உலகம் அளந்து பார்க்காத ஆழம், பெண்மை!

-விவேக்பாரதி

பெண்மை என்பதோர் ஆயுதம் – நம்
பெருமை அளந்திடும் சீதனம்
பெண்மை என்பதோர் பூவனம் – அது
பேண வேண்டிய தோர்வளம்!
பெண்மை காப்பதே நம்கடன் – அப்
பேறு வாய்ப்பதே தெய்வதம்
பெண்மை வாழ்கெனப் பாடுவோம் – எந்தப்
பெண்ணைக் கண்டாலும் போற்றுவோம்!

ஆணின் பலமெலாம் ஊனிடம் – பெரும்
ஆன்ம பலமெலாம் பெண்ணிடம்
காண வேண்டிய கீர்த்திகள் – நம்
காரி கைவசம் பூர்த்திகள்
பேணும் நல்லறம் பெண்ணிடம் – பல
போரும் அமைதியும் பெண்ணிடம்
தூணைப் போலதைக் காத்துதான் – எதிர்
தோன்றும் போதெலாம் வாழ்த்துவோம்!

வானின் மாமழை தாய்க்குணம் – அலை
வண்ணக் கடலும் காதல்மனம்
சேனை ஆயிரம் ரௌத்திரம் – பல
செழுமை பெண்கொளும் பூரணம்!
ஞானம் அவர்சொலும் போதனை – அவர்
நாமம் தேன்வரும் கீர்த்தனை
தானு ணர்ந்திதை ஏத்துவோம் – பெருந்
தண்மை பெண்களைப் போற்றுவோம்!!

About the Author

has written 56 stories on this site.

"கல்லூரி பயிலும் இளம் மரபு கவிஞர்" துபாய் தமிழர் சங்கத்தின் மூலம் "வித்தக இளங்கவி" என்ற பட்டம் பெற்றவர். "மகாகவி ஈரோடு தமிழன்பன்" விருது பெற்றவர். "முதல் சிறகு" என்னும் கவிதைத் தொகுப்பின் ஆசிரியர். பாரதி மேலே தீராத பற்று கொண்ட இளைஞர். மரபுக் கவிதைகள் மேல் வளர்த்த காதலால் கவிதை பாடும் கவிஞர்.