நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 22

-நாங்குநேரி வாசஸ்ரீ

நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 22 – ஒப்புரவறிதல்

குறள் 211:

கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்
டென்னாற்றுங் கொல்லோ உலகு

இந்த ஒலகத்துல நாம மழைய தருத மேகத்துக்கு என்ன செய்யுதோம். அந்த மழை மாதிரி உள்ளவங்க பதிலுக்கு என்ன கெடைக்கும்னு எதிர்பாத்து ஒதவி செய்யமாட்டாங்க.

குறள் 212:

தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு

ஒருத்தன் முயற்சி செஞ்சு சம்பாதிச்ச பொருளெல்லாம் தேவைப்படுதவங்களுக்கு ஒதவி செய்யத்தான்.

குறள் 213:

புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவின் நல்ல பிற

தேவ ஒலகத்திலயும் , இந்த பூமிலயும் ஒழைக்க முடியாம இருக்கவங்களுக்கு ஒதவுத கொணத்த மாதிரி வேற நல்ல செயல பாக்குதது சங்கடந்தான்.

குறள் 214:

ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்

ஒழைக்க முடியாதவங்களுக்கு ஒதவி செய்யுதவன் தான் உசிரோட வாழுதவன் மத்தவன் செத்தவனுக்கு சமானம்.

குறள் 215:

ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு

ஒலகம் நல்லா வாழணும்னு நெனைக்க பெருமக்களோட சொத்து எல்லாருக்கும் உபயோகப்படுத நீர் நெறஞ்ச ஊருணிக்கு சமானம்.

குறள் 216:

பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின்

ஈர நெஞ்சம்இருக்குதவன் கிட்ட சேருத சொத்து ஊருக்கு நடுவுல இருக்க மரம் பழுத்து குலுங்குதது போல எல்லாருக்கு ஒதவியா இருக்கும்.

குறள் 217:

மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்

மத்தவங்களுக்கு ஒதவுத குணமுள்ள பெரிய மனுசன்கிட்ட சொத்து சேந்திச்சின்னா அது ஒரு மரத்தோட எல்லா பாகமும் மருந்தா பலன் தருதது போல ஆவும்.

குறள் 218:

இடனில் பருவத்தும் ஒப்புரவிற் கொல்கார்
கடனறி காட்சி யவர்

செய்ய வேண்டிய கடமைய உணந்த ஒசந்த அறிவாளிங்க தங்கிட்ட கொடுக்குததுக்கு ஒண்ணுமில்லன்னாலும் ஒதவி செய்ய தயங்க மாட்டாங்க.

குறள் 219:

நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர
செய்யா தமைகலா வாறு

மத்தவங்களுக்கு ஒதவுதையே தங்கடமையா செய்யுத ஒருத்தன் ஏழையாயிட்டான்னு அறிஞ்சுகிடதது அவனால பொறத்தியாருக்கு ஒதவ முடியாம போகுத நெலமய வச்சிதான்.

குறள் 220:

ஒப்புரவி னால்வருங் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து

இருக்குதத மத்தவங்களுக்கு கொடுத்து ஒதவினா கெடுதல் வரும்னு தெரிஞ்சிச்சினா நம்மள வித்தாவது அந்த கெடுதல வாங்குத அளவுக்கு அது தகுதியுள்ளது.

About the Author

has written 44 stories on this site.