டு அழிக்கின்றனர். பசியால் வாடிக்கொண்டிருக்கும் பாணர்கள் அதனைப் பார்க்கின்றனர். உணவு கிடைக்காத சூழலில் வயல்கள் எரிபடுவது பாணர்களைத் துன்பத்திற்கு உள்ளாக்குகிறது. இந்தத் துயரத்தை வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை. சங்க காலம் பொற்காலம் என்பதற்கு மாற்றாகச் சங்ககாலம் வறுமைகள் நிறைந்த துயரம் நிறைந்த காலம் என்பதை இந்நாவல் தெளிவாக எடுத்துரைக்கிறது. மலையாள மொழியில் இந்நாவல் எழுதப்பட்டாலும் தமிழ் நிலத்தின் துயரம் நிறைந்த வாழ்க்கையை எதார்த்தமாகப் பதிவு செய்கின்றது. பாணர்கள் என்போர் வறுமையில் உழன்றனர் என்பது எவ்வாறு உண்மையோ அதனைப் போலவே உமணர்கள், வேட்டைச் சமூகங்கள் வறுமையில் வாடினர். அதுகுறித்து விரிவாகப் பேசப்பட வேண்டும். அவையெல்லாம் நாவல் வழியாகப் பதிவு பெறவேண்டும். நுணுக்கமான, அணுக்கமான மொழிபெயர்ப்பு இது. சங்ககால வறுமையின் நிறத்தைப் பதிவு செய்த இந்நாவலைப் போல் சமகால நாவலை எதுவும் சுட்டிக் காட்டமுடியவில்லை என்பதிலிருந்து இந்நாவலின் பெருமையை உணரமுடிகிறது. தமிழில் இதைப் போன்ற முயற்சிகள் மேற்கொண்டால் பழைய வரலாறுகள் இன்றைய தலைமுறையினருக்குப் புதினக் கதையாடல்கள் மூலம் எளிமையாகக் கடத்த முடியும்.

உசாத்துணை நூல்கள்

  1. ச.சாம்பசிவனார் (பதி.1997 நாவலர் சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி, தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை, வசுமதி பதிப்பகம், சென்னை.
  2. ராஜ்கௌதமன் 2006, பாட்டும் தொகையும் தொல்காப்பியமும் தமிழ்ச் சமூக உருவாக்கமும், தமிழினி, சென்னை.
  3. ஆற்றோரத்திலிருந்து வயல்களுக்கு ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்குப் புறப்பட்ட இடமும் சென்று சேரும் இடமும் நமக்குச் சொந்தமென்று ஆவதில்லையே. பறவைகளுக்கும் சொந்த நாடு இல்லைதானே அப்பா (மனோஜ்குரூர் 2016:73)
  4. மாலை மயங்குவதற்குள் நாங்கள் பறம்புமலையை அடைய வேண்டும். முதல் நாளின் தூக்கமின்மையைப் பொருட்படுத்தாமல் குழந்தைகள் முன்னால் நடக்கின்றனர். எனக்கு எல்லோரிடமும் இரக்கம் தோன்றியது (மனோஜ்குரூர் 2016:96)
  5. குரங்குகளின் கையிலிருந்து தவறி விழுந்து கொண்டிருந்த பலாச்சுளைகளின் தேன் மணம் மூக்கைத் துளைத்து ஏறியது. விருப்பம் மீதூறி நடக்க மறுத்துக் குழந்தைகள் நின்றபோது பெரியவர்கள் அவர்களை இழுத்துக்கொண்டு விரைந்து அகன்றனர்.
  6. இந்தக் காட்டிலேயே வேட்டையாடிக்கிட்டு நாம இருந்திடலாமே பாட்டு பாடுறதவிட அதுதான் நல்லதுன்னு தோணுது (மனோஜ்குரூர் 2016:34)
  7. கே.வி.ஜெயஸ்ரீ 2016 (தமிழில்) மனோஜ்குரூர், நிலம் பூத்து மலர்ந்த நாள், வம்சி புக்ஸ், திருவண்ணாமலை.

*****

கட்டுரையாளர் – இணைப்பேராசிரியர்,
இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப் பள்ளி,
தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *