-மேகலா இராமமூர்த்தி

திருமிகு. ஷாமினியின் காமிரா வண்ணத்தில் உருவான இந்தப் படத்தை, வல்லமை ஃபிளிக்கர் குழுமத்திலிருந்து தெரிவுசெய்து இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்கு அளித்திருக்கின்றார் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் என் நன்றி உரித்தாகுக!

”பாய்ந்துவரும் அலையை எதிர்த்துத் தோணியிலே பயணிக்கும் தம்பி! நெஞ்சுரத்தையும் துணிவையும் துணையாக நம்பிப் புறப்படு! வெல்லுவாய்த் தடைகளை; அள்ளுவாய் மீன்களை, கூடவே வெற்றியையும்!”

நிழற்படத்துக்கு நிசக்கவிதை எழுதி நம்முளம் வசப்படுத்தக் காத்திருக்கும் கவிஞர்களுக்கு வழிவிட்டு நான் விலகுகின்றேன்!

*****

”அமைதியாய் இருக்கும் அலைகள் எப்போது ஆர்ப்பரிக்கும், சுனாமியாய் மாறுமென்று தெரியாது. எனினும், ஆக்கம் தரும் செயலில் ஊக்கத்தோடு போராடு; முயற்சியில் வென்று முன்னேறு!” என்று இந்த இளைஞனுக்கு நல்வழிகாட்டுகின்றார் திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜ். 

முயற்சி திருவினை ஆகும்

ஆழ்கடல் அமைதியை அறிந்திட
எழும் அலைதனைக் கடந்திட முயன்றாயோ
அலை வந்து அடித்திடும் கரைதனில்
அலைபாயும் மனம் கொண்டு நின்றிட
மரம் கொண்டு எழும் அலைதனில் சறுக்கிச்
சரித்திரம் படைத்திட முயன்றாயோ
உனக்கென இடம் ஒன்றைப் பிடித்து
தடம் பதித்திட முயன்றாயோ

காலங்காலமாய்க் கரையைக் கடக்க முயன்று
எழுவதும் வீழ்வதுமாய் அலைகள் ஓய்ந்ததில்லை!
அளவாய் இருக்கும் வரை அழகாய்த் தோன்றும் அலை கூட
அதிர்ஷ்டம் வந்து சுனாமியாய்க் கரையைக் கடக்க
வாகை சூடும் வெற்றியில் பலரது வாழ்வை அள்ளிச் சென்றதே!
நல்நோக்கம் கொண்டு ஆக்கம் தரும் செயலில்
மனம் தளராமல் முயன்றிடு வெற்றி உனதாகும்
ஊரே கை கோத்து உன்னைக் கொண்டாடும்
முயற்சி திருவினை ஆகும்!

*****

”அஞ்சா நெஞ்சமும் அளவிலா முயற்சியும் கொண்ட என்னிடம் அகன்ற பெருங்கடலும் அஞ்சிநடுங்கி என் கால்களின் ஊடே அலையாய் ஓடும் காட்சியைக் காண்மின்!” என்று வீரமுழக்கமிடும் இளைஞனைக் காண்கிறோம் திருமிகு. நாங்குநேரி வாசஸ்ரீயின் கவிதையில். 

அகன்ற பெருங்கடலும்
அஞ்சி நடுங்கி என்
கால்களின் ஊடே
கடலையாய் ஓடும்
காட்சியைக் கண்டீரோ
திண்ணிய எண்ணமும்
திடமான நோக்கமும்
தெளிவான பார்வையும்
தொய்வில்லா உறுதியும்
அஞ்சா நெஞ்சமும்
அளவில்லா முயற்சியும்
எதிர்வரும் இடர்களை
எதிர்கொண்டு போராடி
இலக்கை அடைய
இனிய பாதை வகுக்கும்
என்பதை உணர்ந்து
எதிர்வரும் நாளிலாவது
சமூக அவலங்களை
சறுக்கிக் களைந்து
ஒளிமயமான வாழ்விற்கு
ஒற்றுமையாய் வழிவகுக்க
விரைந்து வாரீர்
வீர இளைஞர்களே
விடியல் நம் கையில்
சாதனை செய்வோம்
சரித்திரம் படைப்போம்!

*****

”அல்லலுற்றோர்க்கு வள்ளலாய் வளங்களை அள்ளித்தரும் அலைகடலில் துணிச்சலுடன் தூண்டில்போட்ட தங்கமகன் இவன்!” என்று இவ்விளைஞனைப் போற்றுகிறார் முனைவர் மு.புஷ்பரெஜினா. 

விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி

வானகமும் வையகமும் வணங்கிக்கொள்ளும் ஆழிதாமே,
வாழ்க்கையெனும் ஓடந்தனில் வழியறியா உள்ளங்களை
வல்லமையுடன் வழிநடத்திடுமே,
இன்னல்கள் இறுக்கினாலும் இருள் சூழாது
இதந்தந்து இன்னொளி தான் காட்டிடுமே,
கலையாத கனவுகளைக் கண்முன்னே காட்சிப்படுத்திடுமே,
கற்பனைக்கும் எட்டிடா வகையில் கப்பலாக வந்து,
தத்தளிக்கும் தங்கங்களைத் தம்கரந்தான் ஏந்திடுமே,
விடையற்ற வினாக்களுடன் வருந்திடும் வறியவனுக்கும்
வடக்கிருந்து வரும் அலைதான் வாழ்த்துச்செய்தி அனுப்பிடுமே,
இன்னல்கள் போக்கிடுமே, இன்பந்தான் நல்கிடுமே,
வருந்திடும் உள்ளத்தார்க்கு வான்புகழ் தான் வழங்கிடுமே,
அல்லல் தனை அடக்கி அலைகடல் தான்
அள்ளித்தரும் வளங்களைக் கண்டே
உள்ளம் துள்ளிக் குதித்திடாதோ
துன்பக்கடல் துடைத்திடாதோ என்றே தான்
சமுத்திரம் மீதினிலே சறுக்கிடும் வேளைதனில்
துணிச்சலுடன் தூண்டில்தான் போட்டானோ
இத்தங்கமகன்….?!

செறிவான சிந்தனைகளைத் தம் கவிதைகளில் நிறைவாய்ப் பொதிந்து தந்திருக்கும் கவிஞர்களுக்கு என் வாழ்த்தும் பாராட்டும்!

இவ்வாரத்தின் சிறந்த கவிதை இனி…

துணையாய்…

துணிச்சல் நெஞ்சில் துணையிருந்தால்
தோணியும் படகும் தேவையில்லை,
பணியா அலைகள் நிறைந்திருக்கும்
பரந்த கடலின் மீதினிலும்
துணையாய்த் துண்டு மரமிருந்தால்
துடுப்பாய்க் கைகளைக் கொண்டேதான்
துணிந்து செல்லலாம் தூரதேசம்
தெரிந்து கொள்வாய் தம்பிநீயே…!

”துணிவு துணையிருந்தால் தோணி எதற்கு? துண்டு மரத்திலேறி, கைகளையே துடுப்பாக்கிச் செல்லலாம் தூரதேசம்! வெல்லலாம் உத்தேசம் யாவும்!” என்று தம்பிக்கு நம்பிக்கையூட்டும் இக்கவிதையின் ஆசிரியர் திரு. செண்பக ஜெகதீசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *