பொது

“என்னில் சாயி, எல்லாம் சாயி” – இசைத்தகடு மற்றும் புத்தக வெளியீடு

-விவேக்பாரதி

சென்ற வாரம் சனிக்கிழமை மாலை 4.00 மணி அளவில், சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள சாய்பாபா ஆலயத்தில் “எல்லாமே சாயி” என்னும் இசைக் குறுந்தகடு வெளியானது. கவிமாமணிகள் க.ரவி மற்றும் சு.ரவி, கவிஞர்கள் சாய்ரேணு, நதிநேசன் ஆகியோர் எழுதி, க.ரவி அவர்கள் இசையமைத்து, திருமதி கிருபா ரமணி அவர்கள் பாடியிருந்த அந்தக் குறுந்தகட்டையும் அதனையொட்டி திருமதி சாய்ரேணு எழுதிய “என்னில் சாயி, எல்லாம் சாயி” என்ற சாய் சரித்திர நூலையும் சொல்லின் செல்வர் சுகி.சிவம் அவர்கள் வெளியிட்டு சாய்நாதன் மகிமைகளைக் குறித்து ஓர் சிற்றுரை ஆற்றினார். A forum for Art & Poetry என்னும் வாட்ஸாப் குழுவின் முன்னெடுப்பாக நிகழ்ந்த இந்த நிகழ்வில் Forum குழுவைச் சேர்ந்த நண்பர்கள் பலர் கலந்துகொண்டனர். சாய்நாதன் தாமரை மலர்ப்பதங்களில் குறுந்தகடும் புத்தகமும் சமர்ப்பிக்கப்பட்டது. சாய் பக்தர்கள் ஒருசேர சில பஜனைப் பாடல்களை சாய்நாதன் சன்னிதியில் பாடிய பின்னர் புத்தக வெளியீடும் அதைத் தொடர்ந்து உரை நிகழ்ச்சிகளும் நடந்தன.

“குருமார்கள் மனிதர்களின் நிலவழிப் பயணத்தை விமானத்தின் வான்வழிப் பயணமாக மாற்றும் டேக் ஆஃப் செய்வதற்குப் பெரிதும் உதவுகிறார்கள், சாய்நாதர் கிருபை அத்தகையது” என்று ஆழமான உண்மைகளைச் சுகி சிவம் பேசினார். வாழ்த்துரை வழங்கிய சு.ரவி அவர்கள் “சாய்நாதம் மீது கொண்ட அளவற்ற பக்தியும் அவரது அருளும் தான் இத்தகைய படைப்புகள் உருவாகக் காரணம்” என்று பாராட்டினார்.

அதன் பின்னர் சிற்றுண்டியுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. பேராசிரியர் வ.வே.சு, திரு. பாலகிருஷ்ணன், திருமதி ஷோபனா ரவி, திருமதி மங்கலசுந்தரி, கவிஞர் சியாமளா ராஜசேகர், திருமதி ராணி, திரு. ராஜு போன்ற எண்ணற்ற நண்பர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் நிகழ்வில் கலந்து கொண்டமை மேலும் சிறப்பைச் சேர்த்தது.

கீழே நிகழ்வின் நிழற்படங்கள்

Share

Comment here