முனைவர் வீ. மீனாட்சி
உதவிப் பேராசிரியர்,
முதுகலைத் தமிழாய்வுத் துறை,
பிஷப் ஹீபர் கல்லூரி,
திருச்சிராப்பள்ளி – 620 017

சிலம்பில் மலர்கள்

பழந்தமிழர் இயற்கையோடு இயைந்த வாழ்வை மேற்கொண்டுள்ளனர். இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த அவர்களது வாழ்வியலைத் தமிழ் இலக்கியங்கள் வழி அறிய இயலுகிறது. ஐந்திணைக் கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்த பழந்தமிழரின் இலக்கியங்கள், தமிழ்நாட்டில் வளர்ந்த மரங்கள், செடிகள், கொடிகள் அவற்றில் மலர்ந்த மலர்கள் ஆகியவை பற்றி அறிய உதவுகின்றன. பழந்தமிழர்கள் நிலங்கட்கு அந்நிலங்களில் மலர்ந்த சிறப்பான மலர்களைக் கொண்டும், மரங்களைக் கொண்டும் குறிஞ்சி (மலர்), முல்லை (மலர்), நெய்தல் (மலர்), மருதம் (மரம்), பாலை (மரம்) என்று பெயரிட்டு இருப்பது அவர்கள் இயற்கை மீது கொண்ட ஈடுபாட்டையும் சூழலியல் நோக்கினையும் விளக்குகின்றன. இதனடிப்படையில் பரல்களை மையமிட்டு இயற்றப்பட்ட சிலம்பில் சேர, சோழ, பாண்டிய நாடுகளில் மலர்ந்த மலர்களைப் பற்றி ஆராய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.

மலர் – விளக்கம்

மலர் என்பதற்குப் பூ; மலரென்னேவல் ; மலர்ச்சியானது என்றும் மலர்தல் என்பதற்கு எதிர்தல், தோன்றல், நிறைதல், விரிதல், மொட்டவிதழ், அகலுதல், பரத்தல், மனமகிழ்தல், மிகுதல் என்றும் கழகத் தமிழகராதி பொருள் உரைக்கின்றது.

சிலம்பில் மலர்ந்த மலர்கள்

பழந்தமிழரின் இலக்கியங்கள் இயற்கையின் பொருண்மையை உற்று நோக்கி உணர்ந்து படைக்கப்பட்டுள்ளன. இதில் தாவரத்தின் ஓர் உறுப்பான மலர்கள், அழகு, குளிர்ச்சி, மகிழ்ச்சி, கற்பு ஆகியவற்றின் குறியீடாக எடுத்தாளப்பட்டுள்ளன. இதில் செவ்வியல் இலக்கியமாகிய சிலப்பதிகாரத்தில் மூவேந்தர்களின் இயற்கை எழில் சூழ்ந்த நாடுகளில் மலர்ந்த மலர்களும் அம்மலர்களின் இன்றைய அறிவியல் பெயர்களும் பின்வருமாறு :

வேங்கை (Pterocarpus marsupium Roxb.&P.Santalinusl.) ஆத்தி (Bauhiniaracemasa Lam.)  வேம்பு            (Azadirachta indica A.Juss) பனை (Borassus flabellifer L.) கொன்றை (Cassia fistula .L) செந்தாமரை (Nelumbo nucifera Gaertn.)செங்கழுநீர் (Nymphaea pubescens Willd.)  சேதாம்பல் (Nymphaea pubescens Willd.) குவளை (Nymphaea sp.) கருவிளை (Clitoria ternatea L.) செங்கூதாளம் (Ipomoea sepiaria keen) வெட்சி (Ixora coccinea L.) தாழை (Pandanus odoratissimus L.f) ஆம்பல் (Nymphaea pubescens willd)  சேடல் (Jasminum sp) நெய்தல் (Phyllanthus emblica. L.) பூளை (Aerva tomentosa Forssk) மருதம் (Lagerstroemia reginae Roxb) கழுநீர் மலர் (Nymphaea pubescens willd) கருங்குவளை (Nymphaea sp) இலவம் (Bombax ceiba L.)முல்லை (Jasminum auriculatum Vahl) குமிழம் (Gmelina arborea Roxb) காந்தள் (Gloriosa superba L.)  பீர்க்கம்பூ (Luffa cylindrica (L) M. Roemer) காயாம்பூ (Memecylon edule Roxb) அசோகம் (Saraca asoca (Roxb.) De wilde) குரவு            (Tarenna asiatica (L.) kuntze) மகிழம் (Mimusops elengi L.) கோங்கு (Cochlospermum gossypium (L.) Alston)  வேங்கை (Pterocarpus marsupium Roxb. P. Santalinus. L) வெண்கடம்பு (Mitragyna parvifolia (Roxb) korth) சுரபுன்னை (Mammea suriga (Buch-Ham) kost) மஞ்சாடி (Adenanthere pavonina L.) செருந்தி (Ochna obtusata DC) செண்பகம் (Michelia champaca L.) பாதிரி (Stereospermum chelonodies (L.f) DC) குருகத்தி (Hiptage benghalensis (L.) kurz) செம்முல்லை (Iragia plukene Hi.R – sm’)  முசுட்டை (Rivea hypocrateriformis (Desr.) choisy)  மோசி மல்லிகை (Jasminum angustifolium vabl.) நறுந்தாளி (Ipomoea marginata) வெட்பாலை (Wrightia tinetora (Roxb.) R.Br.) பிடவம் (Randia malabarica Lam.) பகன்றை (Operculina turpethum silva moriso) மயிலை (Jasminum sp) இருவாட்சி (Jasminum sp) முள்முருங்கு (Erythrina stricta Roxb.) மல்லிகை (Jasminum sambac (L.) Aiton var. sambae) பித்திகை (Jasminum sp) செங்கழுநீர் (Nymphaea pubescens wild) கத்திகை (Hiptage benghalensis (L.) kurz) எட்டி (Strychnox nux – vomica L.)  வாகை (Albizia odoratissimus (L.f) Benth.) நீலோபற்மலர் (Nymphaea nouchali Burm.F) புன்னை (Calophyllum inophyllum L.) அடம்பம் (Ipomoea pes. caprae (L.) R.Br)  நந்தியாவட்டை (Eravatamia divaricata (L.) Burkill) நரந்தம் (Citrus sp) ஆச்சா (Hardwickia binata Roxb.) சந்தனம் (Santalum album L.)  சேமரம் (Alangium salvifolium (L.F) wang)  மாமரம்  (Mangifera indica L.) புன்கு  (Pongamia pinnta (L.) pierre) குறிஞ்சி (Phlebophyllum kunthianum Ness) காஞ்சி (Trewia polycarpa Benth) மந்தாரம் (Baubinia purpurea L.) தும்பை (Leucas cajan (L.) Mill sp.) வஞ்சி (Thespesia populnea (L.) sol. ex. corr?) பச்சிலை (Garcinia xanthochymus Hook .F) கடம்பம் (Neolamarckia Cadamba (Roxb.) Bosser) எனப் பல வகையான மலர்கள் மலர்ந்து மணம் வீசியிருக்கின்றன.

இப்பூக்களை இளங்கோவடிகள்

‘கோட்டினும் கொடியினும் நீரினும் நிலத்தினும்
காட்டிய பூவின்………………’

                        (சிலம்பு. அழற்படுகாதை : 93, 94)

என்று குறிப்பிடுகின்றார். இங்கு இளங்கோவடிகள் சிலம்பில் எடுத்தாளப்படும் மலர்களை மரத்தின், செடியின் கிளையில் மலர்வதைக் கோட்டுப்பூ என்றும் கொடியில் மலர்வதைக் கொடிப்பூ என்றும் நிலத்தின் புதரில் மலர்வதை நிலப்பூ என்றும் நீரில் மலர்வதை நீர்ப்பூ என்றும் நான்கு வகைப்படுத்தியுள்ளார்.

இதுபோன்ற பகுப்புமுறையினைச் சுவீடன் நாட்டைச் சேர்ந்த கரோலஸ் லின்னேயஸ் (Carl Linnaeus May 23, 1707 – January 10, 1778)  எனும் அறிவியலார் தாவர வகைப்பாட்டியல் (Plant Taxonomy)  என்று உலகிற்கு அளித்துள்ளார். அதற்கு முன்பே கோட்டுப்பூ, கொடிப்பூ, நிலப்பூ, நீர்ப்பூ என்று பழந்தமிழர் வகைப்பாடு செய்து தாவரக்குடும்பப் பகுப்பை உலகிற்கு அளித்திருப்பது இங்குக் குறிப்பிடத்தக்கதாக அமைகின்றது. இவ்வாறு இளங்கோவடிகள் தான் வகைப்படுத்திய மலர்களைச் சிலம்பில் கையாண்டுள்ள  விதம்பற்றிப் பின்வரும் பகுதி எடுத்துரைக்கின்றது.

மன்னரும் மலர்களும்

            நாடாளும் மன்னர்கள் தங்களுக்குரிய அடையாளச் சின்னங்களில் மலர்களுக்கு முக்கியத்துவம்  அளித்துள்ளனர். மன்னர்களைக் குறிப்பிடும்போது அவர்கள் சூடியிருந்த மலர்மாலைகள் அடையாளமாகக் காட்டப்படுகின்றன.

            ‘சேர, சோழ, பாண்டியரை மூவேந்தர் என அழைக்கின்றோம். வேந்தர் என்ற சொல்லே வேய்ந்தோர் என்பதன் மரூஉ என்பர். தலையில் முடி வேய்ந்தோர் என்றும் தமக்கெனக் கொண்ட மரபுடன் மலர்வேய்ந்தோர் என்றும் சிந்தித்துப் போற்றும் வகையில் முடியில் மலர் மாலையினை இணைத்துச் சூடியிருக்கின்றனர். பொதுவாக மலர்களை-மலர்மாலைகளை-முடியுடன் இணைத்து வேந்தர்கள் சூடும் பழக்கம் இந்தியப் பெருநாடு முழுவதிலும் இருந்துள்ளது’ (தமிழ்ப் பண்பாட்டு வரலாறு, செ.வைத்தியலிங்கன், ப.47.) எனும் கருத்துக்கு ஏற்ப சிலம்பில் மூவேந்தரும் தனக்கென்று தனியாக ஒரு அடையாள மாலை சூடும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர் என்பதைக் காண இயலுகிறது.

            ‘ஆரங் கண்ணிச் சோழன் ………………..’

                                                                          (சிலம்பு. பதிகம் : 12)

            ‘ஆர்புனை சென்னி அரசற்கு அளித்து’                (சிலம்பு. நடுகல்காதை : 211)

என்று சோழ மன்னன் ஆத்தி மரத்தில் பூக்கும் பூக்களை மாலையாகச் சூடியிருப்பதை இளங்கோவடிகள் சுட்டியுள்ளார்.

            ‘சினையலர் வேம்பன் தேரானாகிக்’

                                                                         (சிலம்பு. பதிகம் : 28)

            ‘இலைதார் வேந்தன் எழில் வான் எய்தக்’                                                               (சிலம்பு. நீர்ப்படை காதை : 62)

என்று பாண்டிய மன்னன் வேப்பம் பூ  மாலையினை அணிந்துள்ளதையும் அப்பூவின் பெயரால் வேம்பன் என்று அழைக்கப்படுவதையும் இளங்கோவடிகள் காட்டியுள்ளார்.

            ‘தோடுஆர் போந்தை தும்பையொடு முடித்த’                                                     (சிலம்பு. நீர்படைக்காதை : 112)

            ‘தோடுஆர் போந்தை வேலோன் தன்நிறை’                                                          (சிலம்பு. நீர்படைக்காதை : 173)

என்று சேரன் செங்குட்டுவன் இதழ்செறிந்த பனம் பூவினை  மாலையாகச் சூடினான் என்பதைச் சிலம்பு காட்டுகிறது.

நாட்டு வளமும் மலர்களும்

            ஒரு நாட்டின் வளம் என்பது இயற்கை வளத்தை அடிப்படையாகக் கொண்டது. இதில் மலர்கள் வளத்தின் குறியீடாக அமைகின்றன. இதனால்தான் இன்றும் ஒவ்வொரு நாட்டின் அடையாளச் சின்னங்களில் மலர்கள் இடம்பெறுகின்றன. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்று நான்கு நிலங்களின் வளத்தினை அங்கு மலர்ந்த மலர்களின் மூலம் சிலப்பதிகாரம் காட்சிப்படுத்துவதால் உணரமுடிகிறது. இதில் முல்லையும் குறிஞ்சியும் தம் முறைமையில் திரிந்த நிலையில் உருவாகும் பாலை நிலத்தில் கொற்றவையின் அருளால் அங்குள்ள மரங்களில் மலர்கள் மலர்வதாக இளங்கோவடிகள் காட்டியிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

            ‘நாகம் நாறும் நரந்தம் நிரந்தன

            …………………………………………………….

            …………………………………………………….

            திருவ மாற்கு இளையாள் திரு முன்றிலே’                                                                         (சிலம்பு. வேட்டுவவரி:2-4)

எனும் அடிகளில் பாலை நிலத்தில் கொற்றவையின் அருளால் சுரபுன்னை, நரந்தை, சேமரம், மாமரம், வேங்கை, இலவம், புன்கு, வெண்கடம்பு, பாதிரி, புன்னை, குரா, கோங்கு ஆகிய மரங்களெல்லாம் மலர்கள் மலர்ந்து மணம் வீசியதாக இளங்கோவடிகள் குறிப்பிடுவது அன்றைய பாலைநிலத்தின் வளத்தினையும் நம் கண்முன் காட்டுகிறது.

தெய்வங்களும் மலர்களும் 

சிலப்பதிகாரம் சமணக் காப்பியம் என்று வகைப்படுத்தினாலும் இளங்கோவடிகள் இக்காப்பியத்துள், சிவன், திருமால், முருகன், கொற்றவை, மதுராபதி தெய்வம் எனப் பல்வேறு தெய்வங்களைக் குறிப்பிட்டுள்ளார். இத்தெய்வங்களுக்குரிய குறிப்பிட்ட மலர்களும் சிலம்பில் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக,

            ‘…………. மதுரை மூதூர்க்

            கொன்றையஞ் கடைமுடி                                                                                                                  மன்றப்பொதியிலில்’

                                                                     (சிலம்பு. பதிகம் : 40)

என்று கொன்றை மாலை சூடிய சடைமுடியுடைய சிவபெருமான் என்றும்

            ‘வண்துழாய் மாலையை மாயவன்                                                                                                                    மேல்இட்டு’

                                               (சிலம்பு. ஆய்ச்சியர் குரவை:16)

எனும் அடிகளில் நப்பினை வளமுடைய துளசி மாலையை மாயவன் கழுத்தில் இட்டாள் என்றும் இளங்கோவடிகள் காட்டியுள்ளார்.

            ‘………… அலர் கடம்பன் என்றே

            வெறியாடல் தான் விரும்பி வேலன் வருக                                                                                                             என்றாள்’

                                                      (சிலம்பு. குன்றக்குரவை :13)

எனும் அடிகள் முருகனுக்கு உரிய மலர் கடம்பம் என்றும் கடம்பன் என்று பூவின் பெயராலேயே முருகன் அழைக்கப்படுவதையும் உணர்த்துகிறது. கொற்றவை  சிவனுக்கு உரிய கொன்றை மலரையும், திருமாலுக்கு உரிய துளசி மாலையையும் தோளில் போட்டுக்கொண்டு வென்றிக் கூத்து ஆடுவது,

            ‘கொன்றையும் துளவமும் குழுமத் தொடுத்த’                                                             (சிலம்பு. வேட்டுவ வரி : 11)

என்று சிலம்பு காட்டுகிறது. மேலும் மதுரையில் வாழும் மதுராபதி தெய்வம் இடக்கையில் பொன்னிறமான தாமரை மலரை ஏந்தியுள்ளதை,

            ‘இடக்கை பொலம்பூந் தாமரை ஏந்தினும்’                                                                (சிலம்பு. கட்டுரை காதை : 7)

எனும் அடிகள் உணர்த்துகின்றது. இவ்வாறு மன்னர்களின் அடையாளமாக மட்டுமல்லாது தெய்வங்களின் அடையாளமாகவும் மலர்கள் விளங்கியுள்ளன என்பதைச் சிலம்பின் வழி அறிய இயலுகிறது.

பூதங்களும் பூக்களும்

            சிலம்பில் பூத வழிபாடு செய்யப்படுவதாகக் கூறப்படும் இடத்தில் மலர்கள் இடம் பெற்றுள்ளன. மக்கள் நாள் அங்காடிப் பூதத்தை வழிபடும் போது

            ‘பூவும் புகையும் பொங்கலும் சொரிந்து’

               (சிலம்பு. இந்திரவிழவு ஊர் எடுத்த காதை:69)

என்ற அடிகள் மூலம் பூவினை இட்டு வழிபட்டுள்ளனர் என்பதைக் காட்சிப்படுத்தி யுள்ளார்.

            மேலும் அந்தணப் பூதமானது முத்துப் பூண்களுடன் தாமரை, அறுகம்புல், நந்தியாவட்டம் இவற்றைக் கொண்டு புனைந்த தலையினன் என்று காட்சிப்படுத்தப் படுத்தப்பட்டிருப்பதை,

            ‘ஒண்கதிர் நித்திலம் பூணொடு புனைந்து

            வெண் நிறத் தாமரை, அறுகை, நந்தி என்று

            இன்னனவை முடித்த நல்நிறச் சென்னியன்’                                                  (சிலம்பு. அழல்படு காதை: 18-20)

எனும் அடிகள் உணர்த்துகின்றன.

            அரச பூதமானது சண்பகம், கருவிளை, செங்கூதாளம் எனும் நீர்ப்பூக்களைக் கொண்ட கண்ணியையும் மாலையையும் அணிந்திருந்ததாக,

            ‘சண்பகம், கருவிளை, செங்கூதாளம்

            தண்கமழ் பூநீர்ச் சாதியோடு இனையவை

            கட்டும் கண்ணியும் தொடுத்த மாலையும்’                                                     (சிலம்பு. அழல்படு காதை: 40-42)

என்று இளங்கோவடிகள் காட்டியுள்ளார்.

            வணிக பூதமானது வெட்சி, தாழை, ஆம்பல், சேடல், நெய்தல், பூளை, மருதம் போன்ற பூக்களை முடித்த தலையை உடையதாக இருந்ததை

            ‘வெட்சி, தாழை, கள்கமழ், ஆம்பல்,

            சேடல், நெய்தல், பூளை, மருதம்,

            கூடமுத்த சென்னியன் ; நீடு ஒளிப்’

                                            (சிலம்பு. அழல்படு காதை: 68-70)

என்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

            வேளாண் பூதமானது கோட்டுப்பூ, கொடிப்பூ, நீர்ப்பூ, நிலப்பு (சிலம்பு. அழல்படு காதை: 93-94) என்ற நான்கு வகைப் பூக்களை இணைந்த மாலையை அணிந்திருப்பதாக இளங்கோவடிகள் சுட்டியுள்ளார். இவ்வாறு தெய்வங்களுக்கு மலர் வழிபாடு உள்ளதைப் போல பூதங்களுக்கும் வழிபாட்டில் மலர் இடம் பெற்றுள்ளதைச் சிலப்பதிகாரம் எடுத்தியம்புகிறது.

சிலம்பில் மலர்கள் வழி கையாளப்படும் உத்திகள்

            இயற்கை சார்ந்த வாழ்வியல் கொண்ட பழந்தமிழர் தம்மைச் சுற்றியுள்ள தாவர வகைகளைத் தம் படைப்பின் கருத்தைத் தெளிவுபடுத்த உத்தியாகவும் பயன்படுத்தியுள்ளனர். சிலம்பில் இத்தகு உத்திகளை உவமை, உள்ளுறை, குறியீடு எனப் பல வகையில் காப்பியப் போக்கில் இளங்கோவடிகள் அமைத்துள்ளார்.

உவமை உத்தி

            கவிஞன் தன் கருத்தின் அழகை வெளிப்படுத்தக் கையாளும் உத்திகளில் உவமை என்பது ஒரு பொருளின் சிறப்பு, அதன் நலன், அதன்மேல் கொண்டுள்ள பேரன்பு, அதன் வலிமை, இவைகள் உணர்த்தப் பயன்படுகிறது. இத்தகைய உவமைப்பொருள் என்பது உயர்ந்ததாக இருக்க வேண்டும். இதனை,

            ‘உயர்ந்தன மேற்றே உள்ளுங் காலை’                                                                                     (தொல்.உவமவியல் : 1224)

என்று தொல்காப்பியர் சுட்டுகிறார். இந்நிலையில் சிலம்பு பல்வேறு மலர்களை உவமைப்பொருளாகக் காட்டியிருப்பது மலர்கள் பழந்தமிழர் வாழ்வில் பெற்ற உயரிய இடத்தை இனம் காட்டுகிறது. இம்மலர்களின் மணம், மென்மை, வண்ணம், தூய்மை, தன்மை, சுவை, ஒளி, எழில், கவர்ச்சி, மங்கலம் எனும் பத்துத் தன்மைகளின் அடிப்படையில் உவமப்பொருளாகப் பயன்படுத்தப்படுகின்றன.

கண்மலர்கள்

            முகத்திற்கு அழகு மட்டுமல்லாது உள்ளத்தின் தெளிவை, கருத்தைக் காட்டுவன கண்களே. இத்தகைய அழகிய கண்கள் சிலம்பில் விதவிதமான மலர்களாகத் தோற்றமளிக்கின்றன.

            ‘கயமலர்க் கண்ணி…………….’ (சிலம்பு. மனையறம்படுத்த காதை : 11)

என்று கண்ணகி பெரிய மலர்போலும் கண்ணையுடையவள் என்றும்

            ‘மாமலர் நெடுந்கண் மாதவி……………..’

                                           (சிலம்பு. அரங்கேற்று காதை : 170)

என்று பெரிய மலர்போன்ற நீண்ட கண்களையுடைய மாதவி என்றும்

            ‘………………. கழுநீர் போலக் கண்ணகி கரும்                                                                                                                    கணும்’

  (சிலம்பு. இந்திரவிழவு ஊர் எடுத்த காதை : 236, 251)

            கழுநீர் மலர் போன்ற கண்ணகியின் கரும் கண் என்றும் சிலம்பில் இரு மலர்களாக மலர்ந்த கண்ணகி, மாதவி இருவரின் கண்களுக்கும் மலர்களை இளங்கோவடிகள் உவமைப்படுத்தியுள்ளார்.

            ‘தாமரை செங்கண் தழல் நிறக் கொள்ள’ (சிலம்பு. நடுகல்காதை : 110)

எனும் அடிகளில் சேரனின் இயல்பானத் தாமரை போன்ற சிவந்த கண்கள் நெருப்பு நிறத்தைக் கொண்டன என உவமைப்படுத்தியுள்ளார்.

முகத்துறுப்புகளும் மலர்களும்

            கண்கள் மட்டுமல்லாது பிற முகத்துறுப்புகளுக்கும் மலர்கள் உவமையாகச் சொல்லப்பட்டுள்ளன என்பதைப் பின்வரும் அடிகளால் அறிய முடிகிறது.

            ‘எரிநிறத்து இலவமும் முல்லையும் அன்றியும்

            கருநெடும் குவளையும் குமிழும் பூத்து ஆங்கு

            உள்வரிக் கோலத்து உறுதுணை தேடிக்

            கள்ளக் கமலம் திரிதலும் உண்டுகொல்’

   (சிலம்பு. இந்திர விழவு ஊர் எடுத்த காதை : 214-217)

எனும் அடிகளில் தாமரை போன்ற முகத்தில் ஒளிபொருந்திய இலவம் பூப்போன்ற இதழ்களையும், முல்லை மொக்குப் போன்ற பற்களையும், குமிழம் பூ போன்ற மூக்கையும் உடைய பெண்கள் எனக் கூறி முகத்துறுப்புகள் அனைத்தையும் மலர்களாக அமைத்துள்ளார்.

மலர்க் கைகள்

            கோவலன், கண்ணகியின் உறுப்பு நலனைப் புகழும் போது,

            ‘………… நின்மலர்க்கையின் நீங்காது’

                            (சிலம்பு. மனையறம்படுத்த காதை : 60)

என்று கண்ணகியின் மலர்ப்போன்ற கையினின்றும் பைங்கிளிகள் நீங்காது தங்கியிருக்கின்றன என உரைக்கின்றான்.

            ‘காந்தள் மெல்விரல் கரப்ப அணிந்து’

                                                  (சிலம்பு. கடல் ஆடு காதை : 98)

எனும் அடிகளில் மாதவி தன்னுடைய காந்தள் மலர் போன்ற மென்மையான விரல்களில்  பல்வேறு வகையான மோதிரங்கள் அணிந்திருந்ததாக இளங்கோவடிகள் சுட்டியுள்ளார். இவ்வாறு பெண்களின் கைகளுக்கு மலர்கள் ஒப்புமைப்படுத்தப் பட்டுள்ளன.

மலரடிகள்

            இறைவனது பாதங்களை மலர்களுடன் ஒப்பிடுதல் பழந்தமிழர் மரபு. இதனடிப்படையில் திருமாலின் பாதங்களை,

            ‘திரண்டு அமரர் தொழுது ஏத்தும் திருமால்!

                                                                                நின்செங்கமல

            இரண்டு அடியான் மூவுலகமும் இருள்தீர                                                                                              நடந்தனையே’

                                              (சிலம்பு. ஆய்ச்சியர் குரவை :34)

எனும் அடிகளில் தேவர்கள் அனைவரும் திரண்டு வந்து போற்றும் திருமாலே உனது சிவந்த தாமரை போன்ற இரண்டு பாதங்களால் இந்த மேல், நடு, கீழ் எனும் மூன்று உலகங்களின் துன்பம் நீங்க நடந்தாயே என்று திருமாலின் பாதங்களைத் தாமரை மலருடன் உவமைப்படுத்தியுள்ளார்.

            ‘……………………. மலையர் தம் மகளார்

            செயலைய மலர்புரை திருவடி தொழுதோம்’                                                            (சிலம்பு. குன்றக்குரவை : 16)

என்று மலை நாட்டினர் மகளாகிய வள்ளியினது அசோக மலர் போன்ற திருவடிகளைத் தொழுதோம் என்று வள்ளியின் பாதங்களுக்கு அசோக மலர் உவமையாகக் கூறப்பட்டுள்ளது.

            இறைவனின் திருவடிகள் மட்டுமல்லாது கண்ணகியின் பாதங்களுக்கும் மலர் ஒப்புமையாகக் கூறப்பட்டுள்ளது. கண்ணகியின் சிறப்பைச் சாலினி உரைக்குமிடத்தில்

            ‘இணை மலர்ச் சீறடி இனைந்தனள் வருந்திக்’

                                                           (சிலம்பு. வேட்டுவ வரி : 45)

எனக் கண்ணகி தாமரை இணை மலர்கள் போன்ற சிறிய அடிகளை உடையவள் என்பதைச் சிலம்பு எடுத்துரைக்கிறது.

உந்திக் கமலம்

            திருமால் தாமரை மலர் போன்ற உந்தியை உடையவன் என்பதை

            ‘மலர்க்கமல உந்தியாய் மாயமோ                                                                                                                     மருட்கைத்தே’

                                              (சிலம்பு. ஆய்ச்சியர் குரவை : 32)

என்றும்

            ‘பெரியவனை, மாயவனைப் பேர்உலகம்                                                                                                                 எல்லாம்

            விரிகமல உந்தியுடை விண்ணவனைக்,                                                                                                                  கண்ணும்’

                                             (சிலம்பு. ஆய்ச்சியர் குரவை : 36)

எனும் அடிகளில் திருமால் இந்தப் பெரிய உலகத்தை எல்லாம் அடக்கியுள்ள விரிந்த தாமரைப் போன்ற உந்தியை உடையவன் என்றும் உவமிக்கின்றார்.

            இவ்வாறு தெய்வங்கள், மனிதர்கள் ஆகியோரின் உடலுறுப்புகளுக்கு மலர்களை ஒப்புமைப்படுத்தி உவமை உத்தியினை இளங்கோவடிகள் வெளிப்படுத்தியுள்ளார்.

வண்ணமும் மலர்களும்

            வண்ணம் நிறைந்த மலர்களைக் காணும்போது மனதிற்கு மகிழ்ச்சி ஏற்படும். வண்ணம் பற்றிய சிந்தனை என்பது மனிதனுக்கு இயற்கை பொருள்களிடம் இருந்து கற்றுக் கொண்டதுதான். அதிலும் குறிப்பாக மலர்கள் வண்ணத்தாலும் மணத்தாலும் வேறுபாட்டைக் கொண்டவை. ஒவ்வொரு மலரும் தனக்கு எனக் குறிப்பிட்ட வண்ணத்தையும் மணத்தையும் கொண்டுள்ளன. இத்தகு மலர்களின் வண்ணமானது சிலம்பில் பல்வேறு இடங்களில் உவமைக்காக இளங்கோவடிகள் கையாளுகின்றார்.

            ‘மாரிப் பீரத்து அலர் வண்ணம் மடவாள்

             கொள்ளக்  கடவுள் வரைந்து

            ஆர்இக் கொடுமை செய்தார்? என்று

            அன்னை  அறியின்  என் செய்கோ’

                                                                  (சிலம்பு. கானல்வரி : 36)

எனும் அடிகளில் தலைவியானவள் மழைக்காலத்தில் மலரும் பீர்க்கம்பூ போன்ற மஞ்சள்நிற மேனியளாய் நிற வேறுபாடு கொள்ள, இக்கொடுமையைச் செய்தவர் யார் என்று அன்னை அறிந்தாள் நான் என் செய்வேன்? என்று தோழிக் கூறுவதாக அமைத்துள்ளார். இங்கு தலைவியின் மேனி வண்ண மாறுபாட்டிற்குப் பீர்க்கம்பூ உவமையாகக் கூறப்பட்டுள்ளது.

            ‘தூநிற வெள்ளை அடத்தாற்கு உரியள், இப்

            பூவைப் புது மலராள்’

                                              (சிலம்பு. ஆய்ச்சியர் குரவை : 12)

தூய்மையான வெள்ளைக் காளையின் வலிமையை அடக்கியவனுக்கு உரியவள் இந்தப் காயாம்பூ போன்ற வண்ணத்தினை உடையவள் என்றும்

            ‘ஆயர்பாடியின் அசோதை பெற்றெடுத்த

            பூவைப் புதுமலர் வண்ணன் கொல்லோ’

                                 (சிலம்பு. கொலைகளக் காதை : 46-47)

ஆயர்பாடியில் அசோதை பெற்றெடுத்தக் காயாம்பூப்போலும் வண்ணமுடைய கண்ணன் என்றும்

            ‘மாயம்செய் வாள்அவுணர் வீழ, நங்கை                                                                                                       மரக்கால் மேல்

           வாள்அமலை ஆடும் ஆயின்

          காயா மலர்மேனி ஏத்தி, வானோர்

          கைமெய்மலர் மாரி   காட்டும் போலும்’

                                                               (சிலம்பு. வேட்டுவ வரி : 12)

அசுரர்கள் வீழ்ச்சியடைய, கொற்றவை மரக்கால் அணிந்து வாள் கூத்தை ஆடுவாள் ஆயின், காயாம் பூப் போலும் மேனியுடைய அவளைப் புகழ்ந்து தேவர்கள் மலர் மழையைச் சொரிவார்கள் என்றும் இளங்கோவடிகள் குறிப்பிடுகின்றார்.

            இங்கு கண்ணன், கொற்றவை எனும் தெய்வங்கள் அடர் நீல வண்ணம் உடையவை என்பதைக் குறிக்கவும் இடையர் குலப்பெண் கருமை வண்ணம் உடையவள் என்பதைச் சுட்டவும் காயாம் பூவினை இளங்கோவடிகள் உவமையாக எடுத்துரைக்கின்றார்.

குறிப்பு உத்தி

            கவிதையில் ஒரு பொருளைக் குறிப்பிட்டு அதன் வாயிலாக, வேறொரு செய்தியை அறிவுறுத்துதல் குறிப்பு. இதனை, ‘ஒரு பொருளானது (Object) ஒரு சார்பாண்மைப்படுத்தலின் மூலம் ஒரு செய்தியை ஒரு பெறுநருக்குத் தெரிவிக்கிறது’ (குறியியல் – ஒரு சங்கப்பார்வை முனைவர் மொ.இளம்பரிதி ப.10) இளங்கோவடிகள் இதனை மிகச் சிறந்ததொரு உத்தியாக உருவாக்கியுள்ளார். பின்வரக்கூடிய நிகழ்ச்சிகளை முன்பு மறைமுகமாகக் குறிப்பால் உணர்த்த மலர்களைக் குறியீடாகக் காட்டியுள்ளார்.

            மங்கல வாழ்த்துப் பாடலில் மணமக்களை மலர்தூவி வாழ்த்தினர் என்று உரைக்காது மலருக்கு அடைமொழியாகச் சின்மலர் என்பதை,

            ‘காதலன் பிரியாமல், கவவுக்கை நெகிழாமல்

            தீது அறுக! எனஏத்தி சின்மலர் கொடுதூவி’

                                                        (சிலம்பு. மங்கலவாழ்த்து : 61-62)

என்று குறிப்பிடுகிறார். இது பின்வரும் நாளில் கண்ணகிக்கு ஏற்பட இருக்கும் சிறுமையைக் குறிப்பிடுவதாக அமைகின்றது.

            இதே போன்று கவுந்தியடிகள், மாதரியிடம் கண்ணகியை அடைக்கலம் கொடுக்குமிடத்தில்,

            ‘மங்கல மடந்தையை நல்நீர் ஆட்டிச்

            செங்கயல் நெடும்கண் அஞ்சனம் தீட்டி

            தேமென் கூந்தல் சின்மலர் பெய்து’

                                (சிலம்பு. அடைக்கலக்காதை : 131-133)

எனக் குறிப்பிட்டுக் கண்ணகிக்கு வர இருக்கும் தீமையை முன்பே உணர்த்துவது போல் அவள் கூந்தலில் சின்மலர் பெய்து என உரைக்கின்றார்.

            ‘தாதுசேர் கழுநீர் தண்பூம் பிணையல்

            போதுசேர் பூங்குழல் பொருந்தாது ஒழியவும்’

                    (சிலம்பு. புறம் சேரி இறுத்த காதை : 21-22)

எனும் அடிகளில் மண்மகள் கண்ணகியின் துயர்கொண்டு வருந்தும் நிலையில் மகரந்தப் பொடியுடன் கூடிய குளிர்ச்சி பொருந்திய கழுநீர் மாலை முல்லை மலர் சேர்ந்த மென்மையான கூந்தலில் சூடாது நீங்கவும் என உரைத்துக் கண்ணகிக்கு வர இருக்கும் தீங்கைச் சுட்டுவதாக அமைத்துள்ளார். கோவலன் தான் கண்ட கனவினை உரைக்கும்போது,

            ‘மாமலர்வாளி வறுநிலத்து எறிந்து’

                                         (சிலம்பு. அடைக்கலக்காதை : 101)

என்று மன்மதன் மலர் அம்புகளை வறண்ட நிலத்தில் எறிந்துவிட்டு செயலற்று நிற்பதாக காட்டுவது பின்னாளில் கோவலன் கண்ணகி வாழ்வில் ஏற்படப் போகும் நிரந்தரப் பிரிவைக் காட்டுகிறது.

            வையை ஆறானது தன் இரு கரைகளிலும் நிறைந்த மரம், செடி, கொடிகளின் பூக்களைச் சுமந்து வரும் காட்சியில் குறிப்புப்பொருளை இளங்கோவடிகள் கையாண்டுள்ளார்.

            ‘குரவமும், வகுளமும், கோங்கமும், வேங்கையும்

            ……………………………………………………………………………………

            ……………………………………………………………………………………

            கண்நிறை நெடுநீர் கரந்தனள் அடக்கிப்’

                  (சிலம்பு. புறஞ்சேரி இறுத்த காதை : 151-173)

எனும் அடிகளில் வையை ஆறானது குரவும், மகிழும், கோங்கும், வேங்கையும், வெண்கடம்பும், சுரபுன்னையும், மஞ்சாடி மரமும், மருதும் உச்சிச் செலுந்திலும் செருந்தியும், செண்பகமும், பாதிரியும், குருகத்தி, செம்முல்லை, முசுட்டை, மோசி மல்லிகை, நறுந்தாளி, வெட்பாலை, பிடவம், பகன்றை, மயிலை, இருவாட்சி, முள்முருங்கு, முல்லை, போன்ற மலர்களைப் பூந்துகிலாகக் கொண்டு கண்ணகிக்கு மதுரையில் ஏற்படப்போகும் துன்பங்களை உணர்ந்தவள் போல் நறுமலர்களாகிய ஆடையினை முழுவதும் போர்த்திக் கொண்டு, அடக்க முடியாத கண்ணீரை மறைத்து அடக்கிக்கொண்டு, புனல் ஆறு அன்று பூம்புனல் ஆறு எனக் கருதும் நிலையில் இருந்ததாகக் காட்சிப்படுத்தியுள்ளார். மேலும்,

            ‘கடுநெடும் குவளையும், ஆம்பலும், கமலமும்

            …………………………………………………………………………….

            …………………………………………………………………………….

            கண்ணீர் கொண்டு கால் உற நடுங்கப்’                                     (சிலம்பு. புறஞ்சேரி இறுத்த காதை : 184-188)

என்று கரிய நீண்ட குவளை மலரும், ஆம்பலும், தாமரை மலரும் கண்ணகிக்கும் கோவலனுக்கும் நிகழப்போகும் துன்பத்தை முன்னரே அறிந்து கொண்டன போல் வண்டுகள் ஒலி அழுகை ஒலிபோல் விளங்க அம்மலர்கள் காற்றில் அசைவது, காலால் நடுங்கி கண்ணீர் விடுவது போல் இருப்பதாகக் காட்டியிருப்பது மலர்களைக் கொண்டு இளங்கோ உருவாக்கிய குறிப்பு உத்தியை உணர்த்துகிறது.

 உள்ளுறை உத்தி

            உள்ளுறை என்பது உள்ளொன்று வைத்து அதற்கு இணையான புறம் ஒன்றைக் கூறுவதாகும். இவ்வுத்தி முறையினைக் கானல்வரி பாடல்களில் பல்வேறு இடங்களில் காண முடிகிறது.

            ‘மறையின் மணந்தாரை வன்பரதர் பாக்கத்து மடவார்

                                                                                                செங்கை

            …………………………………………………………………………………..

            …………………………………………………………………………………..

            பொறைமலி பூம்கொம்பு ஏற வண்டு ஆம்பல் ஊதும் புகாரே எம் ஊர்’

                                                                  (சிலம்பு. கானல் வரி : 27)

எனும் அடிகளில் பிறர் அறியாமல் மறைவாக மணந்தவர்களை, வன்மையான பரதர் வாழ் பாக்கத்தில் உள்ள பெண்களின் சிவந்த முன் கைகளில் அணியப்பெற்ற வளையல்கள், தலைவன் பிரிவால் தலைவி மெலிய வீழ்தன. பிறர் அறிய அவள் செயலைத் தூற்றுகின்றன. இதை ஏழையாகிய யாம் எங்ஙனம் அறியாதிருப்போம். அறிவோம் ஐயனே எங்கள் புகார் நகர வண்டுகள் நெருக்கிய கிளைகளையுடைய மிகுதியாகப் பூத்த புன்னைமரக் கிளையில் அன்னப்பறவை ஏற, அன்னத்தை முழுமதியாகவும், புன்னைப் பூக்களை விண்மீன்களாகவும் கருதி, ஆம்பல் மலர்கள் மலர ஒலிக்கும் புகார் எங்கள் ஊர். இவ்வாறு செயற்கையைப் பார்த்து இயற்கை என நினைத்து ஏமாறும் ஊர் எங்கள் ஊர். அது போன்று எம் தலைவியும் உமது பேச்சை உண்மை என நம்பி ஏமாறுகிறாள் என்று தோழி உரைப்பதாக இளங்கோவடிகள் குறிப்பிடுகின்றார். இங்கு ஆம்பல் மலரின் மலர்ச்சியில் உள்ளுறைப் பொருள் உணர்த்தப்படுகிறது.

மலர்கள் பயன்பாடு

            மனிதரின் மனதிற்கு மகிழ்வினைத் தரும் மலர்கள் பொதுவாக ஆண் பெண் இருவரும் தங்களை அலங்கரிக்க மாலையாகச் சூடுதல் என்ற நிலையில் மட்டுமல்லாமல் அவர்கள் வாழ்வில் பல்வேறு நிலைகளில் பயன்படுத்தியுள்ளனர்.

மடலும் மலர்களும்

            மாதவி, கோவலனுக்கு எழுதிய மடலில் தாழையின் வெண்மையான இதழை மடல் ஏடாகக் கொண்டு இருபக்கங்களிலும் சண்பகம், மாதவி, பச்சிலை, பித்திகை, மல்லிகை, இவைகளை வெட்டிவேரால் மிடைந்து செங்கழுநீர் மலர் இதழ்கள், கத்திகை இதழ்களுடன் சேர்த்துக் கட்டியது என்று வேனில் காதையில் (45-50) உரைப்பதும், அன்றைய மலர் பயன்பாட்டை எடுத்தியம்புகிறது.

பட்டங்களும் மலர்களும்

            மன்னர்கள் சிறந்த வணிகர்களுக்கு எட்டி என்ற பட்டத்தை வழங்கினர். பட்டத்தின் சின்னமாக எட்டிமரத்தின் பூங்கொத்துப் போன்று பொன்னால் செய்து வழங்கினர். இந்த எட்டிப் பட்டம் பெற்ற சாயலன் பற்றிய குறிப்பு அடைக்கலக் காதையில் (163) இடம் பெற்றுள்ளது. இதேபோல் காவிதி என்பதும் ஒரு மலர். இப்பூவின் பெயரால் பொற்பூவானது அமைச்சர், கணக்கர், வேளாளர் ஆகியோருக்குக் காவிதிப் பட்டத்திற்குப் பரிசளிக்கப்பட்டுள்ளது. இக்காவிதிப் பட்டம் பெற்றவர்கள் பாண்டியன் அவையில் இருந்ததை,

            ‘காவிதி, மந்திரக் கணக்கர் – தம்மொடு’ (சிலம்பு. அழற்படு காதை : 9)

என்று இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார்.

பரிசும் மலரும் 

            சேரன் செங்குட்டுவன் போரில் வெற்றி பெற்ற வீரர்களை வருக என அழைத்து பொன்னாலாகிய வாகை மலரினைப் பரிசாக அளித்தான் என்பதை,

            ‘வருக தாம் என வாகைப் பொலம்தோடு’  (சிலம்பு. நீர்ப்படைகாதை : 43)

எனும் அடிகள் எடுத்தியம்புகிறது.

யாழ், வாள், வெண்கொற்றக்கொடைக்கு மாலை சூட்டுதல்

            மாதவி யாழுக்குக் கோட்டுப்பூ சூடியதை,

            ‘சித்திரப் படத்துள் புக்கு செழும்கோட்டின் மலர்புனைந்து’

                                                                     (சிலம்பு. கானல்வரி : 1)

என்றும்

            சேரன் தன் வாளுக்கு வஞ்சி பூ மாலை சூட்டியதை,

            ‘வாய் வாள் மலைத்த வஞ்சி சூடுதும்’ (சிலம்பு.காட்சிக்காதை : 149)

என்றும்

            சேரன் வெண்கொற்றக்கொடைக்குப் பூமாலை அணியப் பெற்றதை,

            ‘மறம்மிகு வாளும், மாலை வெண்குடையும்’  (சிலம்பு.கால்கோள் காதை : 44)

என்றும் சிலம்பில் காணமுடிகிறது.

பூந்தெப்பம்

            பெண்கள் பூக்கள் பொருந்திய தெப்பத்தில் ஏறிச்சென்று புனல் விளையாட்டில் மகிழ்ந்ததை,

            ‘பூம்புணை தழீஇப் புனல் ஓட்டு அமர்ந்து’  (சிலம்பு. ஊர் காண் காதை : 75)

எனும் அடிகள் உணர்த்துகின்றன. இவ்வாறு பழந்தமிழரின் வாழ்வில் மலர்கள் பல்வேறு நிலைகளில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

தென்றலும் மலர்களும்

            கோவலனும், கண்ணகியும் ஏழுநிலை மாடத்தில் இருக்கும்போது தென்றலானது

            ‘கழுநீர், ஆம்பல், முழுநெறிக்குவளை

            ………………………………………………………………

            ……………………………………………………………..

            தாது தேர்ந்து உண்டு ; மாதவர் வாண் முகத்து’

                                                            (சிலம்பு. மனையறம்படுத்தக் காதை : 14-19)

என்று செங்கழுநீர்ப் பூ, சோதாம்பல் பூ, இதழ் ஒடியாத முழுவதும் விரிந்த குவளைப்பூ, தாமரை, வயல்களில் உள்ள நீர்ப்பூக்கள், தாழை மடலில் விரிந்த வெண்நிறப்பூக்கள், மாலை போல் மலர்ந்து தொங்கும் மாதவிப் பூ, சண்பகப் பூ போன்ற பல்வேறு மலர்களின் மணங்களையும் கொண்டு வந்ததாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சிலம்பில் இளவேனிற் வருணனை, சோலைகள் வருணனை, கடற்கரை தோற்றம் வருணனை, மருவூர்பாக்க அங்காடிகளில் பூக்கள் விற்பனை என்று பல்வேறு இடங்களில் இளங்கோவடிகள் மலர்கள் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

சின்மலரும் – பூமழையும்

இயற்கை வாழ்த்துடன் தொடங்கப்படும் சிலப்பதிகார மங்கல வாழ்த்துப் பாடலில் சின்மலர் தூவி வாழ்த்துப் பெற்ற கண்ணகி,

            ‘……………. வானவரும் நெடுமாரி மலர் பொழிந்து

            குன்றவரும் கண்டு நிற்பக்கொழுநனொடு கொண்டு

            போயினார்’ (சிலம்பு. குன்றக்குரவை : 8)

என இறுதியில் தேவர்கள், பூக்களை மழைபோல் சொரிந்து, கண்ணகியைக் கோவலனோடு அழைத்துச் செல்வதாகக் காட்சிப்படுத்தியிருப்பது சிலம்பில் இளங்கோவடிகள் மலர்களுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தையும் இயற்கை சார்ந்த பழந்தமிழர் வாழ்வினையும் நன்கு உணர்த்துகிறது.

            மேற்சுட்டிய கருத்துகளின் வழி ‘இயற்கையோடு (Nature) உள்ளுணர்வை (Psychology) இணைத்துப் பார்க்கும் முறை அறிவியல் வளர்ந்தபின் தோன்றியதன்று மிகப் பிற்காலத்தது. ஆனால் (சங்க காலத் தமிழர் இயற்கை நிகழ்ச்சிகள், செய்திகள் (Natural Phenomenon) எல்லாவற்றையும் நுண்ணிய உள்ளுணர்வோடு இணைத்துப் பார்த்திருக்கின்றனர்’ சங்க இலக்கியத்தில் செடி கொடி விளக்கம், பி.எல்.சாமி ப.40, 41) எனும் கருத்துக் காப்பியக் காலத் தமிழர்களுக்கும் பொருந்தியிருப்பதை இக்கட்டுரை எடுத்துரைக்கிறது.

தொகுப்புரை

ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் மலர்ந்த மலர்கள் வழி இக்கட்டுரையானது

  • இளங்கோவின் கோட்டுப்பூ, கொடிப்பூ, நிலப்பூ, நீர்ப்பூ எனும் தாவர வகைப்பாட்டை வெளிப்படுத்துகிறது.
  • சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் அடையாளச் சின்னமாக மலர்கள் இருந்ததையும், பழந்தமிழர் தெய்வ வழிபாடு, பூத வழிபாட்டில் மலர்களைப் பயன்படுத்தியுள்ளதை இனம் காட்டுகிறது.
  • இளங்கோவடிகள் மலர்களை உவமை, குறிப்பு, உள்ளுறை எனக் காப்பிய உள்ளடக்கத்தைச் சொல்லும் உத்தி முறைகளில் கையாண்டுள்ளதை எடுத்துரைக்கிறது.
  • மேலும் பழந்தமிழர் வாழ்வில் மலர்களைப் பல்வேறு நிலைகளில் பயன்படுத்தியிருப்பதையும் எடுத்தியம்புகிறது.

துணைநூற்பட்டியல்

  • பி.எல்.சாமி, சங்க இலக்கியத்தில் செடி கொடி விளக்கம், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்பு கழகம், 1967, சென்னை-1.
  • பி.எல்.சாமி, இலக்கியத்தில் அறிவியல், சேகர் பதிப்பகம், 1982, சென்னை-78.
  • கோவை இளஞ்சேரன், இலக்கியம் ஒரு பூக்காடு, இராக்போர்ட்டு பப்ளிகேசன், 1982, சென்னை-2.
  • கு.வி.கிருஷ்ணமூர்த்தி, தமிழரும் தாவரமும், பாரதிதாசன் பல்கலைக்கழகம், 2009, திருச்சி-24.
  • மொ.இளம்பரிதி, குறியியல் ஒரு சங்கப் பார்வை, காவ்யா பதிப்பகம், 2006, சென்னை-24.
  • ந.மு.வேங்கடசாமி நாட்டார் உரை, சிலப்பதிகாரம், ராமையா பதிப்பகம், 2013, சென்னை – 14.
  • செ.வைத்தியலிங்கம், தமிழ்ப் பண்பாட்டு வரலாறு, அண்ணாமலைப் பல்கலைக்கழக வெளியீடு, 1996, சிதம்பரம்-01.

 ========================================

ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

சிலப்பதிகாரத்தில் மக்களின் வாழ்க்கையோடு  மலர்கள் பிரித்தறியா வண்ணம் இணைந்து காணப்படுவதை ஆய்வாளர் பல இடங்களில் சான்று காட்டி விளக்கியுள்ளார். குறிப்பாக, பழந்தமிழர் வாழ்க்கை முறைகள், மலர்களுக்கும் மன்னருக்குமான தொடர்புகள், உவமை உத்திகள் என்று பன்முகங்களில் அடிப்படைக் கருத்துகளை முன்னிலைப்படுத்தியுள்ளார்.

ஆய்வின் முடிவாக மேலைநாட்டார் பதினெட்டாம் நூற்றாண்டில் மரம், செடி கொடி, நீர் ஆகியவற்றில் பூக்கும் பூக்கள் பற்றிய வகைப்பாட்டைக் கூறியுள்ளனர். ஆனால் இளங்கோவடிகள் இப்படியான பாகுபாட்டை கி.பி. 2ஆம் நூற்றாண்டிலேயே சிலப்பதிகாரத்தில் பதிவு செய்துள்ளார் என்பதையும் மக்களின் பண்பாட்டில் மலர்களின் பங்களிப்பு எவ்வளவு முக்கியத்துவம் பெற்றிருக்கிறது என்பதையும் எடுத்துக் காட்டியுள்ளார்.

குறுகச் சொல்லப்பட்ட இக்கருத்துகளை விரிவாக, ஒவ்வோர் உப தலைப்பும் ஓர் அத்தியாயமாக எடுத்துச் செல்லும் அளவு சிலம்பில் கருத்துகள் குவிந்து கிடக்கின்றன. மலர்கள் பற்றிய எந்தவொரு கருத்தும் விடுபட்டுப் போகக் கூடாது என்ற முனைப்புடன் ஆய்ந்தெழுதிய கட்டுரை ஆசிரியருக்குப் பாராட்டுகள்!

மேலும் ஆய்வாளர் சிலப்பதிகாரத்தில் இடம்பெற்றுள்ள மலர்களுக்கான தாவரவியல் பெயர்களைப் பதிவு செய்துள்ளதால் மலர்களின் மருத்துவக் குணங்கள் சார்ந்த பதிவுகள் குறித்தும் பார்த்திருக்கலாம்.

===========================================

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *