துணைவியின் இறுதிப் பயணம் – 14

சி. ஜெயபாரதன், கனடா

என் இழப்பை நினை,

எனினும் போக விடு எனை !

[Miss me, But let me go]

++++++++++++++

[43] ஈமச் சடங்கு

உயிருள்ள மானிடப் பிறவிக்கு
உரிய மதிப்பளிப்பது
நியாயமே மனித நேயமே.
அது போல்
உயிரிழந்த சடலத்துக்கும்
பயண முடிவில்
மரியாதை புரிவது
மனித நாகரீகம். மனித நேயமே.
பிரம்மாண்ட மான
வரலாற்றுச் சின்னமான
பிரமிடைக் கட்டினர்
ஃபெரோ வேந்தர்கள்
தமது உயிரிழக்கும் சடலத்துக்கு
முன்பாகவே !
மும்தாஜ் மனைவிக்கு
உலக ஒப்பற்ற,
எழில் கொலு மாளிகை,
தாஜ் மகாலை எழுப்பினார்
ஷாஜஹான் !
துணைவிக்கு நான் இரங்கற்
பாமாலை வடித்துச் சூட்டினேன்.
ஐம்பத்தாறு ஆண்டுகள்
உடனிருந்து
இடர், துயர், இன்பத்தைப்
பகிர்ந்து
கடமை, உடைமை
வறுமை, செழுமை, திறமையில்
தானும் பங்கெடுத்து
மரித்த என் துணைவிக்கு
உரிய மரியாதை
அளிப்பது என் இறுதிக் கடமை,
அதுவே ஈமச் சடங்கு !
மௌன மாளிகையில்
ஆரவர மின்றி ஆடம்பர மின்றி
ஊரார், உற்றார், உறவினர்
கூடி இருக்க,
நீத்தார் பெருமை நினைப்பது
ஈமச் சடங்கு !
தகன மாளிகையில் அன்பர் சூழக்
கடவுளை நினைத்து,
சடலைத்தை
அக்கினி மூலமாய்
வழியனுப்பி வைத்தோம்.
தங்க உடம்பு
குடத்துச் சாம்பல் ஆனது.
துணைவி புரிந்த
நல்வினை எல்லாம் அன்று
நாலுபேர் பேசி
நினைவில் வைத்தோம்.
செல்லும் போது
சொல்லாமல் பிரிந்த துணைவிக்கு
“போய் வா” என்று
வாயால் சொல்லும் வாடிக்கை
விடை தரவில்லை !
ஆயினும்
காதில் துணைவி முணுத்தது :
என் இழப்பை நினை !
எனினும் போக விடு எனை !

++++++++++++++

பிரார்த்தனை தொடர்கிறது.
சி. ஜெயபாரதன்

About the Author

has written 776 stories on this site.

அணுசக்தி ஆக்கப் பணியில் பொறியியல் துறைகளில் 45 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியா, கனடாவில் அனுபவம் பெற்று, இப்போது ஓய்வில் தமிழ் இலக்கிய படைப்புப் பணியில் முழு நேரமும் ஈடுபட்டிருக்கிறார். 1960ம் ஆண்டு முதல் இவரது விஞ்ஞானக் கட்டுரைகள், கதைகள், கட்டுரைகள் பல கலைமகள், மஞ்சரி, தினமணிக் கதிர், இதயம் பேசுகிறது, மயன், தாய், காலம் இதழ்களில் வெளி வந்துள்ளன. இவரது ஆக்க வினைகளுக்கு அணுசக்தி நூல் 1964 இல் சென்னை பல்கலைக் கழகத்தின் மாநில முதற்பரிசு பெற்றது. கணினித் தமிழ்வலைப் பதிவுகள் பின்னிப் பிணைக்கும் புதிய உலகிலே, கடந்த 15 ஆண்டுகளாக 800 மேற்பட்ட விஞ்ஞானக் கட்டுரைகள், கவிதைகள், கதைகள், நாடகங்கள் பற்பல அம்பலம், திண்ணை, பதிவுகள், அந்தி மழை, நதியலை, வல்லமை போன்ற வலைத் தளங்களில் பல்லாண்டுகள் வந்துள்ளன. இவரது நீண்ட தமிழ் நாடகங்கள் மும்பையிலும், சென்னை கல்பாக்கத்திலும் அரங்கேறியுள்ளன. இதுவரை 27 நூல்கள் வெளிவந்துள்ளன: ஆக்க வினைகளுக்கு அணுசக்தி, வானியல் விஞ்ஞானிகள், அணுசக்தி, தாகூரின் தமிழ்க் கீதாஞ்சலி, அணுவின் ஆற்றல், இந்திய விஞ்ஞான மேதைகள், சீதாயண நாடகம், சீதாயணம் படக்கதை, கீதாஞ்சலி, ஆபிரஹாம் லிங்கன், சாக்ரடிஸ், நெப்போலியன், ஜோன் ஆஃப் ஆர்க், முக்கோணக் கிளிகள் படக்கதை, கலீல் கிப்ரான் கவிதைகள், விண்வெளி வெற்றிகள், அணுமின்சக்தி பிரச்சனைகள், மெய்ப்பாடுகள், அணுசக்தியே இனி ஆதார சக்தி, நைல் நதி நாகரீகம், உலகிலே உன்னத பொறியியற் சாதனைகள், எழிலரசி கிளியோபாத்ரா, காதல் நாற்பது, உன்னத மனிதன், பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் (தொகுப்பு 1 & 2), Eco of Nature [English Translation of Environmental Poems]. அண்டவெளிப் பயணங்கள்.

Write a Comment [மறுமொழி இடவும்]


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.