வாழ்ந்து பார்க்கலாமே 50

வாழ்க்கை – நமக்கு நாமே கொடுத்துக்கொள்ளும் ஒரு பரிசு

வாழ்க்கையின் குறிக்கோளே மகிழ்ச்சியாக வாழ்வதுதான் என்ற சொற்கள் காதுக்குக் கேட்க இனிமையாக இருக்கின்றது. ஆனால் நம்மால் அப்படி வாழ முடிகின்றதா? நமக்கு எது மகிழ்வைத் தருகின்றது? பணம், புகழ் , பதவி, உறவுகள், ஆளுமை போன்ற பலவற்றை நாம் வாழ்க்கையில் சேர்த்துக்கொண்டும் மகிழ்ச்சியை நாம் தொடர்ந்து நிலை நாட்டிக்கொள்ள முடியவில்லையே!  மகிழ்ச்சி என்பது மிகச் சிறிய காலக் கட்டங்களில் வந்து மின்னலைப் போல ஒளிர்ந்துவிட்டு மறையக்கூடியதா அல்லது நீலவானில் குளிர்ந்து ஒளிவிட்டு நிற்கும் முழுநிலவைப்போன்றதா?  அது சரி, நாம் மகிழ்ச்சியாக இருந்தாலும் உள்ளத்தில் அமைதியோடு இருக்கின்றோமா? உள்ளத்தில் அமைதியைக் கொடுப்பது மகிழ்ச்சியா, நிறைவா அல்லது ஆளுமையா? நிறைவாக இருக்கும் நேரத்தில் நாம் மகிழ்ச்சியாக இருக்கின்றோமா? பல கேள்விகள் நம் முன்னே தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன? இந்தக் கேள்விகள் புதிதல்ல. நம்முடைய புராண காலத்துக் கதைகளை படிக்கும் பொழுது நமக்குத் தெரியும் இது போன்ற கேள்விகளைத் தான் நசிகேதன் எமனின் அரண்மனை வாசலில் நின்றுகொண்டு எமனிடம் கேட்டான்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் அவனுக்கு பதில் கொடுத்த கூற்றுவன்-ஐம்பொறிகளால் கிடைக்கின்ற மகிழ்வுகளும் மற்றும் நாம் விரும்பும் தேவைகளின் நிறைவில் கிடைக்கின்ற மகிழ்வும் ‘பிரேயஸ்” என்று அழைக்கப்படும். இவைகள் நிரந்தரமல்ல. சிற்றின்பங்கள். அதே நேரத்தில் வாழ்க்கையின் முழுமையை நன்கு அறிந்து எல்லாமே நமக்குச் சொந்தம் என்ற எண்ணத்திலும் எதுவுமே நமக்குச் சொந்தமில்லை என்ற எண்ணத்திலும் பற்றற்ற பற்றை நாம் உணர்ந்து தாமரையிலைத் தண்ணீர்போல் வாழ்ந்தால் வாழ்வின் துயரங்கள் நம்மைத் தாக்காது என்ற ஒரு உண்மையை எடுத்துரைக்கின்றான்.

அப்படியென்றால் நாம் மனத்தைக் கட்டுப்படுத்தவேண்டுமா? அல்லது நமது மனதில் ஏற்படும் ஆசைகளையும் உணர்வுகளையும் ஓரங்கட்டி ஒதுக்கிவிடவேண்டுமா ? இரண்டுமே மிகவும் கடினமான செயல்கள்தான்? பல துறவிகளால் கூட இந்த நிலையை அடையமுடியவில்லையே!! இதைப்பற்றி அலசி ஆராய்ந்த நமது முன்னோர்கள் மனதை ‘நிலைப்படுத்திடுவது’ மனதை ‘ஒருமுகமாக்குவது’ பற்றிய பல அறிய தத்துவங்களை நம் முன் வைத்தார்கள்.

இதன் முதல் படியே மனதின் வேகத்தைக் கட்டுப்படுத்தி அங்கே ஏற்படும் சபலங்களையும் சஞ்சலங்களை சூறாவளியில் பறந்துசெல்லும் ஒரு இலையைப் போல் பறக்கவிடாமல் உண்மையை அறிந்து அமைதியாக இருக்கப்  பழக்கப்படுத்துவதான். இதையே யோகதத்துவங்களை விளக்கிக்கூறும் பதஞ்சலி முனிவர் தன்னுடைய முதல் பாடமாகக் கூறுகின்றார். ‘சித்தத்தை ஒருமுகப்படுத்துவதுதான் யோகநிலையென்று’.

இப்படிப்பட்ட தத்துவங்களெல்லாம் எனக்குப் புரியாது. நடைமுறைக்கு உதவுவதுமாதிரி சொல்லுங்கள் என்கிறார் என் நண்பர். வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கு என்ன வழி?

 1. வாழ்க்கை இனிமையானது. ஆனால் அந்தப் பாதையில் துயரங்களும் நமக்காகக் காத்திருக்கும். அதை நாம் இன்பத்திற்குச் சமமாக ஏற்றுக்கொள்ளவேண்டும்.
 2. நாம் இருக்கும் இடத்தில் நின்றுகொண்டிருந்தால் மகிழ்ச்சி நம்மைத் தேடி வராது. முயற்சிக்க வேண்டும் வாழ்ந்து பார்க்கவேண்டும். முயற்சி திருவினையாக்கும் .
 3. நமது வாழ்க்கை நமக்கு மட்டும் சொந்தமானது. இதை மற்றவர்களின் வாழ்க்கையோடு ஒப்பிட்டு நம்முடைய தரத்தையோ தனித்தன்மையையோ குறைத்துக்கொள்ளவோ மாற்றிக்கொள்ளவோ முயற்சி செய்வது தவறானது. நமது வாழ்க்கையை நாம் வாழக் கற்றுக்கொள்ளவேண்டும்.
 4. தனிமரம் தோப்பாகாது. ஒரு சமுதாயத்தில் நாம் சேர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். எனவே மற்றவர்கள் துயரப்படும்பொழுது நாம் மட்டும் மகிழ்வோடு இருக்கமுடியாது. நமது வாழ்வின் மகிழ்வே நாம் மற்றவர்களுக்கு எவ்வாறு உபயோகமுள்ளவர்களாக இருக்கின்றோம் என்பதை பொறுத்ததுதான். கூடிவாழ்ந்தால் கோடி நம்மை.
 5. உண்மையான மகிழ்வு பொருட்களையோ அல்லது செல்வத்தையோ சேர்ப்பது அல்ல. “பொருட் செல்வம் ” எவ்வளவுக்கெவ்வளவு தேவையோ அதுபோல ‘அருட் செல்வம்” தேவை. எனவே இறையுணர்வோடு வாழ்ந்து எல்லா உயிர்களிலும் இறைவனின் பிரதிபலிப்பை உணர்ந்து செயல்படுதல் அவசியம்.
 6. வாழ்க்கை ஒரு குதிரைப் பந்தயம் அல்ல. வேகம் தேவையில்லை. நிதானம் தேவை. இறைவனாலும் இயற்கையினாலும் நமக்குக் கொடுக்கப்பட்ட நேரத்தையும் காலத்தையும் சிறப்பாகப் பயன்படுத்தத் தெரிந்து கொள்ளவேண்டும். காலம் பொன்னானது. “உலகத்தில் உன்னை யார் வேண்டுமானாலும் மன்னித்து விடலாம். ஆனால் நீ நழுவவிட்ட நேரம் உன்னை என்றும் மன்னிக்காது.” என ஆங்கிலக் கவிஞர் உருட்யார்ட் கிப்ளிங் (Rudyard Kipling) என்பவர் கூறுகின்றார்.
 7. இருப்பதில் நிறைவு இல்லாமல் இல்லாததையோ அல்லது தேவையில்லாதையோ அல்லது நமது சக்திக்கும் முயற்சிக்கும் அப்பாற்பட்டதையோ தேடுதல் அறிவின்மைக்கு அறிகுறி. “நிறைவு” அமைதியான வாழ்க்கைக்கு முதல் படி.
 8. அறிவுக்கண்கள் எப்பபோழுதும் திறந்திருக்க வேண்டும். “கற்றல்” -தொட்டில் முதல் கடைசி மூச்சுவரை நடக்கக் கூடிய ஒரு இயல்பான செயல். கற்றலின் மூலமாக நமது வாழ்வை வளப்படுத்திக்கொள்ள வேண்டும். என்று நமது கற்றலுக்கு முற்றுப்புள்ளி வைக்கின்றோமோ அன்றே நமது வாழ்க்கையின் துடிப்புக்கள் அடங்க ஆரம்பித்துவிடும். கற்க மறுக்கின்ற ஒருவன் ஒரு நடைப்பிணத்திற்கு சமமானவன் என்று அறிஞர்கள் கூறுகின்றார்கள்.
 9. “வெற்றி-தோல்விகள்” வாழ்வில் ஏற்படும் சில நிகழ்வுகள். அவைகள் நம்மை பாதிக்கக்கூடாது. வாழ்வில் என்றும் “மேன்மை” (Excellence)யைத் தேடவேண்டும். “மேன்மையைத்” தேடும் பாதையில் பல வெற்றிகளும் சில தோல்விகளும் நமக்குக் கிடைக்கலாம். ஆனால் மேன்மை (Excellence) என்ற இலக்கு மிகச் சிறப்பானது.
 10. சிறப்பாக வாழ நமது வாழ்க்கைப் பாதைக்குச் சில ஒழுக்கங்களும் கட்டுப்பாடுகளும் தேவை. இவைகளை நமக்கு நாமே கொடுத்துக்கொள்ள வேண்டும். நமக்கு மற்றவர்களால் கொடுக்கப்படும் கட்டுப்பாடுகளும் ஒழுங்குமுறைகளும் நம்முடைய கட்டுப்பாடற்ற சிந்தனைக்கு உதாரணங்கள். நமக்கு நாமே முன்னுதாரணமாக இருத்தல் சிறப்பானது.
 11. தன்னம்பிக்கை வாழ்வின் வளர்ச்சிக்கு நாம் இடும் உரம். தன்னம்பிக்கை இல்லாத செயல்களும் தன்னம்பிக்கை இல்லாத ஈடுபாடுகளும் தன்னம்பிக்கையில்லாத முயற்சிகளும் விழலுக்கிறைத்த நீர்போல் காலப்போக்கில் தோல்விகளையே தரும்.
 12. மற்றவர்களைப் பாராட்டக் கற்றுக்கொள்ள வேண்டும். மற்றவர்களை நாம் மனம் திறந்து பாராட்டும் பொழுது நம்முடைய ஆணவம் அடிபட்டுப் போகின்றது. ஆணவமற்ற பணிவுடன் கூடிய அறிவும் திறனும் எல்லோராலும் போற்றப்படும்.
 13. உடல் நலம், மன நலம் ஆகிய இரண்டையும் பேண வேண்டும். நலமில்லாத உடலும், நலமில்லாத மனமும் முரண்பாடுகள். ஆகவே சிறப்பாகவும், மகிழ்வோடும் வாழ்வதற்கு இந்த இரண்டையும் இணைந்து போற்றினால்தான் முழுமையான வாழ்வுக்கும் வளர்ச்சிக்குமான பலன் கிட்டும்.
 14. எப்பொழுதும் ஆக்கபூர்வமான நேர்மறை எண்ணங்களோடு (Positive Thinking) வாழவேண்டும். நேர்மறையான எண்ணங்கள் கொண்டவர்களின் சூழலில் இருத்தல் அவசியம். எதிர்மறையான எண்ணங்களும் அப்படிப்பட்ட சிந்தனைகளில் வாழ்பவர்களும், கூடஇருந்தே நமது தோல்விக்கு வித்திட்டுக் கொண்டிருப்பார்கள். எதிர்மறை எண்ணங்கள் நம்மை பின்னோக்கித் தள்ளும்.
 15. “நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் வாழ்க்கை என்றும் இன்பமில்லை.” எதிர்பார்க்காத, நினைத்துக்கூடப் பார்க்க முடியாத சந்திப்புக்கள் வாழ்க்கையில் நம்முடைய திறன்களைக் காட்டக் கிடைக்கும் வாய்ப்புக்கள். அவைகளை சந்தித்து முன்னேறக் கற்றுக்கொள்ளவேண்டும்.

வாழ்க்கை வாழ்வதற்கே !  வாழ்ந்து பார்க்கலாமே !!

(நிறைவு)

Share

About the Author

க. பாலசுப்பிரமணியன்

has written 417 stories on this site.

க. பாலசுப்ரமணியன், முன்னாள் இயக்குனர் (கல்வி). மத்திய இடைநிலைக் கல்விக் கழகம், டில்லி ஆர்வம்: இலக்கியம், கவிதை, கல்வி, உளவியல், மனித வள மேம்பாடு கல்வி பற்றிய இவருடைய பல கட்டுரைகளும் புத்தகங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

Write a Comment [மறுமொழி இடவும்]

Security Question: (* Solve this math to continue) *


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.