நுண்கலைகள்படக்கவிதைப் போட்டிகள்போட்டிகளின் வெற்றியாளர்கள்வண்ணப் படங்கள்

படக்கவிதைப் போட்டி 206-இன் முடிவுகள்

-மேகலா இராமமூர்த்தி

கடலோர மண்ணில் கால்பதித்து, கடலலை மேலே கண்பதித்து நிற்கும் நங்கையைத் தன் புகைப்படத்தில் காட்சிப்படுத்தியிருக்கின்றார் ஷாமினி. இப்படத்தைப் படக்கவிதைப் போட்டி 206க்கு வல்லமை ஃபிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்துத் தந்திருக்கின்றார் சாந்தி மாரியப்பன். இவ்விருவருக்கும் என் நன்றி!

பாவை முகம் நம் பார்வைக்குக் கிட்டாததால் அவர் அகத்தைப் படிக்க இயலவில்லை. எனினும் அவர் நின்றிருக்கும் தோற்றம் அலைகளோடு அவர் ஏதோ மானசீகமாக உரையாடிக்கொண்டிருக்கின்றாரோ என்றே எண்ண வைக்கின்றது.

தம் கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டு இந்நங்கையின் மனவுணர்வுகளைக் கவிதையில் நகலெடுக்கக் காத்திருக்கும் கவிஞர்களை அழைக்கின்றேன் இனி!

*****

கடல்தாண்டிச் சென்ற காதற் கணவனிடம் கடலலையைத் தூதாக அனுப்பும் வஞ்சியின் நெஞ்சைத் தம் கவிதையில் அழகாய்க் காட்டியிருக்கின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

தொடர்கதையாய்…

வேலைக்காக
வெளிநாடு சென்றவர்களின் கதைகள்,
அடுத்தடுத்து வரும்
அலைகளைவிட அதிகம்தான்..

ஆனாலும்
அவளும் சொல்கிறாள் தன்கதையை,
தூதாகிட வேண்டுமாம்
கடலலைகள்..

கேட்டுக்கொண்ட கடலும்
தலையசைத்தவிட்டு அவளுக்கு,
திரும்பிச் செல்கிறது
துயரத்துடன்..

தொடர்கதையான
தொடரும் கதைகள்,
துடைத்துக்கொண்டது கண்ணீரை
அலைகளில்..

அதனால்தன்
ஆனதோ கடல்நீர்-
உப்பாக…!

*****

”அண்டங்களையும் கண்டங்களையும் விழுங்கி ஏப்பமிட்ட ஆணவக் கடலே, உன்னைப் பாட மாட்டேன்!” என மறுத்து, ”அடுப்பூதிய எம் பெண்டிர் அண்டவெளி அளக்கும் சாதனையை நீ பாடிப் பரப்பு!” என்று கடலுக்குக் கட்டளையிடுகின்றார் திருமிகு. நாங்குநேரி வாசஸ்ரீ. 

அலைகடலே எம் புகழ் பரப்பு!

ஆழி உன்னுடன் பேச
ஆயிரம் உண்டு எனக்கு
அசையாமல் நின்று உன்
அலை விளையாட்டுக் காண
ஆயிரம் கண்கள் போதுமோ
அன்றைய கவிகளின் புகழுரையால்
ஆணவம் கொண்டு நீ
ஆடிக்களித்ததில் சுனாமி
அலைகளாய்ப் பெருக்கெடுத்து
ஆருயிர் மக்களின் வாழ்வழித்தாய்
ஆதிகவிகளின் காலத்திலோ
அமுதுசெய்யக் கண்டங்களை விழுங்கி
ஆறுகளைக் குடித்து நீ
ஆற்றிக்கொண்டாய் உன் தாகத்தை!
அலைகடலே இனி என் முடிவைக் கேள்!
அணுவளவும் புகழேன் உன்னை!
அற்புதமான எம்இந்தியப் பெண்களின்
அளப்பில்லாச் சாதனைப் பட்டியலை
அமைதியாய்க் கேட்டு அலைகளினால்
அகிலமெல்லாம் பரவிடச் செய்!
அருமைச் சகோதரிகள்
அறுவர் தாரிணியெனும் கலம் ஏறி
ஆறு மாதம் உன்னுடன் உறவாடி
அவனியை வலம் வந்து புரிந்தார்
அசைக்கமுடியா உலக சாதனை!
ஆறாறு மாதங்களுக்குப்பின் மற்றொருத்தி
அழகான விண்கலம் ககன்யான்மூலம்
அண்டவெளியை வலம்வருவாள்
அருமையான வீராங்கனைகளுள் ஒருவராய்
அன்னையவள் கொடிதாங்கி
அடுப்பூதிய எம் மகளிர் இன்று
அனைத்துத் துறைகளிலும்
அளப்பரிய சாதனைகள் படைத்து
ஆசிரியராய் விஞ்ஞானியாய்
ஆகாயவிமானம் ஓட்டுபவராய்
அணு ஆராய்ச்சி முதல்
அண்டவெளிப்பயணம் வரை
அடுத்தடுத்துப் படைத்துவரும் சாதனையை
அலுக்காமல் பரப்புவதே உன்தொழிலாய்
அயராது செய்து நீ உள்ளளவும்
அவளின் புகழை நிலைபெறச்செய்!

*****

புகைப்படத்துக்குப் பொருத்தமாய்க் கவிதைகள் படைத்துத் தந்திருக்கும் புலமைசால் கவிஞர்கட்கு என் பாராட்டும் வாழ்த்தும்!

இனி வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாய்த் தேர்வாகியிருப்பது…

இவள் யாரோ?
 
விரிந்து கிடைக்கும் கடல் முன்னே
வந்து நின்ற வஞ்சி இவள் யாரோ?
 
துள்ளி எழுந்தாடும் அலை கடல் கண்டும்
அமைதியாய் நிற்கும் நங்கை இவள் யாரோ?
 
வாழ்வில் தோற்றவர்கள் பலர் இங்கிருக்க
தேர்வில் தோற்றதற்காக உன் வாழ்வை
முடித்துக்குள்ள இங்கு வந்தாயோ?
 
அன்னையின் அன்பின்றி அனாதைகளாய்ப் பலர் இங்கிருக்க
காதல் தோல்வியால் உன் உயிரைத்
துறக்க இங்கு வந்தாயோ?
 
உடன் வந்த உறவுகள் எல்லாம் விட்டுப்பிரிந்திட
துயர் வந்து கடலாய் உனை இன்று சூழ்ந்திட
தனித் தீவாய் ஆனாயோ?
உன் துயரம் நீங்கிட உயிர்தனைத் துறந்திட
கடல்தனைத் தேடி வந்தாயோ?
 
நிலையில்லா வாழ்வில்
வரும் துயரம் யாவும் நிலைகொள்வதில்லை!
இதுவும் கடந்து போகும்…
தொலைவில் தோன்றும் தொடுவானம்கூடப்
பொய்யாய்ப் போகும் முன்னேறிச் சென்றால்!
இவள் கதை அறியும் முன்னே
அலை வந்து அழித்துச் சென்றதே
இவள் பதித்த காலடித் தடங்களை!
திரும்பியவள் புதிதாய்த் தடங்களை பதித்திடவோ?!
 
புதிய பாதை அமைத்துப் புதிய சரித்திரம் படைத்திடு!
யார் நீ என்று இவ்வுலகுக்கு உணர்த்திடு!
அதுவரை…
விடை தெரியா வினாக்களால்  
காண்பவர் மனதில் கேள்விக்குறியாய்  
என்றும் நீ இருப்பாய்
இவள் யாரோ?

கடலோரம் நின்றிருக்கும் இந்த வஞ்சி யாரோ? கல்வியிலோ, காதலிலோ தோற்றவளோ? வாழ்வில் உடன்வந்த உறவுகளை இழந்து இறக்கத் துணிந்தவளோ? தெரியவில்லை! நிலை எதுவாயினும் ’இதுவும் கடந்து போகும்’ என்ற நெஞ்சத் துணிவோடு வேதனை தந்த பழைய பாதையை மறந்து, சாதனை படைப்பதற்கோர் புதிய பாதையை இவள் தேர்ந்தெடுக்க வேண்டும்! என்றிப் பாவைக்கு ஊக்கமூட்டும் ’பா’வைப் படைத்திருக்கும் திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

 

  

Comments (1)

  1. இந்த வாரத்தின் வெற்றியாளனாய் என்னை தேர்வு செய்தமைக்கு மிக்க நன்றி

Comment here