-சேஷாத்ரி ஸ்ரீதரன்

 

1) சதுர்வேதி மங்கலம் உருவான வகை பற்றிய கல்வெட்டு

தமிழகத்தில் பண்டு நிலவிய நான்கு ஆட்சிஅதிகார அடுக்கில் முறையே முதல் அடுக்கில் வேந்தனும், இவனுக்கு அடங்கி இரண்டாம் அடுக்கில் மன்னனும், மன்னனுக்கு அடங்கி மூன்றாம் அடுக்கில் அரையன் என்ற அரசனும், அரசனுக்கு அடங்கி நான்காம் அதிகார அடுக்கில் நாட்டுக் கிழான் என்ற கிழார் கோனும் இருந்துள்ளனர். இப்படி உள்ள நான்கு அதிகார அடுக்கினர் தத்தம்முள் பெண் கொண்டும் கொடுத்தும் உறவு பேணி வந்தனர். ஆனால் இந்த வரலாற்று உண்மையை அறியாத மூடர் அரசர்களை அந்தப்புரத்திற்கும், போர்க்களத்திற்கும் அனுப்பி வைத்துவிட்டு அமைச்சராக, அரசகுருவாக இருந்து பிராமணர் ஆட்சி அதிகாரம் செலுத்தினர் என்று பொருத்தமற்ற கதையை கட்டி விடுகின்றனர்.

இந்த மூன்றாம் அதிகார அடுக்கில் இருந்த அரசன் வாணகோவரையனால் 22 வீடுகளும், 1-1/2 புன்செய்யும், 128 நிலமும் கோவில் பணியாளருக்கு கொடுக்க முடிந்திருந்தது என்றால் ஒரு வேந்தனால் எந்த அளவு கொடுக்க முடிந்திருக்கும் என்ற கேள்விக்கு அதை விட 10-15 மடங்கு வசதிசெய்து தரமுடியும் என்று தெரிகின்றது. இதற்குச் சான்றாகப் பாண்டியன் சடையன் குலசேகரன் ஏற்படுத்திய உலகுடை முக்கோக்கிழானடி சதுர்வேதி மங்கலக் கல்வெட்டு திகழ்கின்றது. இக்கல்வெட்டு 250 பிராமணர்களுக்கு இந்த சதுர்வேதி மங்கலத்தை, குடியேற்ற ஊரைப் பாண்டிய வேந்தன் ஏற்படுத்தியதாகச் சொல்கின்றது. இக்கல்வெட்டு திருநெல்வேலி வட்டம் பாலாமடையில் உள்ள வேங்கடேசப் பொருமாள் கோயில் கருவறை தென் அதிட்டானத்தில் இடம் பெற்றுள்ளது.

கல்வெட்டுப் பாடம்:

  1. ஸ்வஸ்திஸ்ரீ கோனேரின்மை கொண்டான் உலகுடைய முக்கோக் கிழானடி சதுர்வேதி மங்கலத்து சபையார்க்கு, தங்களூர், அக்காழ்வி திருநாமத்தால் உலகுடைய முக்கோக்கிழானடி சதுர்வேதி மங்கலமென்று வேதமும் சாஸ்திரமும் போய் பூர் _ _ _ _
  2. தியாதர் களாயிருக்கும் சதுர்வேதி பட்டர்கள் இருநூற்றைம்பதின் மற்கு கீழ்க்களக் கூற்றத்து கற்குடியான சுத்தமல்லி நல்லூரும், படையெடுப்பான் குளமும், ஆலங்குளமு, பிரா
  3. யோடு குளமும், நீலன்கோன் குளமும் கீழ்வேம்பை நாட்டு ஆத்தி சிந்தாமணி நல்லூர்பால் சர்வதேவி விளாகமும் இடையாற்றூர் கள நிலம் முக்காலு ஒரு மாவரை வாகைக்குளம் புரவரி நல்லூரும் பாரி
  4. மங்கலமும் கொறக்கோட்டையான அபிமான சிவமங்கலமும் கீழேறங்குடியில் பள்ளிச்சந்த நீங்கியுள்ள குளமும் மேலேறங்குடியில் மானாபரணப் பாடியில் ஸ்ரீ குலைசேகர விண்ணகர் எம்பெருமான்
  5. தேவதானமும் பள்ளிச்சந்தமும் நீங்கியுள்ள நிலமும் திருக்களக் குறிச்சியும் கண்டநாட்டு மலையும் பதரூர்பால் திருவாலவாயுடையார் தேவ
  6. தானமான சுங்கந் தவிர்த்த விளாகமும் சிறுசெழிய னூரும் இவ்வூர்கள் முன்னுடையாரையும் பழம்பெயரையும் தவிந்து ஒரு நாட்டினுக் கீழ்களக் கூற்றமும் ஓரூரும் ஒரு புரவாக்கி அணிந்தானப்பனான வீரவினோத பல்லவரைய
  7. ன் பிரமதேயஞ் செய்யப் பெறவேணுமென்று ஐயந் முனையதரையர் நமக்குச் சொன்னமையில் அக்காழ்வி திருநாமத்தால் உலகுடை முக்கோக் கிழானடி சதுர்வேதி மங்கலமென்னும் பேரால் வேதமும் சாஸ்திரமும் போய் பூர்
  8. தியாதர் களாயிருக்கும் சதுர்வேதி பட்டர்கள் இருநூற்றைய்ம்பதின் மர்க்கு பிரமதேயமாக கீழ்க்களக் கூற்றத்து கற்குடியான சுத்தமல்லி நல்லூரும், படையெடுப்பான் குளமும், ஆலங்குளம், பிராயோடு குளமும், நீலங்கோன் குளமும்,
  9. கீழ்வேம்பை நாட்டு ஆத்தி சிந்தாமணி நல்லூற்பால் சர்வதேவி விளாகமும் இடையாற்றூர்களநில முக்காலே யொரு மாவரை வாகைக்குளம் புரவரி நல்லூரும் பாரிமங்கலமும் கொறகோட்டையான அபிமான சிவமங்கலமும் கீழேறங்குடியில் பள்ளிச் சந்தம் நீங்கியுள்ள நி
  10. லமும் மேலேறங்குடியில் மானாபரணப் பாடியில் ஸ்ரீ குலசேகர விண்ணகர் ஆழ்வார் தேவதானமும் பள்ளிச் சந்தமும் நீங்கியுள்ள நிலமும் திருக்களக் குறிச்சியும் கண்டநாட்டு மலையும் பதரூர் பால் தென் திருவாலவாயுடையார் தேவதானமான நிலம் ஏ
  11. ழுமாவரையும் திருமேற்றளிசயுடையார் தேவதானமான சுங்கந் தவித்த விளாகமும் சிறுசெழியனூரும் இவ்வூர்கள் மூன்றாவது பிசானமுதல் முன் உடையாரையும் பழம் பெயரையும் தவிர்த்து ஒரு நாடு கீழ்க்களக் கூற்றமும் ஓரூரும் ஒருபுரவு மாக்கி இவ்வூர்களில் கற்குடி
  12. யான சுத்தமல்லி நல்லூர் _ _ _ திருதேவதான _ _ _ நிலங்களால் _ _ _ லாம் _ _ _ எற்றைக்கு கடமை _ _ _

             (கல்வெட்டு முற்றப் பெறவில்லை)

சொற்பொருள்:

சதுர்வேதி மங்கலம் – பிராமணர் குடியேற்ற ஊர்; பூர்தியாதர்கள் – வேதக் கல்வி நிறைவுசெய்தோர்; விளாகம் – சூழ்ந்த இடம்; பள்ளிச்சந்தம் – சமணபள்ளிக்கு வழங்கிய நிலதானம்

கல்வெட்டு விளக்கம்: இன்னொரு கல்வெட்டு இதே செய்தியைத் தாங்கி  வருகின்றது அதில் சடையன் குலசேகரனைக் குறிப்பிடுவதை வைத்து கோனேரின்மை கொண்டான் > இரண்டாம் ராஜாதிராஜனுக்கு அடங்கி (1166 – 1178) ஆண்ட சடையன் குலசேகர பாண்டியனின் ஆட்சியில் (1162 – 1177)  ஆட்சி ஆண்டு குறிப்பிடாத இக்கல்வெட்டு தன் அக்காள் மேல் கொண்ட பாசத்தால், மதிப்பால் ஏற்கெனவே அரையோலையில் தந்தபடி ஓலையாக மட்டுமே இருப்பதை நடைமுறையில் செயற்படுத்த பிராமணரும், திருநெல்வேலி வட்டத்து உதயனேரி என்னும் பாலாமடை வேங்கடேசப் பெருமாள் கோயில் அறங்காவலர் (ஸ்ரீகாரியம்) அணிந்தானப்பனான வீரவினோத பல்லவரையன் சொன்னதால், ஐயன் முனையதரையர் பிரமதேயஞ் செய்யப் பெற வேண்டுமென்று சொன்னதால் வேத சாஸ்திரம் கற்று முழுத் தேர்ச்சி பெற்ற 250 பிராமணர்களுக்கு வரி நீக்கி சதுர்வேதி மங்கலத்து நிலத்தை தந்துள்ளான். இவர்கள் வாழும் அந்நிலத்தை சதுர்வேதி மங்கலம் ஆக்கி அதற்கு தன் அக்காள் பெயரைத் தேர்ந்து உலகுடைய முக்கோக் கிழானடி சதுர்வேதி மங்கலம் என்று பாண்டியன் பெயர் சூட்டியுள்ளான். இந்த சதுர்வேதி மங்கலத்து நிலப்பரப்பு ஏழு குளங்களை உள்ளடக்கியும், ஏற்கெனவே இருந்த ஆறு ஊர்களையும் அத்தோடு இரண்டு கோவில் விளாகங்களையும் ஒரு மலையையும் சமணர் கோவில் பெருமாள் கோவில் ஆகியவற்றின் இறையிலி நீங்கிய பள்ளிச் சந்தம் தேவதான நிலம் ஆகியவற்றையும் உட்கொண்டதாக ஆக்கி இவ்வூர்களின் பழைய பெயரையும் அதில் ஏற்கெனவே வாழ்வோரையும் தவிர்த்து, இதாவது, நீங்கலாக உருவாக்கப்பட்டது.

சதுர்வேதி மங்கலம் என்றால் பிராமணக் குடியேற்ற ஊர். அந்த வகையில் இந்நிலப்பரப்பில் ஏற்கெனவே வீட்டோடு குடியிருந்த பிராமணர் நீங்கலாக புதிதாக 250 பிராமணருக்கு வீடும், கொல்லைப்புறமும் அதோடு விளை நிலங்களும் தந்திருக்க வேண்டும் என்று புரிகின்றது. ஆனால் கல்வெட்டின் அந்தப் பகுதி வெட்டப்படாமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. இவ்வண்ணமாகத் தான் பிற சதுர்வேதி மங்கலங்கள் இதற்கு முன்பு உருவாக்கப்பட்டுள்ளன எனத் தெரிகின்றது. இவ்வாறு ஆட்சியாளர்கள் பண்டு பிராமணருக்கு பிரமதேயம் வழங்கிய காரணம் என்வென்றால் ஆட்சியாளர்கள் கோவில்களை தமக்கு சொந்தமாக எண்ணியதால் தம் கோவிற் பணியாளருக்கு இந்த சலுகைகளை செய்தனர் எனக் கொள்வதே சரியாகப் படுகின்றது. இப்படி பிராமணருக்கு தான் என்றில்லை வைத்தியருக்கும், பறைகொட்டும் உவச்சருக்கும், கோயில் கணக்கு எழுதுவோருக்கும் ஆட்சியாளர் வீடு, நிலம் ஆகியவற்றை தானம் கொடுத்து உள்ளனர்.

பார்வை நூல்: திருநெல்வேலி மாவட்டக் கல்வெட்டுகள் தொகுதி I, பக். 7-8. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு, எழும்பூர், சென்னை – 8.

 

2) 26 உவச்சருக்கு நிலங்கொடுத்ததை காட்டும் பாளையங்கோட்டை கல்வெட்டு

பாளையங்கோட்டையில் அமைந்த கோபாலசுவாமி கோயிலான வீரநாராயண பெருமாள் கோவிலில் திருப்பலி கொட்டவும், திருமஞ்சனம் கொட்டவும், திருப்பள்ளி எழுச்சியின் போது சாமம் கொட்டவும், காளம் ஊதவும் 26 உவச்சருக்கு முதலாம் இராசராசனின் 22 ஆம்ஆட்சி ஆண்டில் (கி.பி.1007) மகாசபையோரால் நிலதானம் வழங்கப்பட்டுள்ள செய்தி கல்லில் வெட்டப்பட்டுள்ளது.

கல்வெட்டுப் பாடம்:

  1. திருப்புகழ்சேர் ஈழ மண்டலமும் இரட்டபாடி ஏழரை இலக்கமும் திண்(றிதல்) வென்றித் தண்டாற் கொண் _ _ _ ழில் எலா யா
  2. ண்டுந் தொழுதகை விளங்கும் யாண்டேய் செழியரைத் தேசு கொள் ஸ்ரீ கோராஜராஜ கேஸ _ _ _
  3. ண்டு 22 ஆவது  ஸ்ரீ ராஜராஜ தேவர் சி(று) த(ன)த்து பணிமகன் ஆதனூர் (பவை பெகறை வழி) _ _ _ _ _ _
  4. _ _ _ _ ப்ரஹ்மதேயம் (ஸ்ரீ) வல்லப மங்கலத்து (மஹாஸ)பை(யோம்). இவ்வூர் (ண) வீரநாராயண _ _ _ _ ளை மாடக்கு
  5. (பைக்) கூடி இருந்து ஸ்ரீ வீரநாராயண விண்ணகர் ஆள்வார்க்கு ஸ்ரீபலா கொட்டவும், திருமஞ்சனம் கொட்டவும், திருப்பள்ளி எ _ _ _(சாமங்) கொட்டவும் (உவற்ச) ஆள்
  6. த்(த)னுக்கு (ஆளுக்கு) நிலன் ஒரு (மாவு)மாக நிலம்பத்து மாவும் உவற்சர் (தலை) பறை கொட்டுவானொருவனுக்கு நில_ _ _
  7. நிலம் பன்னி ரெண்டும் (அட)ங்கும். காளம் ஊதுவார் நால்வர்க்கு ஆளாள் ஒரு மாவாக நிலன் நாலு(மாவும்) நிலன்_ _ _

சொற்பொருள்:

திண்திறல் – திரண்டுபெருகிய; வென்றி – வெற்றி; தண்டு- படை; சிறீதனம் (ஸ்ரீதனம்) – கருவூலம், treasury; மகாசபையோர் – கருவறைப் பட்டர்கள்; உவச்சர் – இசைக் கருவி முழக்குவோர்; ஆளாள் – ஒவ்வொரு ஆளுக்கும், per individual.

கல்வெட்டு விளக்கம்:

முதலாம் இராசரானின் மெய்கீர்த்தியோடு கல்வெட்டு தொடங்குகின்றது. அவனுடைய 22 ஆம் ஆட்சி ஆண்டில் (கி.பி.1007) அவனது கருவூலத்துப் பணிமகன் ஆதனூரன் கொண்டு வந்து கொடுத்த ஆணைப்படி இற்றைய பாளையங் கோட்டையான அற்றைய வல்லபமங்கலத்து பெருமாள் கோவில் கருவறைப் பிராமணர்கள் ஒன்றுகூடி வீரநாராயண விண்ணகர் பெருமாளுக்கு திருப்பலியின் போது பறைகொட்டவும், திருமஞ்சனத்தின் போது பறை கொட்டவும், திருப்பள்ளி எழுச்சியின் போது சாமம் கொட்டவும் ஏற்பாடான உவச்சர் ஆள் ஒருவருக்கு இதாவது, ஒவ்வொருவருக்கும் தனித்தனியே ஒரு மா என பத்து மாவும், தலைப் பறை கொட்டுவார் ஒவ்வொருவருக்குமாக நிலம் பன்னிரண்டும், காளம் ஊதும் நால்வருக்கு ஆளாளுக்கு ஒரு மா என நாலு மாவும் நிலம் கொடுக்கப்படுகின்றது. ஆக 26 உவச்சர் நிலம் பெற்றனர் என்று தெரிகின்றது. கல்வெட்டு இதன்பின் சிதைந்துள்ளது. எனவே இதற்குமேல் என்ன செய்தி உள்ளது என்று அறிய முடியவில்லை. அதில் நிலஅளவும் நிலம் அமைந்த இடமும் குறிக்கப் பெற்றிருக்கலாம். உவச்சர்களே 26 பேர் என்றால் கோயில் பிராமணர், கணக்கு எழுதுவோர், கோயில் மருத்துவர், தேவரடியார், கோயில் இடையர் என பலரையும் உள்ளடக்கினால் தொகை 100க்கு மேல் செல்லும். இதிலிருந்து ஒரு கோயிலை நம்பி பல குடும்பங்கள் பிழைத்தன எனத் தெரிகின்றது.  காட்டை அழித்து ஒரு கோயில் ஊரை அமைத்தால் இறையிலி நிலம் போக எஞ்சிய நிலங்கள் ஆட்சியாளருக்கு அதிக வரி வருவாயைத் தேடித் தந்தன என்பதை உணரலாம். கோயில் ஊர்கள் உருவாகி இராவிட்டால் இந்த அளவிற்கு வரிவருவாய் வந்திருக்காது.

பார்வை நூல்: திருநெல்வேலி மாவட்டக் கல்வெட்டுகள் தொகுதி I, பக்.22. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு, எழும்பூர், சென்னை – 8.

 

3) கணக்கன் நிலதானம் பெற்றதைக் காட்டும் பாளையங் கோட்டைக் கல்வெட்டு

பாளையங்கோட்டையில் அமைந்த கோபாலசுவாமி பெருமாள் கோவில் தென்புறச் சுவர் கல்வெட்டு கி.பி. 1526 இல் வேணாட்டு வேந்தரின் ஆட்சிக்கு இப்பகுதி உள்ளடங்கி இருந்தபோது கோயில் நிர்வாகக் கணக்காக கணக்கு எழுதும் குமரன் ஈசுவரனுக்கு நிலதானம் கொடுத்த செய்தியைத் தருகின்றது.

கல்வெட்டுப் பாடம்:

  1. ஸுபமஸ்து அருளில் செயல் கொல்லம் 700 1 (701) ஆண்டு பங்குனி மாதம் 20 8 (28) நாள் ஸ்ரீவல்லவ
  2. ன் மங்கலத்து நாயனார் அழகிய மன்னார் கோவிலுக்கு ஸ்ரீ விருந்தாவன ஆழ்வா
  3. ர் கோயிலுக்கும் நயினார் வேத நாயகர் பெருமாள் கோயிலுக்கும் இக்கோயிலிற்
  4. கைக்கோளரில் மூன்றாங்குடி குமரன் ஈச்சுவரனுக்கும் காணியாட்சை பண்டா
  5. ரக் கணக்காகக் குடுப்பித்த தானக் கணக்கும் எழுதிக் கொண்டு பழைய படியே  உடை
  6. மையும் பிரசாதமும் பற்றிக்கொண்டு சந்திராதித்தவல் சந்ததிப் பிரவேசமே க
  7. ல்லிலுஞ் செம்பிலும் வெட்டிக் கணக்கு எழுதி பழையபடி உடமையும்
  8. ப்ரசாதமும் பற்றிக் கொண்டு இன்னாள் முதல் 700 1 (701) ஆண்டு பங்குனி மாஸம் 20 8 (28) க
  9. ற்பித்த அளவுக்குத் தானம் இன்னாள் முதல் இத்தரகு பிடிபாடாக இவ்வ
  10. கைப் படியே கணக்கு எழுதி உடமையும் பற்றிக் கொள்ளும் படியு
  11. ம் பாற்க இப்படிக்கு இராமன் இராமன் எழுத்து.

சொற்பொருள்:

கொல்லம் – கி.பி. 875 இல் தொடங்கிய சேரநாட்டு ஆண்டுக் கணக்கு; அழகிய மன்னார் – இராசகோபாலன் என்பதன் தமிழ் வடிவம்; விருந்தாவன ஆழ்வார் –கிருஷ்ணன்;  கைக்கோளர் – செங்குந்தர்; மூன்றாங்குடி – மூன்றாம் தலைமுறை; காணியாட்சை – விளைநில உரிமை; உடமை – வீடு, வீட்டை ஒட்டிய நிலம், கிணறு, தோட்டம், தோப்பு உள்ளிட்டவை; சந்ததிப் பிரவேசம் – பிறங்கடை வழிவழியாகத் தொடர்வதாக; பிடிபாடு – வழிகாட்டுநெறி, guidelines.

கல்வெட்டு விளக்கம்:

ஆய்குலத்து வேணாட்டு வேந்தர் வீரரவி கேரளவர்ம குலசேகர பெருமாள் (1504-1528) ஆண்ட காலத்தே திருநெல்வேலி வேணாட்டு ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. கொல்லம் ஆண்டு 701 (கி.பி.1526) பங்குனி மாதம் 28 நாளில் எழுதப்பட்ட இந்த ஓலை ஆணை வல்லப மங்கலத்து நாயனாரான இராசகோபாலர் கோவில், கிருஷ்ணன் கோவில், மூலவர் வேதநாயகப் பெருமாள் கோவில் ஆகிய கோவில்களுக்கும் இவற்றில் கணக்கனாகப் பணிபுரியும் கைக்கோளன் குமரன் ஈசுவரனுக்கும் காணிஉரிமையாக நிலம் தானமாகத் தரப்பட்டது. இந்த தானத்தைப் பெற்றுக் கொண்ட குமரன் ஈசுவரன் பழையபடியே கோயிலில் உடைமையும் மூன்றுகால பூசையில் வரும் பிரசாதமும் பெற்றக் கொண்டு நிலவும்ஞாயிறும் உள்ள வரை தலைமுறை தலைமுறையாக வேலையைச் செய்துவரலாம் என்று சொல்லப்பட்டு உள்ளது. இதைக் கல்லிலும் செப்பிலும் வெட்டி வைத்து கொல்லம் 701 (கி.பி. 1526) 28ஆம் நாள் முதல் சொல்லிய அளவிற்கு தானம் பற்றிய கணக்கு எழுதி பழையபடியே கோயிற் கணக்கு எழுதிக்கொண்டு உடமையும் பிரசாதமும் பெற்று வருக என்று இராமன் இராமன் ஓலை ஆவணம் எழுதினார். கைக்கோளர் பல்லவப் பேரரசு காலத்திலேயே பாண்டிய நாட்டில் படையாள்களாக குடியேறிவிட்டனர். பல்லவர் பாண்டியரோடு சதையும் குருதியுமாக சேர்ந்துவிட்டனர். இக்கல்வெட்டு மூலம் பிராமணர் மட்டும் அல்லாது பிற கோவில் பணியாளரும் நிலதானம் பெற்ற செய்தியை அறிய முடிகின்றது.

பார்வை நூல்: திருநெல்வேலி மாவட்டக் கல்வெட்டுகள் தொகுதி I, பக்.27. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு, எழும்பூர், சென்னை – 8.

https://tamilnadu-favtourism.blogspot.com/2017/05/mannar-rajagopalaswamy-temple-Palayamkottai.html

https://www.alltravels.com/india/tamil-nadu/palamadai/photos/current-photo-83074720

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “கல்வெட்டுகள் சொல்லும் கதைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *