படக்கவிதைப் போட்டி 203-இன் முடிவுகள்

-மேகலா இராமமூர்த்தி

தன் கலைத்திறனை வீண் செய்யாது பிரவீண் நேர்த்தியாக எடுத்திருக்கும் இந்தக் கறுப்புவெள்ளைப் புகைப்படத்தை படக்கவிதைப் போட்டி 203க்குத் தேர்வுசெய்து தந்திருப்பவர் சாந்தி மாரியப்பன். புகைப்படக் கலைஞர், தேர்வாளர் இருவருக்கும் என் நன்றிகள்!

முதுகுச் சுமையோடு பவ்யமாய்க் கண்மூடிநிற்கும் இவ் இளைஞனின் நெற்றியைப் பற்றி வெற்றித் திலகமிடும் வளைக்கரங்கள் யாருடையவை எனும் சிந்தனை நம் மனத்தில் வட்டமடிக்கின்றது. வழக்கம்போலவே விடைதேடும் வேலையை வித்தகக் கவிகளிடம் விட்டுவிட்டு நாம் விலகி நிற்போம்!

*****

”கனவிலும் நனவிலும் சுலபமாய்ப் பணக்காரன் ஆவதெப்படி என்பதையே மனித மனம் சிந்தித்திருப்பதையும் அதற்கு உதவ இறைக்கே முறையற்ற வகையில் கையூட்டளிக்கப் பேரம் பேசுவதையும் அறிந்த ஆண்டவனோ கோயிலைவிட்டே வெளிநடப்புச் செய்கின்றான்” என்ற நற்சிந்தனையைத் தன் கவிதையில் பதிவு செய்திருக்கின்றார் நாங்குநேரி வாசஸ்ரீ. 

கடவுளின் வெளிநடப்பு

எங்கு வந்தாய் மகனே
எதனைத் தொலைத்தாய்
வாழ்க்கைத் தத்துவத்தை உணராது
விழுந்துவிழுந்து தொழுகின்றாய்
விடியலில் குளித்து
விரும்பி உண்ணா நோன்பிருந்து
நூலைக் கையில் கட்டிக்கொண்டு
நூறுரூபாய் காணிக்கையிட்டு
எளிதாய் பணக்காரனாகும் வழியை
என்னிடமே கேட்கின்றாயே
அடுத்தவனை ஏமாற்றாது
அகன்ற இவ்வுலகில் முன்னேற
ஒருமுறை உழைத்துப்பார்
ஓராயிரம் கதவுகள் திறக்கும்
கனவுகலைந்து எழுந்த மனிதன்
காய்கறிக்கடை திறக்கத் தீர்மானித்தான்
காலையில் குளித்துக் கிளம்பி
இதோ கடவுளைக் காண
இங்கே மீண்டும் வந்துள்ளான்
அப்படியே செய்கிறேன் நீ சொன்னபடி
அதிகவருமானம் கிடைக்கச்செய்தால்
அதில் பத்துசதவிகிதம் உனக்கு
கண் திறந்தது பார்த்த போது
கடவுள் நின்றிருந்த இடத்தில்
அவருக்குப் பதில் வாசகம்
திருந்தாத மாந்தர் நீர்
தீர்வுசொன்ன எனக்கே கையூட்டா
வேதனை மிகுதியால் நான்
வெளிநடப்பு செய்கின்றேன்.

*****

”இறைவா! உனை வேண்டிநின்ற வேளையில் எனக்காக மந்திரம் சொல்லி நெற்றியில் பொட்டிட்டு வாழ்த்திநின்ற உருவத்தில் உன்னைக் கண்டேனே! அன்பே சிவமென்று உணர்ந்து கொண்டேனே” என்று நெகிழும் இளைஞனை நமக்குக் காட்டுகின்றார் திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜ். 

நம்பிக்கை

கணனி சுமந்து வந்தேன்
உன் சன்னதிக்கு,
கடவுள் உன்னை
நெஞ்சில் சுமந்து வந்தேன்
நித்தம் என்னைக்
காத்து நிற்பாய் என்ற
நம்பிக்கையுடன்!

வேலைக்குச் செல்லும் முன்னே
இந்நாள் நன்னாளாய் அமையக்
கண்மூடி வேண்டி நின்றேன்
பிறருக்குத் தீங்கு நினைக்காது
உன் சுமையை நீயே சுமந்து
முயற்சி செய்து முன்னேறு
எந்நாளும் நன்னாளாய் மாறிடுமே
என்று நீ சொல்ல உணர்ந்தேன்

கையேந்தி நின்றேன்
உன் வாசல் முன்னே
விழிகள் மூடி
வழிகாட்டிட வேண்டி நின்றேன்
நெற்றிப்பொட்டில் போட்டு வைத்து
வேண்டி நின்ற அத்தனையும்
உனக்குக் கிடைக்கட்டும் என்று
வாழ்த்தி நின்ற உருவம் கண்டேன்

வயதில் மூத்த மனிதராய்
எனக்காக மந்திரம் சொல்லி
நான் நினைத்ததெல்லாம்
கிடைக்க வேண்டி
வாழ்த்தி நின்ற அவர்
கண்களில் கண்டேன்
அன்பே சிவம் என்று!

கல்லாய் நீ இருந்தாலும்
கடவுள் என்று நம்பி
கண் மூடி நின்றேன்
என் மனக்கண்ணைத் திறந்தாயே
காணும் சக மனிதன் உருவில்
கடவுளைக் காணும்
அருள் எனக்குத் தந்தாயே!

*****

”கல்லைக் கடவுளாய்க் காண்பதும், அர்ச்சகர் சொல்லை ஆசியாய் ஏற்பதும் நம் நம்பிக்கையே!” என்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

நம்பிக்கை…

கல்லைக் கடவுள் சிலையாக்கி
கோவில் கட்டினோம் நிலையாக்க,
எல்லை யில்லா அருள்பெறவே
எடுத்துக் கருவறை வைத்ததையே
எல்லா நாளும் பூசைசெய்ய
ஏற்க வைத்தோம் அர்ச்சகரை,
கல்லில் கடவுள் நம்பிக்கைதான்
கோவில் அர்ச்சகர் ஆசியுமே…!

*****

”இலக்கினை எட்டுதற்கு இறையிடம் தஞ்சமாகு; தீய எண்ணங்களைக் களையெடுத்து நல்லனவற்றை முளைக்கவைத்தால் முன்னேற்றம் தடைப்படாது” என்ற நல்ல கருத்தைத் தன் கவிதையில் பொதிந்து தந்திருக்கின்றார் பெருவை திரு. பார்த்தசாரதி.

திலமிட்ட நெற்றியில் திரளான சிந்தனைகள்..!

உலகாளும் இறையி டத்தில்
……………ஓர்வரமா வேண்டு கின்றீர்.?
பலவரத்தை வேண்டி னாலும்
……………பகவானும் கொடுத்த ருள்வான்.!
திலகமிட்ட நெற்றிக் குள்ளே
……………திரண்டுவரும் சிந்தை கொண்டு..
சிலகாலம் பொறுத்தி ருந்தால்
……………சிலவரலாம் நல்ல தாக.!

அலவுகின்ற மனக்கு ழப்பம்
……………அமைதியாகும் ஆல யத்தில்.!
கலங்குகின்ற மனதை என்றும்
……………கடவுளுமே தெளிய வைப்பான்.!
இலக்கினைநீ எட்டு தற்கு
……………இறைவனிடம் தஞ்ச மாகு.!
உலகத்தில் நல்ல வற்றை
……………ஒருபோதும் ஒதுக்க வேண்டாம்.!

களையெடுக்கும் தீய வற்றைக்
……………கடமையென்று கொண்டு விட்டால்.!
முளைகொண்டு எழுநல் எண்ணம்
……………முன்னேறும் தடைப்ப டாது.!
விளைநிலமாம் வளரும் சிந்தை.!
……………விதைக்கவேண்டும் நல்ல தையே.!
இளைஞராக இருக்கும் போதே
……………இவையெல்லாம் தேவை அன்றோ.!

*****

”விரிவானில் இலத்திரனியல் பொறிகளுடன் நடக்கும் மரண விளையாட்டான போரினை நேர்த்தியாய் விவரித்து, வென்றால் வெற்றிப் புகழ்மாலை; (மேலுலகம்) சென்றால் புகழொடு பூமாலை” என்று தன் சுந்தரக் கவிச் சொற்களால் சிந்தை கவர்கின்றார் திரு. யாழ். பாஸ்கரன்.

வெற்றித் திலகம் நெற்றியில் இட்டு
வென்று வா மகனே சென்று என்று
வெஞ்சமர்களம் காண வழி அனுப்பும்
நெஞ்சுரம் கெண்டவீரத்தாயவள் வாழி வாழி

ஈன்ற தாய் அவள் இட்ட கட்டளைக்கு
இம்மியளவும் மறுப்பு இல்லை
இனி பொறுப்பதற்கு நேரமில்லை
இப்போதே எடு வாளை என்று புறப்பட்ட வீரன் வாழி வாழி

சமர்க்களம் என்ன சாப்பாட்டுப் பந்தியா
சம்மணம் இட்டு அமர்ந்து உண்டு களிக்க?
சாவு ஈவு இரக்கமின்றி விளையாடும்
சதிராட்டத் திடல் சற்றே அயர்ந்தால் பறந்திடுமுயிர்

ஈட்டி முனை முன் மார்பு காட்டும் போர்முனை அல்ல இது
இலத்திரனியல் பொறிகளுடன் ஒரு மரண விளையாட்டு
எறிகணைகள் சீறிச் சிரித்திடும்
ஏவுகணைகள் மாறி மாறி மறித்திடும்

விரி வானில் திரிகின்ற வான்கலங்கள்
வெறிகொண்டு திரிகொளுத்தி வீசி எறிந்த
வெடிகுண்டால் விண் அதிரும் மண் நடுங்கும்
வெடித்துச் சிதறியது குண்டுகள் மட்டும் அல்ல அமைதியும் தான்!

வென்றால் வெற்றிப் புகழ்மாலை
வீழ்ந்தால் புகழொடு பூமாலை
வென்றாலும் சென்றாலும் வீரனுக்கு
ஈன்ற தாய்நாடு காப்பதே முதல் வேலை

பைந்தமிழ்ச் சொல்லெடுத்து நல்ல பாமாலை தொடுத்திருக்கும் கவி வலவர்களுக்கு என் பாராட்டு!

அடுத்து, இவ்வாரத்தின் சிறந்த கவிதையாய் நான் தேர்ந்தெடுத்திருப்பது…

தாய் மனம்!

பெற்றவள் விட்டுச்சென்ற
முதல் வருடத் திதி!

பிண்டங்கள் கரைத்து
பிறவியும் வெறுத்து
சாத்திரங்கள் முடித்து
கண்ணீரும் துடைத்துக்
கோயிலினுள் சென்றேன்

கண்கள் மூடி
மௌன மொழியினில்
கதறி அழுகையில்

தெய்வத்தின் திசையிலிருந்து
திலகம் அணிவித்தாள்
எவளோ ஒருத்தி…!

அக்கணமே
உணர்ந்தேன் நான்….
கருவறை கொண்டவை
எல்லாம் கோயில்கள்தான்!!

”மறைந்த அன்னைக்குத் திதி முடித்துக் கோயில் கருவறையில் அன்னையின் நினைவோடு நின்றவேளையில் திலகமணிவித்த மாதொருத்தி எனக்கு உணர்த்தினாள்…கருவறை கொண்டவை அனைத்துமே கோயில்கள்தாம்!” எனத் தெளிவுறும் இளைஞனை கண்முன் நிறுத்தி நம் அகங் குழைத்திருக்கும் திருமிகு. காந்திமதி கண்ணனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவிப்பதில் மகிழ்கின்றேன்.

 

 

மேகலா இராமமூர்த்தி

மேகலா இராமமூர்த்தி

Share

About the Author

மேகலா இராமமூர்த்தி

has written 375 stories on this site.

One Comment on “படக்கவிதைப் போட்டி 203-இன் முடிவுகள்”

Write a Comment [மறுமொழி இடவும்]

Security Question: (* Solve this math to continue) *


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.