மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மெல்பேண், அவுஸ்திரேலியா

சித்திரை பிறக்குமுன்னர் சிலம்பொலி அடங்கியதே!
மொத்தமுள்ள தமிழறிஞர் முழுப்பேரும் அழுகின்றார்!
எத்தனையோ பட்டங்கள் ஏற்றநிறை விருதெல்லாம்
அத்தனையும் அவர்பிரிவால் அழுதபடி நிற்கிறதே!

உலகமெலாம் சென்றிருந்தார் உவப்புடனே தமிழ்கொடுத்தார்!
நிலைபெறு மாறெண்ணிநிற்க நிறைவாக அவர்கொடுத்தார்!
அளவில்லாக் கட்டுரைகள் அவர்கொடுத்தார் உலகினுக்கு!
அழவிட்டு சிலம்பொலியார் அவ்வுலகு சென்றுவிட்டார்!

மாநாடு பலகண்டார் மலர்கள் பலகொடுத்தார்!
பூமாலை புகழ்மாலை தேடியவர் போகவில்லை!
கோமகனாய் கொலுவிருந்தார், கொழுகொம்பாய்த் தமிழ்கொண்டார்!
பாவலரும் காவலரும் பதறியழச் சென்றுவிட்டார்!

தேன்தொட்டத் தமிழ்பேசி, திசையெங்கும் வசங்கொண்டார்!
தான்விரும்பி சிலம்பதனைத் தமிழருக்கு எடுத்துரைத்தார்!
நானென்னும் அகங்காரம் காணாத வகையினிலே
தான்சிலம்பார் வாழ்ந்ததனால் தானுலகம் தவிக்கிறது!

சங்கத்தமிழை அவர் இங்கிதமாய் எடுத்துரைத்தார்!
எங்குமே சிலம்பொலியார் என்பதே பேச்சாச்சு!
பொங்கிவரும் தமிழுணர்வால் பொழுதெல்லாம் தமிழானார்!
தங்கச் சிலம்பொலியார் தவிக்கவிட்டு போனதேனோ!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *