(Peer Reviewed) உரைக்கொள்கை உருவாக்கமும் பொருள்விளக்கப் பொருத்தப்பாடும் (திருக்குறள் – பொற்கோ உரையை முன்வைத்து)

0

முனைவர் ப.சு. மூவேந்தன்
உதவிப் பேராசிரியர்
(தமிழியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்)
தமிழாய்வுத் துறை, அரசு கலைக் கல்லூரி,
திருத்தணி 631209
திருவள்ளூர் மாவட்டம்.

உரைக்கொள்கை உருவாக்கமும் பொருள்விளக்கப் பொருத்தப்பாடும்
(திருக்குறள் – பொற்கோ உரையை முன்வைத்து)

ஆய்வுச் சுருக்கம் (Abstract)

தமிழ் இலக்கியப் பரப்பில் உரைகள் இன்றியமையாத இடத்தினை வகிக்கின்றன. உரைகள் பல்கிப் பெருகிய காலமும் இருந்ததை தமிழ் இலக்கிய வரலாறுகள் தெளிவுறுத்துகின்றன. மூல நூலாசிரியனுக்கும் கற்போனுக்கும் இடையே கால இடைவெளி ஏற்படும்போது மூல நூலாசிரியரின் கருத்தைத் தெளிவுபடுத்த ஆசிரியர்கள் தந்த விளக்கங்களே உரைகளாக அமைந்தன. அவ்வகையில் தமிழின் உரைகள் சிறப்புப் பெற்றனவாக அமைந்துள்ளன. தமிழ் இலக்கிய நூல்களில் பெருமளவினதான உரைகளைக் கொண்டது திருக்குறள் ஆகும். பேராசிரியர் பொற்கோ, திருக்குறள் விளக்கமாக உரைநூல் வகுத்துள்ளார். திருக்குறள் உரை விளக்கத்தில் பேராசிரியர் பொற்கோ ஆண்டுள்ள உரை நெறிகளை இக்கட்டுரை தெளிவுறுத்துகிறது.

உரைகள் மூலநூற் கருத்தினை அறிவதற்குப் பெருந்துணை புரிகின்றன. எனினும் உரைகளில் உரையாசிரியரின் ஆளுமையே பெரிதும் நிற்கிறது. இதனால் மூல நூலாசிரியன் கருத்து இன்னது என்பது படிப்பாளர் அறிந்துகொள்ள வழியேலாத நிலை ஏற்படுகிறது. இதனால் ஒரு நூலுக்குப் பல உரைகள் எழும் நிலை ஏற்படுகிறது. பேராசிரியர் பொற்கோ, திருக்குறள் உரை விளக்கத்தின்வழி, இலக்கிய உரைக்கொள்கை வகுத்துள்ள திறத்தினையும், அதன்வழி உணர்த்தப்படும் பொருள்விளக்க நிலையினையும் இக்கட்டுரை புலப்படுத்துகிறது.

அறிமுகம் (Introduction)

உலக இலக்கியத்தின் வளமார்ந்த கூறுகள் யாவற்றையும் தன்னகத்தே கொண்டு விளங்கும் நூல்களில் திருக்குறள், தலைமைத் தன்மையுடையது. அதன் கருத்து வளமும் பொருளாழமும், சொற்சுருக்கமும் பயிலும்தொறும் புதுமையளிக்க வல்லவை. திருக்குறளின் பொருளமைதியில் மனம்கொண்ட சான்றோர்கள் தாம் திருக்குறளின்வழி கண்டுணர்ந்த விளக்கங்களை ஏனையோரும் நுகரும்பொருட்டு அதற்கு விளக்கங்கள் தரலாயினர். அவ்வாறு அவர்கள் உரைத்த விளக்கங்கள் பின்னாட்களில் பெருமளவிலான தடை விடைகளை உருவாக்கி, ஆய்வுப் போக்கிற்கு வழியமைத்துத் தந்தன. அவ்வகையில் தமிழ் உரைமரபில் திருக்குறள் தனித்துவம் மிக்கதாகத் திகழ்கிறது.

இலக்கியநூல்களில் பெருமளவில் உரைவளம் பெற்ற நூல் திருக்குறள் ஒன்றே என்பது அதன் சிறப்பிற்குச் சான்றாக அமைந்துள்ளது. திருக்குறள் உரைகள் புதுப்பொருள் தரும் விதத்திலும் ஆய்வு நோக்கிலும், குறளின் இலக்கியக் கோட்பாடு, இலக்கண நோக்கு, மொழியியல், தத்துவம், அறிவியல், அரசியல், இலக்கிய நயம் முதலான கூறுகளை எடுத்துரைக்கும் விதத்திலும் அமைந்துள்ளன. திருக்குறள் உரைகளில் தமிழ்ப் பேராசிரியர்களின் திருக்குறள் உரைகள் தனித்துவம் மிக்கவையாகத் திகழ்கின்றன. அவை தமிழர்தம் பண்பாடு, மொழி, கலை, நாகரிகம், சொல்வளம், பொருள்வளம் ஆகியனவற்றை அடியொற்றியதாக அமைந்தன. அவ்வகையில் ஆய்வுப் போக்கில் அமைந்த ஒன்றாகத் திகழும் பேராசிரியர் பொற்கோவின் திருக்குறள் விளக்க உரைநெறிக் கொள்கை, இக்கட்டுரையில் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது.

நூற்பதிப்பு

பேராசிரியர் பொற்கோவின் திருக்குறள் உரைவிளக்கம், 2004இல் சென்னை பூம்பொழில் வெளியீடாக வெளிவந்துள்ளது. இதன் திருத்தப்பட்ட பதிப்பு 2010இல் வெளியாகியுள்ளது. தான் பயின்ற காலத்தில் மனங்கொண்ட பொருள்நிலையினையும், மாணவர்களுக்குப் பாடம் நடத்துங்கால் நிகழ்ந்த தடை விடைகளையும், தான் ஆய்வு செய்யுங்காலத்து உளங்கொண்ட கருத்தியல் விளக்கங்களையும் கருத்தில் கொண்டு பல்லாண்டுகள் உழைத்து ஆழ்ந்து சிந்தித்த பின்னரே குறளுரையினை நூல்வடிவில் கொண்டு வந்துள்ளார் என்பதனை நூலின் முகவுரை (ப. 8) தெளிவுறுத்துகிறது.

உரையின் நோக்கம்

திருக்குறள், பல பொதுமைக் கருத்துகளுக்கு இடமளிப்பது. இதன் காரணமாகவே அது உரையாசிரியரின் எண்ணத்திற்கும் கருதுகோளுக்கும் ஏற்ப நெகிழ்ந்து கொடுக்கும் வன்மையுடையதாய் விளங்குகின்றது. இதனால் உரையாசிரியர்கள் பலரும் தங்கள் கருத்தினைத் திருக்குறளில் புகுத்த முயல்வது இயல்பான ஒன்றாக உள்ளது. இதனால் திருவள்ளுவர் கருத்து இதுதான் என்று துணிந்து கூறுகின்றனர். இதில் உரையாசிரியர் பொற்கோவுக்கு உடன்பாடில்லை. மரபார்ந்த இலக்கணப் பயிற்சியும் மொழியியற் சிந்தனைத் திறனும் மிக்க அவர் தனது உரையின் நோக்கத்தினைப் பின்வருமாறு நூலின் முன்னுரையில் தெளிவுபடுத்துகின்றார்.

‘திருக்குறளைப் படிக்க வந்தவர்களிடம் ஊகமான கருத்துகளைச் சொல்லி அவற்றை நம்பவேண்டும் என்று வற்புறுத்தக் கூடாது. சொல் விளையாட்டுகளில் ஈடுபட்டு நம்முடைய கருத்தைத் திருக்குறளில் திணிக்கக் கூடாது. இந்த உணர்வோடு மாணவர்களுக்குத் திருக்குறளைச் சொல்லிக் கொடுக்க நினைத்தால் எப்படிச் சொல்லிக் கொடுப்போமோ, அதைத்தான் இந்த உரைவிளக்கத்தில் முறையாகவும் சுருக்கமாகவும் பதிவு செய்திருக்கிறேன்.”  (முன்னுரை, ப. ix)

திருக்குறள் உரைக்கொள்கை

            திருக்குறள் விளக்கத்தில் பொற்கோவின் உரைநெறியானது

  • திருக்குறளின் சிறப்பினை எடுத்துரைத்தல்
  • உரை மரபைப் பின்பற்றுதல்
  • பழமை போற்றுதல்
  • புதுமையைக் கொணர்தல்
  • உரைநெறி வகுத்தல்

என்னும் நிலைகளில் அமைந்துள்ளது. இவற்றில் உரைநெறி வகுத்துள்ள பாங்கு மட்டும் இவ்விடத்தில் சுட்டிக் காட்டப்படுகிறது.

உரைநெறி வகுத்தல்

பேராசிரியர் பொற்கோ, ஒரு செறிவான வரையறையுடன் திருக்குறள் உரையை வகுத்துள்ளார். அவர் திருக்குறளின் ஒவ்வொரு குறளுக்கும் உரை வகுத்துள்ள உரைநெறி,

  • உரைத்தொடர் உருவாக்குதல்
  • உரைத்தொடர் விரிவாக்கம் செய்தல்
  • பொருள்விளக்கமும் குறிப்பும் தருதல்

என்னும் மூன்று நிலைகளில் அமைந்துள்ளது. இம்மூன்று நிலைகளிலேயே 1330 குறள்களுக்கும் விளக்கம் தந்துள்ளார். இது பொற்கோ உரைவிளக்கத்தின் உரை நெறியாக அமைந்துள்ளது.

உரைத்தொடர் உருவாக்குதல்

‘உரைத்தொடர்’ என்பதில் திருக்குறளின் செய்யுள் வடிவம் உரைநடைப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அமையும் முறையினைப் பொருள்விளக்கத்தின் தொடக்க நிலையாகக் குறிப்பிடுகின்றார் உரையாசிரியர்.

இவ்வாறு குறளை உரைநடைப்படுத்தும் முறையினையும், உரைநடைப்படுத்திய விதத்தினையும், ‘செய்யுள் நடையில் உள்ள தொடர்கள் இயல்பாக ஆற்றொழுக்காக இல்லாமல் பல நேரங்களில் மாறி அமைந்திருக்கும், சில நேரங்களில் இயல்பாக அமைந்திருக்கும். செய்யுளில் உள்ள தொடர்களை இயல்பாக ஆற்றொழுக்கில் உரைநடை வரிசைப்படி மாற்றி அமைத்தால் செய்யுளின் பொருள் நமக்குப் புலப்படத் தொடங்கிவிடும்” என்று குறிப்பிடுகிறார். சான்றாக,

            கெடுவல்யா னென்ப தறிகதன் னெஞ்சம்

          நடுவொரீஇ யல்ல செயின்.                   –        (குறள். 116)

என்னும் குறளினை, “தன்நெஞ்சம் நடுஒரீஇ அல்ல செயின் கெடுவல்யான் என்பது அறிக” என்று உரைத்தொடராக்குகின்றார். இவ்வாறு உரைத்தொடர் உருவாக்குவதன் வழியாகச் செய்யுளின் திரண்ட கருத்தினை உரைநடைப்படுத்துவது தெளிவாகிறது.

உரைத்தொடர் விரிவாக்கம் செய்தல்

குறளின் பொருள்விளக்க நிலையின் இரண்டாவது நிலையாக ‘உரைத்தொடர் விரி’ அமைந்துள்ளது. முதலில் குறளின் தொடர்களையும், சொற்களையும் கொண்டு உரைத் தொடராக்கிக் காட்டும் உரையாசிரியர், அதன் பின்னர் உரைத்தொடராக மாற்றும் போக்கும் தெளிவாகிறது. உரைத்தொடரின் பொருளை மேலும் பொருள் உணர்த்தும் நிலைக்கு இட்டுச் செல்வதாக இப்பகுதி அமைந்துள்ளது. சான்றாக,

            புறங்குன்றி கண்டனைய ரேனு மகங்குன்றி

          மூக்கிற் கரியா ருடைத்து.                       –           (குறள். 277)

என்னும் குறளுக்கு, “இந்த உலகம் புறங்குன்றி கண்டனையரேனும் அகத்தில் குன்றி மூக்கினைப் போலக் கரியராய் உள்ள துறவிகளை உடையது” என்று உரைத்தொடர் விரிவாக்கம் செய்துள்ளார்.

பொருள் விளக்கமும் குறிப்பும் தருதல்

திருக்குறள் உரைவிளக்கத்தின் மூன்றாவது நிலையாகப் ‘பொருள் விளக்கமும் குறிப்பும்’ அமைந்துள்ளது. இப்பகுதியில் ஒவ்வொரு குறளுக்குமான பொருள் விளக்கமும் இலக்கணக் குறிப்புகளும் பாடபேதங்களும் பிற செய்திகளும் விரிவாக இடம் பெற்றுள்ளன.

உரைத்தொடர், உரைத்தொடர் விரி, பொருள்விளக்கமும் குறிப்பும் ஆகியன விளக்குமுறையின் படிநிலைகளாக அமைந்துள்ளன. பொருள் விளக்க நிலையில் ஒவ்வொன்றாகச் சொல்லிச் செல்வதாக இப்படிநிலை வளர்ச்சி அமைந்துள்ளது. இப்பொருள் விளக்க நிலையில் தேவைப்படும் இடங்களில் நீண்ட விளக்கங்களைத் தந்துள்ளார். இவை ஆசிரியர் தம் மாணவர்களுக்குப் பாடம் நடத்தும் விதத்தினைக் காட்டுவதாக அமைந்துள்ளது. ஆசிரியர் மாணவர்களுக்குப் பாடம் நடத்துகையில் இலக்கியத்தில் இடம்பெறும் சொற்களையும், அதன் பொருளையும் அறிந்து கொள்ளும் விதத்தில் ஒவ்வொரு நிலையாக மாணவர்களைப் பொருளுணத்தும் நிலைக்கு இட்டுச் செல்வதை ஒத்ததாய் இப்பகுதி அமைந்துள்ளது.

திருக்குறளின் உரைவிளக்க முறையினை இவ்வாறு அமைத்துள்ள தன்மை குறித்து, “இந்த உரைவிளக்கத்தில் ஒவ்வொரு குறளையும் உரைநடை வரிசையில் அமைத்துக் காட்டி வாசிப்பாளர்களுக்குத் திருக்குறளை நெருக்கமாக்கியிருக்கிறேன்; அடுத்த நிலையில் தேவையான சொற்களை மட்டும் இட்டு நிரப்பிப் பொருள் புலப்பாட்டுக்கு வழி வகுத்திருக்கிறேன்; மூன்றாவது நிலையில் தேவையான விளக்கங்களையும் குறிப்புரைகளையும் முறையாகச் சேர்த்திருக்கிறேன்” (ப. 8) என்று குறிப்பிடுவதன்வழி அறிய முடிகிறது.

சொல் நிலையில் பொருள்விளக்கம் செய்தல்

ஒரே குறளுக்கு இரண்டு, மூன்று பொருள்விளக்கங்கள் தரும் பகுதிகளும் பொற்கோ உரையில் உள்ளன. திருவள்ளுவர் பயன்படுத்தியுள்ள சொற்களின் பொருளுணர்த்தும் திறன் அவ்வாறு அமைந்திருப்பதும் அதற்கு ஒரு காரணமெனக் குறிப்பிடுகிறார்.

இருபொருள் உரைத்தல்

            தொட்டனைத் தூறு மணற்கேணி மாந்தர்க்குக்

          கற்றனைத் தூறு மறிவு      –        (குறள். 396)

என்னும் குறளுக்கு, “மணற்கேணி தோண்டத் தோண்ட நீர் சுரக்கும்; மாந்தர்களிடம் கற்க கற்க அறிவு ஊறும்” என்று ஒரு பொருளும், “தோண்டத் தோண்ட மணற்கேணியில் நீர் ஊறும்; அதுபோலக் கற்கக் கற்க மாந்தரிடம் அறிவு ஊறும்” என்று மற்றொரு பொருளும் உரைக்கின்றார். இதில் ஒரு பொருள் உவமை போன்றும், மற்றொரு பொருள் பொருள்போலவும் கொள்ளப்பட்டு இருபொருள் தரப்பட்டுள்ளது. இவ்வடிப்படையில் ஒரு குறளுக்கு மூன்று பொருளும் தந்துள்ள நிலையினைக் காண முடிகின்றது.

          “மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயிற்

          பலர்காணத் தோன்றன் மதி.”       –        (குறள். 1119)

என்னும் குறளுக்கு, “இவள் பலர் காணத் தோன்றமாட்டாள். இவள் முகத்தை ஒத்து விளங்க நீ விரும்பினால் இனிமேல் பலர் காணத் தோன்றாதே என்பது ஒரு பொருள்; நீ இவள் முகத்தை ஒத்து விளங்குவது உண்மையானால் இனி நீ பலர் காணும் வண்ணம் பொதுவில் தோன்றாதே என்பது இன்னொரு பொருள்” என்று இருபொருள் உரைக்கின்றார்.

          “மாலைநோய் செய்தல் மணந்தா ரகலாத

          காலை யறிந்த திலேன்”     –        (குறள். 1226)

என்னும் குறளில் இடம்பெறும் காலை என்னும் சொல் காலைப் பொழுது, நேரம், சமயம், காலம் என்னும் பலபொருள் கொண்டதாய் அமைந்துள்ளதனைக் கருத்தில் கொண்டு   இருபொருள் உரைக்கும் நிலைப்பாட்டினை மேற்கொள்வதனைக் காண முடிகிறது.

“மாலைப் பொழுது இப்படி எனக்கு நோய் செய்யும் என்பதை நான் இப்போது தான் உணர்ந்துகொள்கிறேன். என் காதலர் என்னை விட்டுப் பிரியாதபொழுது நான் இதனை அறிந்ததில்லை. காதலர் உடன் இருந்தபொழுது மாலைப் பொழுதுக்குத் துன்பம் தருகின்ற வல்லமை உண்டு என்பது எனக்குத் தெரியாது. ஒவ்வொரு நாளும் வருகின்ற மாலைப் பொழுது இப்படித் துன்பம் தரும் என்பது தெரிந்திருந்தால் அவர் என்னை விட்டுப் பிரிய இடங்கொடுத்திருக்க மாட்டேன்” என்று ஒரு பொருளும், “இன்று காலையில்தான் அவர் என்னை விட்டுப் பிரிந்தார். காலையில் அவர் என்னோடு உடன் இருந்தார். மாலைப் பொழுது இப்படித் துன்பம் தரும் என்பதை அவர் என்னோடு உடன் இருந்த காலைப் பொழுதில் நான் தெரிந்துகொள்ளவில்லை” என்று மற்றொரு பொருளும் உரைக்கின்றார்.

உரை மறுப்பும் ஏற்பும்

பொற்கோ, திருக்குறள் உரைத்திறன் வகுத்தலில் பிறர் உரைகளை மேற்கோளாகக் காட்டுதல், பிறரது உரைகளின் நயங்களை எடுத்துரைத்தல், பிற உரையாசிரியர்களின் கருத்தியல் பொருத்தப்பாட்டை மறுத்தல், அவர்களின் விளக்கமுறைத் தெளிவின்மையைக் காட்டுதல் என்பன போன்ற நிலைகளில் உரைவிளக்கப் பகுதிகள் அமைந்துள்ளன.

பிறர் உரை மறுத்துத் தம் உரையை நிறுவுதல்

பொற்கோ, திருக்குறள் மூல வடிவில் நுண்ணிய வாசிப்பும், ஏனையோர் உரைகளில் ஆழ்ந்த பயிற்சியும், அகலமான வாசிப்பும், தீவிரமான ஆய்வுப் போக்கும் கொண்டு விளங்குவதனை அவரது உரைக் குறிப்புகள் காட்டுகின்றன. அவ்வகையில் திருக்குறள் உரையாசிரியர்கள் பலரது கருத்துகளைக் கோடிட்டுக் காட்டியும், சிலரது உரைகளை ஒட்டியும் ஏற்றும் மறுத்தும் விளக்கம் செய்துள்ளார். இவ்வாறு அமையும் பகுதிகள் தனிநிலை ஆய்வுக்குரிய பொருண்மைகளைக் கொண்டு விளங்குகின்றமையான், ஆய்வின் விரிவஞ்சி இங்கு, பிற உரைகளை மறுத்துத் தம் உரையை நிறுவும் பாங்கு எடுத்துரைக்கப்படுகிறது.

பிறர் உரையை மறுக்கும்போது மிக நயமாகவும் நாகரிகமாகவும் வெளிப்படுத்தும் பாங்கு அவரது உரைநயத்திற்குச் சான்றாக அமைகிறது. தம்முடைய மறுப்புகளில் எந்த உரையாசிரியர் பெயரையும் சுட்டாது அவர்களுடைய கருத்துகளையே தம் மறுப்புகளுக்கு உரியதாக்கிக் கொள்வது அவரது செவ்விய உரைநெறியாக உள்ளது.  இவ்வாறு அமையும் பகுதிகள் திருக்குறள் விளக்கத்தில் நீண்ட விவாதங்களுக்கு உரியனவாக அமைந்துள்ளமை கருதத்தக்கது.

          “அறவாழி யந்தணன் றாள்சேர்ந்தார்க் கல்லாற்

          பிறவாழி நீந்த லரிது.”                          –        (குறள். 8)

என்னும் குறள் விளக்கத்தில், “துன்பக் கடலை நீந்திக் கரைசேருதல் அரிது என்று ஆசிரியர் தெளிவாகக் கூறுதலால் இறைவன் தாளாகிய புணை என்பது இவ்விடத்தில் பொருந்தாது. புணையைப் பிடித்துக்கொண்டு கரை சேருதலும் நீந்துதலும் வேறு வேறு என்பதைக் கருதுக” என்ற பிற உரையாசிரியர் கருத்தை மறுத்து, “பிறஆழி என்பதற்குப் பொருளும் இன்பமும் ஆகிய கடல் என்று பொருள் கூறுவதைவிட, அறத்துக்கு மாறாகிய மறச் செயல்களால் விளையும் துன்பக் கடல் என்று பொருள் செய்வதே பொருத்தம்” என்று விளக்கமும் தருகின்றார்.

            “இயல்பினா னில்வாழ்க்கை வாழ்பவ னென்பான்

             முயல்வாரு ளெல்லாந் தலை”       –        (குறள். 47)

என்னும் குறளில் இடம்பெறும் முயல்வார் என்பதற்கு, “முயல்வார் என்பது வானப்பிரத்த நிலையில் மனைவியோடு காட்டில் இருந்து தவம் செய்வோரைக் குறித்தது என்று கூறுவாரும் உளர்” என்று பிறர் உரையைக் குறித்துப் பின்னர், “திருவள்ளுவர் துறந்தார் பெருமையை வியந்து வியந்து பாராட்டிப் போற்றியவர் என்பதை மறவாமல் இக்குறளுக்கு உரைகூறுதல் வேண்டும். எனவே, முயல்வார் என்பதற்கு அறஇயல்பு அல்லாத வேறு நெறிகளில் முயல்வார் என்று பொருள் கொள்ளுவதே பொருந்தும்”  என்று விளக்கம் தருகின்றார்.

          “ஈன்ற பொழுதிற் பெரிதுவக்குந் தன்மகனைச்

            சான்றோ னெனக்கேட்ட தாய்.”   –        (குறள். 69)

என்னும் குறளுக்கு “தான் பெற்ற பொழுதை மகிழ்ச்சியினும் மிக மகிழும் தன் மகனைக் கல்வி கேள்விகளான் நிறைந்தானென்று அறிவுடையோர் சொல்லக் கேட்ட தாய். பெண்ணியல்பாற் றானாக அறியாமையின் கேட்ட தாய் என்றார்” என்று பொருளுரைப்பார் பரிமேலழகர். “பெண் இயல்பால் தானாக அறியாமையின் கேட்ட தாய் என்றார் என்று கூறும் விளக்கம் சிறப்புடைத்து ஆகாது” என்று பரிமேலழகர் உரையை மறுத்து, “சான்றோன் என்னும் சொல்லுக்குப் போர்வீரன் என்று பொருள்கொண்டால் தானாக அறியாமையின் கேட்ட தாய் என்று விளக்கம் கூறுவது பொருந்தும்” என்று விளக்கமும் தருகின்றார்.  இவ்விடத்தில் சான்றோன் என்பதற்கு கல்வி கேள்விகளில் சிறந்தவன் என்று பொருள்கொள்வதைவிட, மிகச் சிறந்த போர்வீரன் என்று கொள்வதே பொருத்தமானதாக அமைந்துள்ளது.

இவ்வாறு அமைவதில் உரையாசிரியரின் பொருத்தப்பாடு அவரது உரைக்கொள்கை மற்றும் கோட்பாடுகளுக்கு ஏற்றதாக அமைந்திருப்பதனைக் காண முடிகிறது.

புதுமை விளக்கம் தருதல்

            சிறைகாக்குங் காப்பெவன் செய்யு மகளிர்

          நிறைகாக்குங் காப்பே தலை.                –        (குறள். 57)

என்னும் குறள் விளக்கத்தில் “ஆணாயினும் பெண்ணாயினும் வழிதவறிப் போக வேண்டும் என்று தாமே விரும்பினால் அவர்களை நெறிப்படுத்துவதற்காக அவர்களைச் சிறைவைப்பதாலும் காவல் காப்பதாலும் பயன் இல்லை. ஒழுக்கக் கேட்டினால் வருகின்ற தீமைகளை உணர்த்தி ஒரு பெண்ணின் மனத்தில் நிறைகுணத்தை உண்டாக்கி அதை அவளே காக்குமாறு செய்தல் தலையாய காப்பு என்றார். மகளிர்க்கே சொன்னார் எனினும் ஆடவர்க்கும் இது பொருந்தும்” என்று புதுவிளக்கம் தருகின்றார். இவ்விளக்கத்தின்வழி பெண்ணின் நிறை ஆண்களின் செயல்பாட்டினைப் பொறுத்தே அமைகிறது என்ற விளக்கமும் உணர்த்தப்படுகிறது. இதேபோன்று,

            கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்

          கொற்கத்தி னூற்றாந் துணை                –           (குறள். 414)

என்னும் குறளுக்கு, “ஒருவன் கல்வி பெறவில்லை யென்றாலுங்கூட அவன் நூலறிவும் நுண்ணறிவும் உடையார்தம் வாய்ச்சொற்களைக் கேட்பானாகுக. ஏனென்றால் அந்தக் கேள்வி அவனுக்குச் சிந்தனையில் தளர்ச்சி நேருகின்ற பொழுதெல்லாம் ஊன்றுகோல் போல நின்று துணைபுரியும். நடக்கின்ற ஒருவனுக்குச் சோர்வின் காரணமாகக் கால் தடுமாறும் பொழுது கையில் இருக்கின்ற ஊன்றுகோல் உதவுவது போல, சிந்தனையோட்டத்தில் தளர்ச்சி ஏற்பட்டு ஒருவனுக்குத் தடுமாற்றம் ஏற்படும் பொழுது அவன் பெற்ற கேள்வி அறிவு அவனுக்கு உறுதுணையாக நிற்கும்” என்று விளக்கம் தருகின்றார்.

இவ்வாறு அமையும் விளக்கங்கள், காலத்தின் பொருத்தப்பாட்டையும் பொதுமைச் சிந்தனையையும் வலியுறுத்தும் விதத்தில் அமைந்துள்ளன.

காலத்தின் தேவைக்கேற்ற விளக்கம் தருதல்

திருக்குறள், எல்லாக் காலத்திற்கும் ஏற்றதும் பொருத்தமானதுமாகும். அவ்வகையில் அதன் விளக்கமும் காலத்தின் தேவைக்கேற்ற விதத்தில் அமைதல் வேண்டும். இத்தகு நிலையில் பொற்கோ உரைவிளக்கமும் அமைந்துள்ளது. சான்றாக.

          ஒல்லும் வகையா னறவினை யோவாதே

          செல்லும்வா யெல்லாஞ் செயல்   –           (குறள். 33)

என்னும் குறளுக்கு, “ஒருவன் தன்னால் முடிந்த வகையில் அறச் செயல்களை இடைவிடாமல் அவற்றுக்குத் தேவை ஏற்பட்ட பொழுதெல்லாம் செய்தல் வேண்டும். நல்வினை ஒன்று நடைபெற வேண்டுமானால் அந்தத் தேவையினைக் கண்டும் காணாததுபோல் இருந்து விடாமலும், அந்தச் சூழலில் இருந்து நழுவித் தப்பித்துக் கொள்ளாமலும் முடிந்த வகையில் அந்த நல்வினை நிகழப் பாடுபட வேண்டும். ஒரு நல்வினையை நிறைவேற்ற ஒருவன் மனத்தால் பாடுபடலாம்; சொல்லால் உதவலாம்; செயலால் உதவலாம்; இயன்ற வகையில் தன்னாலான பொருளை வழங்கியும் உதவலாம்; முடிந்தால் எல்லா வழியிலும் ஒருசேரவும் உதவலாம்; அப்படியெல்லாம் வினையாற்றி அறம் வளர்க்கப்பட்டால் தான் சமுதாயம் மகிழ்ச்சியாக வாழ முடியும். இது இல்லறத்தார்க்கும் பொருந்தும்; துறவறத்தார்க்கும் பொருந்தும்” என்று விளக்கம் தருகின்றார்.

இவ்வாறு அமையும் உரைவிளக்கப் பகுதிகள் இக்காலச் சூழலுக்குப் பெரிதும் பொருந்த வருவதனை உணர முடிகிறது.

இலக்கிய நயம் காணல்

          அலரெழ வாருயிர் நிற்கு மதனைப்

          பலரறியார் பாக்கியத் தால்                   –           (குறள். 1141)

என்னும் குறள் விளக்கத்தில், “அலரால் பாதிக்கப்பட்ட தலைவன் கூறியது. களவு வெளிப்பட்டு அலராகும்போது ஏற்படுகின்ற மனநலிவு மற்ற துன்பங்களிலிருந்து வேறுபட்டது. இந்த மனநலிவு மனநலிவுக்கு உட்பட்டவர்க்கு மட்டுமே தெரியும். மற்றவர்க்குத் தெரியாது. இந்த நலிவு காதலர் உயிரைப் போக்காமல் இப்போது காத்து நிறுத்தியிருக்கிறது. காதலர் தம் நட்பு இந்த அலர் மூலம் உயிர்ப்போடு நெஞ்சில் எழுந்து நிற்றலால் உயிர் நீங்காது நிற்கிறது. இந்த உண்மை, காதலர்க்கு மட்டுமே தெரியும். மற்றவர்க்குத் தெரியாது. வெளியுலகிற்குத் தெரியாத நுட்பமான செய்திகள் இங்கே நயமாகச் சுட்டப்படுகின்றன”149 என்று திருக்குறளின் நுட்பத்தினை எடுத்துரைக்கின்றார்.

            காமமு நாணு முயிர்காவா தூங்குமென்

           னோனா வுடம்பி னகத்து              –           (குறள். 1163)

என்னும் குறளின் சிறப்பினை, “உயிராகிய காத்தண்டில் ஒரு பக்கம் காமம் தொங்குகிறது. இந்தக் காத்தண்டு அவளுடைய மெல்லிய உடலுக்குத் துன்பம் தருவதாக இருக்கிறது. காமம், நாணம் ஆகிய இரண்டில் எதையும் விடமுடியாமல் அவள் தவிக்கிறாள். மிக நுட்பமாக உணர வேண்டிய இந்தச் செய்தியை இந்தக் குறள் ஒரு படம்போல ஆக்கிக் காட்சிப்படுத்திக் காட்டுகிறது” என்று நயம்பட எடுத்துரைக்கின்றார்.

          மாலையோ வல்லை மணந்தா ருயிருண்ணும்

          வேலைநீ வாழி பொழுது.            –           (குறள். 1221)

என்னும் குறளின் பொருட்சிறப்பினை, “வேலை என்ற சொல் 1. வேலினை உடையாய், 2. வேலாக விளங்குகின்றாய் என இரண்டு பொருளையும் தரும். வேலை என்பதற்குக் கடல் என்றும் பொருள் கொள்ளலாம். பிரிந்திருக்கின்ற மகளிரின் உயிரை உண்ணுகின்ற கடலாக விளங்குகிறாய் என்றும் பொருள் கொள்ள இடமுண்டு. வேலை என்பதற்குக் காலம், சமயம் என்றும் பொருள் உண்டு. மாலைப்பொழுதே நீ மாலை நேரமல்ல; பிரிந்திருக்கின்ற மகளிரின் உயிரை உண்ணுகின்ற பொழுது என்றும் பொருள் கொள்ள இடமுண்டு.

இத்துணைப் பொருள்களும் சந்திக்கின்ற முறையில் ஆசிரியர் இந்தத் தொடரை அமைத்திருப்பது இலக்கிய நோக்கில் உணர்ந்து உணர்ந்து பாராட்டத்தக்கது” என்றும்,

            ஒருநாள் ளெழுநாள்போற் செல்லுஞ்சேட் சென்றார்

           வருநாள்வைத் தேங்கு பவர்க்கு   –        (குறள். 1269)

என்னும் குறள் விளக்கத்தில், “புற உலகுக்கும் அக உலகுக்கும் உள்ள உறவு நிலையை இந்தக் குறள் மிக அழகாக விளக்குகிறது. மிக இன்றியமையாத உளவியல் உண்மை ஒன்று போகிற போக்கில் எளிதாக எடுத்துப் பேசப்படுகிறது” என்றும்,

            உள்ளக் களித்தலுங் காண மகிழ்தலுங்

           கள்ளுக்கில் காமத்திற் குண்டு              –        (குறள். 1281)

என்னும் குறள்விளக்கத்தில், “எனக்கும் என் தலைவனுக்கும் உள்ள உறவை இத்தகையது என்று சொல்லாமல் காம உணர்ச்சி பற்றிய ஒரு பொது உண்மையினைத் தலைவி தோழிக்கு இங்கே எடுத்துக் கூறியிருப்பது தமிழ் அகப்பொருள் நுட்பத்தின் ஒரு தனிச்சிறப்பு. உளவியல் நோக்கில் இந்தச் செய்தி மிக இன்றியமையாதது” என்றும்,

            ஊடற்கட் சென்றேன்மற் றோழி யதுமறந்து

          கூடற்கட் சென்றதென் னெஞ்சு.   –        (குறள். 1284)

என்னும் குறள்விளக்கத்தில், “தனது நெஞ்சு தன்னைவிடத் தன் காதலருக்கு நெருக்கமாக இருக்கிறது என்பதைத் தலைவி உணர்த்தும் பாங்கு உளவியல் நுட்பமும் இலக்கிய நயமும் உடையதாகத் திகழ்கிறது” என்றும்,

            ஊடுதல் காமத்திற் கின்ப மதற்கின்பம்

          கூடி முயங்கப் பெறின்               –        (குறள். 1330)

என்னும் குறள்விளக்கத்தில், “ஊடல் என்பது மேலோட்டமாகப் பார்த்தால் எரிச்சல் உண்டாக்குகிற ஒன்றாக விலக்கத்தக்க ஒன்றாக சிறுபிள்ளைத்தனம் கொண்டதாக, பகட்டுத்தனம் உடையதாகத் தோன்றுகிறது. ஆனால், உளவியல் நோக்கில் தலைமக்கள் பார்வையில் நன்கு ஆராய்ந்து பார்த்தால் ஊடல் என்பது தனிச் சிறப்புக்கு உரிய ஒரு மன நிகழ்ச்சி என்பது விளங்குகின்றது. இது பண்பட்ட மனித சமுதாயத்துக்கு மட்டுமே உரியது. இதனால் தான் ஊடலை மெச்சிப் பேசுவதற்காகவே ஒரு அதிகாரத்தைத் திருவள்ளுவப் பெருந்தகை அமைத்திருக்கிறார்” என்று திருவள்ளுவரைப் புகழ்ந்துரைக்கின்றார்.

இலக்கண நோக்கும் பொருளுணர்த்து முறையும்

பொற்கோ உரைக்கொள்கையில் இலக்கண நோக்கும் மொழியியல் அணுகுமுறையும் சிறப்பிடம் பெற்றுள்ளன. இலக்கியத்தில் இடம்பெறும் சொற்களை இலக்கண நோக்கிலும் மொழியியல் நோக்கிலும் மனங்கொண்டு அவற்றிற்குரிய இலக்கணங்களைச் சுட்டிச் செல்வதும், அவ்விலக்கண அடிப்படையில் விளக்கம் தருவதையும் ஒரு மரபாகவே கொண்டுள்ளார்.

             இலனென்னு மெவ்வ முரையாமை யீதல்

            குலனுடையான் கண்ணே உள     –           (குறள். 223)

என்னும் குறள்விளக்கத்தில் இரு உரைகளைத் தருகின்றார். இவ்வாறு அமைவதற்கான காரணங்களை உரையின் இறுதியில், “உள என்ற பன்மை வினைமுற்று உரையாமை ஈதல் ஆகிய இரண்டையும் இருவேறு இயல்புகளாகுமாறு வற்புறுத்துகிறது. உள என்ற இந்த முற்று பன்மையில் இல்லாமல் ஒருமையில் இருந்திருந்தால் உரையாமை ஈதல் என்பதை ஒருதொடராக்கி எவ்வம் உரையாமல் ஈதல் என்று பொருள்கொள்ள இயலும். இங்கே உள என்ற பன்மை வினைமுற்றின் மூலம் இப்படிப்பட்ட உரைகளை நாம் உணரவேண்டி உள்ளது”  என்று குறிப்பிடுவதன்வழி தெளிவாகிறது.

குறளின் தொடரமைப்பு விளங்கவில்லை எனல்

சில குறள்களின் தொடரமைப்பு விளங்கவில்லை என்றும் அதற்கு வேறு விளக்கங்கள் கிடைத்தால் ஏற்கலாம் என்றும் குறிப்பிடுகிறார்.

            பிறவிப் பெருங்கட னீந்துவர் நீந்தா

          ரிறைவ னடிசேரா தார்               –           (குறள். 10)

என்னும் குறளின் தொடரமைப்பு குறித்து, “இந்தக் குறளின் தொடரமைப்பு சற்றே சிக்கல் வாய்ந்ததாக இருக்கிறது. நீந்துவர் என்பதற்கு உரிய எழுவாயை நாம் வலிந்து வருவிக்க வேண்டி உள்ளது” என்று கூறுகின்றார். இதே போன்று சில குறள்களின் (குறள். 25, 235) தொடரமைப்பும் சரியாகப் பொருள் விளங்கும் நிலையில் இல்லை என்று குறிப்பிடுகிறார்.

பொருள்விளக்க இயலா நிலை கூறல்

இயல்புடைய மூவர் (41) என்னும் சொல்லின் பொருளுக்கு இதுவரை வந்துள்ள விளக்கங்கள் தனக்கு நிறைவு தருவதாக இல்லை என்று கூறி, “இயல்புடைய மூவர் என்பதற்கு வேறு நல்ல விளக்கம் கிடைத்தால் ஏற்றுக்கொள்ளலாம்” என்று குறிப்பினைத் தந்துள்ளதனையும் காண முடிகிறது.

            அறத்தா றிதுவென வேண்டா சிவிகை

          பொறுத்தானோ டூர்ந்தா னிடை.  –           (குறள். 37)

என்னும் குறள்விளக்கத்தில் “இந்தக் குறளுக்கு மேலும் விளக்கம் தேவைப்படுகிறது” என்று குறிப்பிடுகின்றார்.

“சில சொல்லாட்சிகள், இலக்கண அமைப்பு முறைகள் திருவள்ளுவரால் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் திருவள்ளுவரின் சமகால நூல்களை வைத்துக் கொண்டு ஒப்பிட்டுப் பார்த்தால் மட்டுமே இது மாதிரியான குறள்களுக்கு விளக்கம் தர முடியும்” என்றும் கூறுவது உரைநெறிக்கு மொழியியல் அறிவு மிக இன்றியமையாதது என்பதனைச் சுட்டுவதாக அமைந்துள்ளது.

இவ்வாறு குறித்துள்ள நிலைமையினைக் குறித்து, “வள்ளுவர் ஒரு குறிப்பிட்ட குறளில் என்ன சொன்னார் என்பதை எப்படித் தெரிந்துகொள்ளுவது? தெரிந்து கொள்ள முடியாமல் போனால் விளங்கவில்லை என்று சொன்னால் பிழை இல்லை. ஊகமாகக் கருத்துகளைச் சொல்லி அவற்றை நம்ப வேண்டும் என்று வற்புறுத்தக் கூடாது. சொல் விளையாட்டுகளில் ஈடுபட்டு நம்முடைய கருத்தைத் திருக்குறளில் திணிக்கக் கூடாது” (ப. 233 ) என்று விளக்கம் தருகின்றார்.

இவ்வாறு திருக்குறள் உரைவிளக்கத்தில் பொற்கோ வகுத்துள்ள உரைக்கொள்கை நெறி தெளிவாகிறது.

முடிவுரை

பண்டைய உரை மரபினைப் பல இடங்களில் பின்பற்றியும், பல்வேறு புதுமை நெறிகளையும் கொண்டதாய்ப் பொற்கோவின் திருக்குறள் உரைவிளக்கம் அமைந்துள்ளது. ஓர் இலக்கியத்தில் அமையும் சொல், தொடர், சூழல், காலம், இடம் நோக்கியனவாகவே அதன் உரைவிளக்கம் அமைய வேண்டும் என்பதும்

முடிவுகள் (Results of Findings)

திருக்குறள் கருத்துகள் இன்றைக்கும் நமக்குத் தேவைப்படுகின்றன. ஆதலால், திருக்குறளுக்குப் புதுமை நோக்கிலும், காலத்தின் தேவைக்கேற்ற விதத்திலும் பொருள் கொள்ள வேண்டிய சூழல் உள்ளது. திருக்குறளில் இடம்பெற்றுள்ள சொல்வளமும், கருத்தியல் நிறைவும் இதனை நிரப்பும் நிலையினை உரையாசிரியர்கள் வெளிப்படுத்தி வருவது அதன் சிறப்புக்கு அணி செய்வதாக அமைந்துள்ளது. பண்டைக் கால மரபார்ந்த உரைகளுக்கும், பல்கலைக்கழகப் பேராசிரியர்களின் உரைக்கும் பலவகையான வேறுபாடுகள் உள்ளன. எச்சொல்லையும் அதன் சொல்லுணர்த்த நோக்கம், பொருள் விளக்க நிலை, இடப்பொருள், காலப்பொருள் நிலையில் பொருள்கொள்ள வேண்டிய நிலைப்பாடு உள்ளதனை இவர்கள் உரைகள் தெளிவாக்குகின்றன. திருக்குறள் உரைவிளக்கம் போன்றே ஏனைய செவ்வியல் இலக்கியங்களையும் நாம் மறுவாசிப்புக்கும், உரையாக்கத்திற்கும் உட்படுத்தும்போது பல புதுமையான விளக்கங்களைப் பெறலாம் என்பது இதன்வழி உணரவும் உணர்த்தவும் படுகிறது.

இறுதி முடிவுகள் (Conclusions) :

பண்டைய இலக்கியங்களை அதன் உரைவழியாகவே அணுகும் நிலை தற்காலத்தில் உள்ளது. மூல வடிவம் உணர்த்தும் பொருள்நிலையை மனங்கொள்வதற்கு மாற்றாக உரையாசிரியர் தரும் உரை முடிபுகளையே ஏற்கும் வழக்காறும் நாளும் பெருகி வருகிறது. அவ்வாறு உரையின் வழியாக மூலத்தை அணுகுவதால் மூல நூலாசிரியரின் உண்மைப் பொருள் விளக்கம் முற்றுப்பெறாத நிலை உள்ளதனைத் தற்கால உரை மற்றும் பதிப்புநிலை குறித்த ஆய்வுகள் வெளிக்கொணர்ந்து உள்ளன. அவ்வாறான ஒரு உரைப்புதுமை அணுகுமுறையில் திருக்குறளையும் ஏனைய இலக்கியங்களையும் அணுகுவதற்கான வழித்தடத்தை இவ்வாறான உரைவிளக்கங்கள் உருவாக்கித் தந்துள்ளன என்பது இதன் எடுப்பும் முடிப்புமாக அமைந்துள்ளது.

துணைநின்ற நூல் (Reference Books)

  1. பொற்கோ, திருக்குறள் உரைவிளக்கம், (4 தொகுதிகள்), பூம்பொழில் வெளியீடு, சென்னை, திருத்தப்பட்ட பதிப்பு 2010

=======================================================

ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

தமிழில் தோன்றிய நூல்களிலேயே மிகுதியான உரையைக் கொண்ட நூல், திருக்குறள். திருக்குறளின் கருத்துகள், எக்காலத்திற்கும் ஏற்றதாய் விளங்குகின்றன. அதுபோல் எக்காலத்தும் உரையியற்ற உகந்த நூலாகவும் திருக்குறள் உள்ளது. பல்கலைக்கழகப் பேராசிரியராகப் பணிபுரிந்து பொற்கோ அவர்கள், மாணவர்களுக்குப் பாடம் சொன்ன நிலையிலும், தாம் ஆழ்ந்து கற்ற நிலையிலும், ஆய்வு செய்த நிலையிலும், தனக்கு ஏற்பட்ட அனுபவங்களைக் கொண்டு திருக்குறளுக்கு உரையினை வரைந்துள்ளார். பொற்கோ திருக்குறளுக்கு உரை எழுதியதன் நோக்கம், திருக்குறளை விளக்கப் பொற்கோ கைகொண்ட உரைநெறிகள் ஆகியவற்றை முறையாக விளக்குகின்றது கட்டுரை.

ஒரே குறளுக்கு இரு விளக்கம், மூன்று விளக்கம் அளித்தல், புதிய விளக்கம் அளித்தல், இன்னும் விளங்க வேண்டிய இடங்கள் உள, காலத்தின் தேவைக்கேற்ப விளக்கமளித்தல், இலக்கண, மொழியியல் அறிவோடு விளக்குதல், பொருள் விளக்க இயலாநிலை என்னும் பல நிலைகளில் பொற்கோவின் திருக்குறள் உரைவிளக்கம் அமைகின்ற நிலையைக் கட்டுரையாளர் விரிவாக விளக்கிச் செல்கின்றார். பன்னிரண்டு திருக்குறளைக் கொண்டு பொற்கோவின் உரைக்கொள்கையையும் உரைவிளக்கப் பொருத்தப்பாட்டினையும் கட்டுரையாளர் விளக்கியுள்ளார். கட்டுரையாளருக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

=======================================================

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *