நிர்மலா ராகவன்

அனுபவங்கள்

தான் பட்ட கஷ்டங்களையும், அதனால் அனுபவித்த துயரத்தையும்பற்றிப் பேசினால், பிறர் அனுதாபப்படுவார்கள் என்று எண்ணுகிறவர்கள் நம்மில் பலர். இவர்கள் ஒன்றை மறக்கிறார்கள். `கஷ்டங்கள்’ என்றால் அனுபவம் பெறுவது. இன்னொருமுறை அதே தவற்றைச் செய்யாது, அதே பாதையில் நடக்காமல் இருக்கத் தூண்டும் விவேகத்தை அளிப்பது. இது புரியாது, என்றோ பட்ட அவதிகளால் எந்தப் பாடத்தையும் கற்காமல் இருப்பவன் மீண்டும் மீண்டும் அதே தவற்றைச் செய்கிறான். துன்பங்களையே அடுக்கடுக்காக அனுபவிக்கிறான்.

நாம் எவ்வளவோ கஷ்டப்பட்டிருப்போம். ஆனால், இன்றைய நிலையை அடைய படிப்படியாக ஒவ்வொன்றையும் தாண்டி வந்திருக்கிறோம். சிறு வயதில் பெற்றோரும், ஆசிரியர்களும் திட்டியபோது அவர்கள்மீது ஆத்திரமும், நம்மீதே பரிதாபமும் கொண்டிருப்போம். தன்னிரக்கம் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டைதான். யோசித்தால், நாம் இப்படித்தான் நல்வழிபடுத்தப்பட்டோம் என்று புரியும். கசப்பை மறந்துவிடுவோம்.

அனுபவம் ஒன்று, பாடம் வெவ்வேறு

சந்திரா, கலா இருவரும் பதின்ம வயதாக இருந்தபோதும், ஆண்-பெண் உறவைப்பற்றி நினைத்தாலே பாவம் என்பது போல் வளர்க்கப்பட்டிருந்தார்கள். கருத்தரிப்பு போன்ற `கெட்ட’ வார்த்தைகளை அவர்களால் நினைத்துக்கூடப் பார்க்கமுடியாது. அதனாலேயே, தகாத நடத்தை கொண்ட உறவினன் ஒருவனால் இருவரும் பாதிப்படைந்தார்கள். சில காலம்தான். ஆனால், அதன் விளைவோ..!

முதலில் எந்த ஆணைப் பார்த்தும் பயம் எழுந்தாலும், காலப்போக்கில், நடந்ததில் தன் தப்பு ஏதுமில்லை என்று தெளிந்தாள் மூத்தவள் சந்திரா. பத்து சதவிகிதத்திற்கும் குறைந்தவர்கள் செய்யும் அடாத காரியங்களால் மீதி இருப்பவர்களையும் நோவது என்ன நியாயம் என்ற கேள்வி எழ, ஆண்கள் எல்லாருமே தீயவர்கள் இல்லை என்று நிச்சயித்தாள். கேடுகெட்டவர்களைப் பார்த்தவுடனேயே அவர்கள் குணம் புரிந்து, விலகவும், எதிர்க்கவும் முடிந்தது. மோசமான அனுபவம் ஒன்றால் நல்ல பாடம் கிடைத்தது. ஆண்களுடன் சரளமாகப் பழக முடிந்தது.

தங்கை கலாவோ, நடந்தது வெளியில் தெரிந்தால், தன்மீதுதான் பழி விழும் என்று பயந்தாள். (அவள் பயமும் ஒரு விதத்தில் நியாயமானதுதான். `நீ முதலில் என்ன செய்தாய்?’ என்று வதைப்பட்ட பெண்களைக் கேட்பதுதானே உலக வழக்கு!). `எல்லா ஆண்களுமே மோசக்காரர்கள்!’ என்று உறுதியாக நம்ப ஆரம்பித்தாள்.

`அழகாக, இளமைத் தோற்றத்துடன் இருந்தால்தானே ஆண்கள் தகாத இச்சையுடன் அருகில் வருவார்கள்!’ என்று யோசனை போக, தன் தோற்றத்தில் அக்கறை செலுத்த மறுத்தாள். உடல் பருமனாகியது. ஓயாத மனக்குழப்பத்தில் என்னென்னவோ நோய்கள் வந்தன. வயது முதிர்ந்த பின்னரும் ஆண்களைப் பற்றிய அவளது அவநம்பிக்கை மாறவில்லை என்பது பரிதாபத்திற்குரிய விஷயம்.

ஒரே மாதிரியான அனுபவங்கள் இருந்தாலும், வாழ்வில் நிகழும் எதிர்பாராதவைகளை எப்படி எதிர்கொள்கிறார் என்பதைப் பொறுத்தே ஒருவரது குணாதிசயம் அமைகிறது. மனதைச் சஞ்சலப்படுத்திய நிகழ்வுகள் நடந்து முடிந்தபின் சற்று நிம்மதி கிடைக்கும். அந்த நிம்மதியை அனுபவிக்காமல், வருத்தத்தையே கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருப்பதால் எப்படி!

நடந்து முடிந்ததை `வேண்டாத அனுபவம்!’ என்று ஒதுக்கி, அதிலிருந்து சரியான பாடத்தைக் கற்றிருந்தால், கலாவும் தைரியசாலியாக ஆகியிருப்பாள். நிம்மதியை இழந்திருக்கமாட்டாள். என்ன செய்வது! மனோதிடம் சொல்லிக்கொடுத்து வருவதில்லையே!

`தவறு நிகழ்ந்துவிடுமோ!’ என்ற பயத்திலேயே மூழ்கியிருந்தால், புதியதாக எதையும் செய்யத் துணிவில்லாது போகிறது. இன்பத்தை அனுபவிக்க அதற்கு நேர்மாறான நிலையையும் உணர வேண்டாமா? வெயிலில் நிழலின் அருமையை உணர்வதுபோல்தான். சுயமாக அனுபவிக்க விடுங்கள்!

சில பெற்றோர் குழந்தை கீழே விழுந்தால் துடிதுடித்துப்போவார்கள். அவர்களுடைய பரிதவிப்பில் குழந்தையும் தன்னிரக்கத்துடன் பெரிதாக அழும். இதற்காக குழந்தை நடக்க விடாமலே தடுத்துவிட முடியுமா? மீண்டும் எழுந்து, நடக்கத் துணிந்தால்தானே நடை பழகும்?

வாழ்க்கையும் இதுபோல்தான். தவறு நிகழ்ந்துவிட்டதே என்று கலங்குவது வீண். கசப்பான அனுபவங்களும், தவறான முடிவுகளும், அவைகளால் ஏற்படும் தோல்வியும்தான் நல்ல பாடங்களைப் புகட்டும். கடந்த காலத்திலேயே வாழ்ந்துகொண்டு, ஓயாது அதைப்பற்றிப் பேசினால்மட்டும் அவை மாறிவிடப்போவதில்லை.

தவறுகளைத் தவிர், கவனம்!

செய்யும் காரியத்தால் வரக்கூடிய துன்பங்களை, தவறுகளை, எப்படித் தவிர்ப்பது என்ற கவனம் அவசியம். ஒன்றரை வயதான குழந்தையிடம், `இந்தப் பாத்திரம் சூடு! தொடாதே!’ என்றால் அதற்குப் புரியாது. மிக லேசான சூடாக இருக்கும் ஒன்றில் அதன் கையை வைத்து, “ஊ..!” என்று பயமுறுத்தினால், கையை உடனே பின்னுக்கு இழுத்துக்கொண்டு, தானும் அதே ஓசையை எழுப்பும். அதன்பின், ஊசிமுனை போன்ற அபாயமான எதையும் அப்படியே சொல்லிக்காட்டலாம். இம்முறையால், வலியை அளிப்பவைகளைத் தவிர்க்க வேண்டும் என்று புரிந்துவிடுகிறது. குழந்தையின் அனுபவமும் வளர்கிறது. அனுபவங்கள் என்றால் பிறர் அனுபவித்ததிலிருந்து கற்பதும்தான்.

நான் அஜந்தா குகைகளைப் பார்க்கப் போனபோது, வெள்ளைக்காரப் பெண்மணிகள் முன்னெச்சரிக்கையாக காலுறை அணிந்து வந்திருந்தார்கள். நானோ, வெறுங்காலுடன்! தரைச் சூட்டில் பாதம் புண்ணாகி, ரத்தம் வடிய ஆரம்பித்தது. சில நாட்கள் அவதி. பாதம் சரியானவுடன், ஆரம்பப் பள்ளிப் பாட புத்தகங்களில் பார்த்தவைகளை நேரில் அனுபவித்த ஆனந்தம் தான் நிலைத்து நிற்கிறது. வலி மறந்துவிட்டது. அங்கு செல்ல விரும்பும் பிற உறவினர்களுக்கு என் அனுபவம் பாடமாக அமைகிறது. இருப்பினும், ஒருவருக்கு ஏற்பட்ட அனுபவமும், அதனால் அவர் அடைந்த உணர்ச்சிகளும் பிறருக்கும் அதே விளைவை அளிக்கும் என்று கூறமுடியாது.

`எதிர்வீட்டு குண்டு மாமி கைத்தடி பிடித்துக்கொண்டு நடந்துதான் வழுக்கி விழுந்துவிட்டாள். அதனால் நான் என்னுடையதை உபயோகிக்கவே இல்லை!’ காலில் அறுவை சிகிச்சை நடந்தபின் மருத்துவமனையில் கொடுத்த கருவியை உறையிலிருந்தே பிரிக்காது வைத்ததை ஒரு மாது என்னிடம் பகிர, எனக்கு வேடிக்கையாக இருந்தது. அவசியம் என்று கருதிதானே கொடுத்திருப்பார்கள்? யாருடைய வேண்டாத அனுபவத்தையோ பின்பற்றினால், கால் குணமாக இன்னும் அதிக நாட்களாகாதா?

புதிய அனுபவங்களா! எதற்கு?

நம் வாழ்க்கையை நாமே அமைத்துக்கொள்ளும் துணிவுடன் நடந்துகொண்டால் இப்படி ஆகுமா?

`புதிய அனுபவங்களால் என்னென்ன வருமோ! நான் இருக்கிறபடியே மகிழ்ச்சியாகத்தானே இருக்கிறேன்!’ என்று ஒரே வட்டத்தில் சுழன்றுகொண்டிருந்தால் சலிப்புதான் மிகும்.

`சிலருக்குத்தான் வாழ்க்கை நன்றாக அமைகிறது!’ என்று பொருமுவதால் என்ன பயன்? நம் வாழ்க்கையைத் நாமே அமைத்துக்கொள்ளும் துணிவுடன் நடந்துகொண்டால் இப்படி ஆகுமா?

`புதிய இடங்களுக்கு உல்லாசப் பயணம் போவதா! வீண் அலைச்சல்! அங்கு உணவு ஒத்துக்கொள்ளுமோ, என்னவோ! ஏதாவது உடல் உபாதை வந்துவிட்டால்?’ என்ற அச்சமே சிலரைப் பயணங்கள் என்றாலே தயங்க வைக்கிறது. அஜீரணம், காய்ச்சல், வயிற்றுப்போக்கு, ஒவ்வாமைக்காக என்று பலவகையான மருந்துகளை முன்னெச்சரிக்கையாக எடுத்துப்போனால் கவலையே இல்லை.

சீனர்களின் வழக்கு

`அவள் சொல்வதைக் கேள்! நீ அரிசி சாப்பிட்டதை விட அதிகமாக உப்பு சாப்பிட்டிருக்கிறாள்!’ வயதில் மூத்தவர் சொல்லைக் கேட்கவேண்டும் என்று வலியுறுத்த சீனர்கள் இப்படிச் சொல்கிறார்கள்.

சில சந்தேகங்கள் எழுகின்றன: வயது முதிர்ந்துவிட்டதால் மட்டும் ஒருவரை அறிவிலும் சிறந்தவர் என்று ஏற்றுக்கொள்ள முடியுமா? அவரது நேரத்தை, அனுபவங்களை, அவர் எப்படிப் பயன்படுத்தியிருக்கிறார் என்பதும் முக்கியமில்லையா?

திறமையும் சோதனைகளும்

திறமையால், அதனால் வரும் வெற்றிகளால் மகிழ்ச்சி, கர்வம் என்று ஏதேதோ கிடைக்கலாம். ஆனால் சோதனையால்தான் சீரிய பாடங்களைக் கற்க முடியும். ஒருவரது குணமும் புடம் போடப்படுகிறது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *