இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . (291)

0

அன்பினியவர்களே !

மிகவும் நீண்ட ஒரு இடைவேளைக்குப் பின்னால் உங்களுடன் மடல் மூலம் உறவாட விழைகிறேன். காலம் என்பது கண்மூடித் திறப்பதற்குள் கனவேகத்தில் ஓடி மறைகிறது . எதற்காக இந்த நீண்ட இடைவேளை ? எங்கே சக்தி சென்றிருப்பார் ? என்று உங்களில் சிலர் எண்ணியிருக்கலாம் , ஓ ! அதுகூட எனது நப்பாசையோ ? இருந்தாலும் இடைவெளிக்கு ஒரு விளக்கம் கொடுக்க விரும்புகிறேன். பெப்பிரவரி 4ம் தேதி முதல் மார்ச் 5ம் தேதி வரை எனது வருடாந்த சென்னை விஜயத்திலிருந்தேன். மார்ச் 5ம் தேதி திரும்பியதும் என்னோடு சேர்ந்து விமானத்தில் இலவசமாக பயணம் செய்த வைரஸ் கிருமி ஜலதோஷம், ஜுரம் என ஒரு இரண்டுவார காலம் பாடாய்ப் படுத்தி விட்டது.

சரி எனது சென்னை விஜயத்தின் அனுபவங்களை உங்களுடன் இரண்டு மூன்று மடல்களில் பகிர்ந்து கொள்ளலாம் என எண்ணிக் கொண்டிருந்தேன் விட்டதா? இந்த “ப்ரெக்ஸிட்” எனும் பூதம். தனது உருவத்தை மிகவும் பூதாகரமாக்கி இங்கிலாந்து அரசியல் மேடையையே ஒரு திகில் நிறைந்த தினம் ஒரு காட்சி அரங்கேறும் ஒரு நிலைக்குத் தள்ளி விட்டது . சுமார் மூன்று வருடங்களின் முன்னர் நடந்த சர்வஜன வாக்கெடுப்பின் முடிவின் பிரகாரம் ஐக்கிய  இராச்சியம் , ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து 2019 மார்ச் மாதம் 29ம் தேதி இரவு 11 மணிக்கு வெளியேறும் என முடிவு எடுக்கப்பட்டு அதை பாராளுமன்றத்தின் மூலம் சட்டமாகியதை அனைவரும் அறிந்திருப்பீர்கள்

சரி நான் இந்த மடலை எழுதிக் கொண்டிருப்பது மார்ச் 26ம் தேதி . அப்படிப் பார்த்தால் நாம் அதாவது ஐக்கிய  இராச்சியம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற இன்னும் முன்று நாட்களே பாக்கியுள்ளது. அப்படியாயின் வரும் வெள்ளிக்கிழமை அதாவது 29ம் தேதி இரவு 11 மணிக்கு நாம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறி விடுகிறோமா? அதற்கு விடையாக மிகப்பெரிய ” இல்லை ” என்பதுவே ஒலிக்கிறது . அட , இது என்ன புதுக்கதையாக இருக்கிறது என்று எண்ணுகிறீர்களா ? இத்தகைய ஒரு நிலையில் இன்று ஐக்கிய  இராச்சியம் இருப்பதற்கான பின்னனிக் காரணிகள் தான் என்ன ?

உண்மைகள்

  • சர்வஜன வாக்கெடுப்பில் 52% வாக்குகள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கு ஆதரவாகவும் 48% வாக்குகள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கு எதிராகவும் பதிவு செய்யப்பட்டது.
    வாக்கெடுப்பின் பிரகாரம் ஆளும் கட்சியான கன்சர்வேடிவ் கட்சியும் , எதிர்க்கட்சியான லேபர் கட்சியும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது என்று முடிவு செய்தன.
  • வெளியேறுவதற்கான வழியான ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்ட மசோதா “50” ஜ நடைமுறைப்படுத்தப் போகிறோம் என்று பிரித்தானிய அரசு அறிவிப்பதற்கு ஆதரவான மசோதா இங்கிலாந்து[ பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்துடன் நிறைவேறியது.
  • 2017 மார்ச் 29ம் தேதி இம்மசோதவை நடைமுறைப்படுத்தி அதை சட்டமூலமாக்கியதன் மூலம் ஐக்கிய  இராச்சியம், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கு சட்டப்பிரகாரம் இரண்டு வருட அவகாசம் கொடுத்து வெளியேறும் தேதி 2019 மார்ச் 29 இரவு 11 மணி என்று தீர்மானிக்கப்பட்டது.

மேற்குறிப்பிடப்பட்டவைகளே யாராலும் மறுக்கப்பட முடியாத உண்மைகள் (Facts)
ஆகும் . ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய  இராச்சியம் வெளியேற இரண்டு வழிகளிருந்தன
ஐரோப்பிய ஒன்றியத்தோடு எதுவித தொடர்பும் இல்லாத வகையில் ஒட்டு மொத்தமாக வெளியேறுவது அதை ஆங்கிலத்தில் ” நோ டீல் ” என்றார்கள்.

இவ்வகையான வெளியேற்றத்தை பல முன்னனி பொருளாதார நிபுணர்களும் , பல முன்னனி முதலீட்டாளர்களும் பாரளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்களும் எதிர்த்தார்கள். காரணம் இது ஐக்கிய  இராச்சியத்தின் பொருளாதாரத்தை மிகவும் தீவிரமாகப் பாதிக்கும் எனும் காரணத்தினால்.
ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேசி இரு சாராருக்குமிடையில் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தி அதன் அடிப்படையில் விலகுவது.

இத்தகைய ஒரு விலகலையே பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏற்றுக்கொண்டார்கள் . காரணம் இது ஒரு சீரான படிப்படியான திடீர் மாற்றங்களில்லாத ஒரு விலகல் எனும் காரணத்தினால். இதன் பிரகாரம் விலகிய பின்னால் இரண்டுவருட காலம் ” மாற்றத்துக்குரிய காலம்” அதாவது Transition period என்று அறிவிக்கப்பட்டது . அத்துடன் இந்த இரண்டு வருட காலத்துக்குள் ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஐக்கிய  இராச்சியத்தின் வர்த்தக, போக்குவரத்து, பாதுகாப்பு என்பது போன்ற முக்கிய விடயங்களில் எத்தகைய நெருங்கிய உறவுகள் பேணப்படும் எனும் வரைமுறைகளையும் தீர்மானிப்பது என்றும் குறிக்கப்பட்டது.

ஐக்கிய  இராச்சிய அரசாங்கத்தின் நோக்கத்தின் படி இத்தகைய ஒரு உடன்பாடு குறித்து கடந்த இரண்டு வருடங்களாக இரு சாராருக்குமிடையில் பேச்சுவார்த்தை நடைபெற்று சென்ற ஆண்டு நவம்பர் மாதம் ஒரு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது இதனை “விலகல் உடன்படிக்கை” “widrawal deal” என்று அழைத்தார்கள். இதனைக் கைச்சாத்திட்டது இங்கிலாந்தின் சார்பாக பிரதமர் தெரேசா மே என்பதினால் இதனை இங்கிலாந்தில் சுருக்கமாக “மே டீல்” என்றும் அழைத்தார்கள்.

இவ்வுடன்படிக்கையின் முக்கிய அம்சங்கள்

  • இதுவரை ஐரோப்பிய ஒன்றியத்தின் பட்ஜெட் மூலதாரர்களில் ஒன்றாக இருந்த ஐக்கிய  இராச்சியம் இதுவரை திட்டப்பட்ட திட்டங்களுக்காக மாற்றறத்துக்குரிய காலமாகிய இரண்டு வருடங்களும் வருடம் ஒன்றுக்கு 39 மில்லியன் ஸ்ரெலிங் பவுண்ஸ் தனது பங்காகச் செலுத்த வேண்டும்.
  • ஐரோப்பிய ஒன்றியம் எடுக்கும் கொள்கைப் பிரகடனங்கள் இந்த இரண்டு வருடமும் ஐக்கிய  இராச்சியத்தையும் பாதிக்கும்
    ஐரோப்பிய கோர்ட்டின் தீர்ப்புகளுக்கு இங்கிலாந்து இந்த இரண்டு வருட காலமும் கட்டுப்பட வேண்டும்.
  • இந்த இரண்டு வருட காலத்துக்குள் இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றியத்துடன் கூட்டு வர்த்தக ஒப்பந்தம் செய்து கொண்டுள்ள எந்த நாட்டுடனும் தனிப்பட்ட வர்த்தக உடன்படிக்கைகளை ஏற்படுத்திக் கொள்ளக்கூடாது
  • இரண்டு வருட காலத்துக்குள் ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக உடன்படிக்கையும், மற்றைய உடன்பாடுகளும் ஏற்படாத பட்சத்தில் ஐக்கிய  இராச்சியத்தின் ஒரு அங்கமான வட அயர்லாந்துப் பிரதேசம் ஐரோப்பிய ஒன்றியத்தின் சுங்கக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும். இதற்கான காரணம் அயர்லாந்துக்கும், வட அயர்லாந்துக்கும் இடையே ஒரு நிரந்தர வர்த்தக எல்லை போடப்படுவதைத் தவிர்ப்பது என்று கூறப்படுகிறது.

ஆனால் இந்த இரண்டு வருட காலத்தின் பின் அதற்குள் ஒரு வர்த்தக , மற்றும் ஒரியக்க உடன்பாடு ஏற்படும் பட்சத்தில் முக்கிய அம்சங்கள்,

  • ஐரோப்பிய ஒன்றிய குடி மக்கள் இங்கிலாந்துக்குள் நுழைவதை கட்டுப்படுத்தும் அதிகாரம் ஐக்கிய  இராச்சியத்துக்கு உண்டு.
  • ஐரோப்பிய வழக்கு மன்றத் தீர்ப்புகளுக்கு ஐக்கிய  இராச்சியம் கட்டுப்படத் தேவையில்லை
  • ஐரோப்பிய ஒன்றியத்தின் கொள்கைப் பிரகடனங்கள் ஐக்கிய  இராச்சியத்துக்கு எந்தவிதமான தாக்கங்களையும் ஏற்படுத்தாது.
  • ஐக்கிய  இராச்சியம் எந்த நாட்டுடனும் தனிப்பட்ட ரீதியில் வர்த்தக உடன்படிக்கைகளை ஏற்படுத்திக் கொள்ள முடியும்

இரண்டு வருடகால கடும் பேச்சுவார்த்தையின் பின்னால் எட்டப்பட்ட இந்த உடன்படிக்கையே எமக்கு ஏற்றது இதிலிருந்து வேறெந்த சலுகைகளையும் ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து எதிர்பார்க்க முடியாது என்றார் எமது பிரதமர்.

அதன் விளைவாக இந்த உடன்படிக்கையை சிபாரிசு செய்து பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பிக்கு விட்டார் முடிவு இதுவரை சரித்திரத்தில் இங்கிலாந்துப் பாராளுமன்றத்தில் எந்தப் பிரதமருமே சந்தித்திராத வகையில் பிரதமரின் இவ்வுடன்படிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது என்று 230 பாரளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பான்மையாக வாக்களித்து தோற்கடித்தார்கள். இதற்கான முக்கிய காரணமாக ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக உடன்பாடு காணப்படாத பட்சத்தில் வடஅயர்லாந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் சுங்கக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டால் அதனை ஐக்கிய  இராச்சியத்தினின்றும் வேறுபடுத்தும் நடவடிக்கையாகிவிடும் என்பதே கூறப்பட்டது . இன்றைய இங்கிலாந்து அரசினை தக்கவைத்துக் கொண்டிருப்பது வட அயர்லாந்தைதைச் சேர்ந்த ” ஜனநாயக ஐக்கிய அமைப்பு” எனும் கட்சியைச் சேர்ந்த 10 பாராளுமன்ற உறுப்பினர்களேயாகும். இவர்கள் மேற்கூறிய காரணத்தினால் இவ்வுடன்படிக்கையை முற்று முழுதாக எதிர்த்தார்கள்.

அது மட்டுமின்றி பிரதமரின் கன்சர்வேடிவ் கட்சிக்குள்ளேயே ” ஐரோப்பிய ஆராய்ச்சிக் குழு ” எனும் ஒரு அமைப்பில் ஏறத்தாழ 21 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் முற்று முழுதாக ஐரோப்பிய ஒன்றியத்துக்கு எதிரானவர்கள். முழுக் கொள்கைவாதிகள். ஐரோப்பிய ஒன்றியத்துடன் எதுவித உறவுமில்லாமல் வெளியேற விரும்புபவர்கள். இவர்களுடன் இணைந்து ஐரோப்பிய ஒன்றியத்துக்கு எதிரான கொள்கையுடைய ஏனைய அரசாங்கக் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களையும் சேர்த்தால் பிரதமரின் இவ்வுடன்படிக்கையை அவரது கட்சியிலேயே சுமார் 75 பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கிறார்கள்.

சரி எனது உடன்படிக்கையில் இந்த வட அயர்லாந்து சம்பந்தமாகத்தானே அதிக எதிர்ப்பு உள்ளது அதனை நான் சரி பண்ணப் பார்க்கிறேன் என்று மீண்டும் கிளம்பினார் பிரதமர் மே. ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேசி வட அயர்லாந்து சம்பந்தமான சிக்கலுக்கு சட்டரீதியான உறுதி ஏதாவது கொடுக்க முடியுமா என்று அவர் வுடுத்த கோரிக்கைக்கு சில மேலதிக விளக்கங்களை மட்டுமே கொடுக்க முடியும் இவ்வுடன்படிக்கையில் மாற்றம் எதுவும் செய்ய முடியாது என்று ஐரோப்பிய ஒன்றியம் கூறியது . மேலதிக சில விளக்கங்களுடன் மட்டும் மீண்டும் தனது உடன்படிக்கையை பாராளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு விட்டார் பிரதமர் மீண்டும் தோ;ல்வி இம்முறை 149 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியுற்றது . இவ்வுடன்படிக்கை ஏற்றுக் கொள்ளப்படாத பட்சத்தில் மே 29ம் தேதி சட்டபூர்வமாக இங்கிலாந்து வெளியேறுகையில் பெரும்பான்மை பாராளுமன்ற அங்கத்தினர்களினால் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத எதுவித உடன்படிக்கையற்ற ஒரு விலகலையே மேற்கொள்வது சாத்தியமாகவிருந்தது . ஐரோப்பிய ஒன்றியத்துடன் எந்த உறவுமே வேண்டாம் என்போருக்கு இது கற்கண்டாக இனித்தாலும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சும்மா விடுவார்களா? இங்கிலாந்து பாராளுமன்ற ஜனநாயகம் மீண்டும் தனது அதிகாரத்தைக் காட்டியது. “நோ டீல் ” எனும் வகையிலான வெளியேற்றத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று பெரும்பான்மையான பாராளுமன்ற அங்கத்தினர்கள் வாக்களித்தனர். இது அரசாங்கத்தின் கைகளை மேலும் இறுகக் கட்டியது.

இருதலைக் கொள்ளி எறும்பானார் இங்கிலாந்துப் பிரதமர்.

இங்கிலாந்துப் பிரதமரின் பதவிக்கே உலை வைக்கும் நிலை ஏற்பட்டது. . இங்கிலாந்துப் பிரதமர் இன்னும் சில நாளைக்குத்தான் பிரதமராக இருப்பார் எனும் வகையிலான வதந்திகள் ஊடகங்களில் தலைவிரித்தாடின. ஆனால் யாராலும் அசைக்க முடியாத திடகாத்திரமான இரும்பு மனுஷியாகச் செயல்பட்டார் பிரதமர். என் நாட்டு மக்கள் எனக்குக் கொடுத்த ஆணையை எப்பாடுபட்டாவது நிறைவேற்றுவேன் என்று கங்கணங் கட்டிக் கொண்டு இருக்கிறார் . கைகளை பின்னால் கட்டி விட்டு விட்டு அவரை ஐரோப்பிய ஒன்றியப் போராட்டக்களத்துக்கு அனுப்பியது இங்கிலாந்து பாராளுமன்ற ஜனநாயகம் . மார்ச் 29ம் தேதி 11 மணிக்கு நாம் எண்ணியவாறு விலக முடியாது மேலும் கால அவகாசம் வேண்டும் மே மாதம் 22ம் தேதி வரை எமது விலகல் திகதியைத் தள்ளை வைக்க முடியுமா ? என்று கேட்டார் . தாள்ளி வைத்து எதைத்தான் சாதித்து விடுவீர்கள் ? உங்கள் பாராளுமன்றம் தான் ஆளுக்கொரு பக்கமாக சிதறி நிற்கிறார்களே என்று கூறிய ஐரோப்பிய ஒன்றியம் ஒரு நிபந்தனை போட்டது. உங்களது உடன்படிக்கை வெற்றி பெற்றால் நீங்கள் கேட்ட மே 22ம் தேதி வரையிலான கால அவகாசம் கிடைக்கும் அப்படி வெற்றி பெற வில்லையாயின் ஏப்பிரல் 12ம் தேதி மேற்கொண்டு உங்கள் திட்டம் என்ன என்று கூறவேண்டும் இல்லையானல் எதுவிதம உடன்படிக்கையுமில்லாமல் “நோ டீல்” எனும் வகையில் வெளியேற வேண்டும் என்பதுவே அது.

நேற்றைய பாராளுமன்றத்தில் பிரதமரின் உடன்படிக்கை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்றும் பெரும்பான்மையுள்ள மாற்று உடன்படிக்கையை பாராளுமன்ற உறுப்பினர்கள் தமக்குள் ஏற்படுத்திக் கொள்வார்கள் எனும் உரிமையை வாக்கெடுப்பின் மூலம் இங்கிலாந்துப் பாராளுமன்ற அங்கத்தினர்கள் பெற்றுக் கொண்டனர் . ஜனநாயக அரசியலில் மீண்டும் ஒரு காட்சி அழகாக கண்முன்னே விரிந்திருக்கிறது. நாளை மாற்று உடன்படிக்கைகள் மீதான வாக்கெடுப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது . இங்கிலாந்துப் பாராளுமன்ற அங்கத்தினர்கள் தனது திட்டத்துக்கு மாற்றுத் திட்டத்தை பெரும்பான்மையுடன் ஏற்றுக்கொண்டாலும் அது அரசாங்கத்தைக் கட்டுப்படுத்தாது எனும் வாதத்தை முன்வைக்கிறார் பிரதமர் . ஒரு ஜனநாயக நாட்டின் பிரதமர் இத்தகைய வகையில் நடந்து கொள்ளலாமா? என எதிர்கட்சி அங்கத்தினர்கள் மட்டுமல்ல அவரது கட்சி அங்கத்தினர்களே கருத்துத் தெரிவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது . அப்படி பிரதமர் அதனை ஏற்றுக் கொள்ளாத நிலை வந்தால் அதனை அவர் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என பாராளுமன்ற வாக்கெடுப்பின் மூலம் பணிப்போம் என்கிறார்கள். அது மட்டுமல்ல மார்ச் மாதம் 29ம் தேதி 11 மணிக்கு விலக வேண்டும் என்பது சட்டமாக இருப்பதால் அதனை மாற்றுவதற்கான சட்ட மசோதவை பாரளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் நிறைவேற்றும் கடப்பாடு இப்போது பிரதமரின் தலையில் விழுந்திருக்கிறது.

சரி இன்றைய நிலையில் இங்கிலாந்துப் பிரதமரின் முன்னே இருப்பவை என்ன ?

“நோ டீல்” எனும் விலகல் முறையை பாராளுமன்றம் நிராகரித்து விட்டது

பிரதமர் மேயின் டீல் மறுபடியும் பாரளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு விடப்படும் முன்னால் அது வெற்றியடையத் தேவையான மனமாற்றங்களை வட அயர்லாந்து கட்சியிடமும், அவரது கட்சி பாராளுமன்ற அங்கத்தினர்களிடமும் அவர் ஏற்படுத்த வேண்டும்.
பாராளுமன்ற அங்கத்தினர்கள் கொண்டுவரும் மாற்றுத் திட்டத்தில் எதையாவது தன்னாலும், தனது அரசாலும் ஏற்றுக் கொள்ள முடியுமா என்று தீர்மானிக்க வேண்டும்.

மார்ச் 29ம் தேதி விலகுவது எனும் சட்டத்தை மாற்றியமைக்க வேண்டும்

அனைத்தும் தோல்வியடையும் பட்டசத்தில் ஐரோப்பிய ஒன்றியத்திடம் நீண்ட அவகாசம் கோர வேண்டும்

அத்தகைய ஒரு நீண்ட கால அவகாசம் கேட்பதில் ஐக்கிய  இராச்சியத்துக்கு ஒரு சிக்கலுண்டு. மே மாதம் நடக்கவிருக்கும் ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதாக முடிவு செய்த ஐக்கிய  இராச்சியமும் பங்கு பற்ற வேண்டும் . இது தேவையா ?

அனைத்துக்கும் மேலாக இத்தகைய ஒரு சிக்கலான சூழலில் தான் பதவியில் தொடர்வதா இல்லையா ? அன்றி மற்றுமொரு பொதுத் தேர்தலின் மூலம் மக்களிடம் கையளிப்பதா? இல்லை மீண்டும் மக்களிடம் ஒரு சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவதா இல்லை இந்த “ப்ரெக்ஸிட்” எனும் பூதத்தை அப்படியே சாகடிக்கும் வகையில் ” மசோதா 50 “ ஜை ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து வாபஸ் வாங்கி விடுவதா ?

தலை சுழல்கிறது , எனக்கே இப்படி என்றால் பிரதமருக்கு எப்படி இருக்கும் ?

இந்த மடல் பிரசுரமாகும் வெள்ளிக்கிழமை மார்ச் 29ம் தேதி நிலைமை இன்னும் கொஞ்சம் தெளிவாக வாய்ப்பிருக்கிறது. அடுத்த மடலில் இன்னும் சுவாரஸ்யமான நிகழ்வுகளைக் கூற முடியும் என்று நம்புகிறேன்.

இன்றைய பாராளுமன்றத்தில் இந்த ப்றெக்ஸிட் விவகாரத்தில் ஒரு விடமுண்டு. அது என்ன என்கிறீர்களா? பாராளுமன்றத்தில் கட்சி அரசியல் உடைப்பில் போடப்பட்டு விட்டது இது கட்சி எல்லைகளைக் கடந்து பலரை நாட்டின் நலன் கருதி இணைய வைத்திருக்கிறது. இது ஜனநாயகத்துக்குக் கிடைத்த வெற்றிதானே ! இப்படியான ஒரு கட்சி பேதம் மறந்து இணையும் நிலையை இன்று எத்தனை நாடுகளில் நாம் காண முடிகிறது ?

எது எப்படியிருப்பினும் ஒரேயொரு விடயம் என் நெஞ்சை நிறைக்கிறது . பாராளுமன்ற அரசியலின் தாயகமான ஐக்கிய  இராச்சியத்தின் பாராளுமன்றத்தில் இன்று நடைபெறும் இந்த ஜனநாயக அதிர்வுகளைக் கண்டு அதனை சமகாலப் பதிவுகள் மூலம் பதிவிடும் சந்தர்ப்பம் எனக்குக் கிட்டியது என் பாக்கியமே !

பெரும்பான்மையான மக்கள் விலக வேண்டும் என்று வாக்களித்திருந்தும் அவர்களை பிரதிநிதிப்படுத்தும் பாராளுமன்ற அங்கத்தினர்கள் நாட்டின் எதிர்கால வளத்தினைக் கருத்திற் கொள்வதே தமக்கு மக்கள் இட்ட கட்டளை எனும் வகையில் நடப்பது தான் உண்மையான ஜனநாயகமா ? அன்றி இதுவே இங்கிலாந்தின் ஜனநாயக அரசியலுக்கு சாவுமணி அடித்து விடுமோ?

மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *