அன்பிற்கினிய நண்பர்களே!

வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

நித்தி ஆனந்த் எடுத்த இந்தப் படத்தை, சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (23.03.2019) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “படக்கவிதைப் போட்டி – 205

  1. இரண்டாம் தாய்
    ————————————
    தாயில்லாப் பிள்ளைக்கு எல்லம்
    தாயாகிப் பாலூட்டும் இரண்டாம் தாய் நீ
    தன் பிள்ளை தானே வளரும் என்று
    தன் பாலை ஊரார் பயனுற தரும் அன்னை நீ

    வாயில்லா ஜீவன் தான் நீ ஆயினும்
    வாரித் தருவதில் வள்ளல்
    வறுமையுற்ற ஏழைக்கெல்லாம்
    வாழ்வளிக்கும் நீயே வாழும் குலசாமி
    உணவளிக்கும் உழவருக்கு
    உயிர் கெடுக்கும் தெய்வம்
    உன்னை வளர்பவர் வாழ்வை
    உயர்விக்கும் உன்னத நண்பன் நீ

    உழவனை தொழுகின்றதாக கூறும் உலகம் அவன்
    உழைப்பை உறிஞ்சி களித்திருக்கும்
    உடல் பெருள் ஆவி அனைத்தும் தரும்
    உன் உழைப்பால் வானுயரும் அவன் மதிப்பு

    ஈன்ற கன்றுக்கு அன்புடன் பால் சுரந்து
    ஈத்துவக்கும் இன்பம் உடைய பசுவே
    ஈரமுள்ள நெஞ்சு கொண்ட உனை
    ஈகை குணத்தில் மிஞ்ச யார் உளார்

    மடிநிறைய பால் இருக்கு
    மனம் நிறைய அன்பு இருக்கு
    மண்ணுயிகள் எல்லாம் உன்னைப் போலானால்
    மாநிலத்தில் மகிழ்ச்சி தழைத்தோங்கும்

    யாழ். நிலா. பாஸ்கரன்
    ஓலப்பாளையம்
    கரூர்- 639136
    9789739679
    basgee@gmail.com
    noyyal.blogspot.in

  2. கன்றுக்கும் விட்டுவை…

    பாலது கறந்து விற்பவரே
    பாலை முற்றிலும் கறக்கவேண்டாம்,
    வாலதை யாட்டி வரும்கன்று
    வயிறு நிறையக் குடிப்பதற்கே
    பாலது வேண்டும் வைத்திருங்கள்
    பசியில் துடிக்க விடவேண்டாம்,
    போலியாய்ச் செய்த கன்றன்று
    பிழைக்க வைப்பீர் உயிரதையே…!

    செண்பக ஜெகதீசன்…

  3. அன்பைப் பெருக்கி அமுதைச் சுரப்பதற்காய்
    தன் கன்றை முத்தமிடும் தாயின் தயவின்றேல்
    உலகினிலே மாந்தருக்கு உணவேது உயிரேது.

    தாய்ப்பாலிலாது தவிக்கும் குழந்தைகட்கு
    ஆவினங்களன்றோ அனாத ரட்ஷகர்கள்.

    அஃதை உணர்ந்தேதான் அன்றே எம்முன்னோர்கள்
    பதியின் அடுத்த பசுவென்று ஆன்மாவைத்
    தூய நிலையில் துதிசெய்யச் சொன்னார்கள்.

    உதிரத்தைப் பாலாக்கி ஊட்டுகிற அன்னைக்குப்
    பதிலீடாய் என்றும் பசுக்கூட்டம் உள்ளதனால்
    அன்பைப் பொழிகின்ற ஆவினத்தை எப்போதும்
    துன்பமறக்காத்துத் தொழுதிடுதல் எம் கடமை.

    தெய்வத் திருமுறையில் திரு மூலர் சொன்னபடி
    பதிக்கொரு பச்சிலையும் பசுவுக்கோர் வாயுறையும்
    என்றுங் கொடுத்து எமைக்காக்கும் ஆவினத்தை
    நன்று பராமரிப்பபோம் நாளும்.

  4. குலதெய்வம்

    அழுகின்ற பிள்ளைக்கு
    அள்ளி அணைத்து
    அன்போடு பால் கொடுக்கும்
    அன்னையை பார்த்ததுண்டு

    அடுத்தவர் பிள்ளையாயினும்
    பசி அதனை போக்கிட
    பரிவோடு பால் கொடுத்த
    அன்னை பற்றி கேட்டதுண்டு

    உன் இல்லங்கன்றை ஏங்கவைத்து
    ஊருக்கே தினந்தோறும்
    ஊற்றெடுக்கும் பால் அனைத்தும்
    தந்து நிற்கும் உன் உருவில்
    தியாகம் செய்யும் அன்னை மனதை
    கண்டு மகிழ்ந்தோம்

    பாசம் அது பெருகிடவே
    பருகிடும் தாய் பால் அது உதவிடுமே
    பாரில் உள்ள பாதி பிள்ளைகளுக்கு
    பருகிட தாய் பாலாய் இருப்பது உன் பாலே

    கலப்படம் இன்றி நீ கொடுக்கும் பாலில்
    மனதில் ஓடும் ஆசையை போல்
    கலந்து வைத்து தண்ணீரை
    மதி கெட்டு விற்கும் மாந்தர் கூட்டம் இங்கே

    கட்டிய வீட்டில் காசு சேர்ந்திட
    கட்டி உன்னை அழைத்து வந்து
    பூஜை செய்து போற்றி நிற்கும் மனமது
    உன் பிள்ளை அருந்திட உருவான பால்தனை
    ஊருக்கு அளித்து மகிழ்ந்து இருக்கும்
    உன் தியாகம் தனை என்று உணர்ந்திடும்

    கல்லையும் புனிதமாக
    மாற்றத்தக்க பாலை தந்து
    தரணியில் இருக்கும் அனைவருக்கும்
    பசி தீர்க்கும் பானமாய்
    இருக்கும் வரை பால் தந்து
    இறந்த பின்னும் தோல் தந்து
    எம் குளம் தழைத்திடவே
    கால் நடையாய் வந்த
    குலதெய்வம் நீ

Leave a Reply to S.Karunanandarajah

Your email address will not be published. Required fields are marked *