படக்கவிதைப் போட்டி 189-இன் முடிவுகள்

-மேகலா இராமமூர்த்தி

திரு. பார்கவ் கேசவனின் இப்புகைப்படத்தை வல்லமை ஃபிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்துப் படக்கவிதைப் போட்டிக்கு அளித்திருக்கின்றார் திருமதி. சாந்தி மாரியப்பன். இருவருக்கும் என் நன்றிகள்.

வளைந்து செல்லும் தார்ச்சாலை ஓரத்தில் வளர்ந்துநிற்கும் தருக்களின் வனப்பும் அவை சிந்தும் வண்ணங்களும் நம் கண்ணுக்கும் கருத்துக்கும் பெருவிருந்தளிக்கின்றன.

இயற்கை அன்னை நமக்களித்த அரிய வரம் இந்த மரங்கள்! வெயில் தணிக்க நிழலும், பயிர் தழைக்க மழையும் தருபவை மரங்களே என்றுணர்ந்து மானுடர் அவற்றை அழியாமல் காக்கும் காலமே இவ்வையத்தின் வசந்த காலம்!

இனி, படத்திற்குப் பொருத்தமாய்ப் பாட்டிசைக்கக் காத்திருக்கும் வித்தகக் கவிஞர்களை வரவேற்போம்!

*****

”இருமருங்கிலும் பசுமையும் இதமான தென்றலும் வருடும் இப்படத்தில் காணுமோர் இன்பப் பாதையா மானுடரின் இலட்சியப் பாதை என வினவுதிராயின் இல்லை என்றே மொழிவேன்; அஃது இருளும் இடையூறும் தடைசெய்யும் துன்பப் பாதையே; எனினும் முயன்றால் அதனையும் கடக்கலாம்; சாதனை படைக்கலாம்” என ஊக்கமூட்டுகிறார் முனைவர் மு. புஷ்பரெஜினா.

இலட்சியப் பாதை

இருமருங்கிலும் பசுமை
இதமான தென்றல்
இனிமையான சூழல்
இளமையின் தேடலுக்கு
இயற்கையின் கொடை
இன்றுதான் பிறந்தோமோவென
இதயங்களைப் பூரிப்பாக்கும்
இன்பக் கனவுகளை
இதழோரம் இசைக்கவைக்கும்
இல்லங்களின் இன்பவுலா
இங்கல்லவோ முழுமையடையும்
இலக்கியங்களின் இயற்கையையும்
இணையற்றதாக்கிடுமே
இலட்சியப் பாதை இத்தகையதோவெனில்
இல்லையென்றே இயம்பிட இயலும்
இருளும் இடர்களும்
இடையூறாக நெருக்கிடினும்
இறை பேராற்றலுடன்
இடையறாது இயன்றால்
இறுதிவரை உறுதியாக
இலட்சியப்பாதை இனித்திடுமே…

*****

”தெவிட்டாத இன்பமூட்டும் தெளிவான இந்தப் படம் கடந்த விடுமுறையில் நண்பர்களோடு கண்டுவந்த மலைப் பாதையின் வண்ணப்படம். எப்போதும் பார்த்து இரசிக்கத் தோதாய்க் கைப்பேசியில் காட்சிதருகின்றது மாட்சியோடு” என்கிறார் திருமிகு. நாங்குநேரி வாசஸ்ரீ.

மகிழ்ச்சிப் பாதை

கட்டிடக் காடுகள்
கணிசமாகிப் போன நகரில்
ஆரவாரத்துடன் காலையில்
அவசரமாகக் கிளம்பி
வாகன நெரிசலிலே
வகையாகச் சிக்குண்டு
அலுவலகம் சென்றமர்ந்து
அலுக்காமல் பணி செய்து
மாலை வேளையிலே
மரங்களற்ற சாலையிலே
மாசுபட்ட காற்றால்
மனம் துயர்ப் படும்போது
தெவிட்டாத இன்பமூட்டம்
தெளிவான இப்படம்
நல்ல காற்றை சுவாசிக்க
நானும் நண்பர்களும்
கடந்த வருட விடுமுறையில்
கண்டுவந்த மலைப்பாதை
கைப்பேசியில் இப்போ
காட்சியாய் கண்முன்னே
காலத்தால் அழியாது
கடுகளவும் மாறாது
நிழலாகத் தொடரும்
நிஜமான இப்பாதை.

*****

”காட்டுப் பாதையை விரிவாக்க எண்ணிச் சாலையோரம் நிற்கும் வனப்பான சோலைகளை வெட்டிவீழ்த்த எண்ணமிடாதீர்!” என்று எச்சரிக்கின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

அழிக்காதீர்…

காட்டுப் பகுதிச் சாலையிதைக்
கண்டு களிப்பீர் மானிடரே,
வேட்டை யாடும் நீங்களிந்த
வனப்பை யழித்திட வேண்டாமே,
காட்டுப் பாதையை விரித்திடவே
கரையில் மரத்தை வெட்டவேண்டாம்,
போட்டது போதும் வனமழித்து
போட வேண்டாம் வறட்சிவழியே…!

*****

”போராட்டமின்றி வாழ்க்கையில்லை; நேரான நெடும்பாதையில் போராடிவெல்லப் புறப்படு!” என்கிறார் பெருவை திரு. பார்த்தசாரதி.

வாழ்க்கைப் போராட்டம்!

நேரான பாதை நெடும்பயண வாழ்க்கையை
போராடி வெல்லப் புறப்படு..! – போராட்டம்
இன்றியே வாழ்க்கையும் இல்லை புரிந்தபின்
என்று மெதுவும் எளிது..!

தன் மற்றொரு கவிதையில், ”பாதையென்றால் பள்ளமும் மேடும் இருக்கவே செய்யும்; கவனத்தோடு சென்றால் வாழ்க்கையில் வெல்லலாம்!” என்று ஊக்கமூட்டுகின்றார்.

பாதை காட்டும் வாழ்வியல்..!

பாதையென் ருந்தாலே பள்ளமும் மேடுமுண்டு
காதையும் தீட்டியே கண்ணையும் பாதைமேல்
வைத்தால்தான் உண்டுநல் வாழ்க்கைப் பயணம்.!
அனுபவத் தால்நீ அறி..!

*****

நல்ல கவிதைகளை வெல்லத் தமிழில் அள்ளித் தந்திருக்கும் கவிஞர்கட்கு என் பாராட்டும் வாழ்த்தும்!

இவ்வாரத்தின் சிறந்த கவிதை அடுத்து…

எங்கே போகிறோம்?

போய்ச்சேரும் இடம் அது தெரியாமல்
சாலை அது சிறப்பாய் இருந்து பயன் இல்லை
நோக்கம் அது இல்லா வாழ்வும் என்றும்
சிறப்பாய் இருக்கச் சாத்தியம் இல்லை
தொலைநோக்கும் பார்வை ஒன்று வேண்டும்
அதை நோக்கிப் பாதை போட வேண்டும்
வழி நடத்திச் செல்ல
யாரையும் எதிர்பார்த்து நீ இருந்தால்
அவர் பாதையில் நீ நடக்க,
கொண்ட நோக்கம் அது மாறிப்போகும்
பகுத்தறிவோடு நீ இருந்து
கொண்ட நோக்கம் தனை நோக்கி
புதிய பாதையை நீ அமைத்திடு!
எழுச்சி ஒன்று நெஞ்சில் வேண்டும்
கனவாய் அது தோன்ற வேண்டும்
இயற்கையோடு கைகோத்து தினம் போராடு!
மரங்களின் நிழல் கூடஒளியாய் உன்னைத் தொடர்ந்திடும் பாரு
புகைப்படத்தில் தோன்றும் பாதையில் கூட
இரு புறம் இருக்கும் மரத்தின் நிழலது
இடைவெளி விட்டுத் தோன்ற ஏணிப்படிகளாய் தோன்றியதே!
முன்னேறும் பாதை இது என்று உணர்த்தி
தடை ஏதும் இன்றி முன்னேறி வர அழைப்பு விடுத்தனவே
பயம் அதை போக்கிடு இன்றோடு!
தைரியமாய் முன்னேறு வெற்றி தொடர்ந்திடும் உன் பின்னோடு!

”தொலைநோக்குப் பார்வையோடும் பகுத்தறிவுச் சிந்தனையோடும் உனக்கான பாதையில் நடைபோடு! அப்போது மரங்களின் நிழல்கூட உனக்கு ஒளியாகும்! நடந்திட ஏணிப் படியாகும்” என்று நம்பிக்கை விதைகளைத் தூவிடும் பாவுக்குச் சொந்தக்காரரான திரு. இராஜ்மோகன் கிருஷ்ணராஜை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

 

மேகலா இராமமூர்த்தி

மேகலா இராமமூர்த்தி

Share

About the Author

மேகலா இராமமூர்த்தி

has written 369 stories on this site.

One Comment on “படக்கவிதைப் போட்டி 189-இன் முடிவுகள்”

  • ராஜ்மோகன் கிருஷ்ணராஜ் wrote on 5 December, 2018, 11:49

    மொட்டாய் வந்த இந்த 
    புது கவிஞனுக்கு 
    இந்த வெற்றியும் 
    உங்கள் பாராட்டும்
    வளர்ந்திட நீராய் இருக்கும்
    மிக்க நன்றி 

Write a Comment [மறுமொழி இடவும்]

Security Question: (* Solve this math to continue) *


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.