கல்லிடைக் குறிச்சி தனிக்கல் காட்டும் சமூக வரலாறு

-சேஷாத்ரி ஸ்ரீதரன்

நெல்லை அம்பாசமுத்திரம் வட்டம் கல்லிடைக் குறிச்சியில் கோட்டைத் தெருவில் உள்ள தனிக்கல் கொல்லம் ஆண்டு 628 இல் (கி.பி.1453) 44 வரிகளில் வெட்டப்பட்டு உள்ளது. இதில் வெள்ளார் எவரும் இனி வெள்ளை நாடார்களை தம் பணியில் அமர்த்திக் கொள்ள வேண்டாம் என்று தடை செய்து அதை இக்கல்வெட்டில் குறித்துள்ளனர். இது அக்கால சமூக நிலையை அறிய மிகவும் உதவுகின்றது.

கல்வெட்டுப் பாடம்:

 1. கொல்லம் 600 20 8 (628) ஆண்டு சித்திரை மாதம்
 2. (5) நாள் முன்னாள் நாட்டின கல்லு
 3. (இ)ரண்டுக்கும் படி எடுப்பு. கொ
 4. ல்லம் 500 50 5 (555) ஆண்டு  கும்ப னாயறு
 5. (14) நாள் சென்றது நம்முடைய நாட்
 6. டில் வெள்ளாழற்க்கு பிழைப்
 7. போர் சில காரியம் வெள்ளை நாடாரி
 8. ல் சோதினை உள்ளிருப்பு பாசித்த
 9. லை விக்கிரம ஆதித்தன் செய்
 10. கையாலேயம் நாட்டினகல்லி
 11. ல் வாசகமும் 500 60 1 (561) ம் ஆண்டு மீன்னா
 12. யறு 26 சென்றது. னாட்டில் வெள்
 13. ளாழற்கு பிழைப்பார் சிலகாரி
 14. யம் வெள்ளை னாடாரில் கணக்கு
 15. கோளரி அய்யப்பனும், அய்யப்ப
 16. ன் குமரனும், அண்டூர் செழியங்க
 17. னும் செய்கையாலேயும் செனமு
 18. ம் காரணப் பட்டவர்களும் காரியஞ்
 19. செய்கிறவர்களும் கணக்கெழு
 20. முதுகிறவர்களும் மற்றும் நாட்
 21. டில் வெள்ளாழராயுள்ளவர்களை
 22. ல்லாருங் கூடி இருந்து கற்பித்த
 23. காரியம் பிழைத்தவர்கள் மூவரை
 24. யும் கொன்று பரிகாரம் சொய்யுமா
 25. றும் வெள்ளை நாடாராயுள்ளவர்கள்
 26. நம்மோடுங் கூடக் கூலிச் சேவகம்
 27. சேவிக்க இளைப்பதென்றும் கா
 28. ரணப் படுகையும் காரியஞ்
 29. செய்கையும் கணக்கெழுதுகை
 30. யும் தேசங் கைய்யாளுகையும்
 31. இளைப்பதென்றும் கற்பித்து நா
 32. ட்டின கல்லி(ன்) வாசகம். இம்மரிசா
 33. _ _ _ _ _ _ _ _ (பக்கம் 2)
 34. 600 20 8 (628) ம் ஆண்டு சித்திரை மாதம் 10 நாட்
 35. டின கல்லில் முன்பில் வாசக
 36. த்தோடு கூடி இப்போதை க
 37. ல் வெட்டிக் கூட்டின வா
 38. சகம் வெள்ளை நாடார் _ _ _
 39. ப்பாகத்து பெண் கட்ட அரி
 40. தென்றும் கையாள அரிதென்
 41. றும் பிழைத்தவர்களுக்கு
 42. _ _ _ _ _ _ _ _ _ _
 43. அய்யப்பன் மார்த்தாண்டன் இரா
 44. மன் சந்திரக் கணக்கு.

சொற்பொருள்:

செய்கை – ஒழுக்கக்கேடு, பெண்ணிடம் முறைதவறி நடத்தல்; சென்றது – கடந்த காலத்தில்; வெள்ளாழற்கு பிழைப்பு – கணக்கு எழுதுதல், ஆவணம் எழுதுதல் போன்றன; செனமும் – பொது மக்களும்; காரணப்பட்டவர்கள் – victim,  பாதிப்புற்றவர்கள்; காரியம்செய்கிறவர் – வேலைக்கு அமர்த்திக் கொள்பவர், job engager; முதுகிழவர்கள் – மூத்த வெள்ளாளர்; கற்பித்த – நடக்க வேண்டிய நெறி, guidelines; சேவிக்க – ஊழியம் ஆற்ற, service; இளைப்பது – இணைய இயலாது; தேசங் கையாள்கை – நிர்வாக, பொதுப்பணி வேலைகள்.

கல்வெட்டு விளக்கம்:

கொல்லம் ஆண்டு 555 (கி.பி.1380) ல் பொறித்த கல்வெட்டு. கும்ப லக்னம் கூடிய ஞாயிற்றுக்கிழமை 14 ஆம் நாள் (மாதம் குறிக்கப்படவில்லை). கடந்த காலத்தில் நம் நாட்டில் வெள்ளாளர் தொழில் செய்து பிழைப்போர் சில வேலைகளுக்கு ஈடுபடுத்திய போது வெள்ளை நாடாரில் சோதனை உள்ளிருப்பு பாசித்தலில் விக்கிரம ஆதித்தன் கெட்ட நடத்தையால் நாட்டின கல்லில் இருந்த செய்தியும், கொல்லம் 561 (கி.பி.1386) ல் பொறித்த கல்வெட்டு. மீன லக்னம் ஏற்பட்ட ஞாயிற்றுக் கிழமை 26 ஆம் நாள் (மாதம் குறிக்கப்படவில்லை). கடந்த காலத்தில் நம் நாட்டில் வெள்ளாளர் தொழில் செய்து பிழைப்போர் சில வேலைகளுக்கு வெள்ளை நாடாரில் கணக்கு எழுத கோளரி அய்யப்பன், இவன் மகன், அண்டூர் செழியங்கன் ஆகியோரது கெட்ட நடத்தையால் பொது மக்களும், பாதிப்புற்றவர்களும், தம் வேலைக்கு அமர்த்துவோரும், கணக்கு எழுதும் மூத்தோரும் மற்றும் நாட்டில் வெள்ளாளர்களாய் உள்ள எல்லோரும் கூடி இருந்து மேற்கொண்ட வழிமுறையாவது வேலைஆற்றிய குற்றவாளிகள் மூவரையும் கொன்று கழுவாய் தேடுமாறு முடிவு கொண்டனர். இனி வெள்ளை நாடார்கள் எவரும் நம்மோடு சேர்ந்து இணைந்து கூலிக்கு ஊழியம் செய்ய இயலாது (தடை செய்யப்பட்டது). பிறரது வேலையில் அமர்வதும், வேலை செய்வதும், கணக்கு எழுதுவதும், நாட்டு நிர்வாகப் பணியில் ஈடுபடுவதும் ஆகிய எல்லாமும் தடை செய்யப்பட்டது என்றும் தீர்மானித்து வழிகாட்டி நாட்டிய கல். மேற்கண்ட இரு கல்லின் வாசகத்தையும் படி எடுத்து அதோடு கொல்லம் 628 (கி.பி. 1453) ஆம் ஆண்டு சித்திரை மாதம் 10 ஆம் நாள் நாட்டிய கல்லில் முன்பிருந்த வாசகத்தையும் சேர்த்து இப்போதைய கல்லில் சேர்த்துக் கொள்ளப்பட்ட வாசகம் யாதெனில் இனி வெள்ளை நாடார்களை கூலிக்கு சேர்த்துக் கொள்ளும் வெள்ளாளர்கள் தம் சாதியில் பெண்கட்டுவது அரிது, வேலையில் அமர்வதும் அரிது என்று வெள்ளாளற்கு பிழைப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து அய்யப்பன் மார்த்தாண்டன் இராமன் சந்திரன் என்ற கணக்கன் உத்தரவு பிறப்பித்த செய்தி இக்கல்வெட்டில் இடம் பெற்றுள்ளது.

பிற இடங்களில் வேலைக்கு செல்வோர் வேலையை மட்டும் பார்க்க வேண்டும். அதையும் மீறி வேலைக்கு செல்லும் இடங்களில் உள்ள பெண்களிடம் அத்துமீறி நடந்தால் சமூகத்தின் எதிர்வினை இப்படியாகத் தான் இருக்கும் என்பது தெளிவு. குறைந்த கூலிக்கு வெள்ளை நாடார்களை வேலைக்கு அமர்த்தி அதில் லாபம் பார்க்கலாம் என்ற நோக்கில் முதல் இரண்டு முறை அறிவுறுத்தியும் அதை மதிக்காமல் வெள்ளாளர் புறக்கணித்ததால் மூன்றாம் முறையாக வெள்ளார்க்கு தடைஏற்படுத்தி இந்த கல்வெட்டில் கடுமையான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது கூடுதல் செய்தி ஆகும். இக் கல்வெட்டு முழுக்க முழுக்க வெள்ளாளர் தரப்பின் நலன் கருதி எடுக்கப்பட்ட எச்சரிக்கையுடன் கூடிய அறிவுரைக் கல் என்பது புரிகின்றது. Vellalars, for Vellalars, by Vellalars என்பதே இதன் பொருளடக்கம்.

கல்வெட்டுச் செய்தியை எளிதில் புரிந்துகொள்ள முடியாதபடி அதில் ஆளப்பட்டுள்ள சொற்கள் வெள்ளாள மக்களிடம் புழங்கும் சொற்களைக் கொண்டு எழுத்தப்பட்டு உள்ளது. எனது சொற்பொருள்பட்டி இதில் இடர் நீக்கி தெளிவிக்கின்றது.  

பார்வை நூல்: திருநெல்வேலி மாவட்டக் கல்வெட்டுகள் தொகுதி I, பக்.302/303. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு, எழும்பூர், சென்னை – 8

Share

About the Author

has written 1003 stories on this site.

Write a Comment [மறுமொழி இடவும்]

Security Question: (* Solve this math to continue) *


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.